Saturday, March 10, 2012

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் - இந்தியா ஆதரிக்குமா?

ஜெயலலிதாவும் கருணாநிதியும் கண்டு கொள்ளாத எந்த அரசியல் செய்தியையும் தமிழர்களும் கண்டு கொள்வதில்லை. சமீபத்திய உதராணம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வு பற்றிய செய்தி.  இவர்கள் இருவரின் அறிக்கையைத் தொடர்ந்து இந்தச் செய்தி டீக்கடை மற்றும் சலூன்களில் விவாதிக்கப்படும் பரபரப்பான செய்தியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வு என்றால் என்ன?
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எனச் சொல்லிக் கொண்டு, இலங்கையில் மனித உரிமை மீறல் நடந்திருக்கிறது. தமிழர்களுக்கு எதிராக போர்க் குற்றங்கள் நடந்திருக்கின்றன என்பது உலகம் அறிந்த செய்தி. தற்போது இந்தச் செய்திகள் குற்றச்சாட்டுகளாக உருப்பெற்று இலங்கைக்கு எதிராக சர்வதேச அளவில் வலுப்பெற்று வருகிறது.

ஒரு நாட்டிற்கு எதிரான இது போன்ற குற்றச்சாட்டுகளை அனுமதிப்பதற்கும், விசாரிப்பதற்கும் நடைபெறும் அமர்வுதான், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வு. மொத்தம் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பாதிக்கு மேல், அதாவது 24 நாடுகளின் ஆதரவை பெற்றுவிட்டால், குற்றம் சுமத்தப்படும் நாட்டின் மீது, சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்படும் என்பது விதி.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா
தற்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானத்தை கொண்டு வரப்போவதாக செய்திகள் கசிந்திருக்கின்றன.  அதே நேரத்தில் இலங்கை அரசு, தமக்கு எதிரான இந்த தீர்மானத்தை தோற்கடிக்க தனது ஆதரவு நாடுகளிடம் ஆதரவு திரட்டிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மொத்தம் 22 நாடுகள் இலங்கைக்கு எதிராக திரண்டு விட்டதாகவும், இன்னும் இரண்டு நாடுகள் ஆதரவு தந்துவிட்டால் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற நடவடிக்கைகள் வலுப்பெறும் என்பதும் வதந்திகள்.

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிப்பது சந்தேகமே!
இந்தியா இலங்கைக்கு எதிரான நிலை எடுக்குமா என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான செய்திகள் வரவில்லை. அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும், இந்தியாவை இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும்படி நிர்ப்பந்தித்து வருகின்றன.

ஆனால் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது. இந்தியாவின் ஆதரவு இலங்கைக்குதான் என்று இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஒரு பத்திரிகை பேட்டியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவருடைய நம்பிக்கையில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. காரணம் அமெரிக்காவால் நடத்தப்படும் சர்வதேச அரசியல் பிண்ணனி.

இந்த உலகத்தின் நாட்டாமையாக தனக்குத் தானே பட்டம் கொடுத்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு மனித உரிமைகள் பற்றிப் பேச அமெரிக்காவுக்கு எந்த தார்மீக அருகதையும் இல்லை. உலகம் முழுக்க மனித உரிமைகளை மீறி வருவது அமெரிக்காதான். அமெரிக்கா ஏதாவது ஒரு நாட்டுக்கு நெருக்கடி தந்தால், அந்தப் பிராந்தியத்தில் தனது வாலை நுழைக்கிறது என்று அர்த்தம். அதே போல ஆசியாவில் பொருளாதார வல்லரசுகளாக உயர்ந்து வரும் இந்தியாவையும், சீனாவையும் அருகில் இருந்து அதட்ட அதற்கு ஒரு இடம் தேவைப்படுகிறது. தற்போது அது தேர்ந்தெடுத்திருக்கும் இடம் இலங்கை. எனவே அமெரிக்காவின் இந்த தீர்மானத்துக்கு நிச்சயம் சீனா வாக்களிக்காது. இந்தியாவும் வாக்களிக்காது. ஆனால் தமிழக அரசியல் மற்றும் இலங்கை அரசியல் நெருக்கடி காரணமாக இந்தியா நடுநிலை எடுக்கலாம்.

தான் மூக்கை நுழைக்க வசதியாக, அமெரிக்கா இதை சர்வதேச மனித உரிமைப் பிரச்சனையாக்கப் பார்க்கிறது. ஆனால் இது வெறும் உள்நாட்டுப் பிரச்சனை என்பது இலங்கை ஆதரவு நாடுகளின் கருத்து.

பாக், பங்களாதேஷ் போர்களின் போதும், காஷ்மீர் பிரச்சனைகளிலும் இந்தியாவின் மீதும் இது போன்ற குற்றச்சாட்டுகள் வந்ததுண்டு. எனவே இப்போது இலங்கைக்கு எதிராக வாக்களித்தால், எதிர்காலத்தில் இலங்கை சீனாவுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு ஆதரவாக செயல்படாமல் போகலாம். இந்தியாவிற்கு அமெரிக்கா, சீனா இரண்டையுமே சமாளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த தீர்மானம் இலங்கைக்கு எதிரானது அல்ல?
மிக முக்கியமாக இன்னொரு செய்தி உலவிக்கொண்டிருக்கிறது. அது என்னவென்றால், அமெரிக்க தீர்மானத்தில், இலங்கையின் மேல் பகிரங்க குற்றச்சாட்டுகள் ஏதுமில்லை. இலங்கையில் மனித உரிமைகளை நிலைநாட்டவும், சர்வதேச சட்டங்களை பின்பற்றவும் ஒரு கண்காணிப்பு குழு இலங்கை அரசால் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவுக்கு LLRC - Lessons Learnt and Reconciliation Commission என்று பெயர். உள்நாட்டுப் போரால் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் நல்லிணக்கத்தை உருவாக்குவதே இந்தக் குழுவின் நோக்கம். அமெரிக்கத் தீர்மானத்தில் அந்தக் குழு சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுதான் உள்ளது.

ராஜபக்ஷேவை இந்த தீர்மானம் போர்க்குற்றவாளியாக சித்தரிக்கவில்லை. இலங்கையின் மேல் எந்தப பகிரங்க குற்றச்சாட்டும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. எனவே இந்த அமெரிக்க தீர்மானம் வெற்றி பெற்றாலும், அதனால் இலங்கைக்கு சர்வதேச அரசியல் பாதிப்பு எதுவும் பெரிதாக இருக்காது எனச் சொல்லப்படுகிறது.

ஆனால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், இலங்கையை சர்வதேச அரங்கில் குற்றவாளியாக நிறுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக நினைக்கிறார்கள். நானும் அப்படியே நினைக்கிறேன்.




Friday, March 9, 2012

ஒய் திஸ் உலை வெறி - பட்டாசாய் ஒரு பாட்டு!

கூடங்குளம் போல ஒரு அணு உலையை நிறுவினால் 50 வருடங்களுக்கு மின்சாரம் தயாரிக்க முடியும். ஆனால் அதனால் ஏற்படும் கழிவுகளை 1,00,000 வருடங்களுக்கு பத்திரமாக எங்காவது பதுக்கி வைக்க வேண்டும். அதற்காக செலவு செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் மனிதனின் வாழ்வாதாரம் நிச்சயமாக பாதிக்கப்படும் என்கிறார்கள் அணுஉலைக்கு எதிராகப் போராடும் விஞ்ஞானிகள்.

உலக சமாதானத்துக்காக நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய விஞ்ஞானி (Physicist) திரு. ஹேன்ஸ் பீட்டர் தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். அவர் சொல்வதை கவனியுங்கள். எந்த அணுஉலையும் 100 சதவிகிதம் பாதுகாப்பானது அல்ல. அதற்கு உத்தரவாதம் தரும் எந்த வாதத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்.

அணு உலையால் ஏற்படும் ஆபத்துகளை விட, அதன் கழிவுகளால் ஏற்படும் ஆபத்து அதிகம் என்கிறார். சுற்றுப்புறச் சூழல் பாதிப்பது ஒரு புறம் இருக்கட்டும். மறுபுறம் தீவிரவாதிகள் கைகளில் சிக்கினால், அணுக் கழிவுகளைக் கொண்டு அணு குண்டு தயாரிக்கும் அபாயம் உள்ளது என்கிறார்.

அணு உலை பாதுகாப்பானது என்று வைத்துக் கொண்டாலும், இன்னும் சில 100 வருடங்களில் அது இயங்கத் தேவையான யுரேனியமும் தீர்ந்துவிடும். அப்போது இந்த அணுஉலைகள் அனைத்தும் இயங்காமல் நின்றுவிடும். அப்படி இயங்காமல் போகக்கூடிய அணுஉலைகளை மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்காமல், எப்படி இடித்துத் தள்ளுவது? அதற்கு திட்டங்கள் என்ன? அதனால் ஏற்படக் கூடிய பாதிப்பு என்ன? என்று தொடர் கேள்விகள் எழுப்புகிறார். எனவே மாஃபியா கொள்ளைக்காரர்களைப் போல பூமியிடமிருந்து இயற்கை கனிமங்களை திருடி, மக்களுக்கு தொல்லை ஏற்படுத்துவதை உடனே கைவிடுவோம். சூரியக் கதிர்களை நோக்கி நம் கவனத்தை செலுத்துவோம் என்கிறார்.

சூரியக் கதிர்களை உள்வாங்கி, சேமித்து அதனால் மின் சக்தி உட்பட வித விதமான சக்திகளை உருவாக்கக் கூடிய தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பக்கவிளைவுகள் இல்லாத இவற்றில் நம் கவனத்தை செலுத்துவோம் என்கிறார்.

கூடங்குளம் எதிர்ப்பாளர்களை தேசப்பற்று இல்லாத தீவிரவாதிகள் என்று அரசுகள் முத்திரை குத்த முயற்சித்து வருகின்றன. ஆனால் மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசுகளின் இந்த சூழ்ச்சிக்கு அஞ்சாத இளைஞர்கள் சிலர் ஒரு அருமையான மியூசிக் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள்.

அணு உலைக்கு எதிரான இந்த அருமையான முயற்சியில் இறங்கியுள்ள இளைஞர்களை நான் மனமார வரவேற்கிறேன். இவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் சிந்திக்க வைக்கக் கூடிய படைப்புகளை தர வேண்டும்.

எரிதழல் படைப்பகம் மற்றும் அதன் குழவினர் அனைவருக்கும் என் அன்பும், ஆதரவும்.

Tuesday, March 6, 2012

சிட்டுக் குருவி முத்தம்




அவள் பறவைகளை 
இரசித்துக் கொண்டிருக்கும்போது,
சிட்டுக் குருவியாய் 
அவள் இதழ்களில்
என் இதழ்கள் அமர்ந்து கொள்ளும்! 

மக்களையே மக்களுக்கு எதிராகத் தூண்டும் ஜெ, மன்மோகன் சிங் அரசுகள்!

இந்த நூற்றாண்டின் அசுர வளர்ச்சி தகவல் தொழில் நுட்பம். அதன் பிரமாண்டமான பயன், அதன் வழியாக ஒன்றுமையாக ஒன்று கூடி அரசுகளை கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கும் மக்களின் எழுச்சி!

ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்கள் வழியாக மக்கள் தாங்களாகவே விவாதிக்கிறார்கள். அரசை கேள்வி கேட்பது என்று முடிவெடுக்கிறார்கள். முன் எப்போதையும் விட தைரியமாக விமர்சிக்கிறார்கள். பெரும் திரளாக ஒன்று கூடி அரசுகளுக்கு கலக்கத்தை உண்டு பண்ணுகிறார்கள். அடுத்த தேர்தல் வரை ஜாலியாக காலம் தள்ளிவிடலாம் என்று மெத்தனமாக இருக்கும் ஜனநாயக அரசுகள் ஸ்தம்பித்து நிற்கின்றன. நான்தான் ராஜா என்னை என்ன செய்ய முடியும் என்று எதேச்சதிகாரத்துடன் திரிந்த மன்னர் ஆட்சிகளும் ஆட்டம் கண்டு கொண்டிருக்கின்றன.

உலகம் முழுவதும் மக்கள் தாமாகவே முன் வந்து, அலையலையாக ஒன்று கூடி, ஒரு சுனாமியைப் போல அரசுகளை தூக்கி எறியும் சக்தியுடன் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் மிரண்டு போயிருக்கும் அரசியல்வாதிகள், தற்போது அரசியல் எதிரிகளை சமாளிப்பதை விட, கேள்வி கேட்கும் மக்களை திசை திருப்புவது எப்படி? அவர்களுடைய கூர்மையை மழுங்கச் செய்வது எப்படி? அவர்களுடைய ஒற்றுமையை குலைப்பது எப்படி என்று தங்கள் கருப்பு மூளைகளை கசக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

உலக அரசியல் ஒரு புறம் இருக்கட்டும். நமது இந்திய அரசியலுக்கு வருவோம். முல்லை பெரியாறு அணைப் பிரச்சனையில் அரசியல் ரீதியாக முடிவெடுக்க திராணி இல்லாத ஜெயலலிதா அரசு, தமிழக மக்களை கேரள அரசுக்கும், கேரள மக்களுக்கும் எதிராக தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது. தமிழகத்தில் மலையாளம் பேசும் மக்களும், அவர்களது வியாபாரத் தலங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. அதை கண்டும் காணாதது போல தமிழக அரசும், தமிழக போலீசும் இருந்துவிட்டன. இப்போது என்ன ஆயிற்று? கேரள மக்களின் மேல் தேவையற்ற திணிக்கப்பட்ட கோபத்தை வளர்த்ததோடு பிரச்சனை கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

உம்மண் சாண்டியின் தலைமையில் கேரள அரசும், இதே போல மறைமுகமாக ரௌடிகளைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது. கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களுடைய வீடுகள் சூறையாடப்பட்டன. தமிழக போலீசைப் போலவே, கேரள போலீசும் இந்த தாக்குதல்களை கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டன.

அரசியல் ரீதியாக பிரச்சனைகளை சமாளிக்க முடியாத தமிழக-கேரள அரசுகள், தமது மக்களை அண்டை மாநில மக்களுக்கு எதிராக தூண்டி தங்களது இயலாமையை மறக்கடிக்கிறார்கள். சகோதரர்களாக வாழ்ந்து தமிழக, கேரள மக்களை எதிரிகளாக மாற்றி தங்களது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்கிறார்கள்.

தற்போது இதே பிரித்தாளும் வழிமுறையை, சட்டம் ஒழுங்குப் பிரச்சனையிலும் ஜெயலலிதா அரசு கடைபிடிக்கிறது.  நான் ஆட்சிக்கு வந்ததுமே திருடர்களும், கொள்ளையர்களும் ஆந்திராவுக்கு தப்பிவிட்டார்கள் என்று கொக்கரித்தார் ஜெயலலிதா. ஆனால் தொடர்ந்து தமிழகத்தில் கொலைகள், கொள்ளைகள். தமிழக போலீசும், ஜெயலலிதாவும் மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். ஏற்கனவே விலைவாசிப் பிரச்சனையால் கோபத்தில் இருக்கும் மக்களை சமாதானப்படுத்துவது எப்படி என்று ஜெயலலிதா அரசு தடுமாறிக் கொண்டிருந்தது.  அவர்களை கவனம் கலைக்க அரசும், போலீசும், திட்டமிட்டு, இரகசியமாக கையிலெடுத்திருக்கும் விஷயம்தான் வட இந்தியர்களின் மீது மக்களின் கோபத்தை திசை திருப்பும் செயல்.

ஆங்காங்கே அதிகமாகிக் கொண்டிருந்த செயின் திருட்டு,  வழிப்பறி, கொலைகள் உட்பட, தொடர் வங்கிக் கொள்ளைகளால் மக்கள் தமிழக அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் மீது நம்பிக்கை இழந்து கொண்டிருந்தார்கள். இதைச் சமாளிக்க அரசு நடத்திய ஆக்ஷன் பிளான்தான் என்கவுண்டர். என்கவுண்டரைப் பற்றி ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன. அது வேறு சப்ஜெக்ட். ஆனால் இதில் நிச்சயம் கவனிக்க வேண்டிய ஒரு கேவலமான அம்சம் உள்ளது. அது... தமிழகத்தில் நிகழும் அனைத்து கொலை, கொள்ளைகளுக்கும் காரணம் இங்கு பிழைப்புக்காக வந்திருக்கும் வட இந்தியர்கள்தான் என்கிற மறைமுகப் பிரச்சாரம்தான். என்கவுண்டர் நடந்த தினத்திலிருந்தே இந்தப் பிரச்சாரம் அசுர வேகத்தில் பரப்பப்படுகிறது. தமிழக போலீஸ் மீது மற்றும் அரசின் மீது இருந்த மக்களின் அதிருப்தியை வட இந்தியர்களின் மீது வேகமாகத் திணக்கும் பணியை அரசு செய்து கொண்டு வருகிறது. அது பற்றிய செய்திகளும், அவதூறுகளும் தினமும் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் வசிக்கும் வட இந்தியர்களை கணக்கெடுக்கிறார்களாம். அவர்களுடைய விரல் ரேகைகள் போலீசில் பதியப்படுகின்றன. பாதுகாப்புக்காகச் செய்வதாகச் சொன்னாலும், அது பற்றி வெளியாகும் செய்திகள் வட இந்தியர்களின் மேல் தமிழக மக்களுக்கு கோபத்தையும், சந்தேகத்தையும் உருவாக்குவதாகவே இருக்கிறது.

தங்களால் ஒழுங்காக செயல்பட முடியவில்லை என்பதை மறைக்க மக்களை மக்களோடு மோதவிடும் கொடுமையான விஷயத்தை கையில் எடுக்கிறது அரசு. ஏற்கனவே கர்நாடகாவுடன் சண்டை. புதிதாக கேரளாவுடன் மோதல். தற்போது வட இந்தியர்களை எதிரிகளாக்கும் சம்பவங்கள். இதில் பாதிக்கப்படுவது எந்த அரசியல்வாதியும் இல்லை. மிகச் சாமர்த்தியமாக மக்களை ஒருவருக்கொருவர் எதிரியாக்கி அதில் குளிர்காயும் குள்ளநரித் தனத்தை ஒவ்வொரு அரசியல்வாதியும் கையில் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதே தந்திரத்தைதான் தமிழர்களை ஒடுக்க, இலங்கையில் ராஜபக்ஷே வரை ஒவ்வொரு அரசியல் சூத்திரதாரியும் கையாண்டார்கள். சிங்களர்-தமிழர்கள் இடையில் நிரந்தரப் பகையை உருவாக்கி இன்னமும் அதை வைத்து வசதியாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். பல மாநிலங்களாகப் பிரிந்து கிடந்தாலும், நமது அரசியல் அமைப்பால் ஒன்றாகச் சேர்ந்து சகோதரர்களாக வாழந்து கொண்டிருக்கும் இந்திய மக்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்கு நமது கேடுகெட்ட அரசியல்வாதிகளும் தயாராகிவிட்டார்கள் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதே குள்ளநரித் தந்திரத்தைதான் தற்போது மன்மோகன்சிங் அரசும் கையில் எடுத்திருக்கிறது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களை தீவிரவாதிகள் என்று சித்தரிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி பொறுக்காத வெளிநாடுகளின் உதவியோடு அணு உலைத்திட்டத்தை குலைப்பதாக திட்டமிட்டு செய்தி பரப்புகிறது. இந்தக் குற்றச்சாட்டை பிரதமர் தன் வாயால் சொல்வதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. இன்னும் அந்தக் குற்றச்சாட்டை நிருபிக்க அவர் எந்த ஆவணத்தையும் காட்டவில்லை.

மின் உற்பத்தியில் இதுவரை கவனம் செலுத்தாத மத்திய, மாநில அரசுகள் தட்டுப்பாடு வந்ததும் தங்களின் இயலாமையை மறைக்க வழி தெரியாமல் விழித்தார்கள். இன்று சமாளித்துவிடுவோம், நாளை சமாளித்துவிடுவோம் என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய தமிழக, மத்திய அரசுகள், மக்களின் வளர்ந்து வரும் கோபத்தை அடக்குவதற்கு கையாளும் தந்திரம்தான் மக்களையே மக்களுக்கு எதிராக திசை திருப்பும் கேவலமான அரசியல்.

மன்மோகன் சிங் நேரடியாக குற்றம் சுமத்துகிறார். ஜெயலலிதா இதை மறைமுகமாக அனுமதிக்கிறார். பிரச்சனை தீர வழி இல்லை என்றதும், பிரச்சனைகளை திசை திருப்புவதில் மத்திய-மாநில அரசுகள் இரகசியக் கூட்டு வைத்துக் கொண்டுவிட்டன.

அரசியல்வாதிகளே! வெளிநாட்டுச் சதி என்பது உண்மையாகவே கூட இருந்துவிட்டுப் போகட்டும். தமிழகத்தின் மின் வெட்டுப் பிரச்சனை தீர உங்களின் யோசனை என்ன? திட்டங்கள் என்ன? பிரச்சனை எப்போது தீரும்? உங்களிடம் இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை என்பதுதான் உண்மை.

பிரச்சனைகளைத் தீர்க்க உங்களிடம் இருக்கும் ஒரே திட்டம் . . . மக்களையே மக்களுக்கு எதிராக மோத வைப்பது. இதில் உங்களுக்கு சிறு வெற்றி கிடைத்திருக்கலாம். ஆனால் . . . மக்கள் மாக்கள் அல்ல. எப்போதும் உங்கள் குள்ளநரித் திட்டங்கள் பலிக்காது! எங்களை பிரிக்க முடியாது.

நாங்கள் களைத்திருப்போம்! ஆனால் ...
எப்போதும் விழித்திருப்போம்!

இதழ் குளம் முத்தம்


தாமரைக் குளத்தில் 
கொலுசுப் பாதம் நனைந்ததும்
அவள் இதழ் குளத்தில் 
என் இதழ் நனைப்பேன்.

Monday, March 5, 2012

Two Flower - வி.எல்.சியின் அடுத்த அதிரடி வெர்ஷன்

ஆரம்பத்தில் ஆபரேடிங் சிஸ்டங்களுக்கு இடையில்தான் போட்டி. ஆடியோ வீடியோ ப்ளேயர்கள் தூங்கி வழிந்து கொண்டிருந்தன. டிஜிட்டல் தொழில் நுட்பம் துவங்கியவுடன், சிம்பு-தனுஷ் போட்டி போல லைட்டாக சூடாகின. தற்போது HD எனப்படும் High Definition வீடியோக்களின் காலம். யார் சூப்பர் ஸ்டார் என்கிற ரேஞ்சுக்கு மீடியா ப்ளேயர்கள் ஷாருக் - அமிதாப் போல குஸ்தியில் இறங்கிவிட்டன.

தற்போது தயாராகும் குறும்படம் முதல் நெடும்படம் வரை, எல்லாமே HD தான். இந்த வீடியோக்களை இயக்காத மீடியா ப்ளேயர்கள் பாகவதர் காலத்து ப்ளேயர்களாக ஓரம்கட்டப்பட்டுவிட்டன.

ஆனால் இரசிகர் மன்றமே உண்டு என்று சொல்லும் அளவுக்கு VLC இந்தியாவில்  மிகப் பிரபலம். வெர்ஷன் VLC 1.1.x கிட்டத்தட்ட ஒரு ரஜினி. இதுவரை 485 மில்லியன் முறை டவுன்லோடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த டவுன்லோடர்களின் பட்டியலில் இந்தியர்களே அதிகம்.

தற்போது Two Flower என்ற பெயரில் VLC Ver 2.0 அறிமுகமாகியிருக்கிறது. ஏற்கனவே சக்ஸஸ் என்பதால், ரஜினி பட பஞ்ச் டயலாக்குகள் போல எக்கச்சக்க ஃபில்டர்கள் மற்றும் புது கோடக்குகளுடன் (Codec) ஆரவாரமான வரவேற்பு. ஆபரேடிங் சிஸ்டம் எதுவாக இருந்தாலும், எந்த வீடியோ ஃபார்மட்டாக இருந்தாலும் VLC 2.0 அட்டகாசமாக படம் காட்டும்.


  • பரிசோதனை முயற்சியாக Blue-Ray வீடியோக்களை பார்க்க வசதி உள்ளது.
  • விண்டோஸ்  7, Android, iOS and OS/2 - பல வீடியோ ப்ளேயர்கள் இந்த புதிய இயங்குதளங்களில் நொண்டி அடிக்கும். ஆனால் VLC ஐஸ்வர்யா ராய் கன்னங்களைப் போல வழு வழு என்று வீடியோக்களை இயக்கும்.
  • iOS, Android and OS/2 இவற்றில் சில ஆடியோ ப்ளேயர்கள் தொண்டை கட்டிய பாடகர்கள் போல தடுமாறுகின்றன. ஆனால் VLC ஸ்ரேயா கோஷல் போல அம்சமாகக் குழையும்.
  • அனைத்து பிரவுசர்களுடனும் சிநேகமாக இயங்க சில திருத்தங்கள் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இணைய வீடியோக்களையும் அமர்க்களமாகப் கொலை வெறி பாட்டு போல ஜாலியாகப் பார்க்கலாம்.
  • Mac பயன்படுத்துபவர்களுக்கு தோற்றம், அதிக பயன் என கிட்டத்தட்ட எல்லாமே புதிதாக இருக்கும்.



Vlc 2.0 - Two Flower டவுன் லோடு செய்ய இங்கே க்ளிக்குங்கள். 

நகக் கடி முத்தம்



அவள் நகம் கடிப்பதைக் குறைக்க

அவள் இதழ் குமிழுக்குள்
என் இதழ்களை அமிழ்த்திக் கொண்டேன்!

Sunday, March 4, 2012

சனி கிரகத்துல நிலம் வாங்க ரெடியா?

சளி பிடிச்சாலும், சனி பிடிச்சாலும் கஷ்டம். தானாதான் விலகணும். ஆனா வரும் தலைமுறைகளுக்கு சளி பிடிக்குதோ இல்லையோ, கட்டாயம் சனி பிடிக்கும் போலருக்கு.

இனிமேல், சனியை கிரகம் அதை விட்டுத் தள்ளுன்னு விட்டுற முடியாது போலருக்கு. சனி கிரகத்தை சுத்தி 62 நிலாக்கள் உள்ளன. அதில் ஒன்றின் பெயர் டியோன் (Dione).   சனி கிரகத்தை இது 2.7 நாளில் சுற்றி வருகிறது. உறைந்த ஐஸ் கட்டி போல இருக்கும் டியோனில் ஆங்காங்கே வீரத் தழும்புகள் உள்ளன. தழும்புகளுக்கு காரணம் சனி கிரகத்தின் காந்த வளையங்களில் இருந்து வரும் தாக்குதல்கள். இந்தத் தாக்குதல்களால்ஆங்காங்கே வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு ஆக்ஸிஜன் துளிர்க்கிறது. ஆனால் இந்த ஆக்ஸிஜன்களை அங்கேயே தங்க விடாமல் சனி கிரகத்தின் காந்த வளையங்கள் ஸ்ட்ரா போட்டு உறிவது போல ஈர்த்து வைத்துக் கொள்கின்றன. இதனால் சனி கிரகத்துக்கும், டியோன் நிலவுக்கும் இடையே நிலவும் வெளி வளையங்களில் ஆக்ஸிஜன் தேங்கி வருகிறது.

பூமியைப் பொறுத்தவரை ஆக்ஸிஜன் இருந்தால் அங்கே ஓர் உயிர் இருக்கிறது என்று அர்த்தம். நமது பூமியில் இருந்து செங்குத்தான வானம் நோக்கி 300 மைல் பயணம் செய்தால் எந்த அளவுக்கு ஆக்ஸிஜனும், அதைச் சார்ந்த சூழல்களும் உள்ளனவோ அந்த அளவுக்குதான் அங்கும் இருக்கிறது. உயரம் செல்லச் செல்ல ஆக்ஸிஜன் குறைந்துவிடும் என்பது நமக்கு தெரிந்தது தானே. இந்தச் சூழலில் உயிர்கள் பிறந்து வாழ்வது கடினம். ஆனாலும் இது ஒரு உற்சாகமான செய்தி. மனிதனின் தேடல்களுக்குச் சிக்காத ஏதோ ஒரு இடத்தில் நிச்சயமாக சனி கிரகத்திலேயே உயிர்வாழத் தேவையான சூழல்கள் இருக்கக் கூடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

இந்த லாஜிக்கின் படி சனி கிரகத்திலும், அதைச் சுற்றி வரும் நிலாவிலும்(டியோன்) உயிர்கள் இருக்க வாய்ப்பு உண்டு. உடனே, அமலா பால், காத்ரினா கைஃப் போல ஸீரோ சைஸ் அழகிகளை எதிர்பார்த்துவிடாதீர்கள். கண்ணுக்குத் தெரியாத அமீபா போல, மைக்ராஸ்கோப்புக்குக் கூடச் சிக்காத நுண்ணுயிரிகள் கூட இருக்கலாம்.

நாஸா அனுப்பிய காஸினி (Cassini) என்கிற விண்கலங்களின் பவர்ஃபுல்லான மூக்குகள்தான் இந்த ஆக்ஸிஜனை மோப்பம் பிடித்திருக்கின்றன. பெயர் பொறுத்தத்தை வைத்து, உடனே காஸினி கீரைக்கார்கள் இதை வியாபாரமாக்குவாக்குவார்கள் ஜாக்கிரதை!

காஸினி கலம் அனுப்பும் டாட்டாக்களை அலசி ஆராய்ந்து ஆக்ஸிஜனை பார்த்து வியந்த விஞ்ஞானியின் பெயர் ராபர்ட் டோக்கர் (Robert Toker). அவர் சொல்கிறார், 'வரும் காலங்களில் சனியைச் சுற்றி உள்ள மற்ற நிலாக்களில் தண்ணீரை கண்டு பிடித்தால் கூட ஆச்சரியப்படுவதில்லை‘ என்று நம்பிக்கை தருகிறார்.

காலை 9 மணிக்கே வரிசையில் நின்று சனியன் பிடிச்ச டாஸ்மாக் தண்ணியில காசை விரயமாக்காமல் உண்டியில் போட்டு வைங்கப்பூ! எதிர்காலத்துல நல்ல தண்ணியோட சனி கிரகத்துலயே நிலம் வாங்கிப் போட துட்டு வேணும்ல!

ஒரு முழம் முத்தம்



ஒரு முழம் பூ கேட்டாள்!
அவள் இதழ்களில் இருந்து
ஒரு சதம் ரோஜாக்கள் 
பறித்துத் தந்தேன்!