Thursday, April 25, 2024

ஏ.ஆர்.இரகுமான் - டெய்லர் ஸ்விஃப்ட் கூட்டணி

 பத்து வருடங்களாக டிரெண்டிங்கில் இருக்கும் கூட்டணி!

”Kun faya Kun பாடலைக்கேட்டதிலிருந்து ஏ.ஆர்.இரகுமானை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்”, என்று டெய்லர் ஸ்விஃப்ட் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். நான் டெய்லர் ஸ்விஃப்ட் பாடல்களை தேடிக்கேட்டது அந்த (2014) பேட்டிக்குப்பின்னர்தான்.
டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை வாழ்க்கை மைக்கேல் ஜாக்சனின் இசை வாழ்க்கையைப் போல தனித்துவமானது. அவருக்காக இசையமைக்க நானும் ஆர்வமாக இருக்கிறேன் என்று ஏ.ஆர்.இரகுமான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு (2024) ஒரு பேட்டியில் கூறினார்.
எனது டீன் ஏஜ் பருவத்தை ஆக்கிரமித்தவர் மைக்கேல் ஜாக்சன். இப்போதும் அவர் ஏற்படுத்திய அதிர்வுகள் அப்படியே இருக்கிறது. அவரும் ஏ.ஆர்.இரகுமானும் இணையப்போகிறார்கள் என்று செய்தி வெளியானபோது மிகவும் உற்சாகமடைந்தேன். ஆனால் மைக்கேல் ஜாக்சனின் மறைவால் அந்தக் கனவுக் கூட்டணி நிறைவேறவில்லை.
டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை மைக்கேல் ஜாக்சனைப்போல என்னை ஆக்கிரமிக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவரின் இசையிலும் ”தன்னைக் கண்டடைவது” என்கிற தேடல் இருப்பதாகத் தோன்றும். இரகுமானின் பாடல்கள் பலவற்றிலும் இந்த தேடல் இருப்பதை கவனிக்கலாம். சமீபத்தில் அந்த தேடல் அதிகமாகியிருக்கிறது. அந்த வகையில் டெய்லர் ஸ்விஃப்ட் அவரை வசீகரித்திருக்கலாம்.
தற்போது டெய்லர் ஸ்விப்ட் #THETORTUEDPOETSDEPARTMENT என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார். அப்பாடலுக்கு வாழ்த்து தெரிவித்து ஏ.ஆர்.இரகுமான் ஒரு ட்வீட் செய்தார். அவ்வளவுதான் அவர்கள் இருவருடைய கூட்டணி அமைந்துவிட்டதாகவே இரசிகர்கள் கொண்டாடத் துவங்கிவிட்டார்கள்.
இந்தத் தருணத்தில் ஓகே கண்மணி படத்தில் வரும் ”மன மன மன மென்டல் மனதில்” பாடல் ஞாபகம் வருகிறது. அதில் துள்ளலாகப் பாடியிருக்கும் ஜோனிடா காந்தியின் குரலில் டெய்லர் ஸ்விஃப்டின் சாயல் இருக்கும்.
ஏ.ஆர்.இரகுமானின் இசையில் டெய்லர் ஸ்விப்ட் பாடப்போகும் பாடலுக்காக இப்போதிருந்தே காத்திருக்கிறேன்.



Saturday, April 20, 2024

ஜெய்ஹோ பாடலை முதலில் நான் பாடவில்லை - சுக்விந்தர் சிங்

 ஒவ்வொரு அரிசியிலும் அது யாருக்கானது என்று எழுதியிருக்கும் என்பார்கள். படைப்புகளுக்கான விருதுகளும் அப்படித்தான் எனக்கருதுகிறேன். ஜெய்ஹோ பாடலின்மேல் அது ஆஸ்கருக்கானது என எழுதப்பட்டிருந்ததோ என்னவோ!

ஜெய்ஹோ பாடல் எப்படிப் பிறந்தது, அது எந்தப்படத்துக்காக பதிவு செய்யப்பட்டது யாரோ பாடிய அந்தப் பாடலுக்கு தனது குரல் எப்படி வந்தது, ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக அது எப்படி தேர்வு செய்யப்பட்டது அது எப்படி ஆஸ்கர் சென்றது

இத்தனை கேள்விகளுக்கும் பதிலாக அப்பாடலைப்பாடிய சுக்விந்தர்சிங் கூறிய வீடியோ ஒன்று பார்த்தேன். சுவாரசியம்!

நான் குறிப்பிட்டுள்ள பகுதி வீடியோவில் 14.15 ல் துவங்குகிறது.

Friday, April 19, 2024

இளையராஜா கதை - இம்தியாஸ் அலி இயக்கத்தில் , ஏ.ஆர் இரகுமான் இசையில்

 இளையராஜா படத்தை இயக்க நான் இம்தியாஸ் அலியை பரிந்துரைக்கிறேன். இசை ஏ.ஆர்.இரகுமானாக இருக்க வேண்டும்.

இன்று சம்கீலா படம் பார்த்தேன். படம் பார்த்தபின் இதனை சொல்லத் தோன்றியது. பஞ்சாப் மாநிலத்தில் மிகப் பிரபலமாக இருக்கும் ஒரு இசைக்கலைஞனைப் பற்றிய கதை இது. அவனுடைய வாழ்வை மிகவும் நெருக்கத்தில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வை படம் ஏற்படுத்துகிறது.

தன் மண்ணின் மைந்தனை, ஏன் ஒரு சமூகம் உச்சி முகர்கிறது என்பதையும், அதே சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஏன் அவனை நிராகரிக்கிறார்கள் என்பதையும் மிக நுணுக்கமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இப்படம் விவரிக்கிறது. அவனுடைய ஏற்றத்தை எட்டி நின்று பார்க்கும் இன்னொரு சமூகம் அவன் தடுமாறும்போது அவனை எப்படி தங்கள் சொல் கேட்பவனாக மாற்ற வலை வீசுகிறது என்பதையும் படம் தொட்டுக் காண்பிக்கிறது.

சம்கீலாவின் நிஜப் பாடல்கள் படம் நெடுக வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றை நிஜ காட்சிகளுடன், திரைக்காட்சிகளை இணைத்து காட்டிய விதம் அற்புதம்.

ஏ.ஆர்.இரகுமான் சம்கீலா பற்றி


ய பாடலையும், அவனுடைய வாழ்வின் முக்கிய தருணங்களுக்கான பாடல்களையும் இப்படத்தில் இசைத்திருக்கிறார். இறுதிக் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும், இசையும் மனதை நெகிழ வைத்துவிட்டன.

இந்த மண்ணின் ஈரத்தை சுவாசித்துக் கொண்டும், இந்த மண்ணுக்கான ஈரத்தை தந்து கொண்டும் இருக்கும் இளையராஜாவின் வாழ்வை, அவரைச் சுற்றியுள்ள சமூக அரசியலுடன் பார்ப்பதற்கு, ஆழமான பார்வையுள்ள ஒரு எழுத்து தேவை. அந்த எழுத்தும், அதை திரைக்கு கடத்தும் திறனும் இம்தியாஸ் அலியிடம் இருக்கிறது. ராக்ஸ்டார் உள்ளிட்ட அவருடைய முந்தைய படங்களே இதற்கு சாட்சி!


இளையராஜாவின் கதையை எத்தனையோ விதங்களில் சொல்லிக்கொண்டே இருக்கலாம். அவருடைய வாழ்வு பெரு வாழ்வு. அவ்வாழ்வின் ஒரு துளியை அருண்மாதேஸ்வரன் முதல் கதையாக இயக்கட்டும், அடுத்த இளையராஜா கதையை இம்தியாஸ் அலி, ஏ.ஆர் இரகுமான் இசையில் இயக்கட்டும். இது என் விருப்பம்.

ISR Selvakumar

Wednesday, April 17, 2024

கருத்துக்கணிப்பு : தேர்தல் ஆணையத்தின் மேல் நம்பிக்கையில்லை


தேர்தல் ஆணையத்துக்கும் சேர்த்து ஒரு பட்டனை வாக்கு இயந்திரத்தில் வையுங்கள்!

இந்தத் தேர்தலில் நாம் நிஜமாகவே உற்று நோக்கக் கூடிய கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையத்தின் மேல் நம்பிக்கை இல்லை என 58% சதவிகிதம்பேர் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். அதாவது வாக்களிக்கக்கூடியவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சந்தேகிக்கும் நிலையில் உள்ள தேர்தல் ஆணையம்தான், இந்தத் தேர்தலை நடத்துகிறது. இது நிஜமாகவே கவலைக்குரியது.
பொதுமக்கள் தங்களுக்கு நம்பிக்கை தராத கட்சியை மட்டுமல்ல, நம்பிக்கையை இழந்துள்ள தேர்தல் ஆணையத்தையும் சேர்த்து வெல்லக் கூடிய கட்டாயத்தில் உள்ளோம்.
(This image is #Ai generated)

கூடுதலாக 12 நாட்கள் எடுத்துக் கொண்டு வாக்குகளை எண்ணிச் சொல்லலாமே!


வாக்குச்சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாள் ஆகுமே என்கிறார்கள். அதற்கும் மேல் கூட ஆகட்டுமே! தேர்தலை நடத்த 3 மாதங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளும் தேர்தல் ஆணையம் கூடுதலாக 12 நாட்களை எடுத்துக்கொண்டு எண்ணிச் சொல்லலாமே!

தற்போதைய Ver.3 வாக்கு இயந்திரங்கள் சந்தேகத்துக்கு உரியவை. ரிசல்டுகளை மாற்ற முடியும் என்கிற சந்தேகம் வந்திருக்கிறது. எனவே இயந்திரங்கள் தரும் எண்ணிக்கையையும், விவிபேட் பிரிண்ட் செய்யும் வாக்குகளின் எண்ணிக்கையும் ஒன்றுதானா என்பது ஒப்பிட்டுப்பார்ப்பதுதான் நியாயமானது.

Saturday, April 13, 2024

காற்றின் இரைச்சல்களுக்கு நடுவில் ஒரு தம்பூராவைப்போல . . .

 

Istigfar !!!

முதன்முதலாக இந்தப் பாடலைக் கேட்டபோது, முற்றிலும் பரிட்சயமில்லாத வடிவம் என்னை திகைக்க வைத்தது. ஆனாலும் அறிமுகமில்லாத மொழியில் பாடலை நகர்த்திய தாள வாத்தியக் கருவியின் ஒலியைப் பிடித்துக் கொண்டு மெதுவாக பாடலுக்குள் நுழைந்தேன். பிரமாண்டமான சமுத்திரத்தின் கரையிலிருந்து ஆழத்தை அறியும் உணர்வுடன் பாடலை உள்வாங்கத் துவங்கினேன்.
காற்றின் இரைச்சல்களுக்கு நடுவில் ஒரு தம்பூராவைப்போல மனதை ஒருமுகப்படுத்தியது பாடல். அதே நேரம் அடுக்கடுக்கான குரல்களின் கீழ் அடுக்கில் பூமி புரள்வதுபோன்ற ஒரு அடியிசை மனதைப்பிசைந்தது. கரையிலிருந்த நான் திடீரென கடலின் ஆழத்துக்குள் உள்ளிழுக்கப்பட்டது போல உணர்ந்தேன்.
இனம் புரியாத பதற்றம், பதறாதே என ஒரு குரல், நீரில் முங்கும்போது கேட்கும் நசுங்கிய ஒலிகள், கூடவே நானிருக்கிறேன் என நம்மைக்காக்கும் ஒருவரின் கரம், கனத்த நிமிடங்களைக் கடந்த பின் நிகழும் ஆசுவாசம், இதழில் மறைந்து நிறையும் புன்னகை என்பது போன்ற கலவையான அனுபவம்.
ஒலி ஏற்படுத்தாத மணல் துகள் ஒன்று உருளுவது போல பாடல் அமைதியாக முடிவடைகிறது. அந்தக் கணத்தில் இசையும், இசைப்பவரும், அதை இரசிப்பவரும் என அனைவரும் ஒன்றுதான் என்கிற உணர்வு.
அன்பைக் கோருபவனுக்கு திரும்பவும் அன்பு கிடைக்குமா எனத் தெரியாது. ஆனால் அன்பைச் செலுத்துபவனின் மேல் அனைவரும் அன்பைப் பொழிவார்கள். உங்களுக்கு யார்மேலாவது கோபமிருந்தால் மன்னித்துவிடுங்கள். உங்களை இந்தப்பிரபஞ்சம் மன்னிக்கும்.
இன்று அதிகாலை மூன்று மணிக்கே எழுந்துவிட்டேன். அப்போது ஒலிக்கத் துவங்கிய பாடல் இன்னும் எனக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது. எங்கிருந்து ஒலிக்கிறது என்றுதான் தெரியவில்லை. அதுதான் இந்தப் பாடலின் மகத்துவம்.
Istigfar என்றால் . . . உங்கள் அனுபவத்தைக் கொண்டு நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள்.

Tuesday, April 9, 2024

அணுவுக்குள் அணுவாக, அப்பாலுக்கு அப்பாலாக உணர வைக்கும் இயக்குநர் பிளெஸ்ஸி!

 

ஆடுஜீவிதம் கற்றுத்தரும் பறவைப்பார்வை!

நஜீபின் குடும்பம், மனைவி, காதல், பிரிவு என சாதாரண வணிகப்படத்துக்கான அத்தனையும் ஆடுஜீவிதம் படத்தில் உண்டு. நிஜக்கதை என்பதால் அவற்றை தவிர்க்கவும் இயலாது.
ஆட்டுத்தொட்டியில் ஆடுகளுடன் ஒருவனாக நீர் அருந்தும் கைவிடப்பட்ட மனிதனாகத்தான் நஜீப் அறிமுகமாகிறான். அவனுடைய துயரங்களுக்கு இடையில் அவனுடைய பழைய வாழ்வை நினைத்து ஆறுதல் கொள்வதாக கதை சிறிதுநேரம் நகர்கிறது. அது அப்படியே தொடராமல் ஒரு கட்டத்திற்குமேல் திரைக்கதையின் தன்மை மாறுகிறது. குறிப்பாக மினுக்கும் விண்வெளியை பிரதிபலிக்கும் ஆட்டுத்தொட்டியில் ஆடுகளுடன் ஒருவனாக நஜீப் நீர் அருந்தும் துவக்கக் காட்சி மீண்டும் ஒருமுறை வந்ததும், திரைக்கதை விண்ணிலிருந்து பார்க்கும் பார்வையாக மாறிவிடுகிறது.
அவதிப்படும் ஒரு ஜீவராசியாக நஜீபை காட்டத் துவங்குகிறது. தவிக்கும் நஜீப், பாதியில் வந்து சேரும் நண்பன், அவர்கள் இருவரும் தப்பிச் செல்ல உதவும் இப்ராஹீம், என அனைவருமே கொதிக்கும் அகண்ட பாலைவனத்தின் ஒரு அங்கமாக மட்டுமே காட்டப்படுகிறார்கள். இரக்கமற்ற மணல் புயல் வீசும் பாலையில், பிணங்களைத் தின்னும் கழுகுகளைப் போல, கொத்தும் பாம்புகளைப் போல, அவர்கள் அனைவருமே மற்றும் ஒரு ஜீவராசியாகத்தான் சித்தரிக்கப்படுகிறார்கள்.
மாபெரும் இயற்கையின் முன் ஒரு தூசிபோல அலைபாயும் அவர்கள் ஒருவரை ஒருவர், நம்பி, தூற்றி, கைவிட்டு, அணைத்து எப்படி மீண்டுவர முயல்கிறார்கள் என்று காட்சிகள் விரிகின்றன.
இதுதான் ஆடுஜீவிதம் திரைக்கதையின் முக்கிய அம்சம். திரும்பத் திரும்ப குடும்பத்தைக் காட்டிக் கொண்டிருந்தால் அது வழக்கமான கதை சொல்லும் பாணியாக மாறியிருக்கும்.
இன்டர்ஸ்டெல்லார் திரைக்கதையிலும் மனிதர்கள் மற்றும் ஒரு ஜீவராசியைப் போலத்தான் காட்டப்படுவார்கள்.
பறவைப் பார்வையில் மண்ணில் என்ன நடக்கிறது என்பதைக் காட்டிவிடலாம். மண்ணில் ஒரு தூசு போலத் தவிக்கும் ஒரு மனிதனின் மனதில் என்ன நடக்கிறது என்பதையும் பறவைப்பார்வையில் காட்டுவதற்கு அசாத்திய நுண் கற்பனை வேண்டும்.
படம்பார்த்துவிட்டு வெளியே வரும்போது நாம் நம்மை தப்பி வந்த நஜீபாக உணர்கிறோம். படம் பார்த்து ஓரிரு தினங்களாவது அந்தப் பிரம்மாண்ட பாலையின் ஒரு மணல் துளியாகவும் நம்மை உணர்கிறோம்.
அணுவுக்குள் அணுவாக, அப்பாலுக்கு அப்பாலாக இந்த உணர்வுகளை நமக்குள் ஏற்படுத்தியதில் இயக்குநர் பிளெஸ்ஸி மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.

Sunday, April 7, 2024

இது ஆடுஜீவிதம் படத்தின் விமர்சனம் அல்ல!

கடவுள் நம்முடன்தான் இருப்பார் என்று எல்லோரும் நம்புகிறார்கள். கடினமான நேரங்களில் உதவி செய்வார் என்று எண்ணுகிறார்கள்.

ஏமாற்றப்பட்டு பாலைவனத்தில் அடிமையாக மாட்டிக்கொள்ளும் நஜீபும் அப்படித்தான் நம்புகிறான். அவனை அடிமைப்படுத்தி சவுக்கால் அடித்து கொடுமைப்படுத்தும் கஃபீலும் கடவுளைத்தான் அழைக்கிறான். தாகத்துக்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காமல் நா வறண்டு மாண்டுபோகும், நஜீபின் நண்பன் ஹக்கீமும் கடவுளைத்தான் தொழுகிறான். நஜீப் தப்பிச் செல்ல உதவும் இப்ராஹீமும் கடவுளைத்தான் வேண்டுகிறான்.
இந்தக் கோணத்தில் சிந்தித்தால் கடவுள் யாருக்குத்தான் ஆதரவாக இருந்தார் என ஒரு கேள்வி எழுகிறது. இதற்கு உங்களுடைய பதில் என்னவாக இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் எனக்கென ஒரு பதில் இருக்கிறது. நல்லவரோ, கெட்டவரோ, எவராக இருந்தாலும் கடவுள் யாருக்கும் ஆதரவாக இருப்பதில்லை. அவர் வாழ்வதற்கான தருணங்களை அமைத்துத் தருகிறார். அல்லது அந்தத் தருணமாகவே அவர் இருக்கிறார்.
அந்தத் தருணங்களில் ஏமாற்றுகிறோமா? ஏமாறுகிறோமா? நல்லது செய்கிறோமா? தீங்கு செய்கிறோமா என்பது அவரவர் குணங்களைப் பொறுத்து அமைகிறது. கடவுளை எதற்காக நம்புகிறோம் என்பதைப் பொறுத்து அந்தக் குணம் நம்முடனேயே இருக்கிறது. நாம் யார் என்பதை தீர்மானிக்கிறது.
ஆடுஜீவிதம் படத்தில் கடவுளை துணைக்கு அழைக்காத ஜீவன்கள் ஆடுகளும், ஒட்டகங்களும்தான். ஆரம்பத்தில் ஆடுகள் கூட நஜீபை முட்டிச் சாய்க்கும். ஆனால் போகப் போக அந்த ஆடுகளுடன் அவன் ஒன்றிப்போய்விடுவான். அந்த ஆட்டு மந்தையில் ஒருவனாக அவனும் மாறிப்போய்விடுவான். உயிர்தப்பிப் பிழைக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அந்த ஆடுகளைப் பிரிய மனமின்றி அழுது புலம்பியபடியே அந்த ஆடுகளிடமிருந்து விடைபெறுவான். அந்த ஆடுகள் எந்தச் சலனமும் இன்றி அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.
அந்த ஆடுகளுக்கு நஜீபும் ஒன்றுதான், அவனை அடிமைப்படுத்திய கஃபீலும் ஒன்றுதான். ஒருவேளை எந்தச் சலனமும் இல்லாத அந்த ஆடுகள்தான் கடவுள்களோ!
தப்பி வந்த நிஜ நஜீப் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவரிடம் கேட்கவேண்டும், யார் கடவுள் என்று.

ஏ.ஐயில் (சிறுவன்) எஸ்.பி முத்துராமன்!

 


ஏ.ஐயில் சிறுவன் எஸ்.பி முத்துராமன்.

எப்போது சந்தித்தாலும் மறைந்த எங்கள் தந்தை #ISR பற்றிய ஞாபகங்களை பகிர்ந்து கொள்வார். குடும்பத்தார் அனைவரையும் பற்றியும் அக்கறையுடன் விசாரிப்பார். குடும்ப விழாவிற்கு அழைத்தால் மறக்காமல் உடனே தனது டைரியில் குறித்துக் கொள்வார். நேரில் வந்து வாழ்த்துவார். இந்த எளிய மனிதரா சூப்பர் ஸ்டாரை வைத்து 25 படங்கள் இயக்கினார் என்று எப்போதும் வியக்க வைப்பார்.
"ஏ.வி.எம் தந்த எஸ்.பி.எம்" என்ற புத்தகத்தில் உள்ள அவரது சிறுவயது புகைப்படத்தை ஏ.ஐயால் உயிர் பெறச் செய்திருக்கிறேன். கடந்த அவருடமே அவருக்கு இதனை அனுப்பிவிட்டேன். ஆர்வத்துடன் எப்படிச் செய்தீர்கள் என்று கேட்டுக் கொண்டார்.
இன்று அவரது 89வது பிறந்தநாள். அவருக்கு எங்கள் குடும்பத்தார் சார்பில் வாழ்த்துக்கள்! வாழ்க எஸ்.பி.எம்!
- ISR Selvakumar

Thursday, April 4, 2024

பதிவான வாக்குகளை ஹேக் செய்ய முடியுமா?

வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது. ஆனால் பதிவான வாக்குகளை ஹேக் செய்ய முடியும். இது என் வாதம்.

இந்தவாதம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை உடனடியாக விசாரிக்க உச்சநீதி மன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. இதுவே மிகத் தாமதம் என்றாலும், இது சிறிய ஆறுதல்!
விவிபேட் இணைக்கப்பட்டதுமே வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டது. நாம் வாக்களித்த சின்னத்தை விவிபேட், ஒரு காகிதத்தில் பிரிண்ட் செய்து காட்டுகிறது. ஆனால் மொத்தமாக வாக்குகளை எண்ணும்போது, அந்தக் காகிதங்கள் அனைத்தையும் கணக்கில் கொள்வதில்லை. ஒரு சட்டசபை தொகுதியில் ஐந்து வாக்குச் சாவடிகளை மட்டும் தனியாக குறிக்கிறார்கள். அங்கு மட்டும் காகிதத்தில் பதிவாகியுள்ள வாக்குகளும், இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளும் ஒரே எண்ணிக்கையில் உள்ளனவா என்று பரிசோதிக்கிறார்கள்.
இதே போல் அனைத்து சாவடிகளிலும் எண்ணிப்பார்க்க வேண்டும் என்றால் தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. மொத்தம் 24 லட்சம் விவிபேட் இயந்திரங்களில் வாக்களித்த சீட்டுகள் பதிவாகும். ஆனால் வெறும் இருபதாயிரம் விவிபேட் இயந்திரங்களை மட்டுமே ஒப்பிட்டு பரிசோதனை செய்ய முடியும். அனைத்தையும் ஒப்பிட்டு சோதித்துப் பார்க்க நேரமாகும் என்று நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது.
தேர்தலை பல கட்டங்களாக நான்கு மாதங்களுக்கு நடத்துகிறார்கள். இதே போல் வாக்குகள் எண்ணுவதையும் பல கட்டங்களாக நடத்தலாமே? பல கட்டங்களாக எண்ணும்போது 5-6 மணி நேரத்துக்குள் ஒரு விவிபேட்டும், ஒரு வாக்கு இயந்திரமும் ஒரே எண்ணிக்கையை காட்டுகிறதா என்பதை சோதித்துவிட முடியும் என்கிறார்கள், வழக்கு தொடுத்திருக்கிறவர்கள்.
ஆனால் பல கட்ட தேர்தலை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், பலகட்டமாக எண்ணுவதை ஏற்க மறுக்கிறது. அது என் சந்தேகங்களை அதிகரிக்கிறது.
கடைசி நேரம் என்றாலும், என்னுடைய ஒரே நம்பிக்கை உச்ச நீதிமன்றம்தான். தேர்தலும், வாக்கு எண்ணிக்கையும் நேர்மையாக நடக்கும், அதற்கு உச்ச நீதி மன்றம் துணை நிற்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

Sunday, January 28, 2024

ப்ளுஸ்டார் பிரித்வி


பிரித்வி என்றால் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால் புளு ஸ்டார் படத்தில் நடித்த பிரித்வி என்றால் உடனே தெரிந்து கொள்வார்கள். இயக்குநர் பாண்டியராஜனின் மகன்தான் பிரித்வி. பத்து வருடங்களுக்கு முன்பே திரையில் அறிமுகமாகிவிட்டார். ஆனாலும் மனம் தளரவில்லை. தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தார். திரு.பாண்டியராஜன் அவர்களை சந்திக்க வீட்டுக்குச் செல்லும்போது எப்போதும் இன்முகத்துடன் வரவேற்பார். அவர் மட்டுமல்ல அவருடைய குடும்பமே மகிழ்வுடன் வரவேற்பார்கள். அப்போதெல்லாம் தோன்றும், பிரித்விக்கு நல்ல வாய்ப்பு அமைய வேண்டும் என்று.

பாண்டியராஜனின் நண்பர்கள் அனைவருமே என்னைப் போல  பிரித்விக்கு நல்வாய்ப்பு அமைய வேண்டும் என்றுதான் நினைத்திருப்பார்கள். புளுஸ்டார் வழியாக இன்று பிரித்வி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். அவர் தோன்றும் காட்சிகளில் விசில் பறக்கிறது. இதற்கு காரணமாக அனைவரின் நற்சிந்தனை, குடும்பத்தின் ஆதரவு என காரணங்கள் சொன்னாலும் பிரித்வியின் விடா முயற்சியும், வெல்வோம் என்ற நம்பிக்கையும்தான் இதற்கு முக்கிய காரணம்.

பிரித்விக்கு மேன் மேலும் நல்வாய்ப்புகள் அமைந்து வெற்றிகள் குவியட்டும்!

Saturday, January 27, 2024

ஜனனி இசையமைத்த ”தமிழ் எங்கள் உயிர் மூச்சு” பாடலுக்கு சர்வதேச விருது.

🎉 Exciting News! 🏆 Thrilled to announce that "தமிழ் எங்கள் உயிர் மூச்சு," a song I produced and supervised, has clinched an award at the prestigious InterContinental Music Awards in Los Angeles, USA. 🌟


All the glory and the award belong to one and only Janajiy. The Composer, Music Producer, Arranger & Singer S. J. Jananiy, whose extraordinary musical prowess brought this song to life with unparalleled brilliance, shares in this honor. She has won this award for her original score in the Asian Folk category.

Heartfelt gratitude to the brilliant team behind this musical marvel:

🎹 Composer, Music Producer, Arranger - S. J. Jananiy.

🎤 Singer Vel Murugan

📝 Lyricist - Carmel Ignatius

This award is not just a recognition of our collective effort but a celebration of Tamil culture and its vibrant music. A special thank you to Puthiyathalaimurai TV for the incredible opportunity to create the theme song for Tamizhan Awards 2023. 🙏 Your trust and collaboration have added a glorious note to this musical journey!

#AwardWinningMusic #TamizhanAwards #InterContinentalMusicAwards

ஆகா! மீண்டும் ஏ.ஆர்.இரகுமானுடன் தேவா!

 அன்பாளனே சொல்! அருளாளனே சொல்!


மீண்டும் ஏ.ஆர்.இரகுமான் இசையில் தேவாவின் கரகரத்த குரலில் அதி அற்புத பாடல்! அன்பாளனே என்ற வார்த்தைக்காகவே யுகபாரதியின் கைகளை பற்றிக் கொள்ளத் தோன்றுகிறது. துயருற்று தவிக்கும் மனதின் காயங்களை ஆதரவுடன் அணைத்து ஆற்றுப்படுத்தக் கூடிய மாய ஸ்வரங்களால் நெய்யப்பட்டிருக்கிறது இந்தப் பாடல்.
தேவாவும், ஏ.ஆர்.இரகுமானும் இணைந்து ஒரு சூஃபி ஆல்பம் செய்ய வேண்டும். இது என் விருப்பம்! லால் சலாம்!

Friday, January 26, 2024

பவதாரிணி - கற்பூர பொம்மை ஒன்று கரைந்துவிட்டது!

 

எம்.எஸ்.விக்கும், இளையராஜாவுக்கும் காலம் ஒரு கொடையைக் கொடுத்தது. தமிழர் வாழ்வின் எல்லா தருணங்களையும் அவர்கள் தங்கள் இசை வழியாகத் தழுவிக் கொண்டார்கள். தமிழர்களின் சுகம், துக்கம், உறவுகள், பிரிவுகள் அனைத்திற்கும் அவர்களின் ஏதோ ஒரு பாடல் மருந்தாக இருந்தது.

ஆனால் அவர்களுக்கு எது துணையாக இருந்தது என்பது அவர்களுடைய ஆன்மாவுக்கு மட்டுமே தெரியும். இன்று இளையராஜா தனது அன்பு மகளை இழந்திருக்கிறார். இந்தப் பிரபஞ்சத்தின் அதிர்வுகளில் உண்டான ஏதோ ஒரு ஒலி அவருக்கு ஆறுதல் தரக் கூடும். அந்த ஒலி நமது மௌனங்களில் கூட இருக்கலாம்.

ரமணர் பற்றிய இளையராஜாவின் பாடல் ஒன்றை பவதாரிணி பாடும் வீடியோ ஒன்றை பார்த்தேன். ஒரு கணத்தில் அந்த இசையுடன் ஒன்றிப்போய், அதன் அடர்த்தி தாங்காமல் விம்மி அழுதார். பாடுவதைத் தொடர முடியாமல் அவர் கண்ணீர் விட்டபோது பிண்ணனியில் இசை நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவர் தேறி வரட்டும் என்று விடாமல் தாளத்துடன் ஒலித்துக் கொண்டே இருந்தது. மகளின் அருகில் அமர்ந்திருந்த இளையராஜா ஒரு புன்னகையுடன், தனது அன்பு மகளை தேற்றிப் பாடலைத் தொடர வைத்தார்.
இன்று பவதாரிணியின் இடத்தில் இளையராஜா இருக்கக் கூடும். ஆனால் பவதாரிணி எங்கிருந்து தனது தந்தை இளையராஜாவை தேற்றுவார் எனத் தெரியவில்லை!
கற்பூர பொம்மை ஒன்று கரைந்துவிட்டது!

எங்க ஏரியாவில் குடியரசு தினம்

 ”கொடி ஏத்தலாம் வந்துடு”

ஏழு மணிக்கு எபிநேசர் ஃபோன் செய்தான். மனைவி தயாரித்த ஃபில்டர் காபியை குடித்துவிட்டு கொடிக்கம்பமிருக்கும் கிருஷ்ணர் கோவில் தெரு முனையை ஏழு முப்பதுக்குச் அடைந்தேன். எபி அங்கு இல்லை. மரத்தடி அயன்கடையும் மூடியிருந்தது. ஓடிவந்த வெள்ளை நாய்க்குட்டி என்னை சிநேகிதமாகப் பார்த்தது. நானும் அதுவும் சற்று நேரம் தனியாக நின்றிருந்தோம்.
சாக்லெட் வாங்கப்போயிருந்தேன் என்று சொல்லிக் கொண்டே எபி வந்தான். கையில் கயிறு கட்டப்பட்ட புதுக்கொடி. அவன் பைக்கிலிருந்து இறங்கியதும் ஏணியை ஏற்றிக் கொண்டு அவனுடைய கம்பெனி குட்டியானை வந்தது.
இன்னைக்கு நீதான் கொடியைக் கட்டணும் என்றான். குட்டி யானையிலிருந்து அலுமினிய ஏணியை இறக்கி கொடிக்கம்பத்தின் மேல் வளையம் வழியாக கயிற்றை இறக்கினோம். அடுத்து கொடியை மடித்து சுருக்குப் போடுவதில் சந்தேகம் வந்துவிட்டது. நல்ல வேளையாக எதிர்வீட்டு நண்பரின் மகள், அங்கிள் நான் யுடியூப் பார்த்துச் சொல்கிறேன் என்று உதவிக்கு வந்தாள்.
தயங்கித் தயங்கி ஒரு சுகாதரப் பணியாளர் வந்தார். அவருக்கு கொடி கொடுத்ததும் சற்று இலகுவானார். அதற்குப் பின் இன்னும் சிலர் வந்தார்கள். சட்டையில் குத்திக் கொள்ளும் குண்டூசி துரு ஏறியிருந்தது. போன வருடத்தின் மீதியா என்று யாரோ கேட்டார்கள். இந்திராகாந்தி போலிருந்த ஒரு பெண் புன்னகையுடன் எங்களை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார்.
வெற்றிகரமாக கொடியைக் கட்டியதும், என்னை பேசச் சொன்னார்கள். நான் அவ்வழியாக தினசரி வாக்கிங் வரும் நபரை கை காட்டினேன். அவர் பக்கத்து ஏரியாக்காரராம். எங்கள் ஏரியாவில் யாரும் இப்படிச் செய்வதில்லை. வருடா வருடம் நீங்கள் கொடி ஏற்றுவதில் சந்தோஷம் என்று பேச்சை துவக்கினார்.
சற்று நேரத்தில் பத்து பேருக்கு மேல் கூடிவிட்டார்கள். அடுத்து இந்திரா காந்தி சாயல் பெண்ணை பேசச் சொன்னேன். சுருக்கமாக 60 வினாடிகளில் தான் யோகா கோச் என்ற தகவலுடன் அனைவரையும் வாழ்த்தினார்.
கிட்டத்தட்ட எல்லோருக்குமே தேசிய கீதம் தெரிந்திருந்தது. வாய்விட்டுப் பாடி முடித்தோம். சாக்லெட் வினியோகத்துடன் விடைபெறும்போது எங்கள் பக்கத்துவீட்டுச் சிறுமி வர்ஷா வந்தாள். முடிச்சுட்டீங்களா என்றார் அவளுடைய தாத்தா. அவர் அடுத்து தொடர்வதற்குள் நான் ரெண்டு ஸ்பீச் கொடுக்கணும் என்றாள் வர்ஷா.
கலைந்து போனவர்கள் திரும்ப வந்து வர்ஷாவை சூழந்து கொண்டார்கள். குடியரசு தினத்தின் முக்கியத்துவம் மற்றும் புத்தக வாசிப்பின் அவசியம் பற்றி தெளிவாகப் பேசினாள். எல்லோரும் சந்தோஷமாக கை தட்டினோம். புதிதாக அறிமுகமானவர்கள் எண் கொடுத்துச் சென்றார்கள்.
சிறிய கூட்டம் சிறிய சந்தோஷம். கடந்த முப்பது வருடங்களாக ஒவ்வொருவருடமும் இப்படித்தான். இவ்வருட நம்பிக்கை சிறுமி வர்ஷா.
அடுத்து சுதந்திர தினத்தன்று இது போல எபி போன் பண்ணுவான், வருவேன், வேறு சிலரும் வருவார்கள். கொடி ஏற்றுவோம்.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!


#மல்லிகைக்கிழமை

 


Monday, January 22, 2024

க்வாஜா மேரே க்வாஜா

தூயவனை என்னைத்
துலக்க வழி தெரியாமல்
தூயவனே உன்னிடத்தில்
தொலைக்க வழி தேடுகிறேன்.
இறைவனிடம் ஒரு விவாதம் என்ற மு.மேத்தாவின் கவிதையில் இந்த வரிகள் உள்ளன. ஆழ்மனதை உசுப்பும் இந்த வரிகளுக்கு இணையான ஏ.ஆர்.இரகுமானின் பாடல் ஜோதா அக்பர் படத்தில் வரும்.
”க்வாஜா மேரே க்வாஜா” என்ற இந்தப் பாடலுக்கு எனக்கு இதுவரையில் அர்த்தம் தெரியாது. ஆனால் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் விடைதெரியாத பல கேள்விகளுக்கு பதில் கிடைப்பதைப் போலிருக்கும். உடல்சோர்வும், மனச்சோர்வும் எட்டிப்பார்க்கும்போதெல்லாம் இந்தப் பாடலை என் மனது தானே பாடத் துவங்கிவிடும். அது நாள் முழுவதும் தொடரும், அடுத்த நாள் வரையிலும் கூட நீளும். இதயத்தையும், மனதையும் கழுவி புதிதாக்கிவிட்ட உணர்வு கிடைக்கும். ஒரு ஆன்ம பலம் கிடைக்கும்.
இன்று தொலைக்காட்சிகள் ஜெய் ஸ்ரீராம் கோஷங்களைக் காண்பித்துக் கொண்டிருந்தபோது நான் க்வாஜா மேரே க்வாஜா பாடலில் தான் நாள் முழுவதும் அமிழ்ந்திருந்தேன். இப்போதும் கூட ஏ.ஆர்.இரகுமானின் ஆர்மோனியம் எனக்குள் ஒலிக்கிறது.

இதில் அதிசயம் என்னவென்றால் இன்று நான் முதலில் கேட்ட பாடல் கர்ணன் படத்தில் வரும் ”உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது” பாடல்தான். விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசையில் கண்ணதாசன் எழுதியுள்ள அந்தப் பாடல் கடவுளின் அருகில் அமர்ந்து கடவுளுக்காகவே உருவாக்கப்பட்டது போலிருக்கும். கடவுளுக்கே அமைதி வேண்டுமென்றால் அந்தப்பாடலைத்தான் கேட்பார்.
அந்தப்பாடலில் கரைந்து கொண்டிருந்த நான் க்வாஜா மேரா க்வாஜாவுக்கு எப்போது மாறினேன் எனத் தெரியவில்லை. இரு பாடல்களுமே எனக்கு ஒரே உணர்வைத்தான் தருகின்றன. இன்றைய இரவு இவ்விரு பாடல்களுடன் நீளும். அக்பரும், கர்ணனும் துணைக்கு இருப்பார்கள், ஒருவேளை கடவுளும் இருக்கலாம்.

ஏ.ஆர்.இரகுமான் மயக்குகிறார்! ஏ புள்ள!

ஏ புள்ள கக்களத்தி!


வாலி, வைரமுத்துவிற்குப் பின், கபிலன்தான் ஏ.ஆர்.இரகுமானுக்கு சரியான கூட்டணியாக இருப்பார் எனத் தோன்றுகி
றது.
எம்.எஸ்.வியின் இசையில் தபேலா பயணிக்கும் திசையை கணிக்கவே முடியாது. துள்ளி விளையாடும், உதாரணத்திற்கு நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும் பாரதி கண்ணம்மா பாடல்.
எம்.எஸ்.விக்கு தபேலா போல ஏ.ஆர்.இரகுமானுக்கு தவில். அவர் தவிலை கையாளும் விதம் முற்றிலும் புதுமை. லால்சலாம் படத்திற்காக அவர் இசையமைத்துள்ள ஏ புள்ள பாடலில் தவில் தனி நடை நடக்கிறது. மெட்டைக்கேட்டுவிட்டு தன்போக்கில் நடனமாடும் இளைஞனைப்போல தாவிக்குதிக்கிறது.
இரண்டு நாட்களில் குறைந்தபட்சம் 30 - 40 முறை கேட்டிருப்பேன். ஏ புள்ள மயக்குகிறது!

#MSV #ARRahman #AePulla #LalSalam #Tabela #Thavil

LIFT - திரைப்படம் எப்படி இருக்கு?

 LIFT - நடுவானில் தங்கத்தை கொள்ளையடிக்கும் படம்.

தேடினால் எதையுமே பார்க்க மாட்டேன். அதனால் நெட்ஃபிளிக்ஸ் டாப் 10ல் ஒரு படத்தை தேர்ந்தெடுப்பேன். இந்த வாரம் முதலிடத்தில் இருந்தது. அதனால் பார்த்தேன்.



ஒரே டீமாகத்தான் கொள்ளையடிப்பார்கள். ஆனால் அவர்களுக்குள்ளேயே முரண்படுவார்கள். இதுதான் சமீபத்திய கொள்ளையடிக்கும் படங்களின் டிரெண்ட். இப்படத்தில் இது ஊறுகாய் அளவிற்கு கூட இல்லை. அதனால் திருப்பங்கள் குறைவாக உள்ள படமாக மாறிவிட்டது. போரடிக்கவில்லை, சுவாரசியமாகவும் இல்லை.



#Lift #NetFlix

ஏ.ஐ டிப்ஸ் - 01

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி நமது வேலைகளை சுலபமாக்கிக் கொள்வது எப்படி? அதற்கு உதவும் மென்பொருட்கள் எவை? என்பதை இனி அவ்வப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் ஆன்லைன் வழியாக வீட்டிலிருந்தே வேலை செய்ய உதவும் தளங்கள் சிலவற்றை அறிமுகம் செய்கிறேன்.

Unleash your inner tech wizard with the coolest AI Tips + Tricks. Get ready to hack the future and ride the innovation wave! 

Follow me for a daily dose of AI tips and hacks. Let's decode the future together. 

#AITipsAndTricks #AiHacks #Ai #ISRselvakumar #ISRventures