Saturday, October 25, 2008

'கருப்பு எம்.ஜி.ஆர்' என்பவரை காணவில்லை

அன்புடையீர்,

எங்கள் அன்பு கேப்டன் விஜயகாந்த்தை ஈழத் தமிழர்கள் பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்து மூன்று நாட்களாக காணவில்லை.

முதலமைச்சர் மற்றும் பிரதமர் ஆகக் கூடிய வயது. பார்ப்பதற்கு கருப்பாக எம்.ஜி.ஆர் போலவே இருப்பார். நான்தான் கேப்டன் கேப்டன் என்று சொல்லிக்கொண்டு திரிவார்.

வடிவேலு வீட்டில் கல்லெறிந்துவிட்டு, சன் டிவியில் லைவ் பேட்டியில் கருணாநதியை திட்டியபோது அவரை நீங்கள் பார்த்திருக்கலாம்.

இளைஞர் மாநாட்டிற்காக சென்னையில் ஒவ்வொரு இரண்டடிக்கும் ஒரு பேனரில் இரண்டு கையையும் விரித்தபடி சிரித்து போஸ் கொடுத்திருந்தாரே அதிலாவது அவரை நீங்கள் பார்த்திருக்கலாம்.

இலங்கைப் பிரச்சனையைப் பற்றி 'இவரைத் தவிர வேறு யாரும் பேசியதில்லை' என்று அவருடைய மனைவியும், தே.மு.தி.கவின் அண்ணியும் கொடுத்த சர்டிபிகேட் ஒன்று அவர் கையில் உள்ளது.

கடைசியாக ஆனந்தவிகடன் நிருபர்கள் மற்றும் மச்சினன் சுதிஷிடன் கோயம்பேடு மார்கெட் பக்கத்தில் நின்றுகொண்டு அரிசிப் பிரச்சனையை ஏதோ ஒரு நோட்டில் எழுதிக்கொண்டிருந்தார்.

ஆனால் இலங்கையில் பிரச்சனை ஆரம்பித்தவுடன், எங்கள் அன்பு கேப்டன், கிரிக்கெட் மேட்சில் டிரிங்ஸ் கொடுக்க வந்த சின்னப் பையனைப் போல திடீரென்று மாயமாக மறைந்துவிட்டார்.

எப்போதுமே நான் தனியாகத் தான் நிற்பேன் என்று அலறிக்கொண்டிருப்பார். அதனால் நேற்று 60 கிலோ மீட்டருக்கும் மேல் நீண்டிருந்த மனிதச் சங்கிலியைத் தாண்டி, 61வது கிலோ மீட்டரில் ஏதாவது ஒரு இடத்தில் தனியாக இருப்பார் என்று நிறைய டி.வி. கேமராக்கள் மற்றும் பத்திரிகை கேமராக்கள் உதவியுடன் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. எங்கேயோ போய் ஒளிந்து கொண்டிருக்கிறார்.

அவரை யாராவது பார்த்தால், 2011ல் தேர்தல் முடியும் வரை, இந்திய எல்லைகளுக்கு அப்பால், யார் கண்ணிலும் படாமல் ஒளித்து வைக்கும்படி அன்புடன் வேண்டி, கெஞ்சி, கூத்தாடி கேட்டுக்கொள்கிறோம்.

எங்கள் ஆசான் விஜயகாந்தை 2011 வரை ஒளித்து வைப்பவர்களுக்கு இலவச முதல்வர் பதவி உண்டு. அது எப்படி இலவசமாக கொடுக்க முடியும் என்று கேட்காதீர்கள், சொன்னால் கருணாநிதி அதை காப்பி அடித்து மீண்டும் முதல்வர் ஆகிவிடுவார் என்பதால் அதைச் சொல்ல மாட்டோம்.


இப்படிக்கு
இலங்கைத் தமிழர்கள் பற்றி கவலைப் படும் தமிழர்கள் (தெலுங்கர்கள் அல்ல)

Thursday, October 23, 2008

மனிதச் சங்கிலி தொடர்பாக அறிவுச் சங்கிலி ஞாநிக்கு சில கேள்விகள்

நடக்கவிருக்கும் மனித சங்கிலியைக் குறித்து, 1987ல் நடந்தது, 'போராட்டம்', இப்போது நடப்பது வெறும் 'அணிவகுப்பு'. அன்றைய கோரிக்கை 'இந்திய அரசே தலையிடாதே', இன்றைய கோரிக்கை 'இந்திய அரசே தலையிடு', என்று உலக மகா ஞாநி வழக்கம் போல பிதற்றலை ஆரம்பித்திருக்கிறார்.

முதலில் அவருடைய வார்த்தை ஜாலத்திற்கு வருகிறேன்.

சிறுவயதில் வெளியே செல்லும்போது எனது தந்தை என் கையை பிடித்துக்கொண்டு, 'டேய் என் கையை விட்டுட்டு எங்கயும் போயிடாத' என்பார், சில நேரம் 'டேய் என் கையை விடாம கூடவே வா' என்பார். இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான். சின்னக் குழந்தைக்கு கூட இது தெரியும். ஆனால் ஞாநி இரண்டுக்கும் வெவ்வெறு அர்த்தங்கள் என்கிறார்.

'இந்திய அரசே இலங்கை தமிழர்களுக்கு எதிராக தலையிடாதே'
'இந்திய அரசே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தலையிடு'

இந்த இரண்டு கோஷங்களுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? ஆனால் இருக்கிறது என்கிறார் ஞாநி. அதற்கு வசதியாக இலங்கை தமிழர்களுக்கு எதிராக, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஆகிய இரு சொற்றொடர்களையும் நீக்கிவிட்டார். நீக்கி விட்டு படித்தால் என்ன வருகிறது பாருங்கள். 'இந்திய அரசே தலையிடாதே', 'இந்திய அரசே தலையிடு' என்று வருகிறது. அதாவது இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் அதன் ஆதரவாளர்கள் நிலையை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்று போலி குற்றம் சாட்டுகிறார்.

1987ல் நடந்தது, 'போராட்டம்', இப்போது நடப்பது வெறும் 'அணிவகுப்பு' அதற்குச் செல்லாதீர்கள் என்று சொல்லாமல் சொல்கிறார். ஞாநி சொல்வது போல நடக்கவிருக்கும் மனிதச் சங்கிலி தி.மு.க தலைமையில் நடைபெறும் வெறும் அணிவகுப்புதான் என்று வைத்துக்கொண்டாலும், அப்படி 'வெறும் அணிவகுப்பாக' தோற்றமளிக்க யார் காரணம்?

யார் காரணம் என்று சுட்டுவிரலை நீட்ட மாட்டார். ஏனென்றால் அவருடைய விரல் அவருக்குப் பிடித்த ஜெயலலிதாவை நோக்கி நீள வேண்டும். அன்றும், இன்றும், என்றும் இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் எதிர் பக்கத்திலேயே ஜெயலலிதா நிற்கிறார், நிற்பார். அம்மாவைத் திட்ட மனமின்றி, புது அரசியல்வாதி விஜயகாந்த்தை திட்டவும் மனமின்றி மீண்டும் கருணாநிதியின் மேலேயே பாய்கிறார். ஜெவும், விஜயகாந்தும் மனித சங்கிலிக்கு வரவேண்டாம், ஆனால் குறைந்தபட்சம் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தங்கள் கைத்தடிகளையாவது அனுப்பி வைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. ஏன் என்று கேட்டு குட்டவும் ஞாநிக்கு மனமில்லை.

குமுதம் தலையங்கத்திலும் இதே வழவழாதான். 'இலங்கை அரசுக்கு இதுவரை பல உதவிகளைச் செய்திருக்கிற மத்திய அரசு, இனியாவது அதை அடியோடு நிறுத்தி அங்குள்ள தமிழர்களின் எதிர்காலம் குறித்து உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும்' என்று சில வரிகள் உள்ளன. "உரிய நடவடிக்கை" என்றால் என்ன? அதற்கு குமுதம் பதில் சொல்லுமா? இல்லை ஞாநி தனியே பதில் சொல்வாரா?

ஞாநி அதற்கும் முயற்சித்திருக்கிறார். 'போரை விட்டு விட்டு ஜனநாயகத்திற்கு வாருங்கள்' என்று பிரபாகரனுக்கு கோரிக்கை வைக்கிறார். சபாஷ்! சரியான குள்ள நரி சிந்தனை! 'இந்தியாவை தலையிடு' என்று சொன்னால் அது 'போர் நிறுத்ததிற்கு வலியுறுத்துவதற்காகத்தான்' இருக்க முடியும். அப்படிச் செய்தால் அது சூழ்நிலை காரணமாக புலிகள் ஆதரவாகத்தான்' இருக்க முடியும். ஆனால் அப்படி வெளிப்படையாக சொல்ல முடியாது என்பதால் பிரபாகரனை போரை நிறுத்திவிட்டு வந்து 'மகாபலிபுரத்தில் நடனம்' பார்க்கச் சொல்கிறார். ரஜினி கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டதற்கே தமிழினத் துரோகி என்று கடிதம் எழுதிய ஞாநி, பிரபாகரனை சிங்கள அடக்குமுறைக்கு எதிராக போரை நிறுத்திவிட்டு வாருங்கள் என்று கூசாமல் சொல்கிறார். இந்தியாவை போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்த திராணியின்றி, ஜெயலலிதா வகையறாக்களுடன் சேர்ந்துகொண்டு, பிரபாகரனை நிறுத்தச் சொல் என்கிறார். யார் துரோகி?

பிரபாகரனின் இராணுவ நடவடிக்கைகளை விட ஜெயலலிதா, கருணாநிதியின் ஊழல் அரசாங்கள் மக்களுக்கு அதிகம் பலனளித்திருக்கிறதாம். மிஸ்டர் ஞாநி, அடிப்படையை மறந்துவிட்டார். தமிழ்நாடு என்பது சுதந்திர பூமி. இங்கு வடிவேலு முதலமைச்சரானால் கூட, மக்கள் எப்படியோ வாழ்ந்து கொள்வார்கள். ஆனால் ஈழம் என்பது, சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் கொடுமை. தற்போது நடந்துகொண்டிருப்பது அந்தக் கொடுமைக்கெதிரான கடைசி யுத்தம். யுத்தத்தை நிறுத்த இந்தியாவால் முடியும். ஆனால் பிரபாகரனால் முடியாது. பாலியல் கொடுமை வழக்கில் ஜெயிலுக்குப் போன நடிகனுக்கு கூட இந்த வரலாற்று உண்மை தெரியும். ஞாநியும் இதெல்லாம் தெரியாத முட்டாள் அல்ல.

அவரே கூறியிருப்பது போல மெய்யான மனிதச் சங்கிலி என்பது கைகளை இணைப்பது அல்ல, மனங்களை இணைப்பதுதான் என்றால், முதற்கட்டமாக அவர் தமிழகத்தின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் அளவுக்கு வாக்கு வைத்திருக்கும் ஜெ, மற்றும் விஜயகாந்தின் மனதை மாற்ற முயற்சிக்க வேண்டும். அவர்களையும் இணைந்து குரல் கொடுக்கச் சொல்ல வேண்டும். செய்வாரா?

செய்யமாட்டார் என்பதால் ஞாநிக்கு 2011 குட்டுகள் பரிசளிக்க முடிவு செய்திருக்கிறேன். ஞாநி தன்னைத்தானே குட்டிக் கொள்ள முடியாது என்பதால், இதைப் படிக்கும் நண்பர்கள் அனைவரும் அன்பாக ஞாநியின் தலையில் ஒரே ஒரு குட்டு குட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். முதல் குட்டு என்னுடையது 'டங்'. நிறைய குட்ட வேண்டும் போலிருந்தால் ஜெயலலிதா மற்றும் விஜயகாந்தின் தலையில் குட்டுமாறு வேண்டுகிறேன். மேக்கப் போடுவதற்க்காக ஜெயலலிதா மற்றும் விஜயகாந்திற்கு கண்ணாடி பார்க்கும் பழக்கம் உண்டு. எனவே ஒவ்வொரு முறை கண்ணாடியை பார்க்கும்போதும், தலையை தடவும்போதும், உண்மையான தமிழ் மக்கள் குட்டிய இடம் வலிக்கும் உணர்ச்சி ஏற்படும். வலி கோபமாகி 'என்ன ஞாநி இது? எல்லாம் உன்னாலதான?' என்று அவர்கள் எகிறும் நிலை வரும்.

Wednesday, October 22, 2008

ல.ச.ரா : வாழ்க்கையே ஒரு பேத்தல்

"நீங்க எப்படி சார் டீச்சிங் கத்துக்கிட்டீங்க?"
"டீச்சிங் பண்ணித்தான்"

இவைதான் என்னுடைய வகுப்புகளில் அவ்வப்போது கேட்கப்படும் கேள்வியும், நான் எப்போதும் சொல்லும் பதிலும்.

Learn by teaching என்பது என்னுடைய கல்வி கற்கும் முறையாக இருந்துவருகிறது. இப்போது நான் வலைப்பூக்களில் பல விஷயங்களை எழுதுவற்க்கான காரணம், அவை எனக்கு தெரிந்திருப்பதால் மட்டுமல்ல, தெரிந்துகொள்வதற்க்காகவும்தான்.

ஒரு விஷயத்தைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்திராமல் அது பற்றி எழுதலாமா? வகுப்பறையில் மாணவர்களுக்குச் சொல்லலாமா?

இதற்கு நான் பதில் எழுதி அதை படிப்பதை விட சாகித்ய அகாடமி விருது பெற்ற போது, 1990ல் லா.ச.ரா ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியை படியுங்கள்.

உங்க எழுத்துக்கள் புரியாத தன்மை (Obscurity) கொண்டவை என்று பேசப்படுவது பற்றி?
"லா.ச.ரா. புக்ஸ் நான் படிச்சேன். அது புரியலை" என்று சொல்லிக்கொள்வது ஃபாஷனா போச்சு. என் எழுத்துக்கள் புரியாதுன்னு இவா புரிஞ்சுண்டாளாம். நான் உங்களை ஒண்ணு கேக்கறேன். எழுத்தாளன் எழுதும்போது எல்லாத்தையும் புரிஞ்சுண்டுதான் எழுதறானா என்ன? எழுதணும்னு ஆர்வமும், வேகமும் இருக்கு. இருக்கறதைக் கொட்டிடறோம். எழுதறவனுக்கே நிறைய விஷயம் புரியறதில்லை. அதே மாதிரிதான் படிக்கறவனுக்கும்.

இன்னைக்குப் புரியாததது, நாளைக்குப் புரியலாம். நாளைக்குப் புரியாதது, நாளை மறுநாள் புரியலாம். என்றைக்காவது ஒருநாள் கட்டயாம் புரிந்துபோகும்! அப்படியே புரியாவிட்டால் தான் என்ன? வாழ்க்கையே ஒரு பேத்தல் தானே!

நன்றி : ஆனந்தவிகடன், 14.1.90

கேள்வியில் உள்ள Obscurity என்ற வார்த்தைக்கு அகராதியில் அர்த்தம் தேடியபோது, Deficiency or absence of light, darkness, condition of being unknown, being unclear or hard to understand என்று பல அர்த்தங்கள் காணப்பட்டன.

ஒரு வார்த்தைக்கே இத்தனை அர்த்தங்கள் இருக்கும்போது, ஒரு வாழ்க்கைக்கு எத்தனையோ அர்த்தங்கள் இருக்கக்கூடும். அதில் ஒரு அர்த்தம், ல.சா.ரா கூறியதுபோல 'வாழ்க்கை என்பது ஒரு பேத்தல்'

என்னைப் பொறுத்தவரையில் கற்றதும் கற்பதும்தான் வாழ்க்கை. அதனால் எனக்கு Learn by teach வசதியாக இருக்கிறது.

Monday, October 20, 2008

பாவம் பாதசாரிகள்

வயசு மற்றும் பராமரிப்பின்மை காரணமாக என்னுடைய ஹீரோ ஹோண்டா சிடி 100, ஸ்டார்ட் ஆக மறுத்துவிட்டது. அதனால் நடந்தே ஆபீஸ் கிளம்பினேன். வீட்டிலிருந்து திருவள்ளுவர் சாலையை தொட்டதுமே, பாம்..பாம் என்று ஒரு மணல் லாரி என்னை மிரட்டி ஒதுக்கியது. மாட்டுச் சாணம் மற்றும் மழைச் சேருக்குப் பயந்து துள்ளிக் குதித்ததில் ஒரு குட்டிக் கருங்கல் செருப்பை மீறிக் காலைக் குத்தியது.

"என்னடா இது ஆரம்பமே இவ்வளவு கஷ்டமா இருக்கு. லேட்டானா கூட பரவாயில்லை, பேசாம திரும்பப் போய் பைக்கை சரி பண்ணிட்டு மெதுவா போகலாமா?"

"நோ! ஐ வாண்ட் யு ஹியர் ரைட் நெள", காதில் ஹெட் செட்டுடன் ஒரு மொபைல் பெண் என் மேல் மோதிக் கொண்டாள். அடடா ஒரு பெண்ணை இடித்துவிட்டோமே என்று நான் பதறிப் போனேன். அவளோ என் மேல் மோதிக்கொண்ட எந்த சொரணையுமின்றி "மீட் மி அட் சிக்ஸ்" என்று எவனுடனோ மொபைலிக் கொண்டே சென்றாள்.

"ஹலோ கண்ணாடிகாரரே சீக்கிரம் கிராஸ் பண்ணுங்க", இது ஆழ்வார் திருநகர் ஜங்ஷன் போலீஸ்காரர். நான் பரபரவென ஓடினேன். கூடவே ஒரு வயதான தாத்தா மற்றும் சில ஆபீஸ் பெண்மணிகள் ஆபீஸ் கைப்பைகளுடன் ஒரு ரேஸ் போல ஓடிக் கடந்தார்கள். ஆனால் போலீஸ் காரரின் ஸ்டாப் கையை பற்றி எந்தக் கவலையே இல்லாமல் ஒரு ஆட்டோ எங்களுக்கிடையே புகுந்து, நான், தாத்தா, அந்தப் பெண்மணிகள் என அனைவரையும் ஆளுக்கொரு திசையில் துரத்திவிட்டது. "ஓய்" என்று யாரோ கத்தினார்கள். அதற்குள் ஆட்டோ பறந்த திசையை பஸ்களும், மோட்டர் பைக்குகளும் நிறைத்துக் கொண்டன.

என்னுடைய வீடு இருக்கும் ஆழ்வார் திருநகரிலிருந்து வடபழனி 3 கிலோ மீட்டர். சத்யா கார்டன் 2 கிலோ மீட்டர்தான். 80களில் நடந்துபோய்தான் ஆவிச்சி ஸ்கூலில் பத்தாவது படித்தேன். இரண்டு மணி நேரத்திற்கொரு பஸ் வரும். எப்போதாவது கோடம்பாக்க சினிமாக்காரர்களின் வெள்ளைக் கலர் அம்பாசிடர் கார்கள் ஆற்காடு சாலையை கடக்கும்.

அப்போதும் நடைபாதை கிடையாது. இப்போதும் நடைபாதை கிடையாது. இதுதான் 20 வருடங்களில் மாறாது இருக்கும் ஒரே விஷயம்.

தற்போது இரவு 2 மணி ஆனாலும் பஸ்களும், கார்களும் பறக்கின்றன. தெருவை இலகுவில் கடக்க முடிவதில்லை. குறைந்த பட்சம் மோட்டர் சைக்கிள் தேவைப்படுகிறது. சைக்கிளில் செல்வது கூட ரிஸ்க் தான். நடந்து செல்பவர்களுக்குத்தான் துளியும் பாதுகாப்பு கிடையாது.

போரூரிலிருந்து வடபழனிவரையிலும், பாதசாரிகளுக்கென பிளாட்பாரம் எங்குமே கிடையாது. நடந்து செல்லும், நூற்றுக்கணக்கான பள்ளிக் குழந்தைகளும், அவர்தம் தாய்மார்களும் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் பள்ளிக்குச் சென்று வருகிறார்கள். பஸ், ஆட்டோ, கார், மோட்டர் பைக் என அத்தனை வாகனங்களும் ஹார்ன் அடித்தே பாதசாரிகளை பீதி அடைய வைக்கிறார்கள். வண்டிகளில் வரும் எவருக்கும் அரை வினாடி கூட காத்திருக்க பொறுமையில்லை.

அதுவும் வயதானவர்கள் சாலையைக் கடந்து உயிருடன் வந்துவிட்டால் அது அவர்கள் செய்த புண்ணியம்.

அதுவும் நேற்று மழைநாள். பள்ளம் எது? மேடு எது? எனத் தெரியவில்லை. அதற்குப் பயந்து, பிளாட்பாரம் இல்லாததால் நடுரோட்டில் நடக்கும் பயங்கரத்தை நேற்றுதான் உணர்ந்தேன். ஈவு இரக்கமின்றி வாகனக்காரர்கள் பாதசாரிகளை உரசியபடி ஓட்டுகிறார்கள். அதிர்ஷ்டமிருந்தால் நலமாக வீடு . . . இல்லையேல் . . .

சென்னை நகர் முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது. புதுப்புது பாலங்கள். வாகன நெரிசலைக் குறைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பாலங்கள் வந்தவுடன் அந்தப் பகுதியில் இருந்த நடைபாதைகளும் காணாமல் போய்விட்டனவே? பாதசாரிகள் எங்கே நடப்பார்கள்?

சாலைகளில் பாதசாரிகள் நடப்பதற்கென ஒரு தனி சங்கமோ ஒரு இயக்கமோ இருந்தால் சொல்லுங்கள். சேர்ந்து கொடி பிடிக்க தயாராக இருக்கிறேன்.

"யோவ் ஓரம் போய்யா", என்று எவனோ ஒருவன் திட்டிய திட்டும், பஸ், லாரி என அத்தனை வாகனங்களும் வாரி இறைத்த சேரும் இன்னமும் என்னில் இருக்கின்றன. நாளை நான் நடந்து போகப்போவதில்லை. ஆனால் பலருக்கு நடப்பதைத் தவிர வேறு வழியில்லை. பாவம் அவர்கள்!

காதலில் (20 நாள் கழித்து) விழுந்தேன் : விமர்சனம்

பாரதிராஜா கண்களால் கைது செய்ய முடியாததை, பார்த்திபன் குடைக்குள் மழையாக்க முடியாததை, பி.வி. பிரசாத் காதலில் விழுந்து இம்ப்ரஸ் செய்திருக்கிறார்.

ஊர் அடங்கிய நடு இரவில், வீல் சேரில் சுனைநாவை வைத்து தள்ளிக் கொண்டு நகுல் ஓடுவதும், ஒரு கோஷ்டி துரத்துவதும், யூகிக்க முடியாத பெர்பெக்ட் ஓபனிங். தப்பித்து டிரெயினில் ஏறியதும், ஹீரோவும், ஹீரோயினும் கொஞ்சிக் கொள்ளும் சின்ன உரையாடல், படத்தின் சஸ்பென்சை இடைவேளை வரை யூகிக்க விடாமல் நீட்டிக்கிறது.

டி.டி.ஆராக வரும் லிவிங்ஸ்டன்தான் படம் பார்க்கும் நாம். ஓடும் இரயில் பிண்ணனியில் நகுல் அவருக்கு கதையைச் சொல்லச் சொல்ல படம் பார்க்கும் நாமும் காதலில் விழுகிறோம்.

சுநைனாவும், நகுலும் காதலில் விழும் ஆரம்பம் புதுசு. சுநைனா இளமையான நதியாவை ஞாபகப் படுத்துகிறார். அளவாக சிரித்து, அளவாக கவர்ச்சி காண்பித்து, நகுலுக்கு முத்தம் கொடுத்து விரசமில்லாத இளமையை அள்ளித் தெளித்திருக்கிறார்.

படத்தின் மிகப் பெரிய ஆச்சரியம் 'நகுல்'. 'பாய்ஸ்ல குண்டா வருவான்ல அவன்தான் இவன்', 'அவனா?' என்ற ஆச்சரியக் குரல்கள் தியேட்டரில் ஒலிக்கும்போதே படு யூத்தாக நம்ம மனசுக்குள் நாக்கு முக்க ஆட ஆரம்பித்துவிடுகிறார். சுறுசுறுப்பு, ஆக்சன், காதல் இதை எல்லாம் பார்த்தால் கல்லூரி இளசுகளின் அடுத்த போஸ்டர் பாய் நகுல்தான்.

கண்களால் கைதுசெய், குடைக்குள் மழை இந்த இரண்டின் (தோல்வியடைந்த) மையக் கருவும் காதலில் விழுந்தேன் மையக் கருவும் ஒன்றுதான். ஆனாலும் தைரியமாக மீண்டும் தொட்டு, தன்னுடைய ஸ்கிரீன் பிளே சாமர்த்தியத்தால் இயக்குனர் வென்றிருக்கிறார். அவருடைய சாமர்தியத்திற்கு படத்தின் ஓபனிங் ஒரு சான்று. லிவிங்ஸ்டன் கதை கேட்பதாக கதையை நகர்த்தி, நம்மையும் ஒரு கதை கேட்கும் மனநிலைக்குத் தள்ளியது இன்னொரு சான்று. குணாவும், காதல் கொண்டேனும் இயக்குனர் பி.வி.பிரசாத்தை வெகுவாக பாதித்திருக்கிறது.

ஆனாலும் நிச்சயம் பி.வி.பிரசாத் சரக்கு உள்ள இயக்குனர்தான். வெறும் பாதிப்பில் படமெடுக்கிற இயக்குனர் அல்ல. ஆங்காங்கே பழைய படங்களின் சாயல் இருந்தாலும், நறுக்கென்று ஸ்கிரீனில் கதை சொல்லும் வித்தை தெரிந்தவராக இருக்கிறார்.

நகுல் கடத்தி வந்திருப்பது தன் காதலியை அல்ல, ஒரு பிணத்தை என்பதை அறியும் போது லிவிங்ஸ்டனும் நாமும் அதிர்ந்து போகிறோம். நகுலை துரத்தி வந்தது ஏதோ கும்பல் அல்ல, போலீஸ் என்பது தெரிந்ததும், படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஆனால் அதற்கப்புறம் புதுசாக ஹீரோயினின் சித்தப்பாவை வில்லனாக காட்டி, நகுலை பல கொலைகள் செய்ய வைத்து, திரையை இரத்தக் களறியாக்கியது ஏன்? படம் ஆரம்பத்தில் போணியாகமல் பெட்டிக்குள்ளே இருந்ததற்கு இந்த இரத்தமும் காரணமாக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

யாருடைய நல்ல வேளையோ, நாக்கு முக்க ஹிட்டாகி, ரீ மிக்ஸ் ஆகி, ரீ ஷீட் ஆகி, சன் பிக்சர்ஸ் ஆகி, மதுரையில் பிரச்சனையாகி, படம் வெளியாகி ஹிட் ஆகிவிட்டது.

படத்தின் சைலண்ட் பெர்பாமர் ஹீரோயின் சுநைனா. படத்தின் இரண்டாம் பாதி முழுக்க பிணமாக நடிக்க எந்த நடிகையும் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார். ஆனால் தைரியமாக அந்த பாத்திரத்தை ஏற்று வெற்றிகரமாக நடித்ததற்க்காக அவருக்கு பாராட்டுக்கள்.

படத்தின் அதிரடியான பெர்பாமர், ஹீரோ நகுல். ஆடிப் பாடி, அழுது, உருகி, அடித்து, அடிவாங்கி, கொலை செய்து, ஒன்றுமே தெரியாமல் பாசாங்கு செய்து அசத்தல் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பை கொடுத்த விஜய் ஆன்டனிக்கு ஒரு சபாஷ்.

மிக முக்கியமாக ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். பின்னி எடுத்திருக்கிறார். சொல்லப்போனால் இவர் இன்னொரு ஹீரோ.

கடைசியாக இயக்குனர் பி.வி.பிரசாத். திறமைசாலி என்று நிருபித்திருக்கிறார்.

ஆனால் . . . நல்ல கதையாக எடுங்கள் பாஸ் ... எல்லா லாஜிக்குகளையும் மீறிக் கொண்டு, காதலியின் பிணத்தை தூக்கிக் கொண்டு ஓடுகின்ற மன நோயாளியின் கதையைச் சொல்வதால் யாருக்கு என்ன மெசேஜ் போய் சேருகின்றது என்று புரியவில்லை. மனதை சுண்டுகிற விதமாக படம் பிடிக்கத் தெரிந்திருக்கிற நீங்கள் அடுத்து படத்தில் நல்ல ஆரோக்யமான கதைக் களனை, நாயக நாயகிகளை தேரந்தெடுத்து வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.