Friday, March 2, 2012
Wednesday, February 29, 2012
Tuesday, February 28, 2012
Sunday, February 26, 2012
ALL IZZ WELL
5.4321 வினாடிகளில் 10 முறை நடுரோட்டில் பல்டி அடிக்க முடியுமா? முடியும். ஆனால் அதற்கு 60 கி.மீ வேகத்தில் வருகிற ஒரு டெம்போ டிராவலர் உங்களை பின்பக்கமாக வந்து மோத வேண்டும்.
எதற்கு இந்த ரிஸ்க் என்று தோன்றினால் உதயம் தியேட்டர் ஒன்வேயில் நின்று நிதானிக்க வசதியாக சிக்னல் வைக்க வேண்டும். அல்லது டெம்போ டிராவலரோ, பஸ்ஸோ தூக்கி எறியும்போது காப்பாற்ற பாடிகாட் முனிஸ்வரன் கோவில் திறக்க வேண்டும்.
என்னுடைய ஹீரோ ஹோண்டா ஸ்ப்லென்டர் உதயம் தியேட்டரை நெருங்கும்போது, பின்னால் அமர்ந்திருந்த சித்தப்பா, இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவேன் என்று யாரிடமோ ஃபோனில் சொன்னார். ஆனால் அந்த டெம்போ டிராவலருக்கு எங்க பங்சுவாலிட்டி பிடிக்கல போலருக்கு. 5 நிமிஷம் அவரை ரத்தம் வழிய நடுரோட்டுல படுக்க வைச்சுட்டான்.
‘ஸார் இந்தாங்க உங்க மொபைல் ஃபோன், யோவ் தண்ணி எடுத்துட்டு வாய்யா, அந்த டிரைவரை போட்டு ரெண்டு சாத்துங்கடா, ப்ளட் வருது பார். முதல்ல ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டுப் போங்கப்பா... ஆட்டோ‘
இப்படி விதவிதமாக டிடிஎஸ் எஃபக்டில் ஆடியோ பக்காவாக ஞாபகமிருக்கிறது. ஆனால் படு டேஞ்சராக என்னை கிராஸ் பண்ணிய டெம்போ டிராவலரின் பின் பக்கம் என் தோளை தட்டிய அந்த வினாடியிலிருந்து வீடியோக்கள் ப்ளீச் ஆகிவிட்டன. ஹெல்ப் பண்ணின எல்லாருக்கும் தாங்ஸ். உங்க முகம் ஞாபகமில்ல.
தொப்பை இல்லாத போலீஸ்காரர் ஒருவர் எங்கிருந்தோ வந்தார். டெம்போ டிராவலர் டிரைவரை அதட்டி அதட்டி வண்டி விபரங்களை எழுதிக் கொண்டார். ஆனால் அவருடைய டிவிஎஸ் 50தான் தொள தொளவென பரிதாபமாக இருந்தது. எந்த ஸ்பேர் பார்ட்டையும் ஸ்குரு போட்டு முடுக்கவில்லை போலிருக்கிறது. அவர் பத்திரமாக ஸ்டேஷன் போய் சேரவேண்டுமே என்று அந்த நேரத்திலும் எனக்குத் தோன்றியது.
கையில் ஃபிளாஸ்குடன் ஒரு லுங்கி மனிதர் வந்தார். காபி தரப்போகிறார் என நினைத்தேன். ஆனால்... ஸார் டிரைவர் பாவம். எங்க தெருதான். ஏழை ஸார். கேஸ் குடுத்து மாட்டிவுட்றாதீங்க ஸார் என்று சொல்லிவிட்டு, கண்ணு ஸாராண்ட சொல்டேன். ஒண்ணும் ஆவாது பயப்படாத என்று எக்ஸிட் கொடுத்தார்.
சித்தப்பா கொஞ்சம் தெளிந்திருந்தார். கண் புருவத்தில்தான் ஆற்காடு சாலையின் பள்ளம் போல பிளந்திருந்தது. அப்பாடி தலையில அடி இல்லை என்ற நிம்மதியுடன், அனிச்சையாக என் தலையில் கை வைத்தேன். சொரிய முடியவில்லை. ஹெல்மெட்டை கழட்டாமல் எப்படி சொரிவதாம். நல்ல வேளையாக ஹெல்மெட் போட்டிருந்தேன். இல்லையென்றால் சொறிவதற்கு தலை இல்லாமல் போயிருக்கலாம்.
எதிர்லதான் ஹாஸ்பிடல். வண்டிய இங்கய வுடுங்க ஸார். யாரோ ஒருவர் ஓரமாக நிறுத்திவிட்டு, பைக் சாவியை கையில் திணித்தார். அவரையும், சுற்றி மொய்த்திருந்தவர்களையும் மொபைலில் ஒரு ஃபோட்டோ எடுத்து, ஃபேஸ்புக்கில் போட்டு, ஒரு ஸ்டேட்டஸ் மெசேஜ் எழுதிடுவோமா என்று அந்த நேரத்திலும் தோன்றிய அபத்தத்தை இப்போது நினைத்தாலும் பகீரென்று இருக்கிறது.
அசோக் நகரில் டிபிகல் அரசு மருத்துவமனை. பாழடைந்த பங்களா! நல்ல வேளையாக நர்ஸ் உடையில் இருவர் இருந்ததால் அது மருத்துவமனைதான் என்று உறுதியானது. இன்னா ஸார் ஆக்ஸிடென்டா அப்படி உட்காருங்க என்றார் ஒருத்தர். அவர்காட்டிய சேரில் உட்கார தனி தைரியம் வேண்டும் என்பதால் நான் நின்றுகொண்டேன். இன்னமும் ரத்தம் வழிந்து கொண்டு அரை மயக்கத்தில் இருந்த சித்தப்பா மட்டும் உட்கார்ந்து கொண்டார்.
டெம்போ டிராவலர் டிரைவர் கெஞ்ச ஆரம்பித்தான். சார் நான் வேணும்னா கேஷ் குடுத்திடறேன் சார். என்னை விட்டுடுங்க சார். அஜாக்கிரதையாக வண்டி ஓட்டி வந்து, விபத்தையும் ஏற்படுத்திவிட்டு, பணம் கொடுத்து அனைத்தையும் சரி செய்துவிட முடியும் என்று நம்பிய அவனைப் பார்க்கும்போது எரிச்சல்தான் வந்தது. ஆனால் அதை விட சுறுசுறுவென்று காலிலும், கையிலும் எரிச்சல். அப்போதுதான் கவனித்தேன். எனக்குப் பிடித்த என்னுடைய ஜீன்ஸ் (பிக் பஜாரில் ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீயில் எடுத்தது) கால் முட்டி அருகில் ஆரஞ்சு பழ சைஸில் (சீஸனல் ஃபுரூட்) கிழிந்திருந்தது. கால் முட்டி கட் பண்ணப்பட்ட வாட்டர் மெலான் போல செக்கச் செவேலென்று இருந்தது.
பாண்டின் முன்பாக்கெட்டில் கனமான (நண்பர்களின் விசிட்டிங் கார்டுகளால் வீங்கிய) பர்ஸ் இருந்ததால், உருளும் போது தான் தேய்ந்து என் தொடையை தேயாமல் காப்பாற்றியிருந்தது. ஆனால் என் சட்டையின் விளிம்புகள் நைந்து போயிருந்தன.
டாக்டருக்காக வெயிட்டிங்..வெயிட்டிங்..வெயிட்டிங்.. அநியாய வெயிட்டிங்கிற்குப் பின் விபத்து பற்றிய டென்ஷன் போய், ஏதோ அரை குறை ஆக்ஷன் படத்தின் பாதியில் தலைவலியுடன் கிளைமாக்சுக்கு காத்திருப்பது போன்ற எண்ணம் வந்துவிட்டது. புறப்பட்டுவிடலாமா என்று தோன்றிய நேரத்தில் க்ளைமாக்ஸ் போலீஸ்காரர் போல ஒரு நாற்பது ப்ளஸ் யம்மா... சிடுசிடுப்புடன் வந்து விபரங்களை வாங்கிக் கொண்டார்.
அதற்குப்பின் அவர்களுக்கே உரிய ஓபி சீட்டு, துண்டு சீட்டு என்ற அட்மின் தொல்லைகளுக்குப் பின், ஊசியைப் போட்டு ஏதோ ஆயின்மெண்டை தடவி மாத்திரை தந்தார்கள். கேஸ்கொடுத்தால் அங்கு பதிவு செய்த விபரங்கள் உதவும் என்பதைத் தவிர, வேறெதுவும் பிரயோஜனப்படும் என்று தோன்றவில்லை.
வீட்டுக்குச் சொன்னால் பயப்படுவார்கள், நண்பர்களை அழைத்தால் ரகளை பண்ணிவிடுவார்கள் என்பதால், தம்பிக்கு மட்டும் தகவல் சொல்லிவிட்டு, சித்தப்பாவை அவரது மகனை வரச்சொல்லி பைக்கில் ஏற்றி அனுப்பினேன். பின்னர் ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி மடக் மடக்கிவிட்டு அதே ஸ்ப்லென்டரில் ஓட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்து குளியில் போட்டு, டிரஸ்ஸிங் பண்ணும்போது நடந்ததை வீட்டுக்குச் சொன்னேன்.
டிவியில் சச்சின் ரன் அவுட் ஆவதை பார்த்துக் கொண்டே எதிர்பார்த்த பதற்றங்களுக்கு பதில்சொன்னேன். கோபத்துடன் என் தங்கை கேட்டாள். உங்களை இடிச்ச டிரைவரை என்ன பண்ணீங்க?
மருத்துவமனையில் இருக்கும்போது, அவன் பாதியிலேயே சொல்லாமல், கொள்ளாமல் ஓடிவிட்டான் என்பதைச் சொல்லவில்லை. அவனை விட்டுத் தொலைடா என்று தலையில் இருந்து ரத்தம் வழிய என் சித்தப்பா பெருந்தன்மையாகச் சொன்னதையும் சொல்லவில்லை.
அடுத்த 3 நாளுக்கு பைக் ஓட்டுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். வண்டியை வாட்டர் சர்வீஸ் விடறதுக்கு இதை விட நல்ல சான்ஸ் ஏது?
ALL IZZ WELL!
Subscribe to:
Posts (Atom)