நாகப் பாம்பு, இரத்தினக் கல் கக்குவதாக பல நூற்றாண்டுகளாகத் தொடரும், கற்பனையான நம்பிக்கை ஒன்று உண்டு. மக்கள் சந்தடி மிகுந்த பழைய வண்ணாரப் பேட்டையிலிருந்து, மாந்தோப்பு மிகுந்திருந்த வளசரவாக்கத்திற்கு குடிவந்தபோது, என்னை முதலில் வரவேற்றது தெருவிளக்குகள் இல்லாத இருளும், நாகப்பாம்பு கக்கிய இரத்தினக் கல் கதைகளும்தான்.
பாம்பு இரத்தினக்கல்லை கக்கியதும், பள பளவென்று மாந்தோப்பு முழுக்க வெளிச்சம் வருமாம். சட்டென்று ஒரு கூடை நிறைய மாட்டுச் சாணத்தை இரத்தினக் கல் மேல் கவிழ்த்துவிட்டால், மீண்டும் இருட்டாகி பாம்பு வெளியேறிவிடும். நாம் அந்தக் கல்லை விற்று இலட்சாதிபதியாகிவிடலாம் என்று கைக்கான்குப்பவாசிகள் எனக்குள் திகிலையும், ஆசையையும் ஒரு சேர புதைத்தார்கள். ஆனால் இன்று வரை நான் கூடை முழுக்க மாட்டுச் சாணத்தைதான் பார்த்திருக்கிறேன். நாகப்பாம்பு இரத்தினக் கல் கக்கிய காட்சி எதுவும் காணக்கிடைத்ததே இல்லை.
அப்படி ஒரு கல் இல்லை என்றும், இருக்கிறது என்றும் அவ்வப்போது பல கதைகளும், நண்பர்கள் அரட்டையும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இன்று, அது பற்றிய ஒரு தெளிவு இன்று கிடைத்தது.
‘ஐயா காட்டுக்குள்ள ஒரு நாகப்பாம்பு ரத்தினம் கக்கி இரையெடுக்குது. இப்பதான் பார்த்திட்டு வந்தேன்‘
நாங்கள் பாட்டரி லைட்டுடன் வனத்துக்குள் சென்றோம். ஒரு இடத்தில் ஒளி படர்ந்து வந்தது.
‘அதை எடுக்கலாமா?‘
‘சாமி..பாம்பு கடிச்சிடும் சாமி‘
‘சரி நானே எடுக்கேன். பாம்பு ஒன்றும் ரத்தினம் கக்காது. இது என்னன்னு பார்க்கணும்.‘
‘சரி நானே எடுக்கேன்‘, அவன் புதரில் சென்று அஞ்சியவாறே எடுத்தான். அது இரண்டடி நீள மரக்கட்டை. டியூப் லைட் போல வெளிச்சம். நான் கையில் வாங்கிக் கொண்டேன்.
‘ஐயா இது ஜோதி மரக்கட்டை.‘, எல்லோரும் வியந்து பார்த்தார்கள்.
எண்ணூறு வருடங்களுக்கு முன்பு, வாழ்ந்த சேக்கிழார் பெரிய புராணத்தில் வனவேடர்கள் வீடுகளுக்கு வேலியாக யாதை் தந்தங்களை வரிசையாக சுற்றிலும் நட்டு வைத்திருந்தார்களாம். உலக்கைக்கு பதிலாக யானைத் தந்தங்களால் பாறைக் குழிகளில் தானியங்களை இடித்தார்களாம்.
ஜோதி மரத்தைப் பற்றியும் சேக்கிழார் பாடுகிறார்.
‘செந்தழல் ஒளியில் தோன்றும் தீப மா மரங்களாலும்..... மலையில் இரவொன்றுமில்லை.‘
கொ.மா.கோதண்டம் எழுதியுள்ள ‘அடர் வன இரவுகளில்...‘ என்ற கட்டுரையில் இந்த தகவல் உள்ளது. இரவு என்பது தான் தீம். இரவுகளை மட்டுமே பிண்ணனியாகக் கொண்ட சுவாரசியமான பல எழுத்தாளர்களின் கட்டுரைகள், ‘இரவு‘ என்ற புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. தொகுத்திருப்பவர் மதுமிதா, இது ஒரு சந்தியா பதிப்பகத்தின் வெளியீடு.
பாம்பு இரத்தினக்கல் கக்குவதாக பல கற்பனைக் கதைகளை சொல்லியவர்கள் ஏனோ தெரியவில்லை, இரவுகளில் ஒளிரும் ஜோதி மரம் பற்றிய உண்மையைச் சொல்லவில்லை. ஒருவேளை இரத்தினக்கல்லை விட ஜோதி மரக்கட்டைகளுக்கு அதிக மார்க்கெட் வேல்யூ வந்தால் கதைகள் மாறக்கூடும். இனி பிறக்கும் நாகப்பாம்புகள் எல்லாம் இரத்தினக் கற்களுக்குப் பதிலாக ஜோதி மரக்கட்டைகளையே கக்கும்.
நல்லவேளையாக சேக்கிழார் இது பற்றி ஒரு வரி எழுதி வைத்தார். இல்லையென்றால், கூடை நிறைய சாணம் கிடைக்காத இந்த காலக்கட்டத்தில், நாகப்பாம்பு இரத்தினக்கல்லை கக்கிவிட்டால், எதைக் கொண்டு அதை மறைப்பது என்ற என் கற்பனை முடிவே இல்லாமல் தொடர்ந்திருக்கும்.