Thursday, January 1, 2009

அவள் தந்த கிரீட்டிங் கார்டு


எனக்கு அவள் அனுப்பிய வாழ்த்து அட்டைகள் !!!

அந்த கிரீட்டிங்கார்டுகள், நான் பொக்கிஷங்களாக பாதுகாத்து வைத்திருக்கிற விஷயங்களில் ஒன்று. அதில் பெரும்பாலானவை என்னுடைய பிறந்த நாளுக்கு எனக்கு வந்த காதல் பரிசுகள். மற்றவை காதலும், நட்பும் கலந்த புத்தாண்டு வாழ்த்துகள்! வெகு சில பொங்கல் மற்றும் தீபாவளி வாழ்த்துகளும் உண்டு!

எனக்கு எத்தனை வாழ்த்து அட்டைகள் வந்தனவோ, அதே அளவுக்கு நானும் வாழ்த்து அட்டைகளை முத்தங்களுடனும், ஏக்கங்களுடனும் அனுப்பியிருக்கிறேன். அனுப்புவதற்கு இரு தினங்களுக்கு முன்னரே சென்னை அண்ணாசாலையிலுள்ள ஹிக்கிம்பாதம்ஸில் வாழ்த்து அட்டைகளை தேட ஆரம்பித்துவிடுவேன். 90 சதவிகித அட்டைகளின் கவர்கள் 'பிங்க்' நிறத்தில் இருக்கும். அதை தொடும்போதே 'சில்லென்று ஒரு காதல் பிறக்கும்'. 'பிங்க்' பெண்களின் நிறம். Girlish! ஒரு பெண்ணின் மென்மை வாழ்த்து அட்டைகளுக்கு தேவைப்படுகிறது. அதனாலேயே அது 'பிங்க்' நிறத்தில் நிறைய இருக்கிறது என நினைக்கிறேன். வெளிர் பச்சையும் உண்டு! அது கூட நமது மனதில் பசுமை கூட்டி மேலும் மென்மையாக்கும்.

அந்த கிரீட்டிங்கார்டுகளில் ஓரிரு வரிகளில் மிகப் பிரமாதமான கவிதைகள் இருக்கும். அந்தக் கவிதைகள் நம்மை மயக்கி விலையைப் பார்க்காமல் கிரீட்டிங்கார்டுகளை வாங்க வைத்துவிடும். அந்த வரிகளுக்கு மேலே 'டியர் - - - ' என எழுதி முத்தங்களால் ஒத்தி எடுத்து 'வித் லவ்' என முடித்த அந்த தருணங்களை என்னால் மறக்கவே முடியாது.

காரணம் அவை எல்லாமே காதல் கசிந்த இரகசிய தருணங்கள்! பின்னிரவு, முன்பனி என எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி காற்றில் மிதந்த மகரந்த நொடிகள்! பார்க்கிற, படிக்கிற விஷயங்கள் எல்லாம் கவிதையாய் மிளிர்ந்த காலங்கள்.

அந்த கிரீட்டிங் கார்டுகளில் ஏதோ ஒன்றில் திடீரென நட்பு காதலானது. காதல் இன்றைய உறவானது. அது எது? தேடும்போதெல்லாம் என்னை நான் பழைய நினைவுகளில் தொலைக்கிறேன்.

நானும் அவளும் நாங்களாகி, கிட்டத்தட்ட 12 வருடங்களாகிவிட்டது. நாங்கள் ஒருவருக்கொருவர் அனுப்பிக் கொண்ட வாழ்த்து அட்டைகள் இன்றைக்கு ஒன்றாக ஒரே பெட்டியில்தான் இருக்கிறது.

அந்த வசீகர நினைவுகளை, கனவுகளை, இரகசியங்களை பதிவு செய்த கிரீட்டிங்கார்டுகளை வருடத்திற்கொரு முறை தூசி தட்டி பத்திரப்படுத்தும்போது மீண்டும் மீண்டும் சுகந்தமான ஒரு வாசனை காற்றை நிரப்புகிறது. மனது இலகுவாகிறது. மீண்டும் ஒரு முறை காதல் துளிர்க்கிறது. நான் மீண்டும் ஒரு முறை பிறக்கிறேன்.

இன்றைக்கு கூட அவள் தந்த காதல் அட்டைகளை எடுத்து வாசித்தேன்.
அவளுக்கே தெரியாமல் இரகசியமாக!

அதுதான் சுகம், அதுதான் அன்பு, அதுதான் காதல்!

ஹேப்பி நியு இயர் . . .

3 comments:

மங்களூர் சிவா said...

ஹாப்பி நியூ இயர் இருவருக்கும்.
:)

அப்பாவி முரு said...

அண்ணே... கருத்துக் கணிப்பு என்னாச்சு?

அப்பாவி முரு said...

நான் விஜயகாந்த் தனியாக நிப்பருன்னு ஓட்டு போட்டவன்.