Tuesday, September 22, 2009

அவருக்காக என் பெயரை மாற்றலாமா?

எனக்கு என் பெற்றோர்கள் வைத்த பெயர் செல்வக்குமார். 60களில் வெளிவந்த மேஜர் சந்திரகாந்த் படம் மற்றும் நாடகத்தில் என் தந்தை(ஐ.எஸ்.ஆர்) நடித்துள்ளார். கே.பாலச்சந்தரின் இந்த படைப்பு அட்டகாசமான ஹிட். அதில் எனது தந்தை ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் செல்வம். அந்தப் படம் வெளியான நேரத்தில் நான் பிறந்ததால் எனக்கு செல்வக் குமார் என்ற பெயர் வைத்தார்களாம். ஆனால் (பெண்)நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட அனைவரும் என்னை செல்வம் என்றே அழைத்தார்கள், அழைக்கிறார்கள்.

இதில் விந்தை என்னவென்றால் செல்வம் என்ற பெயர் செல்வக்குமார் என்று ஆனது. ஆனால் செல்வக்குமாரை அனைவரும் செல்வம் என்றுதான் அழைக்கிறார்கள். கல்லூரியில் படித்த மூன்று நண்பர்கள் (கிருஷ்ணன், விஜயகுமார், வெங்கடேசன்) மட்டும் என்னை செல்வா என்று அழைப்பார்கள். திருமணத்திற்கு முந்தைய நாள் வரை நான் தாடி வைத்திருந்தேன். அது வரையில் சில நண்பர்கள் என்னை “டேய் தாடி” என்று அழைப்பார்கள்.

கல்லூரி (படிப்பதாக ஊர் சுற்றிய) காலத்திலேயே என் பெயர் ஆனந்த விகடனில் வர ஆரம்பித்தது. இரா.செல்வக்குமார் என்ற பெயரில் கதைகளும், கவிதைகளும், துணுக்குகளும் வெளியாகின. ”இராமச்சந்திரன்” என்பது என் தந்தையின் பெயர். அதனால் ஆர்.செல்வகுமார் என்ற பெயரை இரா.செல்வக்குமார் என்று பிரசுரிக்க கொடுத்தேன்.

வில்லன் நடிகர் திரு.செந்தாமரையின் மகன்கள் தென்னவன் மற்றும் வள்ளுவன் ஆகியோர் எனது பள்ளிக்கால நண்பர்கள். திரு.செந்தாமரை அவர்கள் நியுமராலஜயில் கெட்டிக்காரர். அவரின் பாதிப்பு அவருடைய மகன்களுக்கும் உண்டு. ஒரு நாள் தென்னவன் ஏதேதோ கூட்டிப் பார்த்துவிட்டு இனிமேல் ஒரு 'K' சேர்த்து R.Selvakkumar என்று எழுது, கையெழுத்துப் போடு என்று சொன்னார். நான் அரை மனதுடன் அப்படியே செய்ய ஆரம்பித்தேன். எனது கையெழுத்துகளில் இன்னொரு 'K' சேர்ந்து கொண்டது. போகப்போக கையெழுத்து சுருங்கி selv வரையில்தான் இருந்தது. மற்ற எழுத்துக்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன. ஆனால் ஒரு சில விசிட்டிங்கார்டுகளில் R.Selvakkumar என்றும், ஒரு சில விசிட்டிங்கார்டுகளில் R.Selvakumar என்றும், தொடர்ந்து குழப்படி செய்து கொண்டிருந்தேன்.

கல்லூரி முடிந்து Zee TVயில் கால் பதித்த காலத்திலிருந்து டைட்டிலில் (இயக்கம்) ISR.SELVAKUMAR என்று பெயர் போட்டுக் கொள்ள ஆரம்பித்தேன். மீடியா நண்பர்கள் அனைவரும் என்னை செல்வக்குமார் என்றே அழைக்க ஆரம்பித்தார்கள். அதாவது டிவி உலகில் என் பெயர் செல்வக்குமார், மற்றவர்களுக்கு என் பெயர் செல்வம். அது இன்று வரையில் அப்படியே தொடர்கிறது.

இடையில் கிட்டத்தட்ட 10 புத்தகங்கள் எழுதினேன். அனைத்தும் கணினி தொடர்பானவை. முதன் முதலாக எனக்கு ஆங்கிலத்தில் எழுதும் வாய்ப்பு வந்தது. ஆங்கிலத்தில் சுமார் என்றாலும், கம்ப்யுட்டரில் ஞானம் உண்டு என்பதால் தைரியமாக ஒப்புக் கொண்டு எழுதினேன். புத்தகம் வெளியாகும் நேரத்தில் (ஜோதிடத்தில் ஆர்வமுள்ள) நண்பர் ஜெயகோபி எனது பெயரை ISR.SELVA என்று பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டார். நானும் அப்படியே செய்தேன். ஜெயகோபி (மெட்டி ஒலி, எம்டன் மகன்)எடிட்டர் ஜெயக்குமாரின் மூத்த சகோதரர். இருவருமே என் நண்பர்கள்தான்.

2006ல் எனது பள்ளிக்கால நண்பர் சுப்பையா இசக்கி கிரியேஷன்ஸ் என்ற ஒரு படத் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். முதல் படைப்பாக ”சக்ஸஸ்” என்ற திரைப்படத்தை தயாரித்தார். திரு. ராம்குமார் அவர்களின் புதல்வரும், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் பேரனும் ஆகிய துஷ்யந்த் அறிமுகமான படம். அந்த திரைப்படத்தில் புரொடக்ஷன் மேனேஜர் முதல் நடிகர் மற்றும் இணை இயக்குனர் வரை பல்வேறு பொறுப்புகள் ஏற்று ஆல் இன் அழகு ராஜாவாக பணியாற்றினேன். டைட்டிலில் ISR.SELVA என்றே போட்டுக் கொண்டேன்.

இந்த நிலையில் சென்ற மாதம் திடீரென என் பெயரை மாற்றலாம் என்று எனக்கும் என் சித்தப்பாவுக்கும் தோன்றியது. உடனே சித்தப்பாவின் நியுமராலஜி நண்பர் ஒருவரை சந்தித்தோம். அவர் ”சந்தன்” என பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் என்றார். எனது மனைவி, அம்மா, தம்பி-தங்கைகள் உட்பட அனைவரும் சந்தன் என்ற பெயர் நன்றாக இருப்பதாகக் கூறுகிறார்கள். நான்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

பின்குறிப்பு
தற்போது தயாரிப்பில் உள்ள ஒரு திரைப்படத்திற்கு பாடல் பதிவு முடிந்துவிட்டது. அடுத்த கட்டமாக நடிகர் நடிகையர் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்கப் போவது நான். அதற்க்காகவே இந்த பெயர் மாற்றம் பற்றிய யோசனை. திரைப்படத்தின் பெயர் “அவர்”

இப்போது சொல்லுங்கள் அவருக்காக நான் என் பெயரை மாற்றலாமா?
Post a Comment