Friday, February 19, 2010

கடற்கரையில் தமிழ் டிவிட்டர்கள் - 02

கதை, கவிதை என கற்பனை சமாச்சாரங்களை எழுதும்போது, நேற்று நிறுத்தி, அடுத்த மாதம் தொடரலாம். நாம் விரும்பும் எதையும் எழுதலாம். ஆனால் சந்திப்புகளை உடனே எழுதிவிட வேண்டும். இல்லையென்றால், மனைவியின் ”வரும்போது இதயம் நல்லெண்ணெய் வாங்கிட்டு வாங்கதான்” ஞாபகத்தில் மிதக்கிறது. சந்திப்பில் நடந்ததெல்லாம் மறந்து போகிறது. நேற்று கே.கே. நகர் முனுசாமி சாலை வீட்டுக்குப் பக்கம் என்பதால் @parisalkaaran புத்தக வெளியீட்டு விழாவிற்குப் போயிருந்தேன். போன ஞாயிற்றுக் கிழமை பீச்சில் சந்தித்த @athisha வாசலில் எதிர்ப்பட்டு, இந்த ஞாயிற்றுக் கிழமை நீங்கயாரு என்றார்?

இப்படி சில யாருக்களும், நடந்தது என்னக்களும், அப்புறம்களும் மனதில் கபடி ஆடும்போது, கடற்கரையில் தமிழ் டிவிட்டர்கள் - 02 வை எழுத ஆரம்பிக்கிறேன். முன் பின் பார்த்திராதவர்கள், பீச் போல பொதுவான இடத்தில் சந்திக்கும்போது, காந்தி சிலை அருகில் என்று சொன்னால் அங்கேயே நின்றுவிட வேண்டும். கால் வலி என மணலில் நகர்ந்தால் தாமதமாக வருபவர்களை மிஸ் பண்ணிவிடும் அபாயம் உள்ளது. டிவிட்டர்களுக்கென்று தனியாக அடையாளம் எதுவும் இல்லை. அதனால் மற்றவர்கள் வந்துவிட்டார்களா என்று நொடிக்கொரு முறை திரும்பிப் பார்க்கும்போது சுண்டல் பையன்கள், குதிரை சவாரி அழைப்பர்கள் தவிர மற்ற அனைவருமே டிவிட்டர்கள்போலத்தான் இருக்கிறார்கள். அரட்டை காத்திருத்தலாக மாறுவதை தவிர்க்க யாராவது ஒருவர் முன்வந்து தன் மொபைல் நம்பரை அனைவருக்கும் தந்து காந்தி சிலைக்கு முதலிலேயே வந்து காத்திருக்க வேண்டும். #twitter-meet-tips-01
 சந்திப்பின் முதல் பாகத்தில் டிவிட்டர்கள் சந்திப்பு பற்றி சில கேள்விகள் கேட்டிருந்தேன். யாரும் (டிவிட்டரில் கூட) பதில் சொல்லவில்லை. மீண்டும் பதிலை எதிர்பார்க்காமல் இன்னொரு கேள்வி.
டிவிட்டர் வந்தவுடன் பிளாக் எழுதும் பழக்கம் குறைந்து வருகிறது என்கிறார்கள். ஒப்புக் கொள்கிறீர்களா?
பதில் எதுவாக இருந்தாலும் பதிலாக இருக்கட்டும், எதிர் கேள்வியாக இல்லாமல்.

”எங்கள நெருங்கி உட்கார சொல்லிட்டு நீங்க எங்க எஸ்கேப்பு”, என்று இடைவேளை முடிந்து திரும்பி வந்த @icarusprakashஐ  கலாய்த்தார் @njganesh. அவர் பதில் மேலேயே, மற்ற டிவிட்டர்கள் காந்தி சிலைக்கு அருகிலேயே நிற்பதாக @vickytamil கண்டுபிடித்து, அறிவித்து அவர்களை வரவேற்க, மற்ற டிவிட்டர்களும் வந்து சேர்ந்தார்கள்.  பெயிண்ட் பால் விளையாட்டில் மாறி மாறி எதிராளியின் மேல் பெயிணட் தெளிப்பதைப் போல, அவர்கள் வரும்போதே மாறி மாறி நாங்களும் அவர்களும் கிளிக்க ஆரம்பித்துவிட்டோம்.

கிளிக் முடிந்ததும் நிறைய புன்னகைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. சீனியர் என்று டிவிட்டரில் அன்போடு கலாய்க்கப்படும் @anbudan_bala ஜீனியர்கள் போல டி-ஷர்டில் இளமையாக வந்தார். டைரக்டர் எப்படி இருக்கீங்க? வசந்தபவன் மீட்டிங் மிஸ் ஆனதால, நான் முக்கியமா உங்களையும், @icarusprakashயும்தான் பார்க்க வந்தேன். @ommachi - @lakshmi தம்பதியினர் புன்னகைத்ததும், நிச்சயம் நீங்க வந்துடுவீங்கன்னு தெரியும் என்றார். . நாங்க வந்து ரொம்ப நேரமாச்சு. காந்தி சிலைன்னு சொன்னதும் அங்கேயே நின்னுட்டோம், என்று புகாராக இல்லாமல் தகவலாகச் சொன்னார் @spinesurgeon. போட்டோ எடுக்கும்போது, பார்த்து கிளார் அடிக்கும் என்றார் பளபள வழுக்கையுடன். ஆனால் டிவிட்டர் போட்டோவை விட நேரில் மிக மலர்ச்சியாக இருக்கிறார். @njganeshன் அதகளமான கைகுலுக்கலில், யாருக்காவது கைவலித்திருக்கும். @luckykrishna, @athisha மற்றும் @icarusprakash ஆகிய மூவரும் வலைப் பிரபலங்கள் என்பது, டிவிட்டர்கள் டீம்-2ன் ”ஓ..தெரியுமே” புன்னகையிலேயே புரிந்தது. இந்த அறிமுகங்களில் பெண்கள் எப்படி கலந்து கொண்டார்கள் என்பதை கவனிக்கவில்லை.

ரொம்பக் கூச்சமாக அறிமுகம் செய்து கொண்டவர் @madhankarky. கல்லூரியின் கடைசி பெல் வரை காத்திருந்து படித்து வந்த மாணவர் போல இருந்தார். @spinesurgeonக்கு இணையாக தலையில் பளபளா காட்டியவர் @rgokul. பென் டிரைவ் போல செதுக்கிய தாடியில் வசீகரமாகத்தான் இருந்தார். அனில்கும்ப்ளே போல தோற்றமளித்த @rajeshpadman பெர்முடாஸில் ஹாய் என்றார். பக்கத்துலயே வீடும் ஆஃபீசும் இருக்காம். தினசரி வாக்கிங் வருவது போல கேஷீவலாக வந்திருந்தார். எல்லா அறிமுகங்களையும் பொறுமையாக கிளிக் செய்து கொண்டிருந்த வெங்கட்டின் முகத்தில் தொடர்ந்து மென் சிரிப்பு, கையிலிருந்த காமிரா கிளிக்கிக் கொண்டே இருந்தது. ஆனால் இருவாரமாகியும் இன்னமும் அவரிடமிருந்து ஃபோட்டோக்கள் வரவில்லை.

எல்லோரும் அமர்ந்தவுடன் வட்டம் பெரிதானது. ஏற்பாடு செய்தவர்தான் வரவேற்புரை என்று @njganesh அறிவிக்க, ஐயய்யோ நான் இல்ல என்று @vickytamil நழுவப்பார்த்தார். பிறகு தைரியமாகி, பேச்செல்லாம் கிடையாது. சுய அறிமுகம் போதும் என்று தன் பெயரையும், டிவிட்டர் ஐடியையும் கூறினார், செல்வக்குமார் - @isr_selva, பிரகாஷ்-@icarusprakash, Dr.Bruno-@spinesurgeon என ஒவ்வொருவராகத் தொடர maddhankarky-@madhankarky என்றார் மதன். அவ்வளவுதான் அடுத்த வினாடி, ரெண்டாம் வாய்ப்பாடை தப்பாகச் சொன்ன மாணவனை மிரட்டும் வாத்தியார் போல, அப்படின்னா என்று @njganesh அவரை அதட்டினார். மதன் ஒரு கணம் ஜெர்க் ஆனாலும் பெயரும், ஐடியும் ஒன்றுதான் என்று நிதானமானார்.

ஒரு கேள்வி - பெயரையும், டிவிட்டர் ஐடியையும் சொன்னால் அதற்குப் பெயர் சுய அறிமுகமா?
பதில் சொல்வதற்கு முன் ஒரு விஷயம். முந்தைய வரிக்கும் இந்த வரிக்கும் இடையில் 72 மணி நேரம் இடைவெளி இருக்கிறது. இதற்கு மேல் தாமதித்தால் எல்லாம் மறந்து போகும் என்ற பயத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

அரட்டையின் ஒரு பகுதி, ஜெயமோகன் எப்படிங்க இவ்வளவு எழுதறார் என்று ஆச்சரியத்தில் ஆரம்பித்து, ஏன் எழுதறார் என்ற கேள்வியில் முடிந்தது. ஏன்னா மக்கள் கூட கிடைக்கிற Connectivityதான் என்று தீர்ப்பு வழங்கினார் @luckykrishna. அதனால என்ன யூஸ்? பணமும் கிடையாது என்று சந்தேகம் கிளப்பிய லாவண்யா, நீங்க ஏன் சாருவை ரொம்ப சப்போர்ட் பண்றீங்க என்று அதிஷாவை நோக்கி கேள்வியை வீசினார். ஏன்னா சின்ன வயசுல இருந்து எனக்கு அவரைத் தெரியும். வளர்ந்து அவரை மாதிரியே எல்லா மேட்டர்லயும் பெரிய ஆளா ஆகணும்னு எனக்கு ஒரு ஆசை இருந்தது, என்றார் அதிஷா. எல்லா மேட்டர்லயும்னா கட்டிங் மேட்டர்லயா என்றார் @icarusprakash.


ஆனா ஒண்ணுங்க வெறும் டெக்ஸ்ட் ஃபைல்லயே சர்வரை ஃபுல்லாக்கிய பெருமை ஜெயமோகனுக்குதான் என்றார் @njganesh. நீங்கதான் சர்வரை மெயின்டெயின் பண்றீங்களா என்று @rajeshpadman கேள்வி கேட்க, ஆமாம் என்றார். ஜெயமோகன் மாதிரி ஆளுங்க பக்கம்பக்கமா எழுதறாங்க ஆனா ஒரு பக்கத்துக்கு மேல புரியல, என்றவர் @vicktamil? இவங்கள்லாம் பரவால்ல, சிலபேர் தமிழ்லதான் எழுதுவேன், இங்கிலீஷ் வார்த்தையை தொடவே மாட்டேன்னு அடம்பிடிக்கிறதெல்லாம் கொஞ்சம் அதிகம் என்றார் @spinesurgeon. ஆமாம் என்ற ஆமோதிப்பு குரல்களுக்கிடையில் @TBCDயின் தமிழ்பிடிவாதம் கொஞ்சம் வறுபட்டது. Scanஐ சுகேன் என்பதும், Firefoxஐ நெருப்பு நரின்னும் சொல்றதெல்லாம் காமெடி என்று  யாரோ சொல்ல, சுஜாதாவே அப்படி எழுதியிருக்காருங்க என்று இன்னொரு யாரோ (@spinesurgeon அல்லது @anbudan_bala) சொன்னார்கள். அட அவர் நகைச்சுவைக்காக அப்படி எழுதியிருப்பாருங்க என்று நான் சொன்ன போது, @lakshmi 5வது முறையாக எழுந்து சென்று மொபைலில் பேசிவிட்டு வந்தார். ஜெயந்தியும், லாவண்யாவும் 3வது முறையாக தங்களுக்குள் எதற்க்காகவோ சிரித்தார்கள்.அதிஷாவும், @luckykrishnaவும் 4வது முறையாக நாங்க (கிழக்கு பதிப்பகம்) உலக சினிமாவுக்கு புறப்படணும் என்றார்கள். உடனே @spinesurgeon நீங்க போங்க, பின்னாலயே நானும் அரை மணியில வர்றேன் என்றார். இந்த சந்தடியில் திடீரென நமது முன் ஸ்வீட் பாக்ஸ். யாரு கொடுத்தது என்று நிமிர்ந்தால் பூர்ணகும்ப ஸ்வீட்ஸ் வழங்கியவர் நான்தான் என்ற புன்னகையுடன் @madhankarky.


ஸ்வீட் சாப்பிட்டு முடிந்த பின், நாங்க புறப்படறோம் என்று எழுந்துவிட்டார்கள் அதிஷாவும், @luckykrishnaவும். எல்லோரும் டாட்டா சொன்னபோது, ஒரு நிமிஷம் குரூப் போட்டோ எடுத்துக்கலாம் என்றவர் வெங்கட். சரி என்று ஆளாளுக்கு போஸ் கொடுக்க தயாராகி நிற்க காமிராவுடன் நின்றவர்கள் வெங்கட்டும், மதன் கார்க்கியும். பிறகு வெங்கட்டையும் நிற்கச் சொல்லிவிட்டு இரண்டு காமிராக்களையும் தானே இயக்கிய மதன் எந்த குரூப் போட்டோவிலும்  இல்லை.

பதிவு ரொம்ப நீளமாக இருந்ததால், வெட்டப்பட்ட பகுதிகள் அடுத்த பகுதியில்.
Post a Comment