Wednesday, July 11, 2012

நான் ஈ - விமர்சனம்

ஒரு சின்ன ஈ அளவு கதை! ஆனால் பிரமாண்டமான CLAN திரைக்கதை! காட்சிக்கு காட்சி சிக்ஸர் அடித்திருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. நாயகி சமந்தா, கடைசிக் காட்சியில் வரும் சந்தானம், இவர்களைத் தவிர, எவருமே பழகிய முகம் இல்லை. இருந்தாலும் அலுப்பே இன்றி தியேட்டர் கை தட்டல்களால் பரபரக்கிறது.


நண்பர் ஜெயராஜ் சத்யம் தவிர வேறு எந்த தியேட்டரிலும் படம் பார்க்க விரும்ப மாட்டார். தும்..தும்... என்று இதில் உள்ளது போல சவுண்ட் குவாலிடி வேறு எதிலும் இல்லை என்பார். எனவே தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் சத்யம் குழுமத்தினர், எங்களுடன் ஜெயராஜ் பேசிக் கொண்டிருக்கும்போது கேண்டிடாக எடுத்து ஒரு க்ளிப் போடலாம். நேற்று ராயப்பேட்டை சத்யத்தில் கிடைக்கவில்லை என்று புதிதாக வந்திருக்கும் பெரம்பூர் சத்யத்துக்கு(S2) டிக்கெட் எடுத்துவிட்டார். எடுத்துவிட்டாரே தவிர, கூகுள் மேப் 13 கிலோ மீட்டர் காட்டுதே, எத்தனை மணிக்கு புறப்படறது என்றார் சற்றே டிராபிக் கிலியுடன்.


படத்தைப் பற்றி சொல்லாமல் தியேட்டரைப் பற்றிச் சொல்கிறேனே என நினைக்காதீர்கள். ராயப்பேட்டை சத்யத்தில் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற வரி ஒரு சேதி சொல்கிறது. திங்கட்கிழமை இரவுக்காட்சி ஒரு படம் ஹவுஸ் ஃபுல் ஆகிறது என்றால் அது டாப் டக்கர் படமா இல்லையா?

ஒரு ஈயாம்.. அது தான் ஹீரோவாம்... தூங்கறதுக்குன்னே படம் தேர்ந்தெடுத்து போறாரு என்று புறப்படும்போது வீட்டில் கிண்டல்.  இது போதாமல் டிராபிக் பயத்தால் பூந்தமல்லி ஹைரோடு தவிர்த்து, பாடி பிரிட்ஜ் ஏறி, வழி தெரியாமல் சுற்றி பெரம்பூர் S2வை அடைந்தபோது, கிட்டத்தட்ட தூக்கம் வந்துவிட்டது. ஆனால் எல்லாம் டைட்டில் போடும் வரைக்கும்தான். அதற்குப் பின் ஈடா.. ஈடா.. ஈடா.. என்று அதிரும் இசையுடன் ஒரு குதூகல உலகில் துள்ள வைக்கிறார் இயக்குனர்.தூங்கப் போகும் முன் ஒரு குழந்தை அப்பாவிடம் கதை கேட்கிறது. ஒரு ஊர்ல என்று ஆரம்பிக்கும்போதே, இது வேண்டாம்பா, எப்ப பார்த்தாலும் இதையே சொல்ற என்று குழந்தை அலுத்துக் கொள்ள, அப்பா ஈ கதை சொல்ல ஆரம்பிக்கிறார். காட்சி கிடையாது. டைட்டிலுடன் வெறும் ஒலிதான். அந்தக் குழந்தையுடன் நாமும் ஈ கதை கேட்க தயாராகிவிடுகிறோம்.


இயக்குனரின் சாமர்த்தியத்தை புரிந்து கொள்ள, இந்த துவக்கம் போதும். எந்த லாஜிக்கும் இல்லாமல் ஒரு சாதாரண ஈயை சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு நம்மால் பார்க்க முடிகிறது என்றால் ரசிகனை தயார்படுத்தும் இது போன்ற சின்னச் சின்ன உத்திகள்தான் காரணம்.


படம் ஈயை விடச் சிறியதான ஒரு காதலில் அழகாகத் துவங்குகிறது. தொண்டு நிறுவனம் நடத்தும் சமந்தாவை, எதிர் வீட்டு நானி துரத்தி துரத்தி காதலிக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் இனிமையான ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்கள் போல.. லைக்.. லைக்... லைக்! 

எந்தப் பெண்ணையும் வளைத்துப்போடும் பிசினஸ் தாதா சுதிப், சமந்தாவை தற்செயலாகப் பார்க்க, தடையாக இருக்கும் நானியை கொடூரமாகக் கொல்கிறார். நானி ஈயாக மறுபிறவி எடுத்து சுதிப்பை பழிவாங்குவதுதான் கதை.


ராஜமௌலியின் மகதீரா படத்தில், துபாயில் இருந்த எனது நண்பர்கள் அனிமேஷன் மற்றும் காம்போசிட்டிங் செய்திருக்கிறார்கள். அச்சமயத்தில் துபாயில் இருந்த நான், அது உருவாகத்தில் இருக்கும்போதே அதன் துல்லியத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஆனால் நான் ஈ, நான் வியந்த மகதீராவையே மிஞ்சிவிட்டது. ஒரு ஈயை வைத்துக்கொண்டு, ஆக்ஷன் படம் எடுப்பதற்கு மகா சாமர்த்தியமான கற்பனையும், திட்டமிடலும், செயல் திறனும் வேண்டும். ராஜமௌலி அண்டு டீம், பின்னி எடுத்துவிட்டார்கள். குறிப்பாக அனிமேஷன் டீம்.


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியேட்டரில் சிரிக்காதவர்களே இல்லை. சபாஷ்... சபாஷ்... சபாஷ்.... குஷியில் கைக்குழந்தையை கீழே தவற விட்டுவிட்டு பக்கத்து இருக்கை கணவன்-மனைவி சண்டை போடுகிற அளவுக்கு சில காட்சிகள் அபாரம். அதே போல கிளைமாக்ஸில் சீட்டு நுனிக்கு அழைத்துச் செல்கிறார். (S2வில் உள்ள இருக்கைகள் சாய்வதற்கு அவ்வளவு தோதாக இல்லை)


காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் கதை சொல்கிற காட்சி, இன்று வரை சூப்பர் ஹிட். தியேட்டரே குலுங்கும். அதற்கு காரணம் நாகேஷ் மட்டுமல்ல, நாகேஷின் ஆக்ஷனுக்கு இணையான பாலைய்யாவின் அசராத விதம் விதமான ரியாக்ஷன். அதே இந்தப் படத்தில் கிராபிக் ஈ அதகளம் பண்ணுகிறது என்றால், அது எடுபடக் காரணம் வில்லன் சுதிப். (டப் செய்தவர்களுக்கு ஒரு ஷொட்டு. அபார குரல் செலக்ஷன்) ஒரே பார்வையில் பெண்களை வீழ்த்தும் கோடீஸ்வர பிசினஸ்மேனாக அவர் துப்பாக்கியில் குறிபார்த்து நம்மையும் வீழ்த்துகிறார். அடேங்கப்பா அபார நடிப்பு! கம்பீரமாக அறிமுகமாகி, ஒரு ஈயால் சின்னா பின்னமாகி கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் அளவுக்கு மாறுவதை நறுக்கென்று செய்திருக்கிறார். ஈயின் வெற்றிக்கு அவர் ஒரு மிக முக்கியக் காரணம்.


முதன் முதலாக சந்தானம்  நண்பேண்டா டிராக்கிலிருந்து மாறியிருக்கிறார். இரசிக்க முடிகிறது. சந்தானம் இந்த டிரெண்டை பிடித்துக் கொள்ள வேண்டும். இன்னும் பல வருடங்கள் தாக்குப்பிடிக்க இதுதான் சிறந்த வழி. படத்தில் அவர் வரும் பகுதி ஒரு இலவச இணைப்புதான் என்றாலும் சரியான சிரிப்பு மசாலா. படம் முடிந்து டைட்டில் ஓடும்போதுதான் சந்தானத்தின் காட்சிகளே வருகின்றன. எனவே பார்க்கிங்கில் இருந்து காரை எடுக்கும் அவசரத்தில் இந்தக் காட்சிகளை தவறவிட்டுவிட வேண்டாம்.

பென்சில் சீவும் பெண்சிலையே என சுவாரசியமான வார்த்தைகளை மரகதமணியின் மெட்டுகளுக்குள் அமர்த்தியிருக்கிறார் கார்க்கி.


படத்தில் வந்த ஈ அளவிற்கு மகா சுறுசுறுப்பாக பார்க்கிங்கில் ஒரு பெரியவர் இயங்கிக் கொண்டிருந்தார். 61 வயதில் அசராத சுறுசுறுப்பு. முன்பு ராயப்பேட்டை சத்யத்தில் இருந்தாராம். இரண்டு குழந்தைகள், ஏதோ காலேஜ் படிக்கிறார்கள். என்னால முடிஞ்சது சம்பாதிச்சு தர்றேன் என்று சொல்லிவிட்டு, ஒரு சல்யூட்டுடன் அடுத்த காரை பார்க்கப் போய்விட்டார்.


நமது சமூகத்தில் ஈக்களையம், முதியவர்களையும் எவரும் மதிப்பதில்லை. ஆனால் கிளைமாக்ஸில் காதலிக்காக தன்னை இழக்கிற ஈயும், தன் குழந்தைகளுக்காக தன்னை இழந்து கொண்டிருக்கிற பார்க்கிங் பெரியவரும் இன்னமும் என் மனதில் இருக்கிறார்கள். உண்மையான அன்பு மறு ஜென்மம் எடுத்தாவது உலகை வெல்லும். படம் சொல்லும் செய்தி இதுதான்.

ஈடா... ஈடா... ஈடா... ரெண்டு நாளாச்சு, மரகதமணியின் பாட்டு இன்னமும் மனசுக்குள் அதிர்ந்து கொண்டிருக்கிறது.
Post a Comment