Tuesday, August 14, 2012

அங்கும் இங்கும் - கனவுகள்


சித்த மருத்துவக் கனவு

‘ஒருமுறை பஸ்ஸில் பயணம் செய்யும்போது, ஒரு பெண் தன்னிடமிருந்த ஆரஞ்சை எடுத்து அதன் சுளையை தன் சுத்தமாக கர்சிப்பில் வைத்துச் சுற்றி அதன் கூர் முனையை தன் 7 மாத கைக் குழந்தைக்கு கொடுத்தாள். குழந்தை தாய்ப்பால் அருந்துவது போல, பழச்சாற்றை துணியில் சப்பி சாப்பிட்டது. தாகமும் தணித்து, ஊட்டமும் தரும் அந்த தாயின் வித்தை ஒரு கிதை போல் மனதில் இன்னமும் இருக்கிறது.‘

மருத்துவர் சிவராமன்
(வலது முதல் நபர் )
டாக்டர் கு. சிவராமன் எழுதியுள்ள ‘மருந்தென வேண்டாவாம் . . .‘ என்ற புத்தகத்தின் இந்த அறிமுக வார்த்தைகளை படித்து அசந்து போனேன். பொதுவாக உணவுப் பழக்கம் பற்றிய புத்தகங்கள், திகட்டிப் போன திருமண விருந்து போல இருக்கும். ஆனால் இந்த நூலின் பின் அட்டையில் இதைப் படித்ததும், முழு புத்தகத்தையும் ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிட்டேன்.

முதல் அத்தியாயமே அருமை! அன்னைக்கான உணவு! பொதுவாக நமக்கு உணவு ஊட்டுபவள் அன்னை. அவளுக்கு உணவு ஊட்டுவது எப்படி? எந்த வகையான உணவு ஊட்ட வேண்டும் என்று முதல் அத்தியாயமே வித்தியாசமாக இருக்கிறது.

‘ஒரு கவள சோற்றை நாம் சாப்பிட்டாக வேண்டும் என்பதற்காக, எத்தனை மணி நேரம் கால் கடுக்க நின்று, கதை சொல்லி காக்காய் காண்பித்து, இப்போதைய நமது ‘சிக்‘ அல்லது ‘சிக்ஸ் பேக்‘ உடம்பிற்கு அவர்கள் அடித்தளம் போட்டிருப்பார்கள்? அவர்களுக்காக வயோதிக சங்கடங்களை பொறுத்து நம்மோடு இணைத்து வைத்திருப்பதில்தான் அவர்கள் நல்வாழ்வு துவங்கும். காக்கை கதை கேட்கும்போதே, நம்மையறியாமல் உணவு உள்ளே இறங்கிவிடும். அது போல இது போல அழகான பகிர்வுகளுடன் அவர் உணவுப் பழக்கங்கள் பற்றிச் சொல்லும்போது, இலகுவாக மனதில்பதிகிறது. சினிமா மால்களுக்கு செல்வதை குறைத்து, மாதத்தில் ஒரு நாள் புத்தகக் கடைகளுக்கு சென்று இது போல புத்தகங்களை வாசிக்கலாம்.

சரி விஷயத்திற்கு வருகிறேன். நான் சொல்ல வந்த விஷயம் வேறு. இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் என நினைக்கிறேன். Inaguration of 'Society for Integrative Health Research' என்ற தலைப்பில் நடந்த ஒரு கருத்தரங்கிற்கு சென்றிருந்தேன். அங்குதான் இந்த புத்தகமும், அதை எழுதிய மருத்துவர் கு.சிவராமனும் அறிமுகமானார்கள். ஓரிரு வார்த்தைகள்தான். அதற்குள் அவரை கருத்தரங்கிற்கு வந்தவர்கள் கவர்ந்து கொண்டுவிட்டார்கள். கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப்பட்ட விஷயம் இந்த புத்தகத்தைப் போலவே மிக முக்கியமானது. மேற்கத்திய மருந்து நிறுவனங்கள், திட்டமிட்டு எப்படி நமது சித்த மருத்துவ முறைகள் மக்களிடம் அண்ட விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி பேசினார்கள். சித்த மருத்துவத்தில் சாதாரண அரிப்பு முதல் கான்சர் வரை மருந்து உள்ளது என்பதை ஆர்வத்துடனும், ஆதங்கத்துடனும் பகிரந்து கொண்டார்கள்.

ஆதங்கத்துக்கு காரணம், மக்களிடம் சித்த மருத்துவத்தின் மேல் உள்ள நம்பிக்கை குறைவாக உள்ளது என்பதுதான். ஆனால் குறைபட்டுக் கொள்வதுடன் நின்றுவிடாமல், மக்களிடம் சித்த மருத்துவம் பிரபலமாக என்ன வழி என்றும் பல கருத்துகளை கூறினார்கள். அதில் ஒரு அம்சம் கவனிக்கத்தக்கது. சித்த மருத்துவம், மேற்கத்திய மருந்துகளைப் போல பிராண்டடாக கிடைப்பதில்லை. சைதாப்பேட்டை சித்த மருத்துவரும், கோயமுத்தூர் சித்த மருத்துவரும் மருத்துவத்தில் சிறந்தவர்களாக இருந்தாலும், தங்களுக்குள் ஒருங்கிணைந்து இருப்பதில்லை. சித்த மருந்து சாப்பிடும் ஒரு சைதாப்பேட்டைவாசி கோயமுத்தூர் செல்கிறார் எனக் கொள்வோம். வயிற்று வலி வந்தால் சைதாப்பேட்டை மருத்துவருக்குதான் ஃபோன் செய்வாரே தவிர, கோயமுத்தூர் மருத்துவரை நம்ப மாட்டார். ஆனால் அவரே மேற்கத்திய மருந்து சாப்பிடுபவராக இருந்தால், சைதாப்பேட்டையில் வாங்கிய அதே டோலோபாரை, கோயமுத்தூர் பார்மஸியில் வாங்கிக் கொள்வார். பிராண்ட் பெயர் ஒரு நம்பிக்கையை தருகிறது.

சித்த மருத்துவர்கள் தனித் தனியாக ஒரு தீவு போல இயங்குவதால், மருந்துகள் ஒரு குறிப்பிட்ட பிராண்டாக வெளிவருவதில் சாத்தியமே இல்லை. இதுவே அவர்கள் ஒன்றுபட்டு இந்த வியாதிக்கு இதுதான் தீர்வு என்று ஒரு மருந்து பட்டியல் தயாரித்து, மக்கள் எங்கு சென்றாலும் எளிதாக கிடைக்க வழி செய்தால், நம்பகத்தன்மை பெருகும். மேற்கத்திய மருந்துகளைப் போல பணம் பிடுங்காமல், பக்க விளைவுகள் இல்லாமல் மக்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்க முடியும். ஆனால் இதற்கு சித்த மருத்துவர்கள் அனைவரும் ஒரே அமைப்பின் கீழ் இணைய வேண்டும், அதற்காகத்தான் இந்த அமைப்பு என்று அந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. சித்த மருத்துவர்கள் ஒன்றிணையும் அந்த நாள் எப்போது வரும் என்று, மருத்துவர் சிவராமன் போலவே நானும் காத்திருக்கிறேன்.

ஈழக் கனவு
கருணாநிதி டெசோ மாநாடு நடத்தி முடித்துவிட்டார். இது வெற்றி-தோல்வி, பலன்-பலனில்லை என பல விவாதங்கள், இணையச் சண்டைகள் அடுத்த பத்து நாட்களை அபகரித்துக்கொள்ளும்.

இந்த மாநாட்டில் ராம்விலாஸ் பஸ்வான் பேசியது கவனிக்கத்தக்கது. அடுத்தடுத்த டெஸோ மாநாடுகளை வட மாநிலங்களிலும் நடத்துங்கள். அப்போதுதான் இந்தியாவின் பிற பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் ஈழத் தமிழர்களின் பிரச்சனை புரியும் என்று பேசினார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் ஒரு இனப்பிரச்சனை தமிழகத்தை தவிர, இந்தியாவின் பிற பகுதிகளில் உணரப்படவே இல்லை என்பதுதான் இதன் சாராம்சம். இன்று வரை தமிழக அரசியல்வாதிகளின் ஓட்டு வங்கிப் பிரச்சனையாக மட்டுமே ஈழப் பிரச்சனை சுருங்கிவிட்டது.

எனவே கருணாநிதி,ஜெயலலிதா,வை.கோ,நெடுமாறன் ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும்.இந்திய அரசை ஈழத்தமிழர் விஷயத்தில் நிர்ப்பந்திக்க ஒரே வழி, இந்தப் பிரச்சனையை தமிழகம் தாண்டியும், இந்தியா முழுவதும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ்நாடு அல்லாத பிற மாநில இந்திய தலைவர்களின் ஆதரவுடன் பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். பாராளுமன்றத்தின் விவாதங்களை சர்வதேச அளவில் எதிரொலிக்கச் செய்ய வேண்டும். ஐ.நா.வில் குரல் எழுப்பக் கூடிய நாடுகளின் நட்பையும், ஆதரவையும் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் திரட்ட வேண்டும். இறுதியாக ஐ.நா.வின் நிர்பந்தத்துடன் இலங்கை அரசை ஈழம் தொடர்பான நியாயமான அரசியல் முடிவுகள் எடுக்கச் செய்ய வேண்டும்.

ஆனால் இதெல்லாம் நடக்க வேண்டுமென்றால், மிக மிக முக்கியமாக, இலங்கையில் உள்ள தமிழ் பிரதிநிதிகள் ஒரு வலுவான அரசியல் தலைவரை உருவாக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் கருணாநிதி, ஜெயலலிதாவையே நம்பிக் கொண்டிருக்க கூடாது. தாங்களே முடிவெடுக்கக் கூடிய, தாங்களே தங்களை வழிநடத்திக் கொள்ளக் கூடிய ஒரு ஈழத் தமிழ் தலைவர் காலத்தின் கட்டாயம். அப்படி ஒரு தலைவர் உருவாக வேண்டும். அந்த தலைவரின் கீழ் தொடர்ந்து தங்கள் போராட்டத்தை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஒரு வேளை தனி ஈழமே கிடைத்தாலும், அதனை தக்க வைத்துக் கொள்ள வலுவும், ஈர்ப்பும், எதிர்கால திட்டமும் உள்ள ஈழ தமிழ் அரசியல் தலைமையே இப்போதைய தேவை. இதெல்லாம் ஒரே நாளில் நடக்காது என்றாலும், இதெல்லாம் நடந்தே ஆக வேண்டும். 

எத்தனை எத்தனை உயிர்கள், விவரிக்க முடியாத தியாகங்கள்! இவற்றிற்கெல்லாம் ஒரு அர்த்தம் கிடைக்க வேண்டுமென்றால், தமிழக அரசியல் தலைவர்களையே நம்பிக் கொண்டிருக்கும் போக்கை கைவிட்டு, தங்களைத் தாங்களே வழிநடத்திக் கொள்ள ஒரு ஈழ அரசியல் தலைமை விரைவில் வடிவமெடுக்க வேண்டும். அப்படி வடிவமெடுக்காவிட்டால், ஈழம் என்கிற நெடும் கனவு, வெறும் கனவாகப் போய்விடும். ஆனால் அப்படி ஆகிவிடக் கூடாது. விரைவில் ஈழத் தமிழர்களின் கனவு மெய்ப்பட வேண்டும். இதுவே என் எண்ணம், இதுவே என் பிராத்தனை!

www.aanthaireporter.comல் வெளியான கட்டுரை!
Post a Comment