Friday, August 31, 2012

சொந்தநாட்டிலேயே அகதிகளான அமெரிக்க விவசாயிகள்!


1931 - டெக்ஸாஸ், கொலராடோ, ஓக்லஹோமா, புதிய மெக்ஸிகோ உள்ளிட்ட பகுதிகளில் மழை தன் வரவை முற்றிலுமாக நிறுத்திக்கொண்ட வருடம். விவசாயிகள் வானத்தை அண்ணாந்து பார்த்து மழை ஏக்கங்களுடன் ஏழ்மையை தழுவிக்கொண்டிருந்தபோது, வானத்தை நிறைத்தன கரும்பூதங்கள். அவை கருத்த மழை மேகக் கூட்டங்களாக இருக்கும் என நினைத்த விவசாயிகளை, அலறி அடித்துக்கொண்டு ஓட வைத்தன புழுதிப்படலங்கள். ஒரு சில நிமிடங்கள்தான்... எத்தனையோ நூற்றாண்டுகளாக, விளை நிலங்களாக பரந்திருந்த பூமியை கரும்புழுதிகள் விழுங்கின.

‘புழுதிக் கோப்பை‘ (Dust Bowl) - புழுதிக்குள் புதைந்த அப்பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்ற ஒரு பத்திரிகையாளர்  இப்படித்தான் குறிப்பிட்டார். குடிநீர், உணவு, காற்று என எதிலும் புழுதி. காற்றை சுவாசிப்பதே மரணத்தை சுவாசிப்பது போல ஆகிவிட்டது. வயிற்றுக்குள்ளும், சுவாசக் குழாயிலும் தேங்கிவிட்ட புழுதிப்படலத்தால், பறவைகளும் விலங்குகளும் கூட்டம் கூட்டமாக மாண்டு போயின. மரணம் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களையும் தின்னத் துவங்கியபோது, வங்கிகள் முடங்கின. கடைகள் சாத்தப்பட்டன. சாலைகள் புதைந்தன. அரசு மட்டுமல்ல, அப்பிரதேசம் முழுவதுமே இயக்கமற்று நின்றது. ஆனாலும் புழுதிபுயலின் தாக்கம் நிற்கவில்லை. தூசிக்கு தப்பிக்க ஈரத்துணிகளை வாசலில் கட்டி வைத்தார்கள். வீட்டின் அனைத்து துவாரங்களையும் கையில் கிடைத்தவற்றைக் கொண்டு அடைத்தார்கள். ஆனாலும் தொடர்ந்து நுண்துகள் தூசிகள் நாசி துவாரத்தை அடைக்க ஆரம்பித்தபோது, மூச்சுவிடவே திணறிய மக்கள் சிறு சிறு கூட்டங்களாக உயிர் தப்பி கலிஃபோர்னியாவுக்கு செல்லத்துவங்கினார்கள். 1940ம் வருடத்துக்குள் கிட்டத்தட்ட 2.5 மில்லியன் மக்கள் தாங்கள் வசித்தபகுதியை அப்படியே விட்டுவிட்டு, கையில் அகப்பட்டவற்றை எடுத்துக்கொண்டு அகதிகளாக அப்படியே புலம் பெயர்ந்திருந்தார்கள்.

முதலில் பரிதாபத்துடனும், பதைபதைப்புடனும் அவர்களை வரவேற்று அடைக்கலம் தந்தது கலிஃபோர்னியா. ஆனால் எண்ணிக்கை அதிகமானதும் திணற ஆரம்பித்தது. திணறல் கொஞ்சம் கொஞ்சமாக எரிச்சலாக உருமாறி, பிறகு கோபமாக நிலைகொண்டது. மக்கள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டார்கள். உள்ளே வராதீர்கள் என்று எச்சரிக்கப்பட்டார்கள். மீறி வந்தவர்கள் தாக்கப்பட்டார்கள். இந்த செய்தி பரவியதும், ஏற்கனவே கலிஃபோர்னியாவுக்குள் வந்து தங்கியவர்களுக்கும் சிக்கல் ஆரம்பித்தது. அவர்களையும் வெளியே போ என துரத்தியது கலிஃபோர்னியா! வாழ்க்கை தேடி வந்தவர்களை உள்ளே நுழையவிடாமல் துரத்தியடிப்படிப்பதற்காக, எல்லைகளில் போலீஸ் படை நிறுத்தப்பட்டது.

சொந்த மண்ணில் இயற்கையும், வந்த மண்ணில் இரக்கமற்ற சமூகமும் திரும்பத் திரும்ப துரத்தினாலும், வேறு வழியின்றி அங்கேயே தங்கியவர்களின் உழைப்பை பணக்கார சுரண்டல்காரர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். சொற்ப தொகைக்கு நாள் முழுவதும் உழைக்கும் அடிமைகளாக அவர்கள் மாற்றப்பட்டார்கள். பசியின் கொடுமை... வெறும் 75 சென்ட் முதல் 1.5 டாலர் வரை மட்டுமே பெற்றுக்கொண்டு உயிர்பிழைக்க போராடினார்கள். இந்த சொற்ப தொகையிலும் 25 சென்டுகளை அவர்கள் வீட்டு வாடகையாக தரவேண்டியதிருந்தது. வீடு என்றவுடன் ஏதோ பெரிதாக நினைத்துவிடாதீர்கள். கிழிந்த பாலிதீன் பேப்பர்களால் போர்த்தப்பட்ட கதவுகளற்ற குடிசைகள்தான் வீடு. சுகாதாரமற்ற சூழலால், அவர்கள் வசித்த பகுதி சேரிகளாக மாறி, காலரா, டிபி, மலேரியா, அம்மை உள்ளிட்ட நோய்கள் அவர்கை வாட்டி வதைத்தது.

யாருக்காகவோ தங்கள் உயிரையும், உழைப்பையும் இழந்து கொண்டிருப்பதை உணர்ந்த சிலர் முதுகு நிமிர்ந்து ஏன் என்று தட்டிக்கேட்டபோது, பண முதலைகளும், அரசாங்கமும் கை கோர்த்து அவர்களை தாக்கினார்கள். தீவிரவாதத்தில் ஈடுபடும் கம்யூனிஸ்டுகள் என முத்திரை குத்தி தண்டிக்கப்பட்டார்கள். மனிதர்கள் மேன்மேலும் அரக்கர்களாகி தண்டிக்கத் துவங்கியபோது, இயற்கை மென்மையாகியிருந்தது. மக்கள் அண்ட வந்த பூமியை விட்டு, பிறந்த பூமியை நோக்கி மீண்டும் புலம் பெயர்ந்தார்கள்.

அங்குதான் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. எத்தனையோ நூற்றாண்டுகளாக அவர்கள் பிறந்து, வாழ்ந்து, கொண்டாடி, போராடி விளைநிலங்களாக வைத்திருந்த பூமி அபகரிக்கப்பட்டிருந்தது. இயற்கையின் தாக்குதலுக்கு அஞ்சி அவர்கள் அண்டைய பிரதேசங்களுக்கு தப்பிச் சென்று திரும்பி வந்த சில வருடங்களுக்குள், கார்ப்பரேட் பண முதலலைகள் அந்த ஏழை விவசாயிகளின் பூமியை தங்கள் வசமாக்கி கட்டிடங்களாக மாற்றிவிட்டிருந்தார்கள். அவர்கள் சொந்த மண்ணிலேயே வந்தேறிகளானார்கள். தாங்கள் உழுது பண்படுத்தி தன் வசம் வைத்திருந்த பூமியை இழந்து, அங்கு கால்பதிப்பதற்கே வாடகை தந்தார்கள். மண்ணின் சொந்தக்காரர்கள் சொந்த மண்ணிலேயே அடிமைகளாகிப்போனார்கள். இன்று அவர்களில் எவ்வளவோ பேர் படித்து, தெளிந்து, முன்னேறிவிட்டார்கள். ஆனாலும் அவர்களை Okies, Arkies என்று அடிமை முத்திரைகளால்தான் குறிப்பிடுகிறது, அமெரிக்க வரலாறு!

No comments: