Tuesday, March 18, 2014

விக்கிலீக்கும் போலியாக ஒளிரும் தலைவர்களும்


இந்தக் க்ரீமை பூசிக்கொண்டால் இரண்டே நாளில் உலக அழகி ஆகிவிடலாம் என்று விளம்பரங்கள் பொய்சொல்லும். அது பொய் என்று தெரிந்தேதான் மக்கள் அதை வாங்குகிறார்கள். மோடி மற்றும் ஜெயலலிதா இருவருமே வெவ்வேறு சிகப்பழகு விளம்பரங்கள்தான். விளம்பர நிறுவனங்களுக்கு சர்வீஸ் சார்ஜ் கொடுத்துவிட்டு தங்களைப் பற்றி மீடியாவில் பொய்பூசிய விளம்பரங்களை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் பல்க் மெயில்கள், பிறகு டிவிட்டர் #டேகுகள் அப்புறம் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்கள் என்று சக்கை போடு போட்ட இந்த டம்மி விளம்பரங்கள் இப்போது பல்லிளிக்கத் துவங்கிவிட்டன. உத்தர்கண்ட் நிலச்சரிவில் உலகமே நிலைகுலைந்திருந்தபோது, மோடி ஹீ மேன் அவதாரம் எடுத்து குஜராத் மக்களை மட்டும் காப்பாற்றினார் என்பதிலிருந்து, மோடி கரை படியாதவர் என்பதால்தான் அமெரிக்கா அவரைக் கண்டு அஞ்சுகிறது என்ற பொய் விக்கி லீக் வரைக்கும், ஒவ்வொன்றாக அம்பலம் ஆகிக் கொண்டிருக்கிறது. நாங்கள் அப்படிச் சொல்லவே இல்லை என்று விக்கிலீக் நிறுவனர் அஸாங்கே அறிக்கை விட்டதும், பிஜேபியும் மோடியும் ஒன்றுமே தெரியாதது போல நழுவுகிறார்கள். உத்தர்கண்ட் நிலச்சரிவின் போதும் மோடி ஆதரவு மீடியாக்கள் கூறியது போல மோடி யாரையும் ஹெலிகாப்டர் அனுப்பி காப்பாற்றவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்தபோதும், மோடி இப்படித்தான் வாயைத் திறக்காமல் தப்பித்தார்.

இப்போது மோடியின் குஜராத் ஒளிர்கிறது, உலகிலேயே சிறந்த மாநிமாகிவிட்டது என்ற விளம்பரம் கொஞ்சம் கொஞ்சமாக ஃப்யூஸ் போய் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவும் இதே ஸ்டைலில் தமிழகத்தைப்  போல(?) இந்தியாவையே ஒளிர வைப்பேன் என்று விளம்பர ஏஜென்சிகளின் துணையுடன் மிகையையும், பொய்யையும் பரப்பிக் கொண்டிருக்கிறார். தமிழ் பேசாத மாநிலங்களிலிருந்து ஆட்களை பிள்ளை பிடிப்பது போல பிடித்துக் கொண்டு வந்து அம்மா ஜி என்று அலற வைத்தது ஒரு சீப் விளம்பரம்.

இந்த விஷயத்திலும் தான் ஒரு எல்.கே.ஜிதான் என்று ராகுல்காந்தி உறுதி செய்திருக்கிறார். அர்னாப் பேட்டிதான் துவக்கம். ஆனால் அங்கேயே டக் அவுட் ஆகிவிட்டார்.

ஆனால் என்ன செய்வது? செயல்களாலும், தியாகங்களாலும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்ட தலைவர்கள் மறைந்து போய், வெற்று விளம்பரங்களால் பதவியைப் பிடிக்க நினைக்கும் இவர்கள்தான் இப்போது நமக்கு மோசமான சாய்ஸாக இருக்கிறார்கள்.

இந்த சாய்ஸை நம்மிடம் திணிப்பது அரசியல் செய்யும் மீடியாக்கள்தான். பொய் எனத் தெரியாமல் அவற்றை ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் வழியாக பரப்புவதன் மூலம், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதும் அதிகரித்திருக்கிறது.

இன்று விக்கிலீக் அம்பலமாக்கியிருப்பது மோடி ஏமாற்றுகிறார் என்பதையல்ல, நாம் ஏமாந்து கொண்டிருக்கிறோம் என்பதைத்தான்.

No comments: