Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, November 25, 2015

பளிச்சென்றுசொல்லி விடுகிறேன் சுகிர்தா!

சுகிர்தராணியை பார்த்திருக்கிறேன். அறிமுகமில்லாததால் புத்தகக் கண்காட்சியில் கண்டும் காணாதது போல் கடந்திருக்கிறேன். நான் பொறுப்பேற்று நடத்தியிருக்கும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தபோது சில புன்னகைகளையும் பகிர்ந்திருக்கிறேன். ஏதோ ஒரு நாளில் தொலை பேசியில் பேசத் துவங்கியிருக்கிறேன். சுகிர்தாவின் குரலிலேயே இந்தக் கவிதையை கேட்டிருக்கிறேன். கவிதை எப்படி இருக்கிறது என்று சுகிர்தா கேட்டபோது நன்றாக இருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறேன். இப்போதும் அதையேதான் சொல்வேன். 

ஆனால் ”நன்றாக இருக்கிறது” என்பதற்கு அகராதிகள் தரும் அர்த்தம் வேறு. என் உணர்வுகள் தரும் அர்த்தம் வேறு. அது என்னவென்று அப்போதும் சொல்லத் தெரியவில்லை. இப்போதும் சொல்லத் தெரியவில்லை. சில கவிதைகள் கடைசி வரிகளில் இருந்து துவங்கும். இந்தக் கவிதையும் அப்படியே. இந்தக் கவிதையில் ஆங்காங்கே நானும், நீங்களும் சுகிர்தாவும் இருக்கிறோம். வாழ்த்துகள் சுகிர்தா!

"செத்துப்போன மாட்டை
தோலுரிக்கும் போது
காகம் விரட்டுவேன்
வெகு நேரம் நின்று வாங்கிய
ஊர் சோற்றைத்தின்று விட்டு
சுடு சோறென பெருமை பேசுவேன்
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் முறைத்து கடந்து விடுவேன்
அப்பாவின் தொழிலில்ஆண்டு வருமானம்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடிவாங்குவேன்
தோழிகளற்ற
பின் வரிசயிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்
இப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்றுசொல்லி விடுகிறேன்
பறச்சி என்று"

-சுகிர்தராணி.

Friday, October 30, 2015

#மல்லிகைக்கிழமை


காற்றின் திசையை
மல்லிகைக்கு தந்துவிட்டு
நீ பார்க்கும் திசையெங்கும்
எனை வீசியடிக்கிறாய்.

Friday, October 23, 2015

‪#‎மல்லிகைக்கிழமை‬


மல்லிகையைப் போல்
சிரிக்கிறாள் அவள்!
அவளைப் போல
மணக்கிறது மல்லிகை!


Friday, October 9, 2015

‪#‎மல்லிகைக்கிழமை‬



மல்லிகையால் தன் முகம் செய்து 
கூந்தலில் அணிகிறாளோ! 
அவள் சூடியிருக்கும் மல்லிகை 
என்னை பார்க்கும்போதெல்லாம் 
அவளே என்னை பார்ப்பது போல் ஒரு மயக்கம்!
‪#‎மல்லிகைக்கிழமை‬

Friday, October 2, 2015

#மல்லிகைக்கிழமை


கண்ணாடி பார்த்து மல்லிகை சூடும்போது
அவள் தன்னைப் பார்ப்பது போல்
இரகசியமாய் என்னைப் பார்க்கிறாள் என்பது
பின்னால் நிற்கும் எனக்கும் தெரியும்
என்னை வரவழைத்த மல்லிகைக்கும் தெரியும்.
#மல்லிகைக்கிழமை

Saturday, September 26, 2015

#மல்லிகைக்கிழமை



அவள் கழுத்துக் கதகதப்பில் 

ஈர மல்லிகைச் சரம் உலர்ந்து மலரும்போது
பூமிப் பந்தே மல்லிகைப் பந்தானது போல்
ஒரு மாய வாசம் எனைச் சூழ்ந்தணைக்கிறது!

#ப்ரியம் என்பது



‪#‎ப்ரியம்‬ என்பது
ரயில் நிலையத்தில் யாரையோ தேடும் பாவனையில்
நான் உன்னையே சுற்றிச் சுற்றி வருவதும்,
தோழிகளிடம் விடைபெறும் பாவனையில்
நீ என்னிடம் கையசைத்து விடைபெறுவதும்.

Friday, September 4, 2015

#மல்லிகைக்கிழமை

அவள் கூந்தலில் மயங்கிய 
பூக்கள் சரியாமலிருக்க
ஹேர் பின்களையும்,
அவள் கூந்தல் மயக்கிய 
நான் சரியாமலிருக்க
தன் கண்களையும் பிரயோகிக்கிறாள்.

#மல்லிகைக்கிழமை

Thursday, September 3, 2015

எப்போதிருந்து நீ நான் ஆனாய்..


உன்னை பார்ப்பதற்கு முன்பே
உன்னை எனக்குத் தெரியும் 
என்றுதான் நினைக்கிறேன்.

உன்னை நான் சந்திப்பதற்கு முன்
அதிகாலையில் நான் ஜன்னலைத் திறந்ததும்
என்னுள் நுழைகிற காற்றாக நீ இருந்திருக்கிறாய்.

நான் தினசரி நீரூற்றும் செடியாக இருந்திருக்கிறாய்.
பூக்களை பறித்துக் கொண்டு புன்னகைக்கும்
பக்கத்து வீட்டுச் சிறுமியாக இருந்திருக்கிறாய்!

எங்கிருந்தோ ஒலித்து என்னை  முணுமுணுக்க வைக்கும் 
பாடலாக இருந்திருக்கிறாய!
ஒரே ஒரு துளியாக என் மேல் விழுந்துவிட்டு
வராத மழையாக இருந்திருக்கிறாய்.

நள்ளிரவிலும் என்னை அடையாளம் கண்டு 
வாலாட்டும் ஜீவனாக இருந்திருக்கிறாய்!
நான் புரிந்து கொள்ள ஆசைப்படும்
கவிதையாக இருந்திருக்கிறாய்!

ஒரு நாள் நீ நீயாகவே வந்தாய்
ஆனால் 
எனக்கே தெரியாமல் ஏதோ ஒரு தருணத்தில்
நீ நானாகவும் ஆகிவிட்டாய்!


Monday, August 31, 2015

#ப்ரியம் என்பது

#ப்ரியம் என்பது
திரையரங்க இருளில் வரிசை எண் தேடும்போது
அனிச்சையாக நீ என் கரம் பற்றிக்கொள்வதும்
சலனப்படம் முடிந்து இருள் கலையும்வரை
பற்றிய உன் கரங்களை நான் விடாதிருப்பதும்.

Thursday, August 20, 2015

#ப்ரியம் என்பது

#ப்ரியம் என்பது
அவள் தோளிலிருந்து அருவி போல் சரியும் துப்பட்டாவை
தயக்கத்துடன் நான் நேர் செய்வதும்.
உதடு கடித்தபடி ஈர மருதாணி விரல்களால் 
வெட்கத்துடன் அவள் என் கன்னம் கிள்ளுவதும்.

Wednesday, August 19, 2015

#ப்ரியம் என்பது

#ப்ரியம் என்பது
கடற்கரை மணலில் கிறுக்கிய உன்பெயரை
யாரும் பார்க்கும் முன் 
நான் கலைப்பதும்,
உள்ளங் கைகளில் கிறுக்கிய என் பெயரை
யாரும் பார்க்கும் முன் 
முத்தமிட்டு நீ பொத்தி வைப்பதும்.

Friday, May 22, 2015

‪#‎மல்லிகைக்கிழமை‬

ஒரே சரத்திலிருந்து
மணப்பது எது மயக்குவது எது
என எப்படியோ தரம் பிரித்து,
மணக்கும் மல்லிகையை
சாமிக்கு கிள்ளிக்கொடுத்துவிட்டு
மயக்கும் மல்லிகையால்
என்னை அள்ளிச் செல்கிறாள் அவள்!
‪#‎மல்லிகைக்கிழமை‬

Thursday, May 14, 2015

#ப்ரியம் என்பது


‪#‎ப்ரியம்‬ என்பது

மழைதான் ஆனால் கவலையில்லை என்று
நான் ஃபோனில் சொல்லிக் கொண்டிருப்பதும்,
உன் துப்பட்டா குடைக்குள்
மழை நனைக்காமல்
என்னை நீ அணைத்திருப்பதும்.

Wednesday, April 15, 2015

#ப்ரியம் என்பது



#ப்ரியம் என்பது
மருதாணிக் கைகள் காட்டி
எப்படி இருக்கு என  
குழந்தையைப் போல நீ குதூகலிப்பதும்,

உன் உள்ளங்கைகளை தொட்டிலாக்கி
குழந்தைகளைப் போல
என் கன்னங்களை நான் படுக்க வைப்பதும்.

Friday, March 20, 2015

#மல்லிகைக்கிழமை



நான் எத்தனை தொலைவில் இருந்தாலும்
என்னை கூந்தல் எல்லைக்குள் இழுத்து வருகின்றன  
அவள் சூடும் மல்லிகைச் சரங்கள்!
#மல்லிகைக்கிழமை

Thursday, March 19, 2015

#‎ப்ரியம்‬ என்பது



#‎ப்ரியம்‬ என்பது
நான் இரசித்த பொட்டை
கண்ணாடி பார்த்து
நீ விதம் விதமாக 
இட்டுப் பார்ப்பதும்,

நீ இரசித்த சட்டையை
கண்ணாடி பார்த்து
நான் மீண்டும் மீண்டும் 
அணிந்து பார்ப்பதும்.

Wednesday, March 11, 2015

‪#‎ப்ரியம்‬ என்பது

‪#‎ப்ரியம்‬ என்பது
பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல
முதலில் நான் வரவேண்டும் என
நீ காத்திருப்பதும்,
நண்பர்கள் விடைபெறட்டும் என
நம் தனிமைக்காக
நான் காத்திருப்பதும்.

Sunday, March 8, 2015

மகளிர் தின வாழ்த்துகள்!


என்றாவது ஒரு நாள்
என் குரலுக்குப் பதிலாக
என் ஆன்மாவின் குரல்
யாருக்காவது கேட்டிருந்தால் 
அதற்குக் காரணம்
எனது ஆன்மாவாக திகழும் பெண்களே.
அவர்களின் நேசமே எனது குரல்!

இன்றொரு நாள் அவர்களின்
கைவளையாகவோ, கால்கொலுசாகவோ மாறி
அவர்களின் அசைவுகள் தரும் ஒலிகளால்
அவர்களை வாழ்த்திக் கொண்டே இருக்க விருப்பம்!

பெண்மையும் அதன் மென்மையும் 
அது தரும் வலிமையும் உண்மையும் வாழ்க!

மகளிர் தின வாழ்த்துகள்!
‪#‎womensday‬

Monday, March 19, 2012

ஹோம்ஒர்க் முத்தம்



வீட்டுப்பாடம் 
எழுதி எழுதி கைவலிக்கிறது
எனக்காக எழுதுவாயா
எனக் கொஞ்சினாள்.
எழுதினேன் விடிய..விடிய..
அவள் இதழ்களில்
என் இதழ்களால்!