Tuesday, May 19, 2015

ஒரு ஊழலை ஒழிக்க இன்னொரு ஊழலுக்கு துணை போக வேண்டிய இழிவான தமிழக அரசியல் நிலை

தமிழகத்தில் தற்போது அரசியல் செய்து கொண்டிருப்பது ஜெயலலிதா மட்டுமே. மற்ற தலைவர்கள் அனைவரும் ஃபேஸ்புக் போராளிகள் போல டெஸ்க்டாப் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.  

ஸ்டாலின் கல்யாணப்பத்திரிகை கொடுப்பதில் பிஸியாக இருக்கிறார். கலைஞர் ஆங்காங்கே கிடைக்கும் குமாரசாமி குளறுபடி கணக்கை திரும்பத் திரும்ப ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதுடன் திருப்தியடைந்துவிட்டார். ஃபேஸ்புக், டிவிட்டர் அன்பர்களுக்குத்தான் வேறு வழியில்லை. குமாரசாமி தீர்ப்பு சொல்லும் வரை காத்திருக்க வேண்டும். திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளும் அதே போல பரிட்சை ரிசல்ட் போல காத்திருந்ததுதான் காமெடி. 

நடுவில் ஒரே ஒரு முறை ஆம் ஆத்மி மட்டும் ஓ.பன்னீர் செல்வம் வீட்டுக்குச் சென்று ஒரு கலக்கு கலக்கியது. மற்ற கட்சிகள் குறிப்பாக  திமுக இதே போல மக்கள் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு அதிரடியாக களம் இறங்கியிருக்க வேண்டும். ஆனால் தீர்ப்பு வரட்டும் என்று தங்களுக்கு இருந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்கள். ஜெயலலிதா உள்ளே இருந்தாலும் அதிமுக ஆக்டிவாக இருந்தது. தங்கள் தலைவியை லைம் லைட்டிலேயே வைத்திருந்தார்கள். மண்சோறு, மொட்டை என்று அபத்தங்களின் உச்சக்கட்டமாக இருந்தாலும், தமிகத்தின் ஒரே ஆக்டிவ் கட்சி அதிமுகதான் என்ற மாயையை பெரிதாக்கிக் கொண்டே இருந்தார்கள். 

மாறாக மற்ற கட்சிகள் வெறும் பராக்கு பார்க்கும் கட்சிகளாக இருந்துவிட்டன. எப்படியாக இருந்தாலும் ரிசல்ட் ஜெவுக்கு எதிராகத்தான் வரும் என்று கனவு கண்டு தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்கள். ஆனால் ஜெ அனைவரின் பேராசையையும் தகர்த்து எறிந்துவிட்டார். நீதிபதியையே விலைக்கு வாங்கி நீதி மன்றங்களையே கேலிக்கு உரியதாக அவர் மாற்றிவிட்டார். ஆனாலும் அரசியலைப் பொறுத்த வரை வல்லவன்தான் வெல்வான். மற்றவன் தோற்பான். இன்று ஜெயலலிதா ஜெயித்திருப்பதற்கும் மற்ற தலைவர்கள் என்ன செய்வது என்று தவிப்பதற்கும் இதுதான் காரணம்.

ஜெயலலிதா தனக்கிருந்த கடைசி வாய்ப்பையும் பயன்படுத்தி தகிடுதத்தம் செய்து  வெளியே வந்தது போல, எதிர்கட்சிகளுக்கும் கடைசியாக ஒரு வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பு என்னவென்றால் மீண்டும் ஏதோ ஒரு ஆசாமி வந்து ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு தருவார் என்று நம்பிக் கொண்டிருக்காமல், முடங்கிப்போய் இருக்கும் அரசாங்கத்தை எதிர்த்து தினம் ஒரு போராட்டம் நடத்தலாம். 

ஜெயலலிதா பதவி ஏற்கும் தினம் அவருக்கு ஒரு கேக் வாக்காக இருக்கக் கூடாது. அன்றும் அதற்குப் பின்னும் அதிர வைக்கும் போராட்டங்களை நடத்த வேண்டும். மக்களின் ஆதரவு உடனே கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் அதிமுகவை அதிர வைக்க முடியும். முடியவேண்டும்! அதிமுக என்ற அடிமைகளின் கட்சி தாங்கள் நினைத்தால் எதை வேண்டும் செய்ய முடியும் என்ற ஆணவத்தின் உச்சகட்டத்தில் இருக்கிறார்கள். ஜெயலலிதா - குமாரசாமி கூட்டுத் தீர்ப்புக்குப் பின் அவர்களின் இறுமாப்பு பெருகிவிட்டது. சமீபத்திய தொலைகாட்சி பேட்டிகளில் இரண்டாம், மூன்றாம் கடைசி கட்ட பேச்சாளர்கள் கூட எங்களை அசைக்க முடியாது, நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம், ஜெயலலிதாவுக்காக எல்லா திட்டத்தையும் நிறுத்திவைப்போம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். திமுக கடந்த முறை  ஆட்சியில் இப்படித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் தேர்தலில் மண்ணைக் கவ்வினார்கள். அதே போல இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் தோற்க வேண்டும்.

எனவே எதிர்கட்சிகள் ஜெ.பதவி ஏற்கும் தினம் முதல் போராட்டத்தை பெரிதாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். மக்களிடம் பிரச்சனைகளை பேச வேண்டும். ஜெயலலிதாவைப் பற்றி பேசுவது வீண். மக்கள் ஊழலை ஒப்புக்கொள்ளத் துவங்கிவிட்டார்கள். அரசியல் கட்சிகள் அவர்களை பிரெயின் வாஷ் செய்துவிட்டன. ஜெயலலிதா மட்டுமல்ல கலைஞர் உள்ளிட்ட மற்ற தலைவர்களும் இத்தனை வருடம் அரசியல் நடத்திக் கொண்டிருக்கக் காரணமே மக்கள் ஊழலை ஒரு பெரிதான விஷயமாக நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் இன்று இருக்கும் அத்தனை தலைவர்களும் சிறையில்தான் இருப்பார்கள். எனவே ஜெயலலிதா, ஊழல் என்றெல்லாம் நேரத்தை வீணடிக்காமல் மின்சாரம், தண்ணீர், விலைவாசி, டாஸ்மாக் உள்ளிட்ட மக்கள் பிரச்சனை தொடர்பாக மக்களை அணுக வேண்டும். இதற்குத்தான் மக்கள் கொஞ்சமாவது திரும்பிப்பார்ப்பார்கள்.

எத்தனை தவறு செய்தாலும் தான் தொடர்ந்து ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியும் என்ற ஜெவின் இறுமாப்பை உடைத்து எறிய வேண்டும். ஆனால் அதனைச் செய்ய நம்மிடம் தவறே செய்தாத தலைவர்கள் இல்லை என்பதுதான் சோகம். ஜெவைத் தட்டிக் கேட்க ஏற்கனவே ஜெயலலிதாவைப் போல தவறு செய்த தலைவர்கள் தான் இருக்கிறார்கள். எனவே இப்போதைக்கு வேறு வழியில்லை! ஊழலின் உச்சமாக வளர்ந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவை அவருக்கு வழிகாட்டியாக இருந்த மற்ற ஊழல் தலைவர்கள்தான் வெல்ல முடியும். எனவே அந்த தலைவர்கள் தங்கள் தூக்கத்தை கலைத்து சுறுசுறுப்பாக அரசியல் செய்ய வேண்டும். தமிழக எதிர்கட்சிகளுக்கு என் கோரிக்கை இதுவே.

நான் உள்ளிட்ட தமிழக மக்களிடம் நான் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலை விட்டுவிடுவோம். அதற்கு அடுத்த தேர்தலிலிருந்து ஊழல் செய்து வெற்றிபெறுபவர்களையும், சட்டத்தை வளைத்து நடமாடிக் கொண்டிருப்பவர்களையும் தலைவர்களாகவோ, தலைவிகளாகவோ ஏற்க மாட்டோம் என்று உறுதி மொழி எடுப்போம். நமக்கு கிடைக்காவிட்டாலும் நமக்கு அடுது்த சந்ததியருக்கு நிச்சயம் காமராஜரைப் போல ஒரு தலைவர் கிடைப்பார், கிடைக்க வேண்டும்.

No comments: