Tuesday, May 29, 2018

அரசியல் வெற்றிடம் - வாய்ப்பு இருந்தும் நிரப்ப முடியாமல் தடுமாறும் ஸ்டாலின்

அஞ்சி நடுங்க வேண்டிய ஆளும்கட்சி சட்டசபையில் சிரிப்பும் கும்மாளமுமாக மேஜையை தட்டிக் கொண்டிருக்கிறது.
அடித்து ஆட வேண்டிய எதிர்கட்சிகள் சபைக்குவெளியே பரிதாபமாக நின்று கொண்டிருக்கின்றன.
இந்த இலட்சணத்தில் இனிமேல் திமுக சட்டசபைக்கு போகாது என்று ஸ்டாலின் பேட்டி கொடுக்கிறார். அவருடைய முடிவு, பெருத்த ஏமாற்றமளிக்கிறது. இதற்கா மக்கள் ஓட்டு போட்டார்கள். இந்த சமயத்தில் கூட ஆளும்கட்சியை கேள்வி கேட்டு மக்கள் மன்றத்தின் முன் மண்டியிட வைக்க முடியாத ஸ்டாலின் இனிமேல் சட்டசபைக்கு போனால் என்ன, போகாவிட்டால் என்ன?
துணை வட்டாச்சியர்களுக்கு அதிகாரம் தந்து துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கும் ஆளும்கட்சியை கேள்வி கேட்க, ஸ்டாலினும் வட்டம், மாவட்டம் ரேஞ்சில் ஆட்களைப் பிடித்து அவர்களை அனுப்பி கேள்வி கேட்க வைக்கலாம். நிச்சயம் அவர்கள் ஸ்டாலினை விட சிறப்பாக பங்காற்றுவார்கள் எனத் தோன்றுகிறது.
திமுகவில் செயலாற்றவும் ஆட்கள் இல்லை, அட்வைஸ் கொடுக்கவும் ஆட்கள் இல்லை எனத் தோன்றுகிறது.
மக்கள் சார்பில் கேள்வி கேட்க வேண்டிய ஊடகமும் கப்சுப், எதிர்கட்சிகளும் கப்சுப். இவர்கள் ஊமையாக இருந்தாலும் ஆளும்கட்சி மக்கள் எதிர்ப்பை உணர்ந்திருக்கிறது. அதற்கு ஒரே காரணம் ஃபேஸ்புக்கும், டிவிட்டரும்தான். எதிர்கட்சிகள் செய்ய வேண்டியவேலையை மக்களே இந்த சமூக வலைத்தளங்கள் வழியாகச் செய்கிறார்கள். ஆனால் இதெல்லாம் ஓரளவுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது.
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஆளும்கட்சியாகவும், எதிர்கட்சியாகவும் பெரிய ஆளுமையாகத் திகழ்ந்தார்கள். தற்போது ஸ்டாலின் உட்பட எவரையும் அவர்களுக்கு இணையாகக் கருத முடியவில்லை.
நிச்சயமாக தமிழக அரசியலில் ஒரு அரசியல் வெற்றிடம் இருக்கிறது. இதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அமைப்பு ரீதியாக இதை மறுக்கவும், மாற்றவும் வாய்ப்பு உள்ள ஒரே நபர் ஸ்டாலின்தான். ஆனால் அவர் சரியான திசையில் பயணம் செய்யவில்லை என்பது என் கருத்து.

No comments: