பக்கவிளைவுகள் இல்லாத மருந்து என எதுவும் இருக்காது என நினைக்கிறேன். எல்லா மருந்துகளிலும் அதனால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் பற்றிய குறிப்புகள் இருக்கும்.
பலருக்கு ஒத்துப்போகும் மருந்து சிலருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். வலிநிவாரணிகளை எடுத்துக் கொள்பவர்கள், மயக்கமாக உள்ளது, உறக்கம் வருகிறது என்பார்கள். முடி உதிர்தல், எடை குறைதல், தோல் அரிப்பு, வயிற்று வலி, வாய் உலர்தல், மலச்சிக்கல் போன்றவை சில மருந்துகளால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகள். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவை மீறினால் அந்த மருந்தே பல பிரச்சனைகளை தரும் என்பதும் நமக்குத் தெரிந்ததுதான்.
கோவிஷீல்ட் ஊசியிலும் பக்க விளைவுகள் குறிப்பட்டிருந்திருக்கும் என்றுதான் நம்புகிறேன். ஆனால் பக்க விளைவுகள் பற்றி நமக்கு ஏன் தெரியாமல் போனது, அது பற்றி ஏன் வெளிப்படையாக பேசப்படவில்லை என்பது பற்றி எனக்கும் கேள்விகள் உண்டு. இந்த நேரத்தில் நாம் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டம் வேறு, இப்போதைய காலகட்டம் வேறு. அப்போது ஊசியைத் தேடி அலைந்தோம். தற்போது ஊசியை உதாசீனம் செய்யும் மனநிலையில் உள்ளோம்.
இந்த பகடி செய்யும் மனநிலையில் தடுப்பு ஊசியைப் பற்றிய அச்சத்தை அதிகரித்துவிடக்கூடாது. ஏனென்றால் எதிர்காலத்தில் மீண்டும் தடுப்பூசி தேவைப்படும் சூழல் உருவாகலாம். அப்போது மக்கள் ஊசியை நிராகரித்தால் அது எவருக்கும் நல்லதல்ல. நம்முடைய நகர்தல் ஆரோக்கியமான சமூகத்தை நோக்கித்தான் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment