Monday, November 20, 2006

வரலாறு - திரை விமர்சனம்


தீபாவளிக்கு வெளி வந்த படங்களில் (ஈ தவிர) எல்லாமே டப்பா படங்கள்தான். இருப்பதில் நல்ல டப்பா வரலாறு டப்பா. டைட்டிலில் வரலாறு - History of Godfather என்று போடுகிறார்கள். அப்படி போட்டு பெருமைப் பட்டுக்கொள்கிற அளவுக்கு யாருடைய Historyயும் படத்தில் இல்லை.


அஜீத் - கே.எஸ்.ரவிகுமார் - ஏ.ஆர். ரகுமான் ஆகிய மூவரும் இருந்தும் டைட்டிலில் இருக்கும் பிரமாண்டம் படத்தில் இல்லை. காட்பாதர் என்ற பெயருக்கு ஒரு மவுசும் கம்பீரமும் உண்டு. அதுவும் படத்தில் இல்லை. ஆனாலும் படம் தப்பித்துக்கொண்டு கலெக்ஷன் பண்ணுகிறது. காரணம் ஒன்றே ஒன்றுதான். காட்பாதர் என்று வர்ணிக்கப்படும் ஒரு வயதான அப்பா கேரக்டர். அந்த கேரக்டரில் இருக்கும் ஒரு சின்ன சஸ்பென்ஸ் படத்தின் கலெக்ஷனுக்கு காரணமாகிவிட்டது. கே.எஸ்.ரவிகுமார் சிறந்த கமெர்ஷியல் டைரக்டராக அறியப்படுவதற்கு இந்த சஸ்பென்ஸ் நல்ல உதாரணம்.

படத்தில் மூன்று வேடங்களில் அஜீத் நடிக்கிறார். ஆனால் முப்பது வேடங்களில் நடித்தது போல பிரமை. காரணம் காட்சிக்கு காட்சி அஜீத் வௌ;வேறு தோற்றத்தில் இருக்கிறார். ஓரு காட்சியில் மகா குண்டு, அடுத்த காட்சியிலேயே மகா ஒல்லி, திடீனெ குடுமி என விதம்விதமாக வருகிறார். ஆனாலும் அவருடைய நல்ல நேரம், அஜீத் தப்பித்துவிட்டார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக தயாரிப்பில் இருந்து அதற்கப்புறம் ஒரு வருடம் டப்பாவில் காத்திருந்து, பல சிக்கல்களை மீறி ஒரு படம் வெற்றிப்படமாகியிருக்கிறது. அந்த வகையில் இது ஒரு சாதனைதான்.


கே.எஸ்.ரவிகுமார் சிறந்த கமர்ஷியல் திரைக்கதை மன்னன். இந்தப் படத்தில் அவருடைய திறமை முழுக்க வெளிவரவில்லை. இருந்தாலும் அவருடைய டச் படத்தை காப்பாற்றியிருக்கிறது. பரதம் பயிலும் ஆண்கள் பெரும்பாலும் பெண்மை மிளிர நடப்பார்கள், சிரிப்பார்கள். அதுபோல பெண்மை மிளிரும் ஒரு கேரக்டரை அஜீத் அருமையாகப் பண்ணியிருக்கிறார். ஏ.ஆர்.இரகுமான் இசையில் "தீயில் விழுந்த தேனா" பாடல் படத்தின் கடைசி நேர எமோஷனுக்கு அபாரமாக உதவியிருக்கிறது. கர்நாடிக் வாசனையுடன் "இன்னிசை அளபடையே" பாடலும் நல்ல பாடல்தான். மற்ற பாடல்கள் சுமார் ரகம்;. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பாடல்தான் என்றாலும், இரண்டு வருடங்கள் தாமதமாகி வெளியாகி இருப்பதால் நச்சென்று இல்லை.

இந்தப் படம் வெளியாகி தன்னை தக்க வைக்கும் என்று அஜீத்தே எதிர்பார்த்திருக்க மாட்டார். எது ஜெயிக்கும், ஜெயித்தாலும் எந்த அளவில் ஜெயிக்கும் என்று சினிமாவில் சொல்ல முடியாது. வரலாறு திரைப்படம் அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

No comments: