Showing posts with label Film Review. Show all posts
Showing posts with label Film Review. Show all posts

Thursday, April 9, 2026

War Machine (2026) | Review | Sci-Fi / Action / War | Netflix

 

'Edge of Tomorrow' போன்ற படங்களில் வரும் அந்த வேகம் இதிலும் உண்டு. கதையை விட மேக்கிங்கில் வித்தை காட்டியிருக்கிறார்கள். உங்களுக்கு யுத்தக் கதைகளும், ஏலியன் வகை த்ரில்லர்களும் பிடிக்கும் என்றால், நீங்களும் ஒருமுறை தாராளமாகப் பார்க்கலாம்.


டைட்டிலை பார்த்ததும், ஏதோ ராணுவ முகாமில் நடக்கும் கடினமான உடல் சோதனைகளுக்கு உள்ளாகும் வீரர்களைப் பற்றிய கதை என்றுதான் நினைத்தேன். படமும் அப்படித்தான் ஆரம்பிக்கிறது. ஆனால், எதிர்பாராத திருப்பமாக திடீரென்று ஏலியன் போல ஒரு 'வார் மெஷின்' வானத்திலிருந்து குதிக்கிறது. அந்த நவீன இயந்திரத்தை நம் நாயகன் எப்படி ஒழித்துக்கட்டுகிறார் என்பதுதான் கதை.

பார்க்கும்போது தோன்றியது:
கேட்பதற்கு இது ஒரு சலிப்பான ஒன்லைன் போலத் தோன்றலாம், ஆனாலும் படம் முழுக்கச் சுவாரசியத்திற்குப் பஞ்சமில்லை. அதற்கு முக்கியக் காரணம், படத்தில் காட்டப்படும் அந்த லொகேஷன்களும், அமர்க்களமான விஷுவல் எஃபக்ட்டுகளும் (VFX) தான். குறிப்பாக மேக்கப். குண்டுகள் துளைத்ததும் சிதறும் மனித உடல்கள், குமட்டும் அளவுக்கு, உள்ளன. துரந்தர் படத்திலும் இந்தச் சாயலில் சில கொடுமையான மேக்கப்காட்சிகளைப் பார்த்தேன்.

எமோஷன்:
இது வெறும் ஆக்ஷன் படம் மட்டுமல்ல; முதல் காட்சியிலிருந்தே திரைக்கதையில் வெளியில் துருத்தாமல் ‘சகோதர பாசமும்’ இழையோடுகிறது. அந்த எமோஷனல் டச் படத்திற்கு ஒரு ஆன்மாவைக் கொடுக்கிறது. நெட்பிளிக்ஸ் டாப் 10 வரிசையில் ஓரிரு வாரங்கள் தொடர்ந்து இருந்ததால் ஒரு ஆர்வத்தில் பார்த்தேன், ஏமாற்றவில்லை.

படம் பற்றிய ஒரு சிறு குறிப்பு (Filmography Details):
திரைப்படம்: War Machine (2026)
ஓடிடி தளம்: Netflix
வகை (Genre): Sci-Fi / Action / War
நடிகர்கள்: ஆலன் ரிட்ச்சன் (Alan Ritchson), டென்னிஸ் குவைட்
இயக்கம்: பேட்ரிக் ஹியூஸ் (Patrick Hughes)

மாத்தியோசி (My View):
நான் எழுதியுள்ள 'AI சினிமா' புத்தகத்தில் கூறியுள்ளது போல, வரும் காலங்களில் ஹாலிவுட் எத்தகைய பிரம்மாண்டமான ஏ.ஐ தொழில்நுட்பங்களை விஷுவல் எஃபக்ட்டுகளில் பயன்படுத்தப் போகிறது என்பதற்கு இந்தப் படம் ஒரு டீசர்.

'Edge of Tomorrow' போன்ற படங்களில் வரும் அந்த வேகம் இதிலும் உண்டு. கதையை விட மேக்கிங்கில் வித்தை காட்டியிருக்கிறார்கள். உங்களுக்கு யுத்தக் கதைகளும், ஏலியன் வகை த்ரில்லர்களும் பிடிக்கும் என்றால், நீங்களும் ஒருமுறை தாராளமாகப் பார்க்கலாம்.

ஐ.எஸ்.ஆர். செல்வகுமார்

#WarMachine #MovieReview #FilmReview #EdgeofTomorrow #PatrickHughes

Saturday, April 4, 2026

The Guilty (2021) | Netflix | Thriller - விமர்சனம்

 

'Locke' திரைப்படம் ஒரு கார் பயணத்தைக் காட்டியே விறுவிறுப்பைக் கூட்டியதோ, அதே பாணியில் 'The Guilty' ஒரு கம்ப்யூட்டர் முன்னால் ஒரே ஒரு 911 போலீஸ்காரரை அமர வைத்து நம்மை மிரட்டுகிறது.

படம் பார்க்கும்போது எனக்குப் பெரியளவில் நினைவுக்கு வந்தது நம் ஊர் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு சைஸ் 7'. எப்படி ஒரு நபர், ஒரு அறைக்குள் இருந்து கொண்டு, போன் உரையாடல்கள் மூலமே ஒரு பிரம்மாண்டமான கதையை நம் கண்முன் விரித்தாரோ, அதே மேஜிக்கை இங்கேயும் பார்க்க முடிகிறது. ஒரு திறமையான கலைஞனுக்குப் பெரிய லொகேஷன்கள் தேவையில்லை, ஒரு கேமராவும் சரியான எமோஷன்களும் போதும் என்பதற்கு இது ஒரு சான்று.
தொழில்நுட்பம் மற்றும் இயக்கம்:இயக்குநர் அண்டோயின் ஃபுகுவா, ஒலியமைப்பை (Sound Design) ஒரு கதாபாத்திரமாகவே கையாண்டுள்ளார். போனின் மறுமுனையில் கேட்கும் அந்தச் சிறு சத்தங்கள் கூட நமக்குள் ஒரு காட்சியை உருவாக்குகின்றன. ஜேக் கில்லென்ஹால் அருமையான நடிப்பு.
பார்க்கலாமா?
நிச்சயமாகப் பார்க்கலாம்.
எக்ஸ்பெரிமெண்டல் சினிமாக்களை விரும்புபவர்கள் மற்றும் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.
ஐ.எஸ்.ஆர். செல்வகுமார்

Friday, April 3, 2026

Happy Patel - விமர்சனம்


படம் முழுக்க கிச்சு கிச்சு மூட்டும் ரகளையான காமெடி. இது ஆமிர்கான் தயாரிப்பு என்பதால் ஒரு தரம் இருக்கும் என எதிர்பார்த்தேன், ஏமாற்றவில்லை. ஆமிர்கான் இதில் ஒரு கௌரவ வேடத்தில் சில நிமிடங்கள் வந்து செல்கிறார். அந்த சில நிமிட ஸ்கிரீன் பிரசன்ஸ் செம மாஸ்! இது போன்ற ஒரு எனர்ஜியான காட்சியை எதிர்பார்த்துதான் 'கூலி' படத்தில் அவர் நடித்திருப்பார் எனத் தோன்றுகிறது.
இயக்குநருக்கு நம்ம ஊர் சுந்தர் சியின் பாதிப்பு அப்படியே தெரிகிறது. ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், ஆளாளுக்கு ஒரு பக்கம் கலாட்டா செய்வது என ஒரு 'கலகலப்பு' மோடுக்கு நம்மைத் தள்ளுகிறார்கள். படத்தின் எடிட்டருக்கு விக்ரம் பட எடிட்டர் பிலோமின் ராஜ் பாதிப்பு நிறையவே இருக்கிறது. அவ்வப்போது காட்சிகளை உறையவைத்து டைட்டில் போடுகிறார்.
'Hera Pheri' போன்ற படங்கள் எப்படி லாஜிக் பார்க்காமல் சிரிக்க வைத்தனவோ, அதே பாணியில் 'Happy Patel' கலகலக்க வைக்கிறான்.
பெயருக்கு ஏற்றார் போலவே படம் முழுக்க ஒரே கொண்டாட்டம்தான். ஒரு சாதாரண குஜராத்தி இளைஞன் ஹேப்பி படேல், எதிர்பாராத விதமாக ஒரு பெரிய குழப்பத்தில் சிக்கிக்கொள்ள, அதிலிருந்து அவன் எப்படித் தப்பிக்கிறான் என்பதைத் துரத்தல் கலந்த காமெடியாகச் சொல்லியிருக்கிறார்கள்.
பார்க்கலாமா?
நிச்சயமாக. வார இறுதியில் டென்ஷன் இல்லாமல் ஒரு சின்னப் புன்னகையாவது உங்களுக்குக் கேரண்டி (Guarantee). குடும்பத்தோடு அமர்ந்து தாராளமாக ரசிக்கலாம்!

Thursday, April 2, 2026

53 Sundays | Netflix | விமர்சனம்


53 Sundays (2025) | Netflix | Family | Dialogue | Comedy
'The Farewell' போன்ற படங்கள் குடும்ப உறவுகளின் சிக்கல்களைப் பேசியது என்றால், '53 Sundays' அந்தச் சிக்கல்களுக்கு இடையே நாம் எப்படித் தொலைந்து போகிறோம் என்பதைப் பேசுகிறது.
ஒரு நடுத்தர ஸ்பானிஷ் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று உடன்பிறப்புகள், வாராவாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கள் வயதான தந்தையைச் சந்திக்க ஒன்று கூடுகிறார்கள். அப்படி ஒரு வருடத்தில் வரும் அந்த 53 ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களுக்குள் நடக்கும் பாசாங்கு நிறைந்த சந்திப்புகளும், ஒருவருக்கொருவர் ஒளித்து வைக்கும் ரகசியங்களுமே இந்தப் படத்தின் மையம்.
சலிப்புத்தட்டினாலும் பரவாயில்லை என்று, இயக்குநர் மார்க் ஹாரிஸ், ஒரு வீட்டிற்குள்ளேயே கேமராவை நகர்த்தியிருக்கிறார். ஆரம்பத்தில் வரும் நீண்ட வசனங்கள் சற்றே களைப்படைய வைக்கிறது.
நம்ம ஊர் விசு, கிரேசி மோகன் வசனங்களை மிக்சியில் கலந்தது போல, கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அதில் உறவுகளை தவிர்க்கும் நம்மை நாமே கேலி செய்து கொள்ளும் ஒரு ஆழமான எமோஷன் ஒளிந்திருக்கிறது. இதுதான் படத்தின் மிகப்பெரிய நகைச்சுவை முரண் மற்றும் ஹைலைட்.
யார் பார்க்கலாம்?
வார இறுதி நாட்களில் குடும்பத்தோடு அமர்ந்து, ஒரு நல்ல 'பீல்-குட்' (Feel-good) படம் பார்க்க விரும்புபவர்கள்.
வசனங்களின் ஆழத்தை ரசிப்பவர்கள்.
"நாமும் நம் அப்பாவோடு பேசி எத்தனை நாள் ஆகிறது?" என்று ஒரு நிமிடம் யோசிக்கத் துணியும் எவரும் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
சுருக்கமாகச் சொன்னால், '53 Sundays' ஒரு வருடத்தின் ஞாயிற்றுக்கிழமைகள் மட்டுமல்ல; நம் வாழ்நாளில் நாம் தவறவிட்ட உறவுகளின் நாட்குறிப்பு!
- ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்

 

Wednesday, April 1, 2026

Skater Girl (2021) - விமர்சனம்

 

ராஜஸ்தானின் ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் பிரேரணா (ரேச்சல் சஞ்சீதா) என்ற பழங்குடி இன சிறுமியின் கதை இது. சாதியக் கட்டுப்பாடுகளும், வறுமையும் சூழ்ந்த அந்தச் சூழலில், எதேச்சையாக அங்கே வரும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணின் மூலம் 'ஸ்கேட்போர்டிங்' (Skateboarding) விளையாட்டு அறிமுகமாகிறது. வெறும் விளையாட்டாகத் தொடங்கும் அந்தப் பயணம், ஒரு பெண்ணின் சுதந்திரப் போராட்டமாக மாறுவதே திரைக்கதை.

பார்க்கும்போது தோன்றியது: நிச்சயமாக இது ஒரு “சிங்கப் பெண்ணே” பாட்டுக்கு ஏற்ற திரைக்கதை. ஆனால் கதைக்குள் கதையாக கிராமத்தைத் தேடி ஒரு ஃபாரின் தேவதை வருவதும், அவருக்கும் அந்த கிராமத்துக்கும் உள்ள தொடர்பும் ஒரு கவிதை. அவர்கள் இருவருக்குமான அந்தப் பிணைப்பு திரையில் மிக அழகாகப் பதிவாகியுள்ளது.

நடிப்பு: புதிய முகமான ரேச்சல் சஞ்சீதாவின் நடிப்பு அபாரம். அந்தச் சிறுமியின் கண்களில் தெரியும் அந்தத் தேடலும், ஸ்கேட்போர்டில் ஏறி நிற்கும் போது கிடைக்கும் அந்த தன்னம்பிக்கையும் பார்ப்பவர்களையும் தொற்றிக் கொள்கிறது.

தொழில்நுட்பம் மற்றும் இயக்கம்: இயக்குநர் மஞ்சுாரி மகஜானி, ராஜஸ்தானின் நிலப்பரப்பை அதன் ஆன்மா சிதையாமல் காட்டியுள்ளார். குறிப்பாக அந்த ஸ்கேட்போர்டிங் பூங்கா உருவான விதமும், அதற்காக ஊர் மக்கள் காட்டும் எதிர்ப்பும் எதார்த்தம்.

படம் பற்றிய ஒரு சிறு குறிப்பு (Filmography Details):

  • திரைப்படம்: Skater Girl (2021)

  • ஓடிடி தளம்: Netflix

  • வகை (Genre): Sports / Drama

  • நடிகர்கள்: ரேச்சல் சஞ்சீதா, அமித் தயாள், அமித் மோடி

  • இயக்கம்: மஞ்சுாரி மகஜானி (Manjari Makijany)

மாத்தியோசி (My View): இது ஒரு சின்ன படம்தான், ஆனால் பத்து நிமிடங்களைத் தாண்டியதுமே நெட்பிளிக்ஸ் பிளே ஆகாமல் வெளியேற்றிக் கொண்டே இருந்தது. போஸ்டரிலேயே ஒரு ஈர்ப்பு இருந்ததால் திரும்பத் திரும்ப முயற்சி செய்து பார்த்தேன். வொர்த்!

அமெரிக்காவின் 'Lords of Dogtown' ஸ்கேட்போர்டிங் கலாச்சாரத்தைப் பற்றிப் பேசியது என்றால், 'Skater Girl' இந்தியச் சூழலில் ஒரு விளையாட்டின் மூலம் எப்படிச் சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதைப் பேசுகிறது. ஏ.ஐ (AI) காலத்தில் நாம் முன்னேறிக் கொண்டிருந்தாலும், கிராமப்புறங்களில் இன்னும் மாறாமல் இருக்கும் சில இறுக்கமான மரபுகளை இந்தப் படம் மிக மென்மையாகக் கேள்வி கேட்கிறது.

பார்க்கலாமா? கண்டிப்பாக. மனதிற்கு நெருக்கமான, ஒரு பாசிட்டிவ் எனர்ஜி தரும் படங்களைத் தேடுபவர்கள் மிஸ் பண்ணாதீர்கள்.

  • ஐ.எஸ்.ஆர். செல்வகுமார்

Tuesday, March 31, 2026

The Red Line (2026) - நெட்ஃபிளிக்ஸ் - விமர்சனம்

 


தொழில்நுட்பம் வளர வளர, அதை வைத்து நடக்கும் மோசடிகளும் (Scams) விஸ்வரூபம் எடுக்கின்றன. அப்படியொரு போன் கால் மோசடியில் தனது வாழ்நாள் சேமிப்பை இழக்கும் ஆர்ன் (Nittha Jirayungyurn), சட்டத்தின் கதவுகள் தட்டினாலும் நீதி கிடைக்காத நிலையில், தன்னைப்போலவே பாதிக்கப்பட்ட மற்ற பெண்களுடன் இணைந்து அந்த மோசடி கும்பலை வேட்டையாட முடிவெடுக்கிறார். இது வெறும் பழிவாங்கும் படலமல்ல.

நடிப்பு: நித்தா ஜிராயுங்யூர்ன் (Nittha Jirayungyurn) மற்றும் எஸ்தர் சுப்ரீலீலா (Esther Supreeleela) இருவரும் படத்தின் தூண்கள். குறிப்பாக, நடுத்தர வர்க்கத்துப் பெண்ணாக நித்தா காட்டும் அந்தத் தவிப்பும், பின்னாளில் உருவெடுக்கும் ஆக்ரோஷமும் மிகச் சிறப்பு. மோசடி கும்பலின் பின்னணியில் இருக்கும் எதார்த்தங்களை எஸ்தர் தன் நடிப்பால் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

தொழில்நுட்பம் மற்றும் இயக்கம்: 'Girl from Nowhere' புகழ் இயக்குநர் சிதிசிரி மோங்கொல்சிரி (Sitisiri Mongkolsiri) இந்தப் படத்தை இயக்கியுள்ளார். போன் கால்கள் மூலம் நடக்கும் மனரீதியான சித்திரவதையைத் திரையில் கொண்டு வந்த விதம் அபாரம். படத்தின் ஒளிப்பதிவு தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைகளுக்கு இடையே உள்ள அந்தப் பதற்றத்தை கச்சிதமாகப் படம்பிடித்துள்ளது.

படம் பற்றிய ஒரு சிறு குறிப்பு (Filmography Details):

  • திரைப்படம்: The Red Line (2026)

  • ஓடிடி தளம்: Netflix

  • வகை (Genre): Crime / Thriller / Drama

  • நடிகர்கள்: நித்தா ஜிராயுங்யூர்ன், எஸ்தர் சுப்ரீலீலா, சுதிமா மஹோலகுல் (Chutima Maholakul)

  • இயக்கம்: சிதிசிரி மோங்கொல்சிரி (Sitisiri Mongkolsiri)

மாத்தியோசி (My View): இன்று நாம் அனைவரும் கையில் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன் ஒரு ஆபத்தான ஆயுதம் என்பதை இந்தப் படம் உரக்கச் சொல்கிறது. வழக்கமான ஆக்ஷன் த்ரில்லராக இல்லாமல், பாதிக்கப்பட்டவர்களின் மன உளைச்சலையும், சமூகத்தில் அவர்களுக்கு ஏற்படும் அவமானத்தையும் படம் ஆழமாகப் பேசுகிறது. குறிப்பாக, 'The Red Line' என்ற தலைப்பு, சட்டத்தின் எல்லை மற்றும் ஒரு மனிதன் தன் நியாயத்திற்காகத் தாண்டும் அந்த தார்மீக எல்லையைக் குறிப்பது சிறப்பு.

நாமும் ஏ.ஐ (AI) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படம் ஒரு சிறந்த பாடம்.

பார்க்கலாமா? நிச்சயமாக. 'Jamtara' தொடர் டிஜிட்டல் மோசடிகளின் வியாபாரத்தைப் பற்றிப் பேசியது என்றால், 'The Red Line' அந்த மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரு சராசரி மனிதனின் வலியைப் பேசுகிறது. விறுவிறுப்பான த்ரில்லரை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், 'The Red Line' உங்கள் வீக்கெண்ட் லிஸ்டில் இருக்க வேண்டிய படம்.

  • ஐ.எஸ்.ஆர். செல்வகுமார்

Tuesday, April 9, 2024

அணுவுக்குள் அணுவாக, அப்பாலுக்கு அப்பாலாக உணர வைக்கும் இயக்குநர் பிளெஸ்ஸி!

 

ஆடுஜீவிதம் கற்றுத்தரும் பறவைப்பார்வை!

நஜீபின் குடும்பம், மனைவி, காதல், பிரிவு என சாதாரண வணிகப்படத்துக்கான அத்தனையும் ஆடுஜீவிதம் படத்தில் உண்டு. நிஜக்கதை என்பதால் அவற்றை தவிர்க்கவும் இயலாது.
ஆட்டுத்தொட்டியில் ஆடுகளுடன் ஒருவனாக நீர் அருந்தும் கைவிடப்பட்ட மனிதனாகத்தான் நஜீப் அறிமுகமாகிறான். அவனுடைய துயரங்களுக்கு இடையில் அவனுடைய பழைய வாழ்வை நினைத்து ஆறுதல் கொள்வதாக கதை சிறிதுநேரம் நகர்கிறது. அது அப்படியே தொடராமல் ஒரு கட்டத்திற்குமேல் திரைக்கதையின் தன்மை மாறுகிறது. குறிப்பாக மினுக்கும் விண்வெளியை பிரதிபலிக்கும் ஆட்டுத்தொட்டியில் ஆடுகளுடன் ஒருவனாக நஜீப் நீர் அருந்தும் துவக்கக் காட்சி மீண்டும் ஒருமுறை வந்ததும், திரைக்கதை விண்ணிலிருந்து பார்க்கும் பார்வையாக மாறிவிடுகிறது.
அவதிப்படும் ஒரு ஜீவராசியாக நஜீபை காட்டத் துவங்குகிறது. தவிக்கும் நஜீப், பாதியில் வந்து சேரும் நண்பன், அவர்கள் இருவரும் தப்பிச் செல்ல உதவும் இப்ராஹீம், என அனைவருமே கொதிக்கும் அகண்ட பாலைவனத்தின் ஒரு அங்கமாக மட்டுமே காட்டப்படுகிறார்கள். இரக்கமற்ற மணல் புயல் வீசும் பாலையில், பிணங்களைத் தின்னும் கழுகுகளைப் போல, கொத்தும் பாம்புகளைப் போல, அவர்கள் அனைவருமே மற்றும் ஒரு ஜீவராசியாகத்தான் சித்தரிக்கப்படுகிறார்கள்.
மாபெரும் இயற்கையின் முன் ஒரு தூசிபோல அலைபாயும் அவர்கள் ஒருவரை ஒருவர், நம்பி, தூற்றி, கைவிட்டு, அணைத்து எப்படி மீண்டுவர முயல்கிறார்கள் என்று காட்சிகள் விரிகின்றன.
இதுதான் ஆடுஜீவிதம் திரைக்கதையின் முக்கிய அம்சம். திரும்பத் திரும்ப குடும்பத்தைக் காட்டிக் கொண்டிருந்தால் அது வழக்கமான கதை சொல்லும் பாணியாக மாறியிருக்கும்.
இன்டர்ஸ்டெல்லார் திரைக்கதையிலும் மனிதர்கள் மற்றும் ஒரு ஜீவராசியைப் போலத்தான் காட்டப்படுவார்கள்.
பறவைப் பார்வையில் மண்ணில் என்ன நடக்கிறது என்பதைக் காட்டிவிடலாம். மண்ணில் ஒரு தூசு போலத் தவிக்கும் ஒரு மனிதனின் மனதில் என்ன நடக்கிறது என்பதையும் பறவைப்பார்வையில் காட்டுவதற்கு அசாத்திய நுண் கற்பனை வேண்டும்.
படம்பார்த்துவிட்டு வெளியே வரும்போது நாம் நம்மை தப்பி வந்த நஜீபாக உணர்கிறோம். படம் பார்த்து ஓரிரு தினங்களாவது அந்தப் பிரம்மாண்ட பாலையின் ஒரு மணல் துளியாகவும் நம்மை உணர்கிறோம்.
அணுவுக்குள் அணுவாக, அப்பாலுக்கு அப்பாலாக இந்த உணர்வுகளை நமக்குள் ஏற்படுத்தியதில் இயக்குநர் பிளெஸ்ஸி மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.

Sunday, April 7, 2024

இது ஆடுஜீவிதம் படத்தின் விமர்சனம் அல்ல!

கடவுள் நம்முடன்தான் இருப்பார் என்று எல்லோரும் நம்புகிறார்கள். கடினமான நேரங்களில் உதவி செய்வார் என்று எண்ணுகிறார்கள்.

ஏமாற்றப்பட்டு பாலைவனத்தில் அடிமையாக மாட்டிக்கொள்ளும் நஜீபும் அப்படித்தான் நம்புகிறான். அவனை அடிமைப்படுத்தி சவுக்கால் அடித்து கொடுமைப்படுத்தும் கஃபீலும் கடவுளைத்தான் அழைக்கிறான். தாகத்துக்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காமல் நா வறண்டு மாண்டுபோகும், நஜீபின் நண்பன் ஹக்கீமும் கடவுளைத்தான் தொழுகிறான். நஜீப் தப்பிச் செல்ல உதவும் இப்ராஹீமும் கடவுளைத்தான் வேண்டுகிறான்.
இந்தக் கோணத்தில் சிந்தித்தால் கடவுள் யாருக்குத்தான் ஆதரவாக இருந்தார் என ஒரு கேள்வி எழுகிறது. இதற்கு உங்களுடைய பதில் என்னவாக இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் எனக்கென ஒரு பதில் இருக்கிறது. நல்லவரோ, கெட்டவரோ, எவராக இருந்தாலும் கடவுள் யாருக்கும் ஆதரவாக இருப்பதில்லை. அவர் வாழ்வதற்கான தருணங்களை அமைத்துத் தருகிறார். அல்லது அந்தத் தருணமாகவே அவர் இருக்கிறார்.
அந்தத் தருணங்களில் ஏமாற்றுகிறோமா? ஏமாறுகிறோமா? நல்லது செய்கிறோமா? தீங்கு செய்கிறோமா என்பது அவரவர் குணங்களைப் பொறுத்து அமைகிறது. கடவுளை எதற்காக நம்புகிறோம் என்பதைப் பொறுத்து அந்தக் குணம் நம்முடனேயே இருக்கிறது. நாம் யார் என்பதை தீர்மானிக்கிறது.
ஆடுஜீவிதம் படத்தில் கடவுளை துணைக்கு அழைக்காத ஜீவன்கள் ஆடுகளும், ஒட்டகங்களும்தான். ஆரம்பத்தில் ஆடுகள் கூட நஜீபை முட்டிச் சாய்க்கும். ஆனால் போகப் போக அந்த ஆடுகளுடன் அவன் ஒன்றிப்போய்விடுவான். அந்த ஆட்டு மந்தையில் ஒருவனாக அவனும் மாறிப்போய்விடுவான். உயிர்தப்பிப் பிழைக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அந்த ஆடுகளைப் பிரிய மனமின்றி அழுது புலம்பியபடியே அந்த ஆடுகளிடமிருந்து விடைபெறுவான். அந்த ஆடுகள் எந்தச் சலனமும் இன்றி அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.
அந்த ஆடுகளுக்கு நஜீபும் ஒன்றுதான், அவனை அடிமைப்படுத்திய கஃபீலும் ஒன்றுதான். ஒருவேளை எந்தச் சலனமும் இல்லாத அந்த ஆடுகள்தான் கடவுள்களோ!
தப்பி வந்த நிஜ நஜீப் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவரிடம் கேட்கவேண்டும், யார் கடவுள் என்று.

Monday, January 22, 2024

LIFT - திரைப்படம் எப்படி இருக்கு?

 LIFT - நடுவானில் தங்கத்தை கொள்ளையடிக்கும் படம்.

தேடினால் எதையுமே பார்க்க மாட்டேன். அதனால் நெட்ஃபிளிக்ஸ் டாப் 10ல் ஒரு படத்தை தேர்ந்தெடுப்பேன். இந்த வாரம் முதலிடத்தில் இருந்தது. அதனால் பார்த்தேன்.



ஒரே டீமாகத்தான் கொள்ளையடிப்பார்கள். ஆனால் அவர்களுக்குள்ளேயே முரண்படுவார்கள். இதுதான் சமீபத்திய கொள்ளையடிக்கும் படங்களின் டிரெண்ட். இப்படத்தில் இது ஊறுகாய் அளவிற்கு கூட இல்லை. அதனால் திருப்பங்கள் குறைவாக உள்ள படமாக மாறிவிட்டது. போரடிக்கவில்லை, சுவாரசியமாகவும் இல்லை.



#Lift #NetFlix

Monday, August 15, 2022

யுத்தகாண்டம் - சிங்கிள் ஷாட் படம் - விமர்சனம்

 யுத்தகாண்டம் - சிங்கிள் ஷாட் மூவி!

எனக்குப் பரிசோதனைகள் பிடிக்கும் என்பதால் இந்த சிங்கிள் ஷாட் பரிசோதனையை ஆர்வத்துடன் பார்த்தேன். படம் எனது ஆர்வத்துக்கு தீனி போட்டது என்பதுதான் உண்மை. பிரிவியூவிற்கு அழைப்பு தந்தது கேபிள் சங்கர்.
நள்ளிரவில் யாரையோ தேடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனில் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் பயணித்து ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைகிறது காமிரா. அந்த நீண்ட நள்ளிரவு சாலைப் பயணம் இது சிங்கிள் ஷாட் படம் என்பதற்கு நம்மை தயார் செய்கிறது.
தன் காதலியைத் தேடும் இளைஞன் எதிர்கொளும் இரவு நேரச் சம்பவங்கள்தான் கதை. ஒன்றிலிருந்து மற்றொன்று என காட்சிகள் தொடர் சங்கிலியாக ஒரு சஸ்பென்சுடன் நகர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நகர்தலை உணர்த்த சிங்கிள் ஷாட் பயன்பட்டிருக்கிறது. அதாவது சிங்கிள் ஷாட் என்பது தேவையற்ற திணிப்பாக இல்லை.
எண்கவுண்டர், அரசியல் பேரம், சேஸிங், அடிதடி, தேடல், டூயட் என இப்படத்தில் எல்லாம் உள்ளது. நாயகியாக க்ரிஷா நடித்திருக்கிறார். இவரை என் இயக்கத்தில் யாதெனக்கேட்டேன் படத்தில் நடிக்க ஓரிரு முறை பேசியிருக்கிறேன், அதனால் அவரை ஞாபகம் உள்ளது. கோலிசோடா 2வில் நடித்திருக்கிறார். இயக்குநர் ராசி அழகப்பன் எனக்கு அறிமுகம் செய்தார் என்று நினைவு. க்ரிஷா பவர்ஃபுல் கதாபாத்திரங்களில் ஸ்கோர் செய்யக் கூடியவர் என்பது என் அனுமானம். இந்தப்படத்தில் அவருக்கான வாய்ப்புகள் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம். கதையே இவரை மையப்படுத்தி இருந்திருக்கலாம் என்று கூட தோன்றுகிறது.
போலிஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தவுடன் அதில் உள்ள பல்வேறு அறைகள் மற்றும் மாடிப்படிகளில் தடுமாறாமல் ஏறி இறங்குகிறது காமிரா. பிறகு மீண்டும் ஸ்டேஷனை விட்டு வெளியேறிவிட்டு, சிறிது நேரம் கழித்து மறுபடியும் உள்ளே வருகிறது. இப்படியே ஸ்டேஷனின் உள்ளேயும், வெளியேயும் காமிரா நகர்ந்து கொண்டே இருக்கிறது. இவை அலுப்பு தராமல் இருக்க லைட்டிங்கில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். சுரேஷ்மேனனுடன் நடைபெறும் சண்டைக்காட்சியும், இருட்டறைக்குள் நடக்கும் காட்சியும் அக்னிநட்சத்திரம் கிளைமாக்ஸ் சண்டை போல முயற்சி செய்திருந்தார்கள். சுரேஷ்மேனனின் கதாபாத்திரம் பெரிதாக ஏதோ சம்பவம் செய்யப்போகிறது என நினைத்தேன். ஆனால் அந்த பாத்திரத்திரம் பொசுக்கென காணாமல் போய்விட்டது.

ரவுண்ட் டிராலி எஃபக்ட் கூட ஒரு காட்சியில் முயற்சி செய்திருந்தார்கள். ஒரு எண்கவுண்டர் பற்றி பேசிக்கொள்ளும் இந்தக் காட்சியில் இருந்த தீவிரம், எண்கவுண்டர் நடக்கப்போகும்போது இல்லை.
போஸ்வெங்கட் கதை வசனம் எழுதியிருக்கிறார். அதனால் சில கதாபாத்திரங்கள் அவரே நேரடியாக அரசியல் பேசுவது போல இருந்தது. மேக்கிங் பார்க்கும்போது அவர் கிட்டத்தட்ட இயக்குநர் வேலையும் பார்த்திருக்கிறார் எனத் தோன்றியது. படம் நாயகனைச் சுற்றிதான் நடக்கிறது. நாயகன் ஸ்ரீராம் இதை உணர்ந்து இன்னும் முனைப்புடன் நடித்திருக்கலாம்.
டிஜிட்டல் யுகத்தில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட யுத்தகாண்டம் போன்ற நிறைய பரிசோதனைகள் நடந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் டெக்னிக் எதுவாக இருந்தாலும் படத்தின் மையமான கதை என்ன என்பதும், அது எப்படி இரசிகர்களை கவரும் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் யுத்தகாண்டம் படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்கிற வரிசையில் வைக்கலாம்.
மூவிவுட் என்கிற ஓடிடி தளத்தில் ரிலீசாகியிருக்கிறது. நேரமிருக்கும்போது பாருங்கள். யுத்தகாண்டம் படம் வெற்றியடைய படக் குழுவினருக்கு என்
வாழ்த்துகள்
!
இணையதள முகவரி - https://moviewood.io/
#Moviewood ஆண்ட்ராயிட், ஐஓஎஸ் என இரண்டிலும் இயங்கும்.

Tuesday, January 6, 2009

அபியும் Young அப்பாக்களும் - திரை விமர்சனம்

வீராப்பு - அப்பா, மகன்
தவமாய் தவமிருந்து - அப்பா, மகன்
வாரணம் ஆயிரம் - அப்பா,மகன்
இந்த வரிசையில்
அபியும் நானும்.
ஆனால் இதில் மகனுக்குப் பதில் மகள்.

ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதம். ஆனால் ஒரு ஒற்றுமை என்னவென்றால் திடீரென குழந்தை வளர்ப்பில் 'அப்பாக்களின்' பங்கைப் பற்றி தமிழ்சினிமா சிந்திக்க ஆரம்பித்திருக்கிறது.

ஒரு குழந்தை பிறக்கும்போது அப்பாக்களும் பிறக்கிறார்கள். ஆனால் (குறிப்பாக பெண்) குழந்தைகள் வளரும்போது அப்பாக்கள், அவர்கள் வேகத்தில் வளர்வதில்லை. இது அனுபவத்தில் நான் கண்ட உண்மை. Young mothers சுலபமாக பெண் குழந்தைகளின் உலகத்தில் நுழைந்துவிடுகிறார்கள். ஆனால் (என்னைப் போன்ற) Young fathers ஈடு கொடுக்க முடியாமல் திணறுகிறார்கள். உறவின் சுகங்களும், வலிகளும் கலந்த அந்த அப்பா - மகள் வளர்ச்சிப் போட்டியை ராதா மோகன் தன்னுடைய பாணியில் மென் சோகம் கலந்து சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார்.

ஒரு அதிகாலைப் பூங்காவில் ஒரு புது அப்பாவுக்கு(பிருத்வி ராஜ்), ஒரு பழைய அப்பா(பிரகாஷ்ராஜ்) சொல்கிற சுய அப்பா கதைதான் அபியும் நானும். படம் பார்க்கிற நம்மை பிருத்வி ராஜ் இடத்தில் உட்கார வைத்துவிட்டு, பிரகாஷ்ராஜிடம் கதை கேட்க வைக்கிறார் இயக்குனர்.

'இவர் Beggearஆ இருக்காருப்பா. நம்ம கூடவே இருக்கட்டும்' என்று ஒரு பிச்சைக்காரரை நாய்குட்டியைப் போல நேசித்து தன் வீட்டுக்கு அழைத்துவரும் மகளையும், அந்த பிச்சைக்காரரையும் 'எந்த உறுத்தலும்' இல்லாமல் ஏற்றுக் கொள்கிறார் அப்பா பிரகாஷ்ராஜ். ஒரு சாதாரண பிச்சைக்காரனான தன்னை தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக மாற்றிய சிறுமியை 'என் அம்மா சார்' என்று
ரவி உருகும்போது, படம் பார்க்கிற அனைவருக்கும் ஒரு கணம் மனதைப் பிசைகிறது. அன்பும், நன்றியும் கலந்த அந்த ஓட்டல் காட்சி், மனிதனை மனிதனாக ஏற்றுக்கொள்ள வைக்கும் ஒரு அற்புதம். அந்தக் காட்சியிலிருந்து நாமும் ரவியை பிச்சைக்காரன் என்பதை மறந்து நமது ஆழ் மன நேசங்களை அடையாளம் காட்டும் ஒரு கண்ணாடியாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறோம்.

அதே சிறுமி வளர்ந்து த்ரிஷாவாகி 'டெல்லியில எக்கனாமிஸ்டா இருக்காருப்பா' என்று ஒரு 'சர்தார்ஜியை' தனது எதிர்கால கணவனாக அறிமுகப்படுத்தும்போது இடைவேளை வருகிறது. இடைவேளை வரும்போது, ஆஹா இது இன்னொரு மொழி என்று தோன்றுகிறது. ஆனால் இடைவேளைக்குப் பின் மென் சோகங்களுக்கு இடமில்லை. ஆழமான காட்சிகள் எதுவுமில்லை. திரிஷாவின் சர்தார்ஜி காதலனை பிரகாஷ் ராஜ் மருமகனாக ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா என்பதை மட்டுமே வெற்று நகைச்சுவையாக (சில காட்சிகளில் கோமாளிச்சுவையாக) சொல்லியிருப்பதால் அதிக இனிப்பை சாப்பிட்டது போல ஒரு திகட்டல் வருகிறது.

'சர்தார்ஜியின் குடும்பத்தார்' பிரகாஷ்ராஜ் வீட்டில் அடிக்கிற லூட்டிதான் இரண்டாவது பாதி. பெரும்பாலான காட்சிகள் சுவாரசியமில்லாத பாப்கார்ன் காட்சிகள்.

"ஒரு பிச்சைக்காரனை குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக் கொண்ட உன்னால், பிரதமரே நேரடியாக பேசக் கூடிய ஒரு சர்தாஜியை குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக் கொள்வதில் உனக்கென்ன தயக்கம்", என்று அந்த பிச்சைக்காரரை வைத்தே கேட்க வைத்த காட்சியில் ராதாமோகன் மிளிர்கிறார்.

திரிஷா, ஊட்டியில் வளரும் கான்வென்டுப் பெண் அபியாக கச்சிதம். ஆனாலும் அழுத்தமான நடிப்புக்கு வாய்ப்பு இல்லையென்பதால் பெரிய அளவில் மனதை ஆக்கிரமிக்கவில்லை. பிரகாஷ்ராஜ் படம் முழுக்க வருகிறார். அதிக வாய்ப்பு. நிறைவாக செய்திருக்கிறார். சர்தார்ஜியாக வரும் கணேஷ், பிரகாஷ்ராஜின் நண்பராக வரும் தலைவாசல் விஜய், அம்மா ஐஸ்வர்யா அனைவருமே அளவாக வந்து அளவாக நடித்திருக்கிறார்கள். ஆனால் பிச்சைக்காரராக அறிமுகமாகி படம் பார்க்கிற நம்முடைய மனசாட்சியாக உலாவரும் ரவிதான் (இவருடைய உண்மையான பெயர் என்ன?) ஸ்கோர் பண்ணுகிறார்.

வித்யாசாகர் 'ஒரே ஒரு ஊரிலே' மற்றும் 'வா..வா' பாடலிலும் இடையில் காணாமல் போயிருந்த தன்னுடைய மெலடி டச்சை மீட்டெடுத்திருக்கிறார்.

மாறிவரும் சூழ்நிலையில் அம்மாக்கள் 'சம்பாதிப்பது எப்படி?' என்றும், அப்பாக்கள் 'குழந்தைகளை வளர்ப்பது எப்படி?' என்றும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முழுவதும் Role Swap நடக்கவில்லை. ஆனால் அம்மா அப்பாக்கள் ஒருவரின் வேலையை மற்றவர் கூச்சமின்றி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால் இந்த வரிசையில் எதிர்காலத்தில் இன்னும் சில படங்கள் வரக்கூடும்.

கண்றாவி படங்களில் நடித்தாலும், தயாரிக்கிற படங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரகாஷ்ராஜ் பிடிவாதமாக இருக்கிறார். 'அபியும் நானும்' அவருடைய பிடிவாதத்தின் இன்னொரு அடையாளம். இது மொழியைப் போல முத்திரைப் படமா? என்றால் இல்லை. ஆனாலும் நல்ல படம்.

Friday, December 12, 2008

எல்லாம் கொலைச் செயல்! - திரை விமர்சனம்

நான் கல்லூரி படிக்கும்போது பாக்கெட் (கிரைம்) நாவல்கள் பிரபலம். எல்லா பாக்கெட்டுகளிலும் ஒரே ஸ்டைல்தான். 50 பக்கம் வந்தவுடன் பட்டென எல்லா முடிச்சுகளும் அவிழ்ந்துவிடும். அடுத்த 5 பக்கங்களில், கொலைகாரன் அகப்படுவான், கதை முடிந்துவிடும் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் முதல் பக்கத்தில் 'சார் போஸ்ட்' என்ற தபால்காரர்தான் உண்மையான கொலைகாரன் என்று புது திருப்பம் தந்து நாவலை முடிப்பார்கள்.

அதே ஸ்டைலில் 'சிந்தாமணி கொல கேஸ்' என்று மலையாளத்தில் வந்த படம் தமிழில் 'எல்லாம் அவன் செயல்' ஆகியிருக்கிறது. விஜயகுமார், ரகுவரன், விசு, தலைவாசல் விஜய், சுகன்யா, ரோஜா, வடிவேலு, மணிவண்ணன், சங்கிலி முருகன் என்று பல பெருந்தலைகள் படத்தில் இருக்கிறார்கள். ஆனால் ஆளுக்கு இரண்டு சீன்தான்.

மற்ற காட்சிகளை ஆர்.கே என்ற (புரொடியுசர்)புதுமுகம் ஜே.கே.ரித்திஷ் ஸ்டைலில் ஆக்கிரமிக்கிறார். சில நேரம் கையில் கருப்பு கிளவுஸிம், சில நேரம் வக்கில் கோட்டும் போட்டுக் கொண்டு, கேரக்டர்களை மறந்துவிட்டு முக்கால்வாசி நேரம் இரசிகர்களைப் பார்த்தே டயலாக் பேசுகிறார், அல்லது டயலாக் வாசிக்கிறார். இவருடைய பாதிப்பில் சுகன்யாவும் விசுவும் கூட எப்போதுமே விரைத்துக் கொண்டு அடித்தொண்டையில் பேசுகிறார்கள்.

கடமை தவறாத போலீஸ் அப்பாவை, சிறுவர்களான மகன் மற்றும் மகளின் கண்ணெதிரில் போட்டுத் தள்ளுகிறான் ஒரு கொலைகாரன். வெகுண்டெழும் மகன் வளர்ந்து பெரியவனாகி அந்த கொலைகாரனை பழிவாங்குவது பழைய ஸ்டைல். பெரியவனாகி வக்கீலாகி, கிரிமினல்களுக்காக வாதாடி, ஜெயித்து, விடுதலை வாங்கித் தந்து, அடுத்தநாளே அவர்களை கொலை செய்வதுதான் எல்லாம் அவன் ஸ்டைல்.

வழக்கமாக தமிழ்பட மசாலாக்களில் இது போல கொலை செய்யும் ஹீரோ, கடைசி காட்சியில் மட்டும் கையில் விலங்கோடு உள்ளே போவார். இதில் வழக்கத்திற்கு மாறாக, உங்களைப் போல இன்னும் பல பேர் வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி ஆபீசர் கொலைகாரனை வாழ்த்தி சல்யூட் அடிப்பது போல படம் முடிகிறது.

எல்லா குற்றங்களுக்கும் தீர்வு, கொலைதான் என்று தவறாகச் சொல்லித்தரும் படம். மெடிக்கல் காலேஜ் ஊழல், ராக்கிங் என சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளை இனிப்பு போல தடவி, மக்களை கொலைகாரனாக மாற கொம்பு சீவும் படம். அதை மேலும் நியாயப் படுத்த ஆங்காங்கே ஏதேதோ ஸ்லோகங்கள்.

இந்தப் படத்தின் ஹீரோவும் புரொடியுசருமான ஆர்.கே எனப்படும் ராதாகிருஷ்ணன், வி-கேன், ஸ்கைவேஸ் 2000, காந்தப் படுக்கை என விதவிதமாக மல்டி லெவல் மார்கெட்டிங் செய்து (உள்ளே போய் வெளியே வந்து) பிரபலமானவர். எதை விற்கிறோம், எதை வாங்குகிறோம் என்பதைப் பற்றி கவலை இல்லை. பணம் சம்பாதிக்க வேண்டும். அதுமட்டுமே நமது குறிக்கோள் என்று மல்டி லெவல் மார்கெட்டிங்கில் பிரெயின் வாஷ் செய்வார்கள். இந்தப் படம் அது போல, எல்லா குற்றங்களுக்கும் தண்டனையாக கொலையை சிபாரிசு செய்கிறது.

கடவுளே! இது போன்ற தவறான போதனைகளிலிருந்து இளைஞர்களை காப்பாற்று!

Tuesday, December 9, 2008

மகேஷ் சரண்யா மற்றும் ஜவ்வு மிட்டாய் - திரை விமர்சனம்

55 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி சூரியன் தியேட்டரில், திரையிலிருந்து நான்காவது வரிசையில் உட்கார்ந்து படம் பார்த்தால் நல்ல படம் கூட கெட்ட படமாகிவிடும்.

"நல்லாத்தான்யா யோசிச்சிருக்கான், ஆனா எடுக்கத் தெரியல. "

திரையில் மகேஷிம் சரண்யாவும் தோன்றும்போது, மற்றும் சிலராக (அடுத்த சீட்டில்) வாய்ப்பு கிடைக்காத அஸிஸ்டெண்ட் டைரக்டர்கள் இருந்தால் . . அவர்களின் தொடர் கமெண்டுகள்(கடுப்புகள்), ஒரு சில நல்ல சீன்களையும் மொக்கை சீன்களாக்கிவிடும்.

பி. ரவி எனப்படும், லிங்குசாமியின் சிஷ்யருக்கு இது முதல் படம். படித்து முடித்த பின் வாத்தியாராகி தவிக்கும் பாதி மாணவன் + மீதி லெக்சரர் போல தடுமாறியிருக்கிறார். படம் முழுக்க மகேஷிம், சரண்யாவும் வருகிறார்கள். கூடவே திறமையும், அனுபவமின்மை வருகின்றன.

யாராவது ஐஸ் கிரீம் சாப்பிட ஆரம்பித்தால் சாப்பிட்டு முடிக்கும் வரை படு நிதானமாக டயலாக் வைக்கிறார். வீட்டுக்கு யாராவது வந்தால், தெரு முனையில் கார் நுழைவதில் ஆரம்பித்து, வந்து, நின்று, கார் கதவை திறந்து, மூடி, கேட்டை திறந்து, சிரித்து, கை கூப்பி, வணக்கம், வாங்க என்று சொல்வதற்குள் . . .ஸ்ஸ்ஸ்...அப்பாடா! (டேய் ஏன்டா இந்தப்படத்துக்கு கூட்டிட்டு வந்தே? என்று எட்டாவது வரிசை ஆளை புலம்ப வைத்துவிடுகிறார்)

ஒரு காட்சி முடிந்தவுடன், அடுத்த காட்சிக்கு சட்டென போக மாட்டேன்கிறார். கோனார் நோட்ஸ் போல 'என்ன ஆச்சு தெரியுமா?' என்று இன்னொரு கேரக்டரை வைத்து முந்தைய காட்சியை ஒரு வரி விடாமல் விளக்குகிறார். அதுவும் பத்தாது என்று வெறும் லிப் மூவ்மெண்ட் போட்டு நமத்துப்போன பிண்ணனி இசையால் சில நிமிடங்களை கடத்துகிறார் (இன்னாடா டப்பிங் பண்ண காசு பத்தலையா? - பத்தாவது வரிசைக் குரல்)

ஆனாலும் லிங்குசாமியிடம் ரவி கிளாஸ் அட்டெண்ட் செய்திருக்கிறார் என்பதற்கு சில முத்திரைகள் படத்திலிருக்கின்றன. சரண்யாவின் ஓபனிங் சாங், காதலைத் தெரிவிக்கும் ரிங்டோனாக வரும்போது (மச்சான்! என்னடா திடீர்னு பின்றான் - முன் வரிசை) தியேட்டரில் முதன் முதலாக கை தட்டல். அப்பா நான் டிரெயினை மிஸ் பண்ணிட்டேன் என்ற சாதாரண வசனம், கிளைமாக்ஸில் ஒரு திருப்பு முனை வசனமாக வரும்போது இயக்குனர் முதன் முறையாக கடைசி 10 நிமிடங்களில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார். (பரவால்லடா, ஏதோ இருக்கு - அடுத்த ஸீட்),

சக்திக்கு இது இரண்டாவது படம். ஓகே!ஜோதிகாவை காப்பியடிக்கும் சந்தியா கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். விட்டால் அசத்தப் போவது யாரு குழுவில் ஒருவராக்கிவிடுவார்கள்! சரண்யாவுக்கு முகத்தில் சகல எக்ஸ்பிரஷன்களும் நன்றாக வருகிறது. ஆனால் இதே போன்ற பாத்திரத்தில் தொடர்ந்து நடித்தால், தமிழ் சினிமாவின் நிரந்தர தங்கச்சியாக மாறிவிடக் கூடிய அபாயம் இருக்கிறது.

வித்யா சாகர் வரவர போரடிக்கிறார். படம் முழுக்க டைட்டானிக் பாதிப்பு!

ஏற்கனவே மலையாளத்தில் மோகன்லால் நடித்து, தமிழில் (விஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையில்) சத்யராஜ் நடித்த ஒரு சாதாரண கதைக்கு, நல்ல திரைக்கதை அமைத்துவிட்டு, படு சொதப்பல்களான ஜவ்வு மிட்டாய் காட்சிகளால், இயக்குனர் நம்மை படம் முழுக்க கடுப்பேற்றுகிறார்.

கிளைமாக்ஸ் ஒரு எதிர்பாராத சஸ்பென்ஸ்!

ஆனால் அந்த ஒரு சில காட்சிகளுக்காக 'மகேஷ், சரண்யா மற்றும் பலரில் ஒருவனாக' மாட்டிக் கொண்டு முழிக்க நீங்கள் தயார் என்றால், இந்தப் படத்திற்குப் போகலாம்.

Friday, December 5, 2008

கடுப்'பூ' அல்ல சலிப்'பூ' - விமர்சனம்

படத்தின் ஆரம்பக் காட்சிகளில் காலில் எடைக் கல் விழுந்தால் கூட சிரிப்புடன் ஏற்றுக்கொள்ளும் பெண், கடைசிக் காட்சியில் கதறி அழுகிறாள். ஏன்? இதுதான் படத்தின் ஒன் லைன்.

சிறுகதையை நெடுங்கதையாக்கும்போது மூலக்கதையை சிதைக்காத பல சம்பவங்கள் தேவைப்படும். அது திரைக்கதையாகும்போது சுவாரசியமான காட்சியமைப்புகள் தேவைப்படும். பூவில் சுவாரசியமான காட்சியமைப்புகள் உண்டு. ஆனால் தொடர்ச்சியான சம்பவங்கள் இல்லை. அதனால் ஒரு நல்ல ஒரு பக்கச் சிறுகதையை இரண்டு மணிநேரம் படித்த ஒரு சலிப்பு ஏற்படுகிறது.

90களில் தமிழ்சினிமாவின் நிரந்தர காலேஜ் ஸ்டூடண்ட் முரளி என்ன செய்தாரோ, அதை பூவின் நாயகி காயத்ரி செய்திருக்கிறார். தன்னுடைய முறை மாமனின் மேலிருக்கும் காதலைச் சொல்ல முடியாமல் படம் முழுவதும் தவிக்கிறார், தவிக்கிறார்... படம் முடிந்த பின்னும் தவித்துக்கொண்டே இருக்கிறார்.

ஒரு இளம் மனைவியின் மறக்க முடியாத (திருமணத்திற்கு முந்திய) காதலைச் சொல்ல தைரியம் வேண்டும். அந்த தைரியத்திற்காக இயக்குனருக்கு சபாஷ். ஆனால் அவர் சொன்னது காதலை அல்ல. காதலைச் சொல்ல முடியாத வெறும் தவிப்பு என்பதுதான் படத்தின் மைனஸ்.

நகரப் பிண்ணனியிலிருந்து விலகி (பருத்தி வீரன் கொடுத்த தைரியத்தில்) வித்தியாசம் காட்டுவதற்காக வேட்டுக் கம்பெனிகளையும், கள்ளிப் பூக்களையும் காட்டுகிறார்கள். ஆனாலும் 'அழகிகளும், ஆட்டோ கிராப் நாயகிகளும்' ஞாபத்திற்கு வந்து படத்தில் ஒன்ற விடாமல் கெடுக்கிறார்கள். என் கூட வந்த நண்பர் படத்தை மிகவும் இரசித்தார். நான் யூகிக்கின்ற முக்கிய காரணம் அவர் 'அழகி, ஆட்டோ கிராப்' போன்ற படங்களை பார்க்கவில்லை.

படத்தில் வரும் அத்தனை உப பாத்திரங்களும் புது முகங்கள். ஆனாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 'பேனாக்காரர்', 'அலோ டீ கடைக்காரர்', 'மாரியின் அண்ணன்', 'மாரியின் கணவன்', 'மாரியின் தோழி', 'சூப்பர்வைஸர்' என எல்லோருமே மனதில் நிற்கிறார்கள். (அகத்தியனின் கோகுலத்தில் சீதை படத்தைப் போல) எல்லோரும் நல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் . . .

சொந்தத்தில் கல்யாணம் செய்தால் பிறக்கும் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்கின்ற கிளைமாக்ஸ் வாதத்துடன் பூவின் முறைமாமன் காதல் நிறைவேறாமல் போகும்போது, அழகியலுடன் அறிவியல் மிக்ஸ் ஆகி சட்டென படத்தின் மேல் ஒரு கடுப்'பூ' வருகிறது.

"தேவதைகள் வானத்திலிருந்து குதித்து விடுவதில்லை. மாமனுக்கு மகளாக பிறக்கிறார்கள். தேவதைகளை கைப்பிடிக்கும் அதிர்ஷ்டம் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. மீதி பேர் 'பூ' படத்தின் நாயகன் தங்கராசுவை போல மனமறுந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விடுங்கள், நமக்கே நமக்கென ஒரு மாரியம்மாள் இனிமேல் புதியதாகவா பிறந்து வரவேண்டும்?" என்று லக்கிலுக் ஆன்லைனில் விமர்சனம் படித்தேன். தங்கராசுவின் பார்வையில் சினிமா நகர்ந்திருந்தால் ஒருவேளை நானும் லக்கிலுக் போல நெகிழ்ந்திருப்பேன். ஆனால் நாயகி மாரியின் நோக்கில் கதை நகரும்போது என்னால் பெரிதாக ஒன்ற முடியவில்லை.

"பூ படத்தில ஓர் இடத்தில் மாரி “ கல்யாணமாயிருச்சுன்னா எல்லாத்தையும் மற்ந்துரனுமா என்னா? “ என்று கேட்பது காதல் வயப்பட்டு கைகூடாமல் போன எல்லா காதலர்கள் மனதிலும் எழும்பும் கேள்விதான்.. . ஓரு பெண்ணின் பார்வையில் அவளின் காதலை சொல்லும் பூ படத்துக்கு பெரிய வசூல் இல்லை என்பது இந்த ஆண் ஆதிக்க சமுதாயத்தினால்தானோ.. என்று தோன்றுகிறது.." என்று கேபிள் சங்கர் விமர்சித்திருந்தார். அவர் சொல்வது போல எனக்கோ பார்வையாளர்களுக்கோ தோன்றவில்லை. அதைப் பொறுத்தவரையில் இயக்குனருக்கு வெற்றிதான். ஆனால் காதலுக்குத் தொடர்பில்லாத, சொந்தத்தில் கட்டக் கூடாது என்ற ஒரு கருத்து திணிக்கப்பட்டவுடன், அடச் சே இதுக்காகத்தானா இவ்வளவு நேரம் . . . என்று தோன்றுகிறது.

படத்தின் டைட்டில் 'பூ'. ஆனால் எந்த இடத்திலும் பூவைக் காட்டவில்லை. பூக்களுக்குப் பதிலாக ஒரு கள்ளிப்பூவைப் போல படம் முழுக்க நிறைகிறார் நாயகி காயத்ரி. அபார திறமை.

இசை சுமார். இசையமைப்பாளர் இது போன்ற படங்களுக்கு இசையமைக்க உட்காரும்போது, பிண்ணனி இசை ஆசான் இளையராஜாவின், படங்களை பார்த்துவிட்டு அமர்வது நல்லது.

எத்தனை நொட்டைகள் சொன்னாலும், இது இயக்குனர் சசியின் சீரியஸ் முயற்சி என்பதில் சந்தேகமில்லை. வாரணம் ஆயிரம் படத்தை பார்த்தபின்னும் கெளதமின் மேல் எனக்கு இதே எண்ணம்தான் தோன்றியது.

இரண்டுக்கும் ரிசல்ட் ஒன்றுதான். ஆழமில்லை!

Sunday, November 16, 2008

சூர்யாயிரம் : திரை விமர்சனம்

'காக்க காக்க'வை சேரன் இயக்கியிருந்தால் எப்படி இருக்கும்? சூர்யா ஹீரோயினாகி, ஜோதிகா ஹீரோவாகியிருப்பார். ஆட்டோகிராபை கெளதம் இயக்கியிருந்தால் எப்படி இருக்கும்? சேரன் காதல் தோல்வியில் கஞ்சா அடித்து, டெரரிஸ்ட் ஆகி இன்னொரு காதல் செய்திருப்பார்.

இது கிண்டல் கிடையாது, என்னடா இது, நல்ல முயற்சி, ஆனா . . இப்படி இருக்கேன்னு ஒரு ஆதங்கம்.

சேரனின் தவமாய் தவமிருந்தின் பாதிப்பு வாரணம் ஆயிரத்தில் இருக்கக்கூடும் என்று கெளதம் சில மாதங்களுக்கு முன்பு ஏதோ ஒரு பத்திரிகை பேட்டியில் கூறியிருந்தார். அவர் சொன்னது போல பாதிப்பு இருக்கிறது, ஆனால் பாதிதான் இருக்கிறது. மீதியை காக்க காக்க கமாண்டோக்களும், வேட்டையாடு விளையாடு டெரரிஸ்டுகளும், டிரக் அடிக்டுகளும் ஆக்கிரமித்துவிட்டார்கள்.

அமெரிக்காவுக்கு எம்.எஸ் படிக்கப் போகும் மேக்னாவை, ஒரு இரயில் பயணத்தில் பார்த்தவுடன் காதலிக்கிற சூர்யா, அமெரிக்காவிற்கே சென்று காதலில் ஜெயிக்கிறார். ஆனால் அமெரிக்காவிலேயே ஏதோ ஒரு குண்டு வெடிப்பில் மேக்னா இறந்துவிட, இந்தியா திரும்பும் சூர்யா சோகத்தை மறக்க Drug addictஆக மாறி, பின்னர் திருந்தி இந்திய இராணுவத்தில் சேர்கிறார். சேர்ந்த கையோடு பள்ளிக்காலத்தில் கூட படித்த பிரியாவை மணக்கிறார்.

இவருடைய இந்த முடிவுகளுக்கும், வெற்றி(?)களுக்கும் காரணம் தன்னுடைய அப்பாதான் என்று படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி ஃபிரேம் வரைக்கும் சூர்யா சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால் அந்த உறவின் ஆழத்தைச் சொல்ல ஒரே ஒரு காட்சி கூட படத்தில் இல்லை.

படத்தின் ஆரம்ப டைட்டில் முடிந்தமே சூர்யாவின் ஆதிக்கம் கொடி கட்ட ஆரம்பித்துவிடுகிறது. எழுபதுகளின் பள்ளி மாணவனாக சூர்யா. எண்பதுகளின்
காதலனாக சூர்யா, 90களின் தகப்பனாக சூர்யா, 2000த்தின் இளைஞனாக சூர்யா, என வயதின் பல பரிமாணங்களை இளமை, முதுமை - காதல், கவர்ச்சி - துள்ளல்,மோதல் - பயம்,வீரம் என பல சுவைகளுடன் வெளிக்காட்டியிருக்கிறார். எனக்குத் தெரிந்து எந்த ஒரு நடிகனுக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததில்லை. சூர்யாவைப் போல உணர்ந்து மெனக்கெட்டு நடித்ததுமில்லை.

ஆனால் அழுத்தமான காட்சிகள் இல்லாததால், அர்த்தமில்லாத கவிதையை வாசிப்பது போல இருக்கிறது.

சிம்ரன் அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டார். காதலியாக, மனைவியாக, அம்மாவாக, கணவனை இழந்து கொண்டிருப்பவளாக வெகு இயல்பு.

மேக்னா நாயுடு, சிரிக்கிறார். . . சிரிக்கிறார் . . சிரித்துக்கொண்டே இருக்கிறார். முதலில் இந்தியாவில், அப்புறம் அமெரிக்காவில். டிரெயினில் அவரைக் கண்டதும் சூர்யாவின் கண்டதும் காதல் ஒரு ஸ்வீட் எபிசோட்.

பக்கத்துவீட்டு ப்ரியாவாக வரும் ரம்யாவுக்கு பெரிதாக வாய்ப்பில்லை.

ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் ஏற்கனவே டாப் 10ல் கலக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் பிண்ணனி இசையில் ஏமாற்றமே.

சூர்யாதான் கமலின் வாரிசு என்பதையும், கெளதம் மேனனுக்கு - Gangsters, Drugs, Encounter இவற்றைத் தவிர வேறு எதையும் அழுத்தமாகச் சொல்ல முடியாது என்பதையும் நிரூபித்திருக்கிற படம்.

Monday, October 20, 2008

காதலில் (20 நாள் கழித்து) விழுந்தேன் : விமர்சனம்

பாரதிராஜா கண்களால் கைது செய்ய முடியாததை, பார்த்திபன் குடைக்குள் மழையாக்க முடியாததை, பி.வி. பிரசாத் காதலில் விழுந்து இம்ப்ரஸ் செய்திருக்கிறார்.

ஊர் அடங்கிய நடு இரவில், வீல் சேரில் சுனைநாவை வைத்து தள்ளிக் கொண்டு நகுல் ஓடுவதும், ஒரு கோஷ்டி துரத்துவதும், யூகிக்க முடியாத பெர்பெக்ட் ஓபனிங். தப்பித்து டிரெயினில் ஏறியதும், ஹீரோவும், ஹீரோயினும் கொஞ்சிக் கொள்ளும் சின்ன உரையாடல், படத்தின் சஸ்பென்சை இடைவேளை வரை யூகிக்க விடாமல் நீட்டிக்கிறது.

டி.டி.ஆராக வரும் லிவிங்ஸ்டன்தான் படம் பார்க்கும் நாம். ஓடும் இரயில் பிண்ணனியில் நகுல் அவருக்கு கதையைச் சொல்லச் சொல்ல படம் பார்க்கும் நாமும் காதலில் விழுகிறோம்.

சுநைனாவும், நகுலும் காதலில் விழும் ஆரம்பம் புதுசு. சுநைனா இளமையான நதியாவை ஞாபகப் படுத்துகிறார். அளவாக சிரித்து, அளவாக கவர்ச்சி காண்பித்து, நகுலுக்கு முத்தம் கொடுத்து விரசமில்லாத இளமையை அள்ளித் தெளித்திருக்கிறார்.

படத்தின் மிகப் பெரிய ஆச்சரியம் 'நகுல்'. 'பாய்ஸ்ல குண்டா வருவான்ல அவன்தான் இவன்', 'அவனா?' என்ற ஆச்சரியக் குரல்கள் தியேட்டரில் ஒலிக்கும்போதே படு யூத்தாக நம்ம மனசுக்குள் நாக்கு முக்க ஆட ஆரம்பித்துவிடுகிறார். சுறுசுறுப்பு, ஆக்சன், காதல் இதை எல்லாம் பார்த்தால் கல்லூரி இளசுகளின் அடுத்த போஸ்டர் பாய் நகுல்தான்.

கண்களால் கைதுசெய், குடைக்குள் மழை இந்த இரண்டின் (தோல்வியடைந்த) மையக் கருவும் காதலில் விழுந்தேன் மையக் கருவும் ஒன்றுதான். ஆனாலும் தைரியமாக மீண்டும் தொட்டு, தன்னுடைய ஸ்கிரீன் பிளே சாமர்த்தியத்தால் இயக்குனர் வென்றிருக்கிறார். அவருடைய சாமர்தியத்திற்கு படத்தின் ஓபனிங் ஒரு சான்று. லிவிங்ஸ்டன் கதை கேட்பதாக கதையை நகர்த்தி, நம்மையும் ஒரு கதை கேட்கும் மனநிலைக்குத் தள்ளியது இன்னொரு சான்று. குணாவும், காதல் கொண்டேனும் இயக்குனர் பி.வி.பிரசாத்தை வெகுவாக பாதித்திருக்கிறது.

ஆனாலும் நிச்சயம் பி.வி.பிரசாத் சரக்கு உள்ள இயக்குனர்தான். வெறும் பாதிப்பில் படமெடுக்கிற இயக்குனர் அல்ல. ஆங்காங்கே பழைய படங்களின் சாயல் இருந்தாலும், நறுக்கென்று ஸ்கிரீனில் கதை சொல்லும் வித்தை தெரிந்தவராக இருக்கிறார்.

நகுல் கடத்தி வந்திருப்பது தன் காதலியை அல்ல, ஒரு பிணத்தை என்பதை அறியும் போது லிவிங்ஸ்டனும் நாமும் அதிர்ந்து போகிறோம். நகுலை துரத்தி வந்தது ஏதோ கும்பல் அல்ல, போலீஸ் என்பது தெரிந்ததும், படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஆனால் அதற்கப்புறம் புதுசாக ஹீரோயினின் சித்தப்பாவை வில்லனாக காட்டி, நகுலை பல கொலைகள் செய்ய வைத்து, திரையை இரத்தக் களறியாக்கியது ஏன்? படம் ஆரம்பத்தில் போணியாகமல் பெட்டிக்குள்ளே இருந்ததற்கு இந்த இரத்தமும் காரணமாக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

யாருடைய நல்ல வேளையோ, நாக்கு முக்க ஹிட்டாகி, ரீ மிக்ஸ் ஆகி, ரீ ஷீட் ஆகி, சன் பிக்சர்ஸ் ஆகி, மதுரையில் பிரச்சனையாகி, படம் வெளியாகி ஹிட் ஆகிவிட்டது.

படத்தின் சைலண்ட் பெர்பாமர் ஹீரோயின் சுநைனா. படத்தின் இரண்டாம் பாதி முழுக்க பிணமாக நடிக்க எந்த நடிகையும் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார். ஆனால் தைரியமாக அந்த பாத்திரத்தை ஏற்று வெற்றிகரமாக நடித்ததற்க்காக அவருக்கு பாராட்டுக்கள்.

படத்தின் அதிரடியான பெர்பாமர், ஹீரோ நகுல். ஆடிப் பாடி, அழுது, உருகி, அடித்து, அடிவாங்கி, கொலை செய்து, ஒன்றுமே தெரியாமல் பாசாங்கு செய்து அசத்தல் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பை கொடுத்த விஜய் ஆன்டனிக்கு ஒரு சபாஷ்.

மிக முக்கியமாக ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். பின்னி எடுத்திருக்கிறார். சொல்லப்போனால் இவர் இன்னொரு ஹீரோ.

கடைசியாக இயக்குனர் பி.வி.பிரசாத். திறமைசாலி என்று நிருபித்திருக்கிறார்.

ஆனால் . . . நல்ல கதையாக எடுங்கள் பாஸ் ... எல்லா லாஜிக்குகளையும் மீறிக் கொண்டு, காதலியின் பிணத்தை தூக்கிக் கொண்டு ஓடுகின்ற மன நோயாளியின் கதையைச் சொல்வதால் யாருக்கு என்ன மெசேஜ் போய் சேருகின்றது என்று புரியவில்லை. மனதை சுண்டுகிற விதமாக படம் பிடிக்கத் தெரிந்திருக்கிற நீங்கள் அடுத்து படத்தில் நல்ல ஆரோக்யமான கதைக் களனை, நாயக நாயகிகளை தேரந்தெடுத்து வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.

Friday, October 3, 2008

துரை - இன்னொரு சிக்ஸ் பேக்

  • பின்னி லொகேஷன்!
  • சிக்ஸ் பேக்கில் ஹீரோ உடம்பைக் முறுக்குதல்!
  • விவேக் ஐயர் பாஷை பேசுதல் - டிராபிக் கான்ஸ்டபிளைக் கலாய்த்தல்!
  • ரீ மிக்ஸ் என்ற பெயரில் பழைய மெட்டுக்களை கெடுத்தல்!
  • போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, திடீரென ஒரு டிவி ஸ்டேஷனுக்குள் நுழைந்து ஹீரோ மக்களிடம் லைவாக பேசுதல்!
  • சுவிட்சர்லாந்து போன்ற அழகான நாடுகளில், அரைக் கிறுக்கு நடனம் ஆடுதல்!
  • ஹீரோ அம்னீஷியாவில் பழைய வாழ்க்கை மறந்திருத்தல்!
  • ஹீரோயின் டபுள் மீனிங் டயலாக் பேசுதல்!

தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பது போல மேற்காணும் ஐயிட்டங்களும் படத்தில் இல்லையென்றால் வரிவிலக்கு என்று தமிழக அரசு அறிவித்தால் தமிழ் சினிமா தப்பிப் பிழைக்கும்.

ஆனால் இந்த அபத்தங்கள் இல்லையென்றால் துரை என்ற படமே இல்லை.

சிக்ஸ் பேக்கில் முகத்தில் லைட்டான சுருக்கங்களுடன் வரும் அர்ஜீன் தான் துரை. அப்பாடி டைட்டில் justified. இடைவேளை வரை, அம்னீஷியாவால், தான் யாரென்று தெரியாமல், ராஜா என்ற பெயரில் விவேக்கின் ஹோட்டலில் வேலை செய்கிறார் அர்ஜீன். துரத்தி துரத்தி காதலிக்கும் கிரத்திடம் (என்ன பேரோ) முத்தம் வாங்குகிறார். திடீரென படுக்கையில் இருந்து எழுந்து, வியர்த்து, தலையைக் கசக்கி உண்மையிலேயே தான் யார் என்று யோசிக்கிறார். லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் போய் விசாரிக்கிறார். திடீரென ஒரு வில்லன் கும்பல் துரத்த, தப்பித்து தண்ணீருக்குள் ஓடும்போது ஆரம்பிக்கிறது பிளாஷ்பேக்.

தொடர்ந்து ஒரு எதிர்பாராத தருணத்தில் இடைவேளை வரும்போது மட்டும், அட பரவாயில்லையே என்று ஆச்சரியமாக இருக்கிறது.

ஆனால் பிளாஷ்பேக், பிளாஷ்பேக்குக்குள் இன்னொரு பிளாஷ்பேக் என்று கதை உள்ளே போய்விட்டு வெளியே வரும்போது, திரைக்கதை நொண்டி அடிக்க ஆரம்பித்துவிடுகிறது. படத்தின் மொத்த சஸ்பென்சும் அப்போதே முடிந்துவிடுவதால், படம் இன்னும் எவ்வளவு நேரத்தில் முடியும் என்று வாட்சைப் பார்க்க வைத்துவிடுகிறார்கள். ஆனால் நம்முடைய கஷ்டம் புரியாமல், அர்ஜீன் தான் கஷ்டப்பட்டு பில்ட்அப் செய்த சிக்ஸ் பேக்கை காட்டுவதற்க்காக நம்மை ரொம்ப நேரம் அடிதடிகளை பார்க்க வைக்கிறார். அதுவும் கிளைமாக்ஸில் வில்லன் உட்பட அத்தனை அடியாட்களும், சட்டையைக் கழட்டிவிட்டுதான் சண்டை போடுகிறார்கள். சண்டை முடிவதற்குள் தியேட்டரில் ஏ.சியை ஆஃப் செய்துவிடுவதால், வியர்வையில் நாமும் சட்டையைக் கழட்டும் நிலைக்கு வந்துவிடுகிறோம்.

மகனுக்கு வாய்ப்பு தராமல், தொண்டர் திலகம் அர்ஜீனை கட்சியின் அடுத்த தலைவராக்க முடிவுசெய்கிறார், கட்சித் தலைவர். கோபமாகும் மகன், அப்பாவைக் கொன்று பழியை தொண்டர் அர்ஜீனின் மேல் போடுகிறார். போலீஸ் அவரை என்கவுண்டர் செய்ய முயற்சிக்க, என்கவுண்டரில் தப்பிக்கிற அர்ஜீன், மண்டையில் அடிவாங்கி அம்னீஷியா கேஸாகி, பிறகு அம்னீஷியாவிற்கும் தப்பித்து, வில்லனை பழிவாங்குகிறார்.

ஒரே ஒரு பாடலில் மட்டும் வந்தாலும் கஜாலா தான் நல்ல நடிகையாக வரக்கூடியவர் என்று மீண்டும் நிருபிக்கிறார். ஹீரோயின் கிரத்தை அம்னீஷியா இல்லாமலே எளிதில் மறந்துவிடலாம். வரிசையாக ஜோக் அடிப்பது மட்டுமே காமெடி கிடையாது என்று அனுபவஸ்தர் விவேக்கிற்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் இப்போதெல்லாம், அந்த லெவலை தாண்டி வரமாட்டேன்கிறார்.

'ராஜா, ராஜாதி ராஜனிந்த ராஜா' இது இளையராஜாவின் மாஸ்டர் பீஸ். வெறும் ரிதம் பேடை வைத்துக்கொண்டே, அற்புதமாக இசை அமைத்திருப்பார். அதை சொல்லிவிட்டுக் கெடுத்திருக்கிறார் இமான். அது போலவே 'Boney-M'ன் ரஸ்புதின் பாடலை சொல்லாமல் கெடுத்திருக்கிறார்.

இயக்குனரைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. கதை, திரைக் கதை இரண்டுக்கும் அர்ஜீனே பொறுப்பேற்றிருக்கிறார். உண்மையைச் சொன்னால் நம்மை வெறுப்பேற்றியிருக்கிறார்.

Monday, September 15, 2008

ஜெயம் கொண்டான் - திரை விமர்சனம் (நேற்றுதான் பார்த்தேன்)

ரீ மேக் இரண்டுவகை.
சொல்லிவிட்டு ரீ மேக் செய்வது, நம்மை அறியாமலேயே ரீ மேக் செய்வது.
அந்த வகையில் ஜெயம் கொண்டான் இரண்டாவது வகை. இயக்குனர் கண்ணனுக்கு இது முதல் படம். மணிரத்தினத்தின் சீடர். அதனால் அவர் தன்னை அறியாமலேயே அக்னி நட்சத்திரத்தை ரீ மேக் பண்ணியிருக்கிறார்.

ஆனால் ரீ மேக் என்று சொல்லி சாதாரணமாக புறம் தள்ள முடியாத ஸ்கிரீன் பிளே, பக்கா ஸ்கிரிப்ட்.  அப்பா இறந்தபின் வேலையை உதறிவிட்டு இலண்டனில் இருந்து இந்தியா திரும்புகிறார் மகன். வந்தவருக்கு தொடரந்து அதிர்ச்சிகள். முதல் அதிர்ச்சி, அப்பாவுக்கு இருக்கும் இரகசிய இரண்டாவது குடும்பம். இரண்டாவது அதிர்ச்சி, சொந்த வீட்டை  விற்று பிசினஸ் துவக்க  முடியாமல் முட்டுக்கட்டை போடும் (இரகசிய அம்மா வழி) தங்கச்சி.

சொத்துக்காக சண்டை போடும், அண்ணன் தங்கச்சி குடும்பக்  கதையில் அட்டகாசமாக கிரைம் மசாலா தடவியிருக்கிறார் இயக்குனர்.  இருவரும் போட்டி போட்டுக் கொண்டு வீட்டை விற்க முயலும்போது, இயல்பாக கிரிமினல் பார்டிகள் கதையில் வந்து இணைந்து கொள்கிறார்கள்.

படத்தில் உறவுகள் இருவருக்கும், அண்ணன் தங்கை எனத் தெரியாமலேயே முதல் சந்திப்பு நிகழ்கிறது. படத்தில் அப்பா என்பவரின் போட்டோ கூட காட்டப்படவில்லை. ஆனால் அதை இரசிகர்கள் உணர முடியாத அளவிற்கு வேகமாக கதை நகர்கிறது. காரணம் சுறுசுறுப்பான, சின்னச் சின்ன சுவாரசியங்கள் நிறைந்த சம்பவங்கள்.

படத்தில் முதல் பாதியில் மறைந்துவிட்டு, பிற்பாதியில் இணையும் விவேக்கைத் தவிர முக்கிய கதா பாத்திரங்கள் அனைவரும் ஏதோ ஒரு திருப்பத்திற்கு உதவுகிறார்கள். படத்தின் ஆரம்பம் மற்றும் இடையில் வரும் சின்னச் சின்ன ஷாட்டுகளை பிற்பாதியில் இணைக்கும்போது, இயக்குனர் லேசுப்பட்டவர் இல்லை என்பது புரிகிறது.  உதாரணமாக மதுரைக்கார தாதாவுக்கு வைப்பாட்டியாகும் பெண், ரெஜிஸ்டிரார் ஆபீசில் கார் கண்ணாடியை ஏற்றும் காட்சியும், அதைத் தொடர்ந்துவரும் சண்டைக்காட்சியில் கண்ணாடியை சுத்தி பதம் பார்ப்பதும்.  சுத்தி பதம்பார்ப்பது அந்தக் கண்ணாடியை அல்ல, அந்தப் பெண்ணை என்பது படம் பார்க்கும் அனைவருக்கும் வலியுடன் உரைக்கிறது. ஆக்ஸிடெண்டைக் காட்டாமலேயே அதை உணர வைத்துவிட்டார் இயக்குனர்.

படம் முழுக்க அடிக்கடி மழை வருவது மணிரத்னம் பிராண்ட், விட்டுக் கொடுக்காத பிடிவாதமான ஆனால் மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் கேரக்டர்களும் மணிரத்னம் ஸ்பெஷாலிட்டிதான்.  மெளனராகம் கார்த்திக், தளபதி அரவிந்த் சாமி மற்றும் குரு மாதவன்களின் இன்னொரு பதிப்பு தான் இந்தப் படத்தின் ஹீரோ வினய்.

சிட்டி வாசனை அடிக்கும் அரைகுறை வில்லேஜ் ஹீரோயின்கள் இந்தப் படத்திலும் உண்டு. ரோஜா மதுபாலா, பாம்பே மணிஷா கொய்ரலா மற்றும் குரு ஐஸ்வர்யாராய் போல இந்தப் படத்தில் பாவனா.

அதே போல கனமான ஆண்குரலுடைய பெண்கள், மணிரத்தினத்தின் படங்களில் தொடரந்து வருவார்கள். இந்தப் படத்திலும் 'பிளாட் ஆண்டி' 90 சதவிகதம் ஆண் குரலில்தான் பேசுகிறார். ஹீரோயின் பாவனாவும் கிட்டத்தட்ட ஆண்குரலில்தான் பேசுகிறார்.

அண்ணனுடன் மோதும் 'லேகா', படிச்ச தங்கச்சிக்கு ஏற்ற தோற்றம். சிம்பு ஏன் தனது படத்திலிருந்து கழற்றிவிட்டார் என்று என்னால் யூகிக்க முடிகிறது. லேகா இன்னும் பல படங்களில் தங்கச்சி அல்லது அக்காவாக வரலாம். அல்லது ஹீரோயின் கூட வரலாம். இந்தப்படத்தில் நல்ல பெர்மாமன்ஸ், ஆனாலும் கதாநாயகியாக பிரகாசிப்பது கடினம்.

விவேக் இல்லாத நேரங்களை, சந்தானம் நிரப்புகிறார். சந்தானத்திற்கு நம்பிக்கை கூடி தைரியம் ஜாஸ்தியாகிவிட்டது தெரிகிறது. சகட்டு மேனிக்கு கவுண்டமணி ஸ்டைலில் அனைவரையும் ஏசுகிறார், எட்டி உதைக்கிறார்.

நேற்று வந்த நடிகர்கள் எல்லாம் 'புரட்சி தளபதி' ,'இளைய தளபதி' என்று தங்களைத் தாங்களே ஒரு கட்டத்திற்குள் அடைத்துக் கொண்டுவிட்டார்கள்.  வினய் முயன்றால் அவர்களை சைலண்டாக முந்தலாம். அலுக்காத முகவெட்டும், மோல்டிங் ஆகக் கூடிய திறமையும் இருக்கிறது.

வித்யாசாகர் பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை இரண்டும் சுமார்தான்.

மணிரத்னம் அடுத்தடுத்த தளங்களுக்கு உலக அளவில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, அவருடைய சிஷ்யர்கள்தான் தமிழ்நாட்டில் அவருடைய இடத்தை நிரப்ப வேண்டும். அறிமுக இயக்குனர் கண்டிப்பாக சாதிப்பார்.

இந்தப் படத்தின் ஜெயம் கொண்டான், இயக்குனர்தான்.

Thursday, February 8, 2007

தாமிரபரணி - திரைவிமர்சனம


ஆக்சன் காரம் பூசிய பேமிலி ஐஸ்கிரீம்.
மனைவியை பிரிந்து வாழும் தூத்துக்குடி உப்பு வியாபாரி - பிரபு, அவருடைய தங்கை ரோகிணியின் மகன் - விஷால். தனது மாமா பிரபுவை தெய்வமாக நினைக்கிறார். பிரபுவிற்கு ஏதாவது என்றால் அரிவாளை தூக்கிக் கொண்டு கிளம்பிவிடுவார்.
ஒரு கட்டத்தில் பிரபு தனது மனைவியை பிரிந்ததற்க்கு காரணமே தான் எனத் தெரியும்போது அதிர்கிறார். அது வரையில் விளையாட்டுப் பிள்ளையாக திரியும் விஷால்(படத்தில் அவர் பெயர் கெட்டவன்), பொறுப்பான பையனாக மாறி தனது மாமா பிரபுவின் வாழ்க்கை சீராக போராடுகிறார். அப்போது அவரும் அவருடைய குடும்பமும் சந்திக்கும் பிரச்சனைகளும், போராட்டங்களும்தான் கதை.


விஷால் போன்ற வளர்ந்து வரும் கதாநாயகர்களுக்கு ஏற்ற கதை. கொஞ்சம் பெரிய நடிகரை போட்டிருந்தால் கூட தியேட்டர் காலியாகியிருக்கும். (உதாரணமாக விக்ரம் நடித்த மஜா, நல்ல படம் என்றாலும் இது போன்ற படம் விக்ரம் போன்ற பெரிய நடிகர்களுக்கு சறுக்கலைத் தரும்.) இயக்குனர் Hari கதாநாயகனாக விஷாலை தேர்வு செய்ததிலேயே பாதி ஜெயித்துவிட்டார்.

துணைக்கு பிரபு (பாந்தமான நடிப்பு, ரொம்ப நாளைக்கப்புறம் 'விக்' சரியாக செட் ஆகியிருக்கிறது) மற்றும் நதியா (நல்ல கதாபாத்திரம் - கோபக்கார இளம் அம்மாவாக கச்சிதமாக நடித்திருக்கிறார்). நாசர் வழக்கமான வில்லன்(பாவம் அவருடைய திறமைக்கு தீனி இல்லை)

நயனதாராவை ஞாபகப்படுத்தும் புதுமுக நாயகி. வேஸ்ட். விஷால் இதில் புதிதாக எதையும் செய்யவில்லை. இருந்தாலும் கதையோட்டம் காரணமாக அலுக்காமல் அவரை பார்க்க முடிகிறது.

அமரன் படத்தில் வரும் ஐசாலக்கடி மெட்டுதானுங்க பாடலையும், கற்பூர நாயகியே என்ற எல்.ஆர்.ஈஸ்வரியிலன் அம்மன் பாடலையும் யுவன் ஷங்கர் ராஜா ரீ மிக்ஸ் செய்திருக்கிறார். இப்படியே படத்துக்குப் படம் செய்தால் ரீ மிக்ஸ் ராஜா என்று பெயர் வாங்கிவிடுவார். புதுப்பேட்டை படத்திற்குப் பின் பெரிதாக எதிர்பார்த்தேன். ஆனால் யுவன் சரியான பழைய பேட்டையாகிக் கொண்டிருக்கிறார்.

இயக்குனர் Hari படத்துக்குப் படம் புதிய களம் தேர்ந்தெடுக்கிறார். இதில் தூத்துக்குடியின் உப்பளம். எமோஷன்களை கையாளும்போது சரேலென அடுத்தக் காட்சிகளுக்கு தாவிவிடுகிறார். ஆக்சன்களை கையாளும்போது பரபரவென நீட்டி முழக்குகிறார். படத்தில் அடிக்கடி அரிவாள் வருவதால், ஆக்ஷன் படமோ எனத் தோன்றுகிறது. ஆனால் பிண்ணனியில் உள்ள குடும்பக் கதைதான் படத்தை தாங்கிப் பிடிக்கிறது. இதை இயக்குனர் சரியாக பேலன்ஸ் செய்துள்ளார்.

கொஞ்சம் பாசம், கொஞ்சம் இரத்தம் இரண்டும் கலந்த குடும்பக் கலவை - தாமிரபரணி. எல்லோரும் பாருங்கள் என்று சிபாரிசு செய்ய மனமில்லை. போகாதீர்கள் என்று தடுக்கவும் மனமில்லை. அதுதான் தாமிரபரணி.

Monday, November 20, 2006

வரலாறு - திரை விமர்சனம்


தீபாவளிக்கு வெளி வந்த படங்களில் (ஈ தவிர) எல்லாமே டப்பா படங்கள்தான். இருப்பதில் நல்ல டப்பா வரலாறு டப்பா. டைட்டிலில் வரலாறு - History of Godfather என்று போடுகிறார்கள். அப்படி போட்டு பெருமைப் பட்டுக்கொள்கிற அளவுக்கு யாருடைய Historyயும் படத்தில் இல்லை.


அஜீத் - கே.எஸ்.ரவிகுமார் - ஏ.ஆர். ரகுமான் ஆகிய மூவரும் இருந்தும் டைட்டிலில் இருக்கும் பிரமாண்டம் படத்தில் இல்லை. காட்பாதர் என்ற பெயருக்கு ஒரு மவுசும் கம்பீரமும் உண்டு. அதுவும் படத்தில் இல்லை. ஆனாலும் படம் தப்பித்துக்கொண்டு கலெக்ஷன் பண்ணுகிறது. காரணம் ஒன்றே ஒன்றுதான். காட்பாதர் என்று வர்ணிக்கப்படும் ஒரு வயதான அப்பா கேரக்டர். அந்த கேரக்டரில் இருக்கும் ஒரு சின்ன சஸ்பென்ஸ் படத்தின் கலெக்ஷனுக்கு காரணமாகிவிட்டது. கே.எஸ்.ரவிகுமார் சிறந்த கமெர்ஷியல் டைரக்டராக அறியப்படுவதற்கு இந்த சஸ்பென்ஸ் நல்ல உதாரணம்.

படத்தில் மூன்று வேடங்களில் அஜீத் நடிக்கிறார். ஆனால் முப்பது வேடங்களில் நடித்தது போல பிரமை. காரணம் காட்சிக்கு காட்சி அஜீத் வௌ;வேறு தோற்றத்தில் இருக்கிறார். ஓரு காட்சியில் மகா குண்டு, அடுத்த காட்சியிலேயே மகா ஒல்லி, திடீனெ குடுமி என விதம்விதமாக வருகிறார். ஆனாலும் அவருடைய நல்ல நேரம், அஜீத் தப்பித்துவிட்டார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக தயாரிப்பில் இருந்து அதற்கப்புறம் ஒரு வருடம் டப்பாவில் காத்திருந்து, பல சிக்கல்களை மீறி ஒரு படம் வெற்றிப்படமாகியிருக்கிறது. அந்த வகையில் இது ஒரு சாதனைதான்.


கே.எஸ்.ரவிகுமார் சிறந்த கமர்ஷியல் திரைக்கதை மன்னன். இந்தப் படத்தில் அவருடைய திறமை முழுக்க வெளிவரவில்லை. இருந்தாலும் அவருடைய டச் படத்தை காப்பாற்றியிருக்கிறது. பரதம் பயிலும் ஆண்கள் பெரும்பாலும் பெண்மை மிளிர நடப்பார்கள், சிரிப்பார்கள். அதுபோல பெண்மை மிளிரும் ஒரு கேரக்டரை அஜீத் அருமையாகப் பண்ணியிருக்கிறார். ஏ.ஆர்.இரகுமான் இசையில் "தீயில் விழுந்த தேனா" பாடல் படத்தின் கடைசி நேர எமோஷனுக்கு அபாரமாக உதவியிருக்கிறது. கர்நாடிக் வாசனையுடன் "இன்னிசை அளபடையே" பாடலும் நல்ல பாடல்தான். மற்ற பாடல்கள் சுமார் ரகம்;. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பாடல்தான் என்றாலும், இரண்டு வருடங்கள் தாமதமாகி வெளியாகி இருப்பதால் நச்சென்று இல்லை.

இந்தப் படம் வெளியாகி தன்னை தக்க வைக்கும் என்று அஜீத்தே எதிர்பார்த்திருக்க மாட்டார். எது ஜெயிக்கும், ஜெயித்தாலும் எந்த அளவில் ஜெயிக்கும் என்று சினிமாவில் சொல்ல முடியாது. வரலாறு திரைப்படம் அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.