Tuesday, December 9, 2008

மகேஷ் சரண்யா மற்றும் ஜவ்வு மிட்டாய் - திரை விமர்சனம்

55 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி சூரியன் தியேட்டரில், திரையிலிருந்து நான்காவது வரிசையில் உட்கார்ந்து படம் பார்த்தால் நல்ல படம் கூட கெட்ட படமாகிவிடும்.

"நல்லாத்தான்யா யோசிச்சிருக்கான், ஆனா எடுக்கத் தெரியல. "

திரையில் மகேஷிம் சரண்யாவும் தோன்றும்போது, மற்றும் சிலராக (அடுத்த சீட்டில்) வாய்ப்பு கிடைக்காத அஸிஸ்டெண்ட் டைரக்டர்கள் இருந்தால் . . அவர்களின் தொடர் கமெண்டுகள்(கடுப்புகள்), ஒரு சில நல்ல சீன்களையும் மொக்கை சீன்களாக்கிவிடும்.

பி. ரவி எனப்படும், லிங்குசாமியின் சிஷ்யருக்கு இது முதல் படம். படித்து முடித்த பின் வாத்தியாராகி தவிக்கும் பாதி மாணவன் + மீதி லெக்சரர் போல தடுமாறியிருக்கிறார். படம் முழுக்க மகேஷிம், சரண்யாவும் வருகிறார்கள். கூடவே திறமையும், அனுபவமின்மை வருகின்றன.

யாராவது ஐஸ் கிரீம் சாப்பிட ஆரம்பித்தால் சாப்பிட்டு முடிக்கும் வரை படு நிதானமாக டயலாக் வைக்கிறார். வீட்டுக்கு யாராவது வந்தால், தெரு முனையில் கார் நுழைவதில் ஆரம்பித்து, வந்து, நின்று, கார் கதவை திறந்து, மூடி, கேட்டை திறந்து, சிரித்து, கை கூப்பி, வணக்கம், வாங்க என்று சொல்வதற்குள் . . .ஸ்ஸ்ஸ்...அப்பாடா! (டேய் ஏன்டா இந்தப்படத்துக்கு கூட்டிட்டு வந்தே? என்று எட்டாவது வரிசை ஆளை புலம்ப வைத்துவிடுகிறார்)

ஒரு காட்சி முடிந்தவுடன், அடுத்த காட்சிக்கு சட்டென போக மாட்டேன்கிறார். கோனார் நோட்ஸ் போல 'என்ன ஆச்சு தெரியுமா?' என்று இன்னொரு கேரக்டரை வைத்து முந்தைய காட்சியை ஒரு வரி விடாமல் விளக்குகிறார். அதுவும் பத்தாது என்று வெறும் லிப் மூவ்மெண்ட் போட்டு நமத்துப்போன பிண்ணனி இசையால் சில நிமிடங்களை கடத்துகிறார் (இன்னாடா டப்பிங் பண்ண காசு பத்தலையா? - பத்தாவது வரிசைக் குரல்)

ஆனாலும் லிங்குசாமியிடம் ரவி கிளாஸ் அட்டெண்ட் செய்திருக்கிறார் என்பதற்கு சில முத்திரைகள் படத்திலிருக்கின்றன. சரண்யாவின் ஓபனிங் சாங், காதலைத் தெரிவிக்கும் ரிங்டோனாக வரும்போது (மச்சான்! என்னடா திடீர்னு பின்றான் - முன் வரிசை) தியேட்டரில் முதன் முதலாக கை தட்டல். அப்பா நான் டிரெயினை மிஸ் பண்ணிட்டேன் என்ற சாதாரண வசனம், கிளைமாக்ஸில் ஒரு திருப்பு முனை வசனமாக வரும்போது இயக்குனர் முதன் முறையாக கடைசி 10 நிமிடங்களில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார். (பரவால்லடா, ஏதோ இருக்கு - அடுத்த ஸீட்),

சக்திக்கு இது இரண்டாவது படம். ஓகே!ஜோதிகாவை காப்பியடிக்கும் சந்தியா கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். விட்டால் அசத்தப் போவது யாரு குழுவில் ஒருவராக்கிவிடுவார்கள்! சரண்யாவுக்கு முகத்தில் சகல எக்ஸ்பிரஷன்களும் நன்றாக வருகிறது. ஆனால் இதே போன்ற பாத்திரத்தில் தொடர்ந்து நடித்தால், தமிழ் சினிமாவின் நிரந்தர தங்கச்சியாக மாறிவிடக் கூடிய அபாயம் இருக்கிறது.

வித்யா சாகர் வரவர போரடிக்கிறார். படம் முழுக்க டைட்டானிக் பாதிப்பு!

ஏற்கனவே மலையாளத்தில் மோகன்லால் நடித்து, தமிழில் (விஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையில்) சத்யராஜ் நடித்த ஒரு சாதாரண கதைக்கு, நல்ல திரைக்கதை அமைத்துவிட்டு, படு சொதப்பல்களான ஜவ்வு மிட்டாய் காட்சிகளால், இயக்குனர் நம்மை படம் முழுக்க கடுப்பேற்றுகிறார்.

கிளைமாக்ஸ் ஒரு எதிர்பாராத சஸ்பென்ஸ்!

ஆனால் அந்த ஒரு சில காட்சிகளுக்காக 'மகேஷ், சரண்யா மற்றும் பலரில் ஒருவனாக' மாட்டிக் கொண்டு முழிக்க நீங்கள் தயார் என்றால், இந்தப் படத்திற்குப் போகலாம்.
Post a Comment