பெண்கள் குடிப்பது தவறு என்பது அவர்களுடைய வாதம். பாராட்டுக்கள், அவர்களுடைய எண்ணம், நல்ல எண்ணம்தான். ஆனால் அவர்கள் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்திய விதம் காட்டுமிராண்டித்தனம். குறிப்பிட்ட மது விடுதிக்குள் நுழைந்து அங்கிருந்த குடிமகள்களையும், தடுக்க வந்த குடிமகன்களையும் கன்னாபின்னாவென்று தாக்கி அத்து மீறினார்கள்.
வழக்கம்போல குடியரசு தினத்தன்று கூட தவறாமல் குடிக்க வந்த குடிமகள்களுக்கு நல்ல தங்காள் சர்டிபிகேட் கொடுத்துவிட்டு, குரங்குகளைப்போல அட்டகாசம் செய்த ராம் சேனா குண்டர்களை மட்டும் வடநாட்டு டெலிவிஷன்கள் சிவப்பு வட்டம் போட்டு, Moral Policing செய்ய யார் இவர்கள் என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கின்றன.
கூடவே மகளிர் ஆணையம், அப்புறம் ஏதேதோ உரிமை மீறல் ஆணையங்கள் எல்லாம் அந்த ராம் சேனா குரங்குளை கைது செய்ய குரல் கொடுக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தன. கர்நாடகத்தில் நடப்பது காவிக் கட்சியின் ஆட்சி. தவறு செய்திருப்பதும் காவிக் கட்சியின் அடங்காப் பிடாரி தோஸ்துதான். அதனால் முதலில் தயங்கிய பி.ஜே.பி அரசு ஒரு வழியாக இன்று ராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக்கை கைது செய்திருக்கிறது.
யார் இந்த ராம் சேனா?
ஒக்கனேக்கல் பிரச்சனை சூடுபிடித்த போது, பெங்களுருவில் நமது தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் வீட்டில் கல்லெறிந்தவர்கள் இவர்கள் தான். எம் எஃப் ஹீசைன் சித்திரம் தொடர்பாக கலவரத்தில் ஈடுபட்டவர்கள். கடந்த வருடம் ஹீப்ளியில் நடந்த ஒரு (வெடிக்காத) குண்டுவீச்சில் சந்தேகிக்கப்படுபவர்கள். சில சர்ச்சுகளை தாக்கி கிறித்துவ மதத்தை சேர்ந்தவர்களுக்கு கிலி ஏற்படுத்தியவர்கள். மெலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடைய 'இளம் பெண் துறவி' சாத்வி பிராக்யா தாக்கூருக்கு ஆதரவாக கொடி பிடித்தவர்கள்.
யார் இந்த பிரமோத் முத்தலிக்?
முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் மற்றும் முன்னாள் பஜ்ரங்தள் தலைவர். கர்நாடக சிவசேனையின் தலைவராகவும் சில காலங்கள் பதவியில் இருந்திருக்கிறார்.
ஆனால் வீட்டுக்கு அடங்காத பிள்ளை போல பிரமோத் முத்தலிக் அடிக்கடி தலைகளிடத்தில் முறுக்கிக் கொள்வார். 'சமுதாயத்தைக் காக்கவும், தவறு நடக்காமல் தடுக்கவும்' அவர் ஆரம்பித்துள்ள இந்த ராம் சேனாவுக்கு காவி ஆதரவாளர்களின் மறைமுக ஆசி உண்டு.
இவருடைய இந்த காவிப் பிண்ணனியால்தான் பி.ஜே.பி அரசு ரொம்ப யோசித்து, தயங்கி அவரை கைது செய்திருக்கிறது.
"அந்த பெண்களின் மீதான இந்த தாக்குதலை யார் செய்திருந்தாலும் அவர்களை நான் பாராட்டுகிறேன். யாரும் இதை ஊதி பெரிதாக்க வேண்டாம். இது மிகச் சிறிய விஷயம்" என்கிற அவருடைய அறிக்கையே அவர் எப்படிப் பட்டவர் என்பதற்கு சான்று.
தற்போது கூட அவருடைய கைது, குடிமகள்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடையது அல்லவாம். ஏற்கனவே தாவனகிரியில் சமூக அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக அவர் மேல் ஒரு வழக்கு உள்ளதாம். அந்த வழக்கில்தான் அவர் கைது செய்யப் பட்டிருக்கிறாராம்.
எது எப்படியோ? ராம சேனாவைச் சேர்ந்தவர்கள் குரங்குகளைப் போல நடந்து கொண்டார்கள் என்பது மறுக்க முடியாது.
அதே சமயம் குடியரசு தினத்தன்று கூட பகலிலேயே குடிக்க கிளம்பிவிட்ட அந்த குடிமகள்களை மன்னிக்க முடியாது.
14 comments:
அவர்கள் பகலில் குடித்தால் என்ன, இரவில் குடித்தாலென்ன? ஜனநாயக நாட்டில் தனிமனித உரிமை இல்லையா?
அவர்களை மன்னிக்க முடியாதா? உங்களிடம் முதலில் யார் மன்னிப்பு கேட்டது?!?
ஜனனாயக நாட்டில் சட்டத்தை கையிலெடுக்க காவல்துறையைத்தவிர யாருக்கும் அதிகாரம் இல்லை.”காவிக்கூட்டம் இதுபோல் செயல்படுவதில் “தலிபானுக்கு சளைத்தவர்கள்” அல்ல என்பது தெளிவாகிறது.
எவ்வளவோ பிரச்சனைகள் நாட்டுல நடக்குது அத தட்டி கேட்க வக்கில்லாத ராமர் துதி பாடும் இவ் ஆண்மை அற்ற குரங்குகளை அடித்தே கொள்ள வேண்டும்...
எவ்வளவோ பிரச்சனைகள் நாட்டுல நடக்குது அத தட்டி கேட்க வக்கில்லாத ராமர் துதி பாடும் இவ் ஆண்மை அற்ற குரங்குகளை அடித்தே கொள்ள வேண்டும்...
திரு. ஜோ,
குடிப்பது என்பதை தனிமனித உரிமை, பெண் சுதந்திரம், மகளிர் முன்னேற்றம், தைரியம், சும்மா டைம் பாஸ் என்று எத்தனையோ விதங்களில் சொல்லலாம்.
அதே போல ஊதாரித்தனம், பொறுப்பின்மை, போதைக்கு அடிமை என்றும் சொல்லலாம்.
குடிப்பது அவர்களுடைய தனிமனித உரிமைதான். ஆனால் குடித்துவிட்டு கூத்தடிப்பது மட்டுமே தனிமனித உரிமை அல்ல.
திரு.சோமசுந்தரம்
ஜனனாயக நாட்டில் சட்டத்தை கையிலெடுக்க காவல்துறைக்கே அதிகாரம் கிடையாது. சட்டம் என்பது நியாயங்களைக் காக்க.
ராம் சேனா தலிபான்களைப் போல நடந்துகொள்வது காட்டுமிராண்டித்தனம். அதே வேளையில் குடித்துவிட்டு சமூகத்தின் மேல் எந்த அக்கறையும் இன்றி அரை நிர்வாணமாக திரிவதும் காட்டுமிராண்டித்தனம்தான்.
பிரஷாந்தன்,
நாட்டில் தினம் தினம் முளைக்கும் பிரச்சனைகளுக்கு, இது போல பொறுப்பற்று போதை அடிமைகளாய் திரியும் இளைஞர், இளைஞிகளும் காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது.
பொம்பளைகளுக்கு குடிக்கிறது என்ன உரிமையா ? யார் குடிச்சாலும் கெடப்போறது குடும்ப மானமும் , நாட்டின் மானமும்.
ஆகவே உதைத்தது தப்பில்லை .
மேலும் அ ந்த புள்ளைகளோட டிரஸ்ஸை பாருங்க , எப்படி இருக்குதுன்னு !
வாமு கோமு,
அந்தப் பெண்களின் பொறுப்பற்ற தன்மை, ராம சேனாக்களின் 'பொறுப்பு' எனப் போற்றப்படும் அராஜகம், இரண்டுமே கண்டனத்திற்குரியவை.
நல்ல பதிவு
இதுவே என்னுடைய கருத்தும்.
இந்த பிரச்சிணை கலாசார ரீதியானது மட்டுமல்ல. பொருளாதார, சமூக ரீதியானதும் தான். இது பற்றி என்னுடைய பதிவு வெகு விரைவில்
வாழ்த்துக்கள் நண்பரே!!
நீங்கள் சொல்வது மிகச் சரி திரு.வீரமணி.
இந்தப் பிரச்சனை பொருளாதார ரீதியாக சமூகத்தை பாதிக்கின்ற ஒன்று.
விரைவில் உங்கள் பதிவை எதிர்பார்க்கின்றேன்.
//
குடியரசு தினத்தன்று கூட பகலிலேயே குடிக்க கிளம்பிவிட்ட அந்த குடிமகள்கள்
//
இந்தியா ஒளிர்கிறது.
சிறு திருத்தம் இது நடந்தது ஜனவரி 24 குடியரசுதினத்தன்று அல்ல
:)))
பிப் 14 அடுத்த ஆக்க்ஷன் ப்ளான்க்கு ரெடியாகீட்டாங்களாமே ராம சேனா
:))))
Post a Comment