Wednesday, November 25, 2009

கோடம்பாக்கமும் ரேடியோவும் !!!எண்பதுகளில் ஒலித்த விவிதபாரதியின் நேயர்விருப்பம் இப்போதும் ஒலிக்கிறதா? தெரியவில்லை. ஆனால் என் காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது. இப்போது ஒரு பாடல் டாப் 10ல் இருந்தால் அந்தப் பாடல் ஹிட். அப்போது வேறு அளவுகோல். பாடலை விரும்பிக்கேட்டவர்களின் பெயர்களை வாசிக்க ஆரம்பித்தால்,  சிலநேரம் இரண்டு அல்லது  மூன்று நிமிடங்களுக்கு நீளும். அப்படி நீண்ண்ண்ண்ட லிஸ்ட் வாசித்தால் அந்தப் பாட்டு சூப்பர் ஹிட் என்று அர்த்தம்.

அப்போதெல்லாம் பொதுவாக படங்கள் வெளியான பின்புதான் பாடல்கள் ரேடியோவிற்கு வரும். தற்போது உல்டா. அன்றைய நேயர் விருப்பம், தேன்கிண்ணங்களை தவற விட்டால் அதற்கப்புறம் சாகுபடிகள், சமையல்கள், குழந்தைகள், செய்திகள் என்று அனைவருக்கும் அரை மணி ஒதுக்கப்பட்டு மறுநாள் காலைதான் மீண்டும் திரைகானம்.

இப்போது மாதிரி சந்துக்கு சந்து பொந்துக்கு பொந்து அப்போதெல்லாம் ரேடியோ கிடையாது. மர்ஃபி குழந்தை பொம்மை போட்ட ரேடியோவை ஊரிலேயே பெரிய வஸ்தாதுதான் வைத்திருப்பார். உலக உருண்டை வடியில் டிரான்ஸிஸ்டர் வைத்து ராஜேஷ் கண்ணா பாட்டு கேட்டார் என்பது அப்போதைய பரபரப்பு (பணக்காரச்) செய்தி. எனவே ரேடியோ கேட்பதே ஒரு நாடகம் பார்ப்பது போல கூட்டமாகத்தான் நடக்கும். அனைவரும் ரேடியோவைச் சுற்றி சமையல், சாப்பாடு, படிப்பு, தினத்தந்தி என்று எல்லாமே டைம் டேபிள் போட்டு நடக்கும். ஞாயிற்றுக் கிழமை ஒலிச்சித்திரம் கேட்பதற்கு ஒரு சின்ன ரேடியோவைச் சுற்றி குடித்தனக்காரர்கள் (30 பேர்) அனைவரும் உட்கார்ந்திருப்பார்கள்.

வீட்டில் ரேடியோ இல்லாதவர்கள் கார்பரேஷன் பார்க்கில் பாட்டு கேட்பார்கள். காசேதான் கடவுளடா படத்தில் இது போல ஒரு காட்சியை பார்க்கலாம். கையில் டிரான்சிஸ்டருடன் ஒருவர் நடந்தால் அது ஸ்டேட்டஸ் சிம்பல். பார்க்கையும் தவறவிட்டால், கல்யாணம், காது குத்து, மஞ்சள் நீராட்டு மற்றும் அரசியல் விழாக்களில் ரெக்கார்டு கேட்கலாம். ரெக்கார்டு போடுபவரின் பந்தா, இந்தக் கால வார்டு கவுன்சிலரை விட படு அலப்பரையாக இருக்கும்.

தம் மாரே தம், நேத்து ராத்திரி யம்மா, வாங்கோண்ணா, எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம், பச்சைக் கிளி முத்துச் சரம், காயா பழமா கொஞ்சம் தொட்டு பார்க்கட்டுமா, அடி என்னடி ராக்கம்மா . . . என்று பல்வேறு பாடல்களை சாகா வரம் பெற்ற பாடல்களாக்கியவர்கள் அந்த ரெக்கார்டு போட்ட பிஸ்தாக்களும், (ரேடியோ)வண்ணச் சுடரில் ஒலிக்க வைத்த அம்மணிகளும்தான்.

ஜி.டி.நாயுடுக்களின் மலிவு விலை கண்டுபிடிப்புகள் வந்தவுடன், ரேடியோ நரிக்குறவர்களின் கைக்குப்போய், வீட்டு ரேடியோக்களை டேப் ரெக்கார்டர்கள் ஓரம் கட்டின. சிங்கப்பூர் போய்விட்டு, லுங்கியும், டேப்ரெக்கார்டரும் வாங்காமல் வந்த தமிழ்நாட்டு டூரிஸ்டுகள் யாருமே கிடையாது. அதற்கப்புறம்தான் ஆடியோ கடைகள் வந்தன. ரெக்கார்டு போடுபவர்களை கேசட்டில் பாடல் பதிவு செய்பவர்கள் ஓவர் டேக் செய்தார்கள். பாடல்களின் லிஸ்டுடன் வரும் தாவணி பெண்களை அவர்கள் சைட் அடிக்கும் ஸ்டைல், தனியான ரொமான்ஸ் கதைகள். இளையராஜா இளைய நிலாவாக பொழிந்து இளைஞர்களை காதலர்களாக மாற்றிய காலம் அது. ப்ரியாவில் ஸ்டீரியோ ரெக்கார்டிங்கை ஆரம்பித்து வைத்தார் இளைஞர் ராஜா.


டேப் ரெக்கார்டுகள் எல்.பி ரெக்கார்டுகளை உடைத்து நொறுக்கிய அந்தக் காலக்கட்டத்தில், டீக்கடைகள் கூட பாட்டுக் கடைகளாக மாறின. விழித்துக் கொண்ட ரேடியோவும், டேப்ரெக்கார்டருடன் போட்டியிட்டு திரை இசைக்கு அதிக நேரத்தை ஒதுக்கியது.  வைரமுத்துவும், பாரதிராஜாவும் இளையராஜாவுடன் கைகோர்த்து நடிகர்களைத் தாண்டி பிரபலமானார்கள். இளையராஜாவுக்காகவே கதைகள் எழுதப்பட்டன.

மணிரத்தினத்தின் வருகைக்குப் பின், திரை இசையில் ஒரு புதிய மின்சாரம் பாய்ந்தது. ஆனால் திடீரென கரகாட்டக்காரன் என்ற ஜாக்பாட் ஹிட்டுக்கப்புறம், ராஜா ராசாவாக மாறிப்போனார். மைக்கேல் ஜாக்சன், ரஸ்புதின், ABBA, ஓசிபிசா என்று மேற்கத்திய இசை கடல்கடந்து இந்தியாவைத் தொட்ட நேரம். ராமராஜன், ராஜ்கிரண் படையெடுப்பில் திடீரென்று ராஜா டிராக் மாறினார். இளைஞர்கள் திடீரென தமக்கான இசை தமிழில் இல்லையென்று முடிவுகட்டி, ஆங்கிலப் பாடல்களில் கரையத் துவங்கினார்கள். (வீடீயோக்களின் ஆதிக்கம் துவங்கிய VHS காலம் அது). ரேடியோக்களில் ஆங்கிலப் பாடல்களுக்காக தனி நிகழ்ச்சிகள் அதிகமானதும் இந்தக் காலக் கட்டம்தான்.


அப்போதுதான் சின்னச் சின்ன ஆசை என்று ஒரு பாடல் வந்தது. ஏ.ஆர்.இரகுமான் என்ற சின்னப் பையன் வந்தான். இந்திய திரை இசையே அதற்கப்புறம் மாறிவிட்டது. ரேடியோக்களும், டேப் ரெக்கார்டர்களும் புத்துயிர் பெற்றன. சாடிலைட் சானல்கள் வந்தன. அவற்றின் துணையுடன் இரகுமானின் இசை கண்டம் விட்டு கண்டம் தாண்டியது. உலகத் தரம் என்ற தேவையை இரகுமான் ஏற்படுத்தியவுடன் பாடல்கள் கேட்பவர்கள் உட்பட அனைவரும் தரமான ஸ்டீரியோ செட்டுகளுக்கு மாறினார்கள்.


சன் டிவியின் ஆக்கிரமிப்பு துவங்கிய இந்தக் காலத்தில் வீட்டுக்குள் சினிமா என்கிற கான்செப்ட் 24 மணி நேர நான் ஸ்டாப் சினிமா என்பது தமிழர்களுக்கு பழகிவிட்டது. இதற்கு வளைந்து கொடுக்காத தூர்தர்ஷனும், ஆல் இந்தியா ரேடியோவும் பழைய பஞ்சாங்கமாக நினைக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன. ஒரே காரணம் 24 மணி நேர சினிமா.

டிவியிலும் ஒரு சிக்கல் எழுந்தது. வெரைட்டியின் தேவை அதிகரித்ததால் சினிமாவுக்கென்றும் இசைக்கென்றும் தனித்தனி சேனல்கள் வந்து விட்டன. ஆனாலும் நடக்கும்போதும், பயணிக்கும்போதும் பாட்டு கேட்க முடியவில்லை. உதயமானது FM. அரசு FM வழக்கம் போல தூங்கி வழிய சூரியன் FM வெறும் சினிமா பாடல்களை மட்டும் வழிய விட்டே மக்களை வசீகரித்தது. போட்டிக்கு மிர்சி, ஹலோ, ஆஹா என்று கிட்டத்தட்ட இன்று 10 FM சேனல்கள் இருக்கின்றன.

இன்று FM ரேடியோ என்பது ஒரு அட்வர்டைசிங் டூல். திரும்பும் திசையெல்லாம், நினைத்த நேரத்திலெல்லாம் பாடல்களை ஒலிக்கவிட்டு, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காதில் திணிக்கின்றன. திணிப்பது நடைபெறுவது தெரியாமலேயே நாம் அதை உள் வாங்குகிறோம். காரில், பஸ்ஸில், நடந்து என்று எப்படிச் சென்றாலும் ஏதோ ஒரு வழியாக FM நம் கூடவே வருகிறது.


சினிமாவால் FMஆ? FMஆல் சினிமாவா என்று பட்டி மன்றம் நடத்தலாம். அந்த அளவுக்கு இரண்டும பின்னிப் பிணைந்து விட்டன.

இன்று ipod(வாக் மேனின் புதுவடிவம்), Podcast மற்றும் YouTube ஆகியவை நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும், பகிர்ந்து கொள்ளும் ஆடியோ வீடியோ சானல்களாக பரிணமித்திருக்கின்றன்.

எதிர்காலத்தில் சினிமாவும் மாறும், சினிமா இசையும் மாறும், அவை நம்மை வந்து அடையும் முறையும் மாறும். அது எப்படி இருக்கும் என்பதை காலம்தான் கணிக்கும்.

Interactive Radio with Virtual DJ mix வரும் என்று நான் நினைக்கிறேன். இப்போது நாம் போனில் கேட்கிற பாடலை வர்ணனையாளர் கொஞ்சிக் கொண்டே ஒளி ஒலி பரப்புகிறார். எதிர்காலத்தில் நாமும் வர்ணனையாளரும் இணைந்து பிராட்கேஸ்ட் செய்யும் இரு வழி ரேடியோ வரும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.


நான் தற்போது அவர் என்ற படத்தை இயக்கும் பணியில் இருக்கிறேன். பாடல்களை ஹிட்டாக்க FMஐத்தான் நம்பியிருக்கிறேன்.

9 comments:

கடைக்குட்டி said...

தங்கள் படப்பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

கடைக்குட்டி said...

இந்தப் பதிவே ஒரு சினிமா பார்த்தது போன்று இருந்தது..

ஏன்னா நீங்க சொல்ற ரஹ்மான் வந்த காலமெல்லாம் நினைவிலில்லை...

:-)

அப்பாவி முரு said...

அருமையான தொகுப்பு. கால மாற்றத்தை சரியான அடையாளத்துடன் விளக்கியது அருமை.


இந்த செல்போனும், எம்.பி.3 பிளேயரின் வளர்ச்சி ஆச்சரியமூட்டும் விதத்திலேயே உள்ளது.

நேற்று ஒரு புது மாடல், ஒரு புது அப்பிளிகேசனோடு வாங்கி வந்தால் இன்னைக்கு அடுத்த புதுமாடல், புது அப்ளிகேசனோடு வந்து நம்முடையதை பழசாக்கிவிடுது.

:)

Kuki said...

நல்ல கொசுவத்தி!. நன்றி.

antony said...

அருமையான பதிவு.. எனது சிறு வயதில் பக்கத்து வீட்டு Fm இல் "இன்று ஒரு தகவல்" கேட்டுச் செல்லும் பழைய பழக்கம் நினைவுக்கு வருகிறது!!!!!!

antony said...

அருமையான பதிவு.. எனது சிறு வயதில் பக்கத்து வீட்டு Fm இல் "இன்று ஒரு தகவல்" கேட்டுச் செல்லும் பழைய பழக்கம் நினைவுக்கு வருகிறது!!!!!!

கவிதை(கள்) said...

அறிவியல் வளர்ச்சியின் அற்புதங்கள் இவையெல்லாம்

வாழ்த்துக்கள்

விஜய்

thenammailakshmanan said...

munnadiyee solitingana naanga fm il thirumba thirumba unga padalkalaththaan keetu hit aakiduvom la

so inform us before audio release

படுக்காளி said...

பாடல் கேட்கும் விதம், இசை ரசனை, காலம் அதை மாற்றிய விதம் என பழைய நினைவுகளை கிண்டி விட்ட நல்ல பதிவு.

ஒரு பாடல் பிரபலம் அந்த திரைப்படத்தின் பிராண்டையே தூக்கி நிறுத்த வில்லையா.

நிச்சயம் ஜெயிப்பீர்கள். ’அவரு’க்கு அட்வான்ஸ் புக்கிங் செய்ய கீயூவில் நிற்க நான் தயாராகி விட்டேன்.

எங்களுக்கு இருக்கும் நம்பிக்கை எல்லோருக்கும் வரட்டும்.