Thursday, July 19, 2012

அனுராதா நிகேத் - முத்திரைகள்!

அனுராதா நிகேத்
கல்லூரி காலங்களில் எனக்கு வாய்த்த ஜோல்னா பை ஜிப்பா நண்பர்கள், எக்மோர் மியூசியம் தியேட்டரில் அற்புதமான கூட்டமே இல்லாத நாடகங்களுக்கு அழைத்துச் சென்றுவிட்டு பை டூ டீயில் பாதல்சர்க்காரின் நாடக உத்திகளை கலந்து தருவார்கள்.

பிற்பாடு அது கொஞ்சம் அலுத்து, காதிபவன் காட்டன் ஜிப்பாவுடன் Cobol, Pascal என சிலிக்கன் உலகத்தில் நெட்வொர்கிங், ஆப்ஜக்ட் ஓரியண்டட் என குழப்பமாக பைனரித்துக்கொண்டிருந்தேன். மீண்டும் அதே பை டூ டீயுடன், லலித்கலா அகாடமியில் அமானுஷ்ய நீலம் மற்றும் சிவப்பு வர்ணங்களுக்கு இடையே சர்ரியல் பற்றி எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். அப்புறம் அதிலிருந்து நான் வெளிவர பல வருடங்களாயிற்று. ஆனால் இன்னமும் ஆழ்மனத்தில் டாலியின் நழுவும் காலத்தைக் குறிக்கும் கடிகார ஓவியங்கள், டிக் டிக் என ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன.

அதனால்தானோ என்னவோ, அனுராதா நிகேத்தின் Expressions and Impressions ஓவியகண்காட்சிக்கு சென்றிருந்தபோது அந்தசர்ரியல் கடிகார சத்தம் சற்று அதிகமாகவே எனக்கு கேட்க ஆரம்பித்தது.

நான் அனுவின் ஓவியக் கண்காட்சிக்கு செல்வது, இது இரண்டாம் முறை. இந்த முறை அடர்த்தியான நீலம் மற்றும் சிவப்பு வண்ணக் கலவைகளில் தியானங்களின் போது பின்பற்றப்படும் முத்திரைகளை ஓவியமாக்கி வைத்திருந்தார். நீர், நிலம், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களையும் குறிப்பதுதான் நமது கைவிரல்கள். அவற்றை குறிப்பிட்ட விதிகளின்படி நீட்டி மடக்கி ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைவதன் மூலம் நமது உடலையும் மனதையும் கட்டுப்படுத்த முடியும் என்று சில இஸங்கள் சொல்கின்றன. சமகால காசு பார்க்கும் கார்ப்பரேட் சாமியானந்தாக்களும் இதை்தான் சொல்கிறார்கள்.

எனக்கு ஒரே ஆச்சரியம், அனு அந்த முத்திரைகளை ஓவியங்களாக வடித்திருந்ததுதான். இந்த தீமில் ஒரு ஓவியக் கண்காட்சியை தற்போதுதான் முதன் முறையாகப் பார்க்கிறேன். அவர் என்ன நினைத்து வரைந்தாரோ தெரியாது. ஆனால் Kaleeswara Mudra, Shank Mudra, Chin Mudra, Yondi Mudra மற்றும் Shakti Mudra என பெயரிடப்பட்ட ஓவியங்களைப் பார்த்ததும் நான் சர்ரியல் உலகத்துக்குள் நுழைந்துவிட்டேன் என்பது மட்டும் உண்மை.


அவர் அளித்த கையேடு, ஓவியங்களை அழகாக விவரித்தது. நான் விளக்கட்டுமா என்ற புன்னகையுடன் அவர் சில முத்திரைகளை செய்தும் காட்டினார். நானும் சக்தி முத்திராவை அவர் முன்னிலையிலேயே முயற்சித்துப் பார்த்தேன்.

பார்வையாளனுக்குள் சில உணர்வுகளைக் கிளறுவதே ஒரு படைப்பின் வெற்றி. அந்த உணர்வு அந்த படைப்பு சொல்லாததாகவும் இருக்கலாம். நான் என் விரல்களை மட்டுமல்ல, மனதின் ஆழங்களையும் ஒன்றோடு ஒன்று முடுக்கி ஏதோ செய்ய முயற்சித்துவிட்டேன் என்ற வகையில் அனுவின் Expressions and Impressions is a SuXus! அம்பாசடர் பல்லவாவில் இந்த வார இறுதி வரை அவருடைய ஓவியங்களை இரசிக்கலாம்!



புகைப்படங்கள் : ஜெயராஜ் பாண்டியன்!

1 comment:

ppage said...

தலைவா.... சூப்பர் சப்ஜெக்ட்டு... சூப்பர் மேட்டரு...

ஒரு சின்ன ரிக்குவெஸ்ட்டு.... இத பத்தி இன்னும் விளக்கமா எழுதுங்களேன்... ஃப்ளீஸ்...