Friday, August 24, 2012

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - Song of this Century!

‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது...‘

சற்று முன் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜீனியர் நிகழ்ச்சியில் இந்தப் பாடலை ஒரு சிறுவன் பாடிக் கொண்டிருந்தான். அற்புதமான அனுபவம். 

ஆன்மாவில் தோய்ந்த அச்சிறுவனின் குரலில், கண்ணதாசன் வரிகள் கொஞ்சம் கொ
ஞ்சமாக இதயத்தை பிழிய ஆரம்பித்தபோது, பாடகி அருணா சாய்ராமின் விழியோரத்தில் கண்ணீர். உணர்வுகளை அடக்க முடியாமல், ராஜேஷ் வைத்தியா வீணை மீட்டுவதை நிறுத்திவிட்டு, கண்களின் ஈரத்தை துடைத்துக் கொண்டார்.

அரங்கத்திலிருந்த ஒவ்வொரு இதயமும் விவரிக்க முடியாத உணர்வுகளால், கசிந்துருகியபோது, உயிரற்ற காமிரா கூட உணர்வு பெற்று அழுதது போலத் தோன்றியது.

எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும், குடும்பத்தினருடன் அமர்ந்து இந்த பாடலை பார்த்துக் கொண்டிருந்த என் விழிகளின் ஓரங்களிலும் நீர். தொண்டை அடைத்துக்கொண்டு வார்த்தைகள் எழவில்லை.

அந்தப் பாடலின் மகத்துவம் அப்படி. கர்ணன் போன்று தூய உள்ளம் கொண்டிருந்தாலும், வாழ்வின் இன்பங்களும், துன்பங்களும் அனைவருக்கும் பொது. நல்லவர்களால் ஒப்புக் கொள்ள முடியாத இந்த சித்தாந்தத்தை, கடவுள் கண்ணனே விளக்கிப் பாடுவது போன்ற இந்த பாடல் மிக மிக அபூர்வம்.

இதற்கு முன்பும், பின்பும் இந்தச் சூழல் எந்தப் படத்திலும் வந்ததில்லை. அப்படி ஒரு பாடல் இனிமேல் வந்தாலும் இந்தப் பாடல் போல் வருமா எனத் தெரியவில்லை.

இந்தப் பாடலைக் கவனியுங்கள்! மேதைகளின் சங்கமம்! பி.ஆர்.பந்துலு, சக்தி கிருஷ்ணசாமி, சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், சீர்காழி கோவிந்தராஜன், கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி!

இன்று வரை, இந்தப் பாடல் எல்லா போட்டி மேடைகளிலும் தொடர்ந்து பாடப்படுகிறது. ஒவ்வொரு முறை ஒலிக்கும்போதும், உள்ளங்கள் உருகுவதையும், கண்ணீர் பெருகுவதையும் பார்க்க முடிகிறது. எனக்குத் தெரிந்து வேறெந்த பாடலும் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம், இசையும், வரியும், குரலும் ஆன்மாவை உலுக்கி எடுக்கிறது. எத்துணை கொடிய ஆன்மாவாக இருந்தாலும், மரிக்கும்போது இப்பாடலைக் கேட்டால், தூய்மையாக மாறிப்போகும்.

என் உள்ளத்தின் சலனமற்ற ஆழத்தில் இந்தப் பாடல் எப்போதும் இருக்கிறதென நினைக்கிறேன். எத்தனை முறை இந்த பாடலைக் கேட்டாலும், கண்கள் கசிகின்றன. இதயம் கங்கையில் குளித்து எழுவது போல இனம் புரியா புனித உணர்வை அடைகிறது.

என்னைக் கேட்டால், கடந்த 50 ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த தமிழ் திரை இசைப் பாடல்களில் முதல் இடம், உள்ளத்தில் நல்ல உள்ளம்‘ என்ற இந்தப் பாடலுக்குத்தான். Song of this Century!

என் உள்ளத்தை சுத்திகரிக்கும், இந்த அற்புத பாடலைத் தந்த மேதைகளை சந்திக்க நேர்ந்தால், அவர்களின் பாதம் தொட்டு வணங்குவேன்.

குறிப்பாக தன் இசையின் மேன்மையால் காலத்தின் தோள்களில் ஏறி, அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக, இசையால் உருகும் உள்ளங்களின் உள்ளும், வெளியும் பயணித்துக் கொண்டிருக்கும் மெல்லிசை மன்னர் ஐயா எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு என் இதயத்தின் ஒலிகளை சமர்ப்பிக்கிறேன்.

இன்று விஜய் டிவியில் பாடிய அச்சிறுவனின் பெயரை குறித்துக் கொள்ள மறந்துவிட்டேன். நான் மறந்தால் என்ன . . . எத்தனையோ மேதைகளின் பெயர்களுடன் சேர்ந்து, இனி அவன் பெயரும் ஒலிக்கும். இதை விட வேறென்ன பேறு வேண்டும்.

‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது,
வல்லவன் வகுத்ததடா..‘

14 comments:

PRIYA said...

Hiii Selva..
Your sharing is as awesome as the song itself. You have brought out the whole gamut of info and feel about this legendary song !! May God bless all of those associated with this song making/hearing !!
Cheers for more such shares..
Priya

Prabu Krishna said...

அண்ணா அந்த சிறுவன் பாடிய பாடலின் இணைப்பு கொடுத்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

Umesh said...

wonderful post ! Lovely song !

வே.நடனசபாபதி said...

அந்த சிறுவனின் பெயர் கௌதம். தூத்துக்குடி சொந்த ஊர். கர்நாடக இசை கற்றுக்கொள்ள தினம் 25 கிலோ மீட்டர் சென்று கற்றுக்கொண்டு இரவு 10 மணிக்கு வந்ததாக அவரது தந்தை சொன்னார்.
நீங்கள் சொன்னது உண்மைதான். எல்லோரையும் கண்ணீர் சிந்த வைத்தது அந்த பாடல். இனி அதுபோல் பாடல் வருமா என்பதைவிட வரவேண்டும் என விரும்புவோம்.

திண்டுக்கல் தனபாலன் said...

காலத்தால் அழிக்க முடியாத பாடல்....

பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி…

Anonymous said...

Prabu Krishnan

Please find the link below

http://tamilo.com/2012TamilTVShow/SuperSinger/08/Aug23c.html

Unknown said...

எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும், குடும்பத்தினருடன் அமர்ந்து இந்த பாடலை பார்த்துக் கொண்டிருந்த என் விழிகளின் ஓரங்களிலும் நீர். தொண்டை அடைத்துக்கொண்டு வார்த்தைகள் எழவில்லை.
///உண்மை செல்வா......ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு நிகழ்ச்சி முடிந்தும் இருந்து கொண்டே இருந்தது.

என்னை அறியாமல் கண்களில் நீர்.....ஏதோ இனம் புரியாத ஒரு உணர்வு தொண்டையை அடைத்துக்கொண்டு.....நிகழ்ச்சி முடிந்தபின்னும் அந்த உணர்வு இருந்து கொண்டே இருந்தது

ஹாலிவுட்ரசிகன் said...

அந்த சிறுவன் நன்றாகப் பாடினாலும், உண்மையில் பாராட்டு சென்றடைய வேண்டியது பாடலுக்குத் தான். அந்தப் பாடலைக் ஒருமுறையேனும் கேட்டவர்கள் யாராக இருந்தாலும், மறுமுறை கேட்கும்போது மனதில் அந்தக் காட்சிகளுடன் கண்களில் நீர் எட்டிப்பார்க்கவே செய்யும்.