Tuesday, April 3, 2012

செல்வா ஸ்பீக்கிங் - 02


முதல் வரியை எழுதும்போது, பக்கத்தில் அமர்ந்திருக்கும் நண்பர் டர்ட்டி பிக்சர் படத்தை டிவிடியில் பார்த்துக் கொண்டிருக்கிறார். எடுத்தவுடனேயே எதுக்கு இந்த வெட்டித் தகவல் எதற்கு என்று முறைக்காதீர்கள். பின் வரும் வரிகளில் திடீரென்று இதற்கு ஒரு லிங்க் வரும்.

அடியாத்தி!
அலையாத்தி என்றால் அலை ஆத்தி. கடலில் அலைகளின் வேகம் அதிகமாகி ஊருக்குள் புகும்போது, அலைகளின் வேகத்தை ஆற்றி மட்டுப்படுத்தும் மரங்களுக்கு அலை ஆத்தி, அலையாத்தி மரங்கள் என்று பெயர். ஆங்கிலத்தில் மாங்குரோவ் மரங்கள். ஆனால் பெரும்பாலும் கடற்கரையின் ஓரத்தில் காணப்படும் சவுக்கு மரங்களையே மாங்குரோவ் மரங்கள் என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த உண்மையை நான் சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன். சீர்காழிக்கு அருகில் உள்ள பெரும்தோட்டம் என்ற கிராமத்தில் ஒரு இறால் பண்ணை வைத்திருக்கிறார்கள். அங்கு மண்வளமும், நீர் வளமும் கெடாமல் இருக்க மாங்குரோவ் எனப்படும் அலையாத்தி மரங்களையும் வளர்க்கிறார்கள். அவர்கள் சொல்லி, நேரில் பார்த்த பின்தான் சவுக்கு என்பது அலையாத்தி அல்ல என்று தெரிந்து கொண்டேன். அப்படியா அடியாத்தி என்று நீங்கள் வியப்பது தெரிகிறது. இப்போது உங்கள் தமிழுக்கு ஒரு சோதனை. அலையாத்தி என்றால் அலை ஆத்தி... அடியாத்தி என்றால்?

என்னுடைய ஆன்லைன் பிழை திருத்தி
கடலைப் பொறி - கடலைப் பொரி. இரண்டில் எது சரி? உங்களை எல்லாம் பொறி வைத்துதான் பிடிக்கணும். ஒழுங்கா பிழை இல்லாம எழுத மாட்டீங்களா என்று என்னை டிவிட்டரில் ஒரு பிடி பிடித்திருந்தார் @elavasam. கடலைப் பொறி தவறு, கடலைப் பொரிதான் சரி. இந்த தவறை இன் & அவுட் பிழை திருத்தர்கள் சுட்டிக் காட்டியிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.

பட்ஜெட்டில் கல்விக்கு அதிக நிதி
கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியிருக்கும் தமிழக பட்ஜெட்டுக்கு சபாஷ்
செயல் வழிக் கல்வியை (சில பல நீதிமன்ற இழுபறிகளுக்குப்பின்) தமிழக அரசு செயல்படுத்தியிருக்கிறது. அது வெற்றிகரமாக தொடர வேண்டுமானால் அரசின் கவனம் கல்வியின் மேல் முழுமையாக இருக்க வேண்டும். முதல் கட்டமாக தமிழக நிதி நிலை அறிக்கையில் 14,552 கோடி ரூபாய் கல்விக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் மற்ற எந்த துறைக்கும் ஒதுக்கப்பட்டதை விட இது அதிகம். இதை மனமார வரவேற்கிறேன். இலவச(விலையில்லா) செருப்பு, நோட்டுபுத்தங்கள், ஜாமெட்ரி பாக்ஸ் இவற்றிற்கு மட்டும் இந்த பட்ஜெட்டை செலவு செய்யாமல், மற்ற அம்சங்களில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

1. டிஜிட்டல் பாடத் திட்டங்களை வடிவமைத்தல்
2. டிஜிட்டல் வகுப்பறைகளை உருவாக்குதல்
3. டிஜிட்டல் முறையில் வகுப்பெடுக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி தருதல்
4. வல்லுனர்களைக் கொண்டு (மாணவர்/ஆசிரியர் இருவருக்குமே) பேச்சுக்கலை, மனவளக் கலை பயிற்சி தருதல்
5. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை அழகாக, தரமாக பராமரித்தல்

இவை ஐந்தையும் மிக முக்கியமாக நான் நினைக்கிறேன். மற்ற அம்சங்களைப் பற்றி அவ்வப்போது பேசுவோம்.

டிஜிட்டல் கர்ணன் - சிவாஜி தி பாஸ்
1964ல் வெளிவந்து பாக்ஸ் ஆஃபிசில் சொதப்பிய படம் கர்ணன். பழைய பிரிண்டை தூசி தட்டி எடுத்து, அதில் உள்ள கோடுகளை, வண்ணப் பிசிறுகளை நீக்கி, டிஜிட்டல் நுட்பத்தால் செதுக்கி வெளியிட்டிருக்கிறார்கள். இந்த முயற்சிக்காக சபாஷ்! 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையைத் தொட்டிருக்கும் கர்ணன், மற்ற புதுப்படங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. செம வசூல் படம் மெகா ஹிட். நான் ஒரு செவ்வாய்கிழமை மாலையில் சாந்தியின் திரையரங்கில் படம் பார்த்தேன். உடன் படம் பார்த்தவர்கள் விவிஐபிக்கள் (பெயர் தவிர்க்கிறேன். என்ன்ன்ன்ன்ன்ன்ன்னா பில்டப்பு!). அரங்கம் நிறைந்த காட்சி. கணிசமான இளைஞர்கள் கூட்டம் ஒரு ஆச்சரியம். அதை விட ஆச்சரியம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். கடந்த சில வருடங்களாக, குடும்பங்கள் திரையரங்குக்கு வருவது குறைந்துவிட்டது. காரணம் டிக்கெட் விலை என்பது பொய். படங்கள் குடும்பங்களை பயமுறுத்துகின்றன. குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்கக்கூடியதாக இல்லை. சீட்டில் நெளிய வைக்கின்றன. எனவே குடும்பத்துடன் ஒரு நல்ல படம் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கமும், நவீன கொலவெறி சினிமாக்களின் மேல் உள்ள கோபமும் கர்ணன் படத்தால் தீர்க்கப்பட்டிருக்கிறதாக நான் நினைக்கிறேன். அதனால் மக்கள் மகிழ்ச்சியுடன் கர்ணன் பார்க்க புறப்பட்டுவந்துவிட்டார்கள்.

அந்தக் காலத்துக்கே உரிய அப்பிய மேக்கப், மிகை வசனங்கள் இருந்தாலும் கர்ணன் படம் சொல்லும் செய்தி, உள்ளத்தை உருக வைக்கிறது. மகாநதி படத்தில் ஒரு அற்புதமான வசனம். நாட்டுல நல்லவங்களுக்கு நல்லது மட்டுமே நடக்காதா? நல்லவனுக்கு கிடைக்கிற அவ்வளவு செல்வாக்கும் மரியாதையும், அவனுக்கு கிடைக்கறதை விட அதிகமாவே கெட்டவனுக்கும் கிடைக்குதே. நல்லவனுக்கு ஏன் திரும்பத் திரும்ப சோதனை? என்று கமல் கண்ணீர் மல்க ஆதங்கத்துடன் அரற்றுவார். உள்ளம் உறைய வைக்கும் காட்சி அது. அந்தக் கேள்வி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்ப வரும் கேள்வி. அந்தக் கேள்விக்கு கர்ணன் படம் விடை சொல்கிறது.

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது, வல்லவன் வகுத்ததடா...

ஆத்மசுத்தியுடன் இந்தப் பாடலைக் கேளுங்கள். ஐ பெட்! உங்கள் கண்களில் ஒரே ஒரு துளி நீராவது துளிர்க்கும்...

விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன், சீர்காழி கோவிந்தராஜன், பி.ஆர் பந்தலு, தி மாஸ்! சிவாஜி தி பாஸ்!

புன்னகை மன்னன் கண்டக்டர்
இரு மாதங்களுக்கு முன்பு. மோட்டர் பைக் பங்ச்சர் (இதற்கு ஏற்ற தமிழ் வார்த்தை என்ன?) பாண்டிபஜாரில் அப்படியே பார்க் செய்துவிட்டு, ஒரு பஸ்ஸைப் பிடித்தேன். எனக்குப் பிடித்த 12B. ஏன் பிடிக்கும் என்பதைப் பற்றி ஃபிளாஷ்பேக் சொல்ல ஆரம்பித்தால், பனகல் பார்க் சாரதா வித்யாலயா பற்றி சொல்ல வேண்டியதிருக்கும் என்பதால் அடுத்த பஸ் ஸ்டாப்புக்குள் டிக்கெட் வாங்கி பயணத்தை தொடருகிறேன். கண்டக்டர் புன்னகை மன்னனாக இருந்தார். சில ஃபுட்போடர்கள் அவரை இம்சித்துக் கொண்டே இருந்தாலும் புன்னகையை ஏற்றி இறக்கினாரே தவிர, கோபப்படவில்லை.ஆழ்வார் பேட்டையில் இறங்கும்போது, உங்க புன்னகை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இதே போல எப்பவும் சிரிச்சுகிட்டே இருங்க என்று சொல்லிவிட்டு இறங்கிவிட்டேன். மனிதருக்கு சந்தோஷம் தாள முடியவில்லை. மாலையில் வேலை முடிந்து, பஞ்சர் ஒட்டி வண்டியை ஸ்டார்ட் பண்ணும்போது, சார் என்று குரல். மீண்டும் மதியம் பார்த்த 12B. அதே கண்டக்டர். சார்.. வாங்க என்று குரல். அதே புன்னகை கண்டக்டர். வண்டி இருக்கு என்றேன். எங்கே என்றார் சைகையில். வடபழனி என்றேன். அட நம்ம டெப்போ என்றார். பஸ்ஸை பின் தொடர்ந்தேன். வடபழனியில் பஸ் நின்றதும் வந்து கை கொடுத்தார். சார் ஒரே வார்த்தையில என் குணத்தையே மாத்திட்டீங்க. வெளியில நான் சிரிச்சுகிட்டே இருப்பேனே ஒழிய வீட்டுக்குப் போனா எரிஞ்சு விழுவேன் சார். இனிமே அது கூட இருக்காது, என்றார். புன்னகைத்துக் கொண்டே அவர் வாங்கித்தந்தது தான் என்னால் இன்று வரை மறக்க முடியாத சுவையான டீ. அவர் பெயரை மறந்துவிட்டேன். பெயரா முக்கியம், குணம்தானே முக்கியம். ஹல்லோ கண்டக்டர், ஒரு வேளை நீங்கள் இதை வாசித்தால் என் பதில் புன்னகையை பெற்றுக்கொள்ளுங்கள்.

தூக்கிலடப்பட்ட பன்றி
பிரெஞ்சு நாட்டில் 1386ல் ஒரு பன்றியை தூக்கிலிட்டார்களாம். ரொம்ப முக்கியம், இந்த உபயோகமற்ற தகவல் எதுக்கு என்கிறீர்களா? இது போன்ற (நமக்கு உபயோகமே இல்லாத) வெட்டி useless தகவல்களால் ஆனதுதான் நம் உலகம். பிரபு-நயன் திருமணம், ஐஸ்வர்யா குழந்தைக்கு என்ன பெயர், கோச்சடையானில் ரஜினி ஹீரோயின் யாரு? இதில் எந்த ஒரு தகவலாலும் நமக்கு துளி கூட உபயோகமே இல்லை. ஆனால் இந்தச் செய்திகளால்தான் நமது இதயங்களே துடிக்கின்றன. இதயம் என்றதும் ஞாபகம் வருகிறது. நமது இதயம் ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் முறை துடிக்கிறதாம். இன்று எனக்கு எக்ஸ்ட்ராவாக ஒரு இலட்சத்து ஒரு முறை துடித்தது. காரணம் என் பக்கத்தில் நண்பர் பார்த்துக் கொண்டிருக்கும் டர்ட்டி பிக்சர் வித்யாபாலன். சும்மா எட்டிப்பார்த்த ஒரு வினாடியில் வித்யாபாலனால் இதயம் எக்ஸ்ட்ராவாக ஒரு முறை துடித்துவிட்டது.

இதெல்லாம் ஒரு நியூஸா?  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று நீங்கள் பற்களை நறநறப்பது தெரிகிறது. பதட்டப்படாமல் இன்னொரு யூஸ்லெஸ் தகவலாக நினைத்து மறந்துவிடுங்கள். நான் வித்யாபாலனை இரசிக்கப்போகிறேன். மகா திறமைசாலி! தேசிய விருதுக்கு தகுதியானவர்தான்! அப்பாடி சமாளிச்சுட்டேன்! ஹலோ நண்பா... ரீ வைண்ட். படத்தை முதலில் இருந்து போடு!

(In & Out Chennai பத்தரிகையில் ஏப்ரல் இதழில் நான் எழுதியது)

3 comments:

கோவை நேரம் said...

பார்த்துங்க...ரொம்ப ஓவரா ரீவைண்ட் பண்ணி தேய்ஞ்சுட போகிறது ....அப்புறம்...அந்த வித்யாபாலன் ரொம்ப நல்லா நடிச்சு இருக்காங்க தானே...ஹி ஹி ஹி

கூடல் பாலா said...

பழங்காலத்தில் மாங்குரோவ் காடுகள் கடற்கரைகளில் பெருமளவு இருந்துள்ளன ...குறிப்பாக கழிமுகங்களில் அதிக அளவில் இருந்துள்ளன ...சுனாமி தாக்குதலுக்கு காவலனாக இருந்த மாங்குரோவ் காடுகள் படிப் படியாக மனிதர்களால் அழிக்கப் பட்டுள்ளது ....இத்தகவலை எனக்கு எம் .எஸ்.சுவாமிநாதன் விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி புரியும் விஞ்ஞானி ஒருவர் என்னிடம் கூறினார் .......

Vetirmagal said...

Interesting blog.Thanks