என்னுடைய பள்ளிப்பருவத்தில் மூன்றாவது தெரு கொண்டை போட்ட ஆன்டி மிகப் பிரபலம். என்னைப்போன்ற சிறார்களை ஆன்டி ஈர்த்ததன் காரணம் அவருடைய இரட்டை ஜடை மகள். இது தெரியாத மற்றவர்களை ஆண்டி ஈர்த்ததன் காரணம் அவருடைய இந்தியும், இங்கிலீஷிம். அதனால் அவருக்கு எல்லா மொழியும் தெரியும் என்ற பிரம்மையில் எங்கள் காலனியே இருந்தது. பிரெஞ்சில் சந்தேகம் வந்தால் கூட ஆன்டியைப் போய் கேள் என்பார்கள். சந்தோஷமாக நாங்கள் இரட்டை ஜடையை பார்த்துவிட்டு விழிகளால் மொழி பெயர்த்துவிட்டு வந்துவிடுவோம்.கூகுள் டிரான்ஸ்லேட்டர் கிட்டத்தட்ட அந்த ஆன்டியைப் போலவே பெயரெடுத்திருக்கிறது. கூகுள் டிரான்ஸ்லேட்டருக்கு எல்லா மொழிகளும் தெரிந்திருப்பதாக ஒரு பிரம்மை நம் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் அது உண்மையல்ல. நாம் ஆந்திராவுக்கு ஒரு வாரம் டூர் போய்விட்டு வந்து ஒக்கட்டி, எரடு என்பது போல, கூகுள் டிரான்ஸ்லேட்டர் கொஞ்சம் கொஞ்சமாக பல மொழிகளை பயின்று வருகிறது.
ஆனால் இரட்டை ஜடைப் பெண்ணைப் போல அது நம்மை ஈர்க்கக் காரணம் என்வென்றால், டைப்பிங்கையும் கையெழுத்தையும் புரிந்து கொள்ளும் லாவகம். லேட்டஸ்ட் என்னவென்றால் பஞ்சாபி, தெலுங்கு, தமிழ் உட்பட மேலும் 13 மொழிகளில் எழுதும் வசதியும், அதனை புரிந்து கொண்டு மொழி பெயர்க்கும் வசதியும் வந்திருக்கிறது. எழுத முடியாவிட்டால் டைப் செய்யலாம். அதுவும் முடியவில்லை என்றால் படமாகத் தரலாம். அதுவும் கடினம் என்றால் பேசலாம். எப்படிக் கொடுத்தாலும் அப்படியே உள்வாங்கிக் கொண்டு நாம் கேட்கும் மொழிகளில் மொழிபெயர்த்துத் தருகிறது.
ஏனோ தெரியவில்லை இன்று என்னுடைய ஆன்ட்ராயிட் ஃபோன் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க ஒத்துழைக்கவில்லை. அதனால் நான் மொழிபெயர்த்த சந்தோஷங்களை படமாக பிரசுரிக்க முடியவில்லை.
நமோ டீ கடை, அம்மா உணவகம், கலைஞர் காப்பீடு என்று லிஸ்ட் வைத்திருக்கிறேன். Google Translate App எப்படி மொழிபெயர்த்து தருகிறது எனப்பார்க்கலாம்.

2 comments:
good written Selva / google translate நல்ல எழுதப்பட்ட செல்வா
good written Selva / நல்ல எழுதப்பட்ட செல்வா - Google translate
Post a Comment