Monday, March 31, 2014

நெடுஞ்சாலை - விமர்சனம்


நெஞ்சாலை திரைப்படத்தை இரண்டு காரணங்களுக்காக பார்க்க நினைத்தேன். முதல் காரணம் நாயகி ஷிவ்தா. போஸ்டர் டிசைனை சகோதரர் மகி காண்பித்தவுடனேயே அந்தப் பெண் மனதில் ஒட்டிக் கொண்டாள். அடுத்த காரணம் மகி. மகி எதையும் அவசரப்பட்டு செய்ய மாட்டார். மிக நுணுக்கமாக வேலை செய்வார். அவருடைய இரசனை அலாதியானது. அவரும் மக்கா ஸ்டுடியோசும் இணைந்து வழங்கிய புகைப்படங்களும், டிசைன்களும் எனக்குள் ஒரு ஈர்ப்பை உண்டாக்கின.

பிண்ணனியில் ஷிவ்தாவும், நாயகன் ஆரியும் நிற்க செம்மண்ணும், புழுதியும் படர்ந்த அந்த பழைய டெம்போ புகைப்படம் தொட்டால் தூசி ஒட்டிக்கொள்வது போல செம நேச்சுரல். அதனால் மகி ஈடுபடுகிற எந்த பிராஜக்டும் நன்றாக இருக்கிறதோ இல்லையோ மிகவும் ஆத்மார்த்தமாக செய்ததாக உணர முடியும். அதனால் அவருடைய நண்பர் கிருஷ்ணா இயக்கியுள்ள நெடுஞ்சாலையும் எனக்குள் பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டது.

படத்தின் ஆடியோ ரிலீசுக்கு சென்றிருந்தேன். இயக்குனர் கிருஷ்ணாவுக்கு முதல்படம் 2006ல் சில்லுன்னு ஒரு காதல். அதற்குப்பின் 2014ல்தான் அடுத்தபடம். ஆறுவருடங்களுக்குப் பின் அடுத்தபடம் என்பது நிஜமாகவே சொல்ல முடியாத சோகமும், அளவிட முடியாத தாகமும் நிரம்பிய அனுபவமாகத்தான் இருக்க வேண்டும்.

அந்த தாகமும், சோகமும் நெடுஞ்சாலை படத்தில் இருக்கிறது. ஃபோர் பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் கிளைமாக்ஸ் முடிந்ததும் மனப்பூர்வமான கைதட்டல்களைக் கேட்டேன். தியேட்டர்களிலும் கைதட்டல்கள் அதிர்வதாக கேள்விப்படுகிறேன். திரு.கிருஷ்ணாவிடம் சில கைகுலுக்கள்கள் மற்றும் குறுஞ்செய்திகள் தவிர பெரிய பழக்கம் இல்லை என்றாலும், நெடுஞ்சாலையை இரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதால் நிஜமாகவே அவர் சார்பில் சந்தோஷம்.

அபாரமான முதல் காட்சி. இருளில் விரையும் லாரி. தடதடவென கழன்று விழுவது போன்ற டெம்போ. அதில் சின்ன சேஸ். தொடர்ந்து தட்தட் என வெறுங்காலில் லாரியின் வேகத்தை மிஞ்சுகிற வேகத்தில் ஓடி லாரியில் ஏறி, டிரைவருக்கே தெரியாமல் நாயகன் ஆரி கொள்ளையடிக்கும் காட்சி சூப்பர் துவக்கம்.

நெடுஞ்சாலையில் கொள்ளையடிப்பவர்களைப் பற்றிய புதிய களம் என்பதை அந்த துவக்க காட்சியே சொல்லிவிடுகிறது. படத்தின் இறுதி வரை அந்த நெடுஞ்சாலையிலேயே கரகரவென இழுத்துச் செல்லப்படும் தார்ப்பாய் முருகன் என்ற காரக்டரின் வாழ்க்கையை படம்பிடித்திருக்கிறார்கள். தூக்கிக் கட்டிய லுங்கியுடன் ஆரி திகட்டாமல் செய்திருக்கிறார்.

சிலநேரம் சில கதா பாத்திரங்களை விட, கதா பாத்திரங்களை ஏற்று நடிப்பவர்களின் தோற்றம் எக்கச்சக்கமாக ஈர்க்கும். நாயகி ஷிவ்தாவின் தோற்றமும், இளமையும் அவரை மறக்க முடியாதவராகச் செய்துவிடுகிறது.

உபரிக்கேரக்டர்கள் என்று எவரும் இல்லை. எல்லோருமே கதையை அவ்வப்போது திருப்பும் பாத்திரங்களாக இருக்கிறார்கள். மலையாள நடிகர் சலீம் மாட்டு சேகராக வருகிறார். அசட்டுக் காமெடியனோ என நினைக்கும்போது கொடூர முகம் காட்டுகிறார்.

படம் நீளமோ என சில நேரம் தோன்றுகிறது. அதே போல ஆரியின் உடையமைப்பு பருத்திவீரனை ஞாபகப்படுத்துகிறது.

இருளில் நெடுஞ்சாலையையும், லாரிகள் கொள்ளையடிக்கப்படும் ஆக்ஷன் காட்சிகளையும் படம்பிடிப்பது மகாசிரமம். ஆனால் ஒளிப்பதிவாளர் ராஜவேல் அசுரத்தனமாக உழைத்திருக்கிறார். சத்யாவின் பின்னணி இசையும், பாடல்களும் நெடுஞ்சாலையின் கூடவே வருகின்றன.

இயக்குனர் கிருஷ்ணாவின் தலைமையில் நெடுஞ்சாலை ஒரு சூப்பர் டீம். அவர்களின் அடுத்த படத்தை ஆவலுடன் இப்போதே எதிர்பார்க்கிறேன்.

Post a Comment