Tuesday, June 10, 2014

கேம்பகோலா! விதிமுறைகளை மீறியதால் 25 வருடங்கள் கழித்து வீடுகளை இழந்த கதை!

 கேம்பா கோலா அடுக்குமாடி வளாகத்தில் குடியிருக்கும் அனைவரும் இன்றே வீட்டை காலி செய்துவிட வேண்டும்! அந்தக் கட்டிடங்கள் முழுக்க இடித்துத்தள்ளப்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடித்தீர்ப்பால் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட வீட்டுக்கு சொந்தக்காரர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேல் அங்கேயே வாழ்ந்த குடும்பங்கள் திடீரென வீடு இல்லாமல் தவிக்கின்றன. இந்த தவிப்புக்கும் தீர்ப்புக்கும் சொல்லப்படும் காரணம்... அந்த கேம்பாகோலா வளாகம் முழுவதுமே விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது என்பதுதான்.

பாம்பே டிரேட் என்று ஒரு விளையாட்டு. சிறுவயதில் நிச்சயம் விளையாடியிருப்போம். ஊர்களை வாங்குவதும் விற்பதும், அங்கு வீடு கட்டி வாடகைக்கு விடுவதும் சம்பாதிப்பதும்தான் விளையாட்டு. அந்த விளையாட்டில் மிகப்பிரலமான ஊர் ஒன்று உண்டு. அதன் பெயர் ஒர்லி. கூகுள் மேப்பில் தேடினால் தெற்கு மும்பையில் அந்த ஊரைப்பார்க்கலாம். அந்த ஊரில் தற்போது சர்சைக்குள்ளாகியிருக்கும் நிலம் Pure Drinks Ltd என்ற நிறுவனத்திற்கு 1955ல் லீசுக்கு வழங்கப்பட்டது. 1980ல் அந்த நிலத்தில் அடுக்குமாடி வீடு கட்டிக்கொள்ள பாம்பே முனிசிபாலிட்டி கார்ப்பரேஷன் (BMC) அனுமதி வழங்கியது. அனுமதி என்னமோ 5 மாடிகள் கட்டிக்கொள்ளத்தான். ஆனால்  20 மாடிகள் வரை கட்டப்பட்டன.

கட்டிங்கள் உயரமாகிக் கொண்டிருக்கும்போதே வேலையை நிறுத்தச்சொல்லி பாம்பே முனிசிபாலிட்டி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் வழக்கம்போல யார்யாருக்கோ பணம் கொடுத்து சரிகட்டி கட்டிடங்கள் கட்டிமுடிக்கப்பட்டன.
மிகவும் மதிப்பு வாய்ந்த நிலம் என்பதால் பிரச்சனை உள்ளது எனத்தெரிந்தும் பரபரவென அத்தனை வீடுகளும் விற்றுத்தீர்ந்தன. இதில் அதிசயம் என்னவென்றால் விதிமுறைகளை மீறிக்கட்டப்பட்டது எனத் தெரிந்தும் மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும், சாலைகளும் அமைத்துத்தந்தது அரசு இயந்திரம்.

2005ல் விஷயம் விஸ்வரூபமெடுத்து கோர்ட்டுக்குச் சென்றது. அரசுக்கும், அங்கே வசிப்பவர்களுக்கும் யுத்தம் துவங்கியது. இலஞ்சம் தந்து அரசையும், மக்களையும் ஏமாற்றி பணம் சம்பாதித்த நிறுவனங்களும், லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்த அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் தப்பித்துக்கொண்டார்கள். அவர்கள்மேல் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அவர்களுக்கு தண்டனை ஏதும் இல்லை. ஆனால் ஏதுமறியாமல் பணம் கொடுத்து ஏமாந்தவர்களும், தெரிந்தே அங்கு வீடு வாங்கியவர்களும் இன்று தங்குவதற்கு வீடு இல்லாமல் இருக்கிறார்கள்.

மக்களும், மீடியாக்களும், சில சமூக ஆர்வலர்களும் அவர்களுக்காக பரிதாபப்பட்டு ஆதரவளித்தார்கள். அரசுக்கும், நீதிமன்றத்துக்கும் எதிராக போராட உதவினார்கள்.  தற்காலிகமாக தேர்தல் களேபரங்களும் பிரச்சனையை ஒத்திப்போட உதவியது. ஆனால் இனியும் தள்ளிப்போட வழியில்லை. எல்லா சட்டத்தடை உத்தரவுகளும் அவர்களுடைய நம்பிக்கைகளுடன் நொறுங்கிப்போய்விட்டன. உச்சநீதி மன்றம் கட்டிடங்களை இடிக்கச் சொல்லிவிட்டது.

அதே வளாகத்தில் ஒரு ஃபிளாட்டை வாங்கியுள்ள லதா மங்கேஷ்கர் கடைசியாக மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். ஆனாலும் அந்த மக்களுக்கு வேறு வழியில்லை. கேம்பாகோலா வளாகம் நொறுங்கப்போகிறது. அவர்கள் வீடின்றி சாலைகளில் நிற்கத்தான் போகிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இன்று அடம்பிடிக்கும் மும்பை முனிசிபாலிட்டி கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. அதாவது கேம்பாகோலா வளாகம் போலவே விதிமுறை மீறிக்கட்டப்பட்ட 56332 கட்டிடங்கள் உள்ளன. கேம்பாகோலா வளாகம் போலவே அவையும் இடிக்கப்படுமா?

இதற்கான பதில் நீதிமன்றங்களில் கிடைக்கலாம். ஆனால் லஞ்சம் தந்து விதியை வளைத்துக்கொள்ளலாம் என்று விரும்பும் மனங்களுக்கு இது புரியுமா எனத்தெரியவில்லை. இந்த வினாடி கூட விதிமுறைகளை மீறிய கட்டிடங்கள் எங்காவது ஒரு மூலையில் எழுந்து கொண்டுதான் இருக்கும்.


2 comments:

சுரேகா said...

மிகச்சரி... இதில் நிறுவனங்களின் பணப்பசிக்கு பொதுமக்கள் இரையாவதுதான் கொடுமை... !! அப்ரூவல் இல்லையென்றால், வாங்காமல் புறக்கணிக்கவேண்டும். நம் ஆட்களும் , சமாளித்துக்கொள்ளலாம் என்று நினைப்பதால்தான் இப்படி நடந்திருக்கிறது.

நீங்கள் சொன்னதுபோல், மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றைக் கொடுத்த அலுவலர்களை முதலில் தண்டித்துவிட்டு பிறகு வீட்டின்மீது நடவடிக்கை எடுக்கலாம். ஒன்று மட்டும் புரிகிறது.

அரசு சட்டங்களால் அமையவேண்டுமே தவிர, மனிதர்களால் அல்ல!

jeyaraj v.c. said...

ethaiyum samaalikkalaam eppadiyum seithukollalaam enru thunivatharku athikaarikalum vudanthaithaan..namma jananaayathula vithi, murai, ozhungu ellaamey purakkanikkappattavaithaam..