Monday, June 9, 2014

உலகக்கோப்பையின் முதல் கோலை அடிக்கப்போவது ஒரு செயற்கைக்கால்

உலகக்கோப்பை என்றாலே ஸ்பெஷல்தான். இந்த வருடக் கோப்பை இன்னும் ஸ்பெஷல். வழக்கமாக யாராவது பிரபலம் கால்பந்தை உதைத்து போட்டியை துவக்கி வைப்பார். ஆனால் இந்த வருடம் செயற்கைக் கால்கள் அணிந்த ஒரு மாற்றுத்திறனாளி பந்தை உதைக்கப்போகிறார்.

குறிப்பிடும்படியாக இது அவ்வளவு ஸ்பெஷலாக இல்லையே எனத் தோன்றலாம். ஆனால் அந்தக் கால்களில் பொருத்தப்பட்டுள்ள BMI என்ற தொழில்நுட்பம் பற்றி அறிந்தால் அசந்துபோவோம். BMI என்பது Brain Mind Interface என்பதின் சுருக்கம்.

வழக்கமாக செயற்கை உடல்பாகங்கள் ஒரு மரக்கட்டை போல இருக்கும். அந்த பாகங்களால் தொடுதல், படுதல், உரசுதல் போல எதையும் உணர முடியாது. ஆனால் BMI தொழில் நுட்பம் பொருத்தப்பட்ட கால்களால் பந்தை உதைத்ததும் பந்தை உதைத்த உணர்வை அந்தக் கால்களை அணிந்திருக்கும் நபர் உணர்வார்.

நியூரோ சயின்ஸில் இது ஒரு மகத்தான சாதனை. இது இன்னும் விரிவுபடுத்தப்படுமானால் எதிர்காலத்தில் செயற்கை பாகங்களுக்கும், இயற்கை பாகங்களுக்கும் உள்ள வித்தியாசம் குறையும். பந்தை உதைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன் மூளையில் ஒரு அதிர்வு ஏற்படும். அந்த அதிர்வை மூளையில் பதிக்கப்பட்டுள்ள சிலிக்கான் சில்லுகள் ஒரு கட்டளையாக மாற்றும். அந்தக் கட்டளைகள் மின் அலையாக மாற்றப்பட்டு ஒயர்லெஸ் ரிசீவர் பொருத்தப்பட்டுள்ள கால்களுக்கு அனுப்பும். உடனே பாட்டரியில் இயங்கும் கால்கள் அந்தக் கட்டளையை ஏற்றி பந்தை உதைக்கும். பந்தை உதைக்கும்போது கால்களில் பொருத்தப்பட்டுள்ள Infra Red - சிவப்புக் கதிர்கள் சில மோட்டர்களை இயக்கி அந்த அதிர்வுகளை மூளைக்கு திரும்ப அனுப்புகின்றன. அது ஒருவிதமான தொடு உணர்வை மூளைக்குத் தருகின்றன. எனவே பந்தை உதைத்த உணர்வை அந்த மாற்றுத்திறனாளி பெறுவார்.


பிரேசிலில் நடைபெறும் உலகக்கோப்பையில் ஒரு செயற்கைக்கால் பந்தை உதைக்கும். அது BMI தொழில்நுட்பத்துக்கு மேலும் ஒரு பாய்ச்சலைத் தந்து, செயற்கைக்கும் இயற்கைக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைக்கும். மூளைக்கு கட்டுப்படும் ரோபோக்கள் உலகை உருவாக்கும்.

GOAL என்று உலகமே அதிரும்போது அது இந்த சாதனைக்கும் சேர்த்த கொண்டாட்டமாக இருக்கும்.

No comments: