Saturday, August 13, 2022

கார்த்தி - மருதநாயகம் படம் நின்று போன வலியை விடவா என்னுடைய வலி பெரியது?

மருதநாயகம் படம் நின்று போன வலியை விடவா என்னுடைய வலி பெரியது?

”பருத்தி வீரன் வெளியாகுமா என்று சந்தேகம் வளர்ந்து கொண்டே இருந்தது. ஆயிரத்தில் ஒருவன் நடக்குமா? பாதியிலேயே நின்று விடுமா என்று மனது தளர்ந்து போயிருந்தது. அந்த சமயத்தில் மனம் சோர்ந்து போனபோது என்னை தூக்கி நிறுத்தியது கமல் சாரின் மருதநாயகம் காட்சிகள்தான்.
பருத்தி வீரன் துவக்க விழாவிற்கு அழைக்க அப்பாவுடன் கமல் சார் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது அவர் மருதநாயகம் டிரையலரையும், ஷுட்டிங் ஸ்பாட் காட்சிகளையும் காட்டினார். மிரண்டு போய்விட்டேன். உலக சினிமாக்கள் எதிலும் நான் பார்த்திராத காட்சி அமைப்பு, உடை, ஷாட் என பிரமிக்க வைத்தது.
மருதநாயகம் படத்தின் துவக்க விழாவுக்கு அப்பாவுடன் நான் சென்றிருந்தேன். விழாவெல்லாம் முடிந்து அடுத்த நாள் யாரோ என்னை இடித்துவிட்டுச் சென்றார்கள். அது இரும்பு கொண்டு என்னை இடித்தது போலிருந்தது. திரும்பிப் பார்த்தால் கமல் சார். இடுப்பு வரை நீள முடியுடன், உடலை இரும்பு போல வைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
ப்பா... அசுர உழைப்பு. கமல் சார் இவ்வளவு உழைத்த அந்தப் படம் நின்று போய்விட்டது. அது நின்று போய்விட்ட வலியை விடவா, என்னுடைய வலி என்று தோன்றியது. எப்போது நான் துவண்டு போனாலும் மருதநாயகம் நின்று போனாலும், தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கமல் சாரின் உழைப்புதான் எனக்கு உற்சாகம் தருகிறது. என்னை தோளில் தட்டி தூக்கி நிறுத்துகிறது.
- பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்தி
கார்த்தியின் இந்த வார்த்தைகளில் ஜெயிக்கக் காத்திருக்கும் ஒவ்வொருக்கும் செய்தி இருக்கிறது. ஒவ்வொரு வெற்றியும் ஆயிரம் வலிகளைத் தாண்டித்தான் சாத்தியமாகியிருக்கிறது. துவண்டு போகாமல் அடுத்தடுத்து செயல்படுபவன்தான் குடும்பத்தாலும், மக்களாலும் கொண்டாடப்படுகிறான். இந்த நம்பிக்கையில்தான் நாங்கள் யாதெனக்கேட்டேன் படத்தை தயாரித்திருக்கிறோம். விரைவில் திரையைத் தொடுவோம். இரசிகர்களின் இரசனைகளுக்கு உணவளிப்போம். வெற்றி பெறுவோம்.
இயக்குநர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்

No comments: