Saturday, August 13, 2022

பொன்னி என்கிற பெயர் ஏ.ஆர்.இரகுமானுக்குள் ஏற்படுத்தியுள்ள தாக்கம்!


 ரகுமான் அவருடைய இசைப் பயணத்தில் புதியதோர் தளத்தை கண்டடைந்திருக்கிறார் எனக் கருதுகிறேன். அவருடைய சமீபத்திய அதை என்னால் உணர முடிகிறது. அவருடைய இசையில் கொண்டாட்டங்கள் இருந்தாலும் அதற்குள் மிகப் பெரிய உணர்வுக் குவியலை நிரப்பி வைக்கிறார். எம்.எஸ்.வி, இளையராஜா இருவரும் இதில் மாஸ்டர்கள். ஏ.ஆர்.இரகுமானும் அவர்கள் பயணித்துள்ள பாதையில் தன் பாணியில் நுழைந்துள்ளார்.

பொன்னி நதி பாக்கணுமே பாடலில் உற்சாகத்துடன் மென்சோகம் போன்ற ஒரு நுண்ணிய உணர்வு அடையாளம் காண முடியாதபடி கலந்திருக்கிறது. அந்தப் பாடலின் வெற்றிக்கு அதுவே காரணம் என்பது என் எண்ணம்.

இது இப்படி என்றால் மலையன்குஞ்சு வேறு இரகம். அதில் சித்ராவின் குரலில் பொன்னி மகளே என்றொரு பாடல் வருகிறது. எவராக இருந்தாலும் ஏதோ ஒரு நொடியில் யாருமற்ற தனிமையை நேசிப்பார்கள். அந்த நொடியில் இந்த உலகின் ஒவ்வொரு உயிரையும் நேசிப்போம். இந்தப் பாடல் அந்த உணர்வைக் கொடுக்கிறது. படத்தின் பலமே அந்தப் பாடலும், அதை ஒட்டிய பிண்ணனி இசையும். கேட்டுவிட்டால் அந்தப் பாடலில் இருந்து மீளவே முடியாது.


பொன்னி என்ற வார்த்தையில் ஒரு மாயம் இருக்கிறது. இரகுமானின் பியானோவை பொன்னி என்ற வார்த்தை எங்கோ அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. அது அவருக்குப் பிடித்த வார்த்தையாக தற்செயலாகவே அமைந்துவிட்டது என நினைக்கிறேன்.

அதன் இசை விளைவுதான் பொன்னி நதி பாக்கணுமே மற்றும் பொன்னி மகளே பாடல்கள்.

லவ் யூ இரகுமான்!

No comments: