Wednesday, May 8, 2024

நீங்கள் கடைசியாக குயிலின் ஓசையைக் கேட்டது எப்போது?

எம்.எஸ்.வி-யிலிருந்து துவங்குகிறேன். அவருடைய பல பாடல்களை நான் ஏன் தவறவிட்டேன் என்பதற்கான விடை இளையராஜாவின் பாடல்களில் இருந்தது. இளையராஜாவின் பல பாடல்களை நான் ஏன் தவறவிட்டேன் என்பதற்கான விடை, ஏ.ஆர். இரகுமானின் பாடல்களில் இருந்தது. அதுபோலத்தான் நான் தற்போது தேடிக்கொண்டிருக்கின்ற விவரிக்க இயலாத ஒன்று யுவன், இமான், சந்தோஷ் நாராயணன், ஷான் ரோல்டன், ஆனிரூத் போன்றோரிடம் அவ்வப்போது கிடைக்கிறது. இவர்கள் தொடர்ந்து என் தேடலை பூர்த்தி செய்யும்போது எம்.எஸ்.வி, இளையராஜா, ரகுமான் வரிசையில் எனது ஆதர்சமாக நிலைத்துவிடுவார்கள்.

எளிதாகச் சொன்னால் நான் எதைத் தேடுகிறோனோ அது மட்டுமே என் கவனம் பெறுகிறது. சாவியைத் தேடும்போது நான் தொட்டு நகர்த்தி வைக்கும் புத்தகம் கவனத்தில் பதிவதில்லை.
இதற்கு அர்த்தம் நான் புத்தகத்தை நிராகரிக்கிறேன் என்பதல்ல. அது போலத்தான் நான் தவறவிட்ட பாடல்களும். இரசனை என்பதே ஒரு பஸ் பயணம் போலத்தான். பயணத்தில் இடதுபக்கம் தெரிவதை இரசிக்கும்போது வலதுபக்கம் உள்ளவை கண்களில் படுவதில்லை. திரும்ப வரும்போது அவை கண்களில் படுவதற்கு வாய்ப்பு உண்டு. சமீபத்தில் நான் அப்படிக் கண்டுகொண்ட பாடல்களில் ஒன்றுதான் ஆகாயத்தாரை!
எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.இரகுமான் ஆகியோரின் சில பாடல்கள் இப்போதும் என் கவனத்தில் படாமல் போவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் அவர்கள் எப்போதும் என் கவனத்தில் இருப்பார்கள்.

நீங்கள் கடைசியாக குயிலின் ஓசையைக் கேட்டது எப்போது?

No comments: