'The Farewell' போன்ற படங்கள் குடும்ப உறவுகளின் சிக்கல்களைப் பேசியது என்றால், '53 Sundays' அந்தச் சிக்கல்களுக்கு இடையே நாம் எப்படித் தொலைந்து போகிறோம் என்பதைப் பேசுகிறது.
ஒரு நடுத்தர ஸ்பானிஷ் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று உடன்பிறப்புகள், வாராவாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கள் வயதான தந்தையைச் சந்திக்க ஒன்று கூடுகிறார்கள். அப்படி ஒரு வருடத்தில் வரும் அந்த 53 ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களுக்குள் நடக்கும் பாசாங்கு நிறைந்த சந்திப்புகளும், ஒருவருக்கொருவர் ஒளித்து வைக்கும் ரகசியங்களுமே இந்தப் படத்தின் மையம்.
சலிப்புத்தட்டினாலும் பரவாயில்லை என்று, இயக்குநர் மார்க் ஹாரிஸ், ஒரு வீட்டிற்குள்ளேயே கேமராவை நகர்த்தியிருக்கிறார். ஆரம்பத்தில் வரும் நீண்ட வசனங்கள் சற்றே களைப்படைய வைக்கிறது.
நம்ம ஊர் விசு, கிரேசி மோகன் வசனங்களை மிக்சியில் கலந்தது போல, கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அதில் உறவுகளை தவிர்க்கும் நம்மை நாமே கேலி செய்து கொள்ளும் ஒரு ஆழமான எமோஷன் ஒளிந்திருக்கிறது. இதுதான் படத்தின் மிகப்பெரிய நகைச்சுவை முரண் மற்றும் ஹைலைட்.
யார் பார்க்கலாம்?
வார இறுதி நாட்களில் குடும்பத்தோடு அமர்ந்து, ஒரு நல்ல 'பீல்-குட்' (Feel-good) படம் பார்க்க விரும்புபவர்கள்.
வசனங்களின் ஆழத்தை ரசிப்பவர்கள்.
"நாமும் நம் அப்பாவோடு பேசி எத்தனை நாள் ஆகிறது?" என்று ஒரு நிமிடம் யோசிக்கத் துணியும் எவரும் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
சுருக்கமாகச் சொன்னால், '53 Sundays' ஒரு வருடத்தின் ஞாயிற்றுக்கிழமைகள் மட்டுமல்ல; நம் வாழ்நாளில் நாம் தவறவிட்ட உறவுகளின் நாட்குறிப்பு!
- ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்

No comments:
Post a Comment