Showing posts with label skater girl. Show all posts
Showing posts with label skater girl. Show all posts

Wednesday, April 1, 2026

Skater Girl (2021) - விமர்சனம்

 

ராஜஸ்தானின் ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் பிரேரணா (ரேச்சல் சஞ்சீதா) என்ற பழங்குடி இன சிறுமியின் கதை இது. சாதியக் கட்டுப்பாடுகளும், வறுமையும் சூழ்ந்த அந்தச் சூழலில், எதேச்சையாக அங்கே வரும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணின் மூலம் 'ஸ்கேட்போர்டிங்' (Skateboarding) விளையாட்டு அறிமுகமாகிறது. வெறும் விளையாட்டாகத் தொடங்கும் அந்தப் பயணம், ஒரு பெண்ணின் சுதந்திரப் போராட்டமாக மாறுவதே திரைக்கதை.

பார்க்கும்போது தோன்றியது: நிச்சயமாக இது ஒரு “சிங்கப் பெண்ணே” பாட்டுக்கு ஏற்ற திரைக்கதை. ஆனால் கதைக்குள் கதையாக கிராமத்தைத் தேடி ஒரு ஃபாரின் தேவதை வருவதும், அவருக்கும் அந்த கிராமத்துக்கும் உள்ள தொடர்பும் ஒரு கவிதை. அவர்கள் இருவருக்குமான அந்தப் பிணைப்பு திரையில் மிக அழகாகப் பதிவாகியுள்ளது.

நடிப்பு: புதிய முகமான ரேச்சல் சஞ்சீதாவின் நடிப்பு அபாரம். அந்தச் சிறுமியின் கண்களில் தெரியும் அந்தத் தேடலும், ஸ்கேட்போர்டில் ஏறி நிற்கும் போது கிடைக்கும் அந்த தன்னம்பிக்கையும் பார்ப்பவர்களையும் தொற்றிக் கொள்கிறது.

தொழில்நுட்பம் மற்றும் இயக்கம்: இயக்குநர் மஞ்சுாரி மகஜானி, ராஜஸ்தானின் நிலப்பரப்பை அதன் ஆன்மா சிதையாமல் காட்டியுள்ளார். குறிப்பாக அந்த ஸ்கேட்போர்டிங் பூங்கா உருவான விதமும், அதற்காக ஊர் மக்கள் காட்டும் எதிர்ப்பும் எதார்த்தம்.

படம் பற்றிய ஒரு சிறு குறிப்பு (Filmography Details):

  • திரைப்படம்: Skater Girl (2021)

  • ஓடிடி தளம்: Netflix

  • வகை (Genre): Sports / Drama

  • நடிகர்கள்: ரேச்சல் சஞ்சீதா, அமித் தயாள், அமித் மோடி

  • இயக்கம்: மஞ்சுாரி மகஜானி (Manjari Makijany)

மாத்தியோசி (My View): இது ஒரு சின்ன படம்தான், ஆனால் பத்து நிமிடங்களைத் தாண்டியதுமே நெட்பிளிக்ஸ் பிளே ஆகாமல் வெளியேற்றிக் கொண்டே இருந்தது. போஸ்டரிலேயே ஒரு ஈர்ப்பு இருந்ததால் திரும்பத் திரும்ப முயற்சி செய்து பார்த்தேன். வொர்த்!

அமெரிக்காவின் 'Lords of Dogtown' ஸ்கேட்போர்டிங் கலாச்சாரத்தைப் பற்றிப் பேசியது என்றால், 'Skater Girl' இந்தியச் சூழலில் ஒரு விளையாட்டின் மூலம் எப்படிச் சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதைப் பேசுகிறது. ஏ.ஐ (AI) காலத்தில் நாம் முன்னேறிக் கொண்டிருந்தாலும், கிராமப்புறங்களில் இன்னும் மாறாமல் இருக்கும் சில இறுக்கமான மரபுகளை இந்தப் படம் மிக மென்மையாகக் கேள்வி கேட்கிறது.

பார்க்கலாமா? கண்டிப்பாக. மனதிற்கு நெருக்கமான, ஒரு பாசிட்டிவ் எனர்ஜி தரும் படங்களைத் தேடுபவர்கள் மிஸ் பண்ணாதீர்கள்.

  • ஐ.எஸ்.ஆர். செல்வகுமார்