Thursday, May 22, 2014

உனக்காக மௌனமாக ஒரு இசை


மலரும் நானும்
நானும் பறவைகளும்
கடலும் நானும் 
நானும் காற்றும் இணைந்து
மாபெரும் இசையை உருவாக்கியிருக்கிறோம்.

நீயும் நானும்
நானும் நாமும்
சந்திக்கும் ஒரு பொழுதில்
அதை நான் மட்டும்
உனக்காகப்பாடுவேன்.

அந்தப் பாடல்
எந்தக் கருவியிலும் வாசிக்க முடியாத
தொடர் மௌனமாகக் கூட இருக்கலாம்.

ஆனால் என் இதயத்தின் நடுக்கம்
உனக்கு அதைப் புரிய வைத்துவிடும்.
#அவளிசை

Saturday, May 17, 2014

டியர் மோடி! உங்களை இன்னமும் நம்பாத என்னிடமிருந்து ஒரு கடிதம்

மோடியின் வெற்றியை தன்னுடைய வெற்றியாகவே பலரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பேச்சில் தெறிக்கும் சந்தோஷமும், பிரகாசிக்கும் நம்பிக்கையும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 

உண்மையைச் சொன்னால் இந்த வினாடி வரையில் மோடியின் மேல் எனக்கு எந்த ஈர்ப்பும் இல்லை. எதிர்கட்சிகளை மட்டுமல்ல, தன் கட்சி சீனியர்களையும் சாமர்த்தியமாக சாய்த்துவிட்டு, கார்ப்பரேட் விளம்பர ஏஜென்சிகளின் துணையுடன் தன்னை வளர்த்துக் கொள்ளும் முரட்டு சிந்தனைகள் கொண்ட முரட்டு அரசியல்வாதி. இதுதான் மோடியைப் பற்றிய எனது கருத்து.

எனது கருத்து தவறோ? சரியோ? என்னையும், அவரையும், நம் எல்லோரையும் உள்ளடக்கிய நமது நாட்டை இனி ஆளப்போவது அவரே. எனவே அவரை ஆராதிக்கும் ஆதரவாளர்களைப் போலவே, நானும் அவரை வரவேற்கிறேன்.

இனி..
அவரை நம்பும் ஆதரவாளர்களையும், அவரை இன்னமும் நம்பாத என்னைப் போன்றவர்களையும், தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நம்பும் அப்பாவி பொதுமக்களையும் ஒரு சேர திருப்தியடைய வைக்கவேண்டிய பொறுப்பு திரு.மோடி அவர்களுக்கு உள்ளது. மோடியைத் தவிர எவருமே கற்பனை செய்திராத மாபெரும் வெற்றிக்கு அவர் செய்ய வேண்டியவை ஏராளம்.

புன்னகையுடன் காத்திருக்கிறேன். வருக மோடி! உங்கள் மேலிருக்கும் சந்தேகங்களைத் தகர்த்து தருக நம்பிக்கைகள் கோடி!

Tuesday, May 6, 2014

ட்விட்டரில் ரஜினியே பரப்பிய கோச்சடையான் ஸ்பாம்

ரஜினி படத்தைப்போட்டு மற்றவர்கள் விளம்பரம் செய்வது ஓகே. ஆனால் ரஜினியே தன் படத்தைப்போட்டு விளம்பரம் செய்வது இம்சை.


ரஜினி ட்விட்டருக்கு வந்துவிட்டார் என்றதும் நானும் ஃபாலோ பட்டனை அழுத்திவிட்டேன். அழுத்தலாமா வேண்டாமா என்று யோசிப்பதற்குள் சில ஆயிரம்பேர் அவரை தொடர ஆரம்பித்திருந்தார்கள். அந்த அளவுக்கு வேகம். அந்த வேகத்துக்கும் முனைப்புக்கும் காரணம் ரஜினியுடன் பேசலாம் அல்லது ஏசலாம் என்ற ஆர்வம்தான்.

ஆனால் ஒரு தானியங்கி சாஃப்ட்வேர் (bot) இயந்திரத்தனமாக "Thank you for being a part of the fan family. Here is an exclusive Kochadaiiyaan poster for you, with a link attached to it." என்று கோச்சடையான் விளம்பரம் செய்துகொண்டிருந்தது.

ரஜினி நேரடியாக அரசியலுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற தளங்களுக்கு நேரடியாகத்தான் வரவேண்டும். ஏனென்றால் இது சமூகவலைத்தளம். இங்கு மனிதர்களைத்தான் எதிர்பார்க்கிறோம்... ரோபோக்களை அல்ல.