Monday, January 12, 2009

திருமங்கலத்தில் தி.மு.க வெற்றி ஏன்?

போட்டி கடுமையாகி சில நூறு வித்தியாசங்களில் தி.மு.க வெல்லும் என்று நான் நினைத்தேன். ஆனால் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் வாக்குப்பதிவு, 40000 வாக்குகள் வித்தியாசம் என்று யாரும் நினைத்துப்பார்க்காத ஒரு ரிசல்ட் வந்திருக்கிறது. காரணம் . . . ஏதோ எனக்குத் தோன்றியதை சொல்லியிருக்கிறேன்.
  1. அழகிரியின் அசுர மதுரை பலம்.
  2. ஆளுங்கட்சியின் அருவருப்பான பணப்பட்டு வாடா. அதை நியாயப்படுத்திய எதிரி மற்றும் உதிரிகட்சிகளின் ஏட்டிக்குப் போட்டி பிரியாணியும், பணப் பட்டுவாடாவும்.
  3. வெள்ள நிவாரண 2000ம் ரூபாய் - ஒரு ரூபாய் அரிசி - இலவச டிவி - ரேஷனில் 50 ரூபாய்க்கு மளிகைப் பொருட்கள், இலவச பொங்கல் பொருட்கள். அதைக் கிண்டலடித்த எதிர்க்கட்சிகள்.
  4. தேர்தலுக்கு முன் வரை தூங்கி வழிந்துவிட்டு, திடீரென உறக்கம் கலைந்த ஜெயலலிதா, லட்டு மாதிரியான விலைவாசி, மின்சாரப் பிரச்சனைகளை கையிலெடுத்து (முன்னேறி பாய்வதற்குப்) பதிலாக "ஓட்டு மெஷினில் எல்லா ஓட்டும் தி.மு.கவுக்கே விழற மாதிரி பண்ணிட்டாங்க" என்று (பின்வாங்கிப்) பிதற்றியது.
  5. "எல்லா பிரச்சனைக்கும் என்கிட்ட திட்டமிருக்கு. ஆனா வெளியில் சொன்னா அவங்க காப்பி அடிச்சிடுவாங்க" என்கிற விஜயகாந்தின் 'லூசுத் தனமான' வெற்று உதார்.
  6. எதற்க்காக தி.மு.வை விட்டு அ.தி.மு.கவிடம் வந்தோம் என்பதை கம்யூனிஸ்டுகளால் தெளிவாக சொல்ல முடியாத நிலை.
  7. ஈழம் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, பாலஸ்தீனத்துக்காக குரல் கொடுத்த ஜெயலலிதாவின் தமிழனப் பற்று மற்றும் உலக அறிவு.
  8. சொந்த தொகுதியை கூட்டணிக் கட்சியே பிடுங்கிக் கொண்டதால் ஏற்பட்ட (வெளியில் சொல்லிக்க முடியாத) ம.தி.மு.வின் தளர் நடவடிக்கை.
  9. பேரன்-அண்ணன்-தளபதியின் கூட்டு பிரச்சாரத்தால் தி.மு.வின் வாக்கு தி.மு.கவிடமே நிலை கொண்ட மனநிலை.
  10. கிட்டத்தட்ட 90 சதவிகிதத்தை எட்டிய வாக்குப் பதிவு.
இந்தத் தேர்தலில் பல முரண்பாடுகள். பீகார், மற்றும் உத்திரப் பிரதேசத்தை விட வன்முறை தலை விரித்தாடுகிறது. துணை இராணுவம் இல்லாமல் தேர்தல் நடக்காது, என்று செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும், தேர்தல் கமிஷனும் கூறின. எனவே என்னதான் துணை இராணுவம் இருந்தாலும் வாக்குப்பதிவு மந்தமாக இருக்கும் என்று நினைத்தால் ... இது வரை இல்லாத அளவு வாக்காளர்கள் ஆர்வம் காட்டி வாக்களித்திருக்கிறார்கள்.

பொதுவாக வாக்குப்பதிவுகள் அதிகமானால் அது ஆளுங்கட்சிக்கு ஆப்பு என்று சொல்வார்கள். இங்கேயோ கிட்டத்தட்ட 40000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் தி.மு.க ஜெயித்திருக்கிறது. இத்தனைக்கும் சென்ற தேர்தலில் இது தி.மு.க தோற்ற தொகுதி.

தி.மு.கழக குடும்பங்கள் இணைந்துவிட்டால் இனிமேல் சன் டிவியில் ஜெயலலிதா, வை.கோ, விஜயகாந்த்தை காட்ட மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு தேர்தல் காலங்களில் மீடியா மைலேஜ் கிடைக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று வரை சன் வழக்கம்போல எல்லோரையும் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் ரிசல்டில் பாதிப்பில்லை.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் திருமங்கலம் தி.மு.கவுக்குத்தான் திருப்புமுனை. மற்ற (அ.தி.மு.க ஆதரவு காங்கிரஸ் உட்பட) எல்லா கட்சிகளுக்கும் இது கடுப்பு முனை.

மேஸ்ட்ரோ ரஹ்மான் - கோல்டன் குளோப் விருது வென்றார்

இந்திய திரை இசையை ஒரு புதிய திசைக்கு அழைத்து வந்த சென்னை மொசார்ட் இந்திய இசைக்கு மேலும் ஒரு புகழ் சேர்த்திருக்கிறார்.

Slumdog Millionaire திரைப்படத்திற்கு அவருடைய இசை பங்களிப்பு ஏற்கனவே உலகமெங்கும் இசை அதிர்வுகளை ஏற்படுத்திவருகிறது. இசைப்புயலின் அந்த அதிர்வுகள் Gloden Globe விருதுகளையும் விட்டுவைக்கவில்லை. ஞாயிற்றுக் கிழமை கலிஃபோர்னியாவில் நடைபெற்ற 66வது Golden Globe விருது வழங்கும் விழாவில் இந்த விருதை வென்றுள்ளார். இதைத் தொடர்ந்து ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இத் திரைப்படத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் அவர் Andrew Lloyd Webberருடன் இணைந்து பணியாற்றிய இசை நாடகம் "Bombay Dreams" ஒரு இன்டர்நேஷனல் ஹிட். ஆனால் பிரிட்டிஷ் இயக்குனர் Danny Boyleன் "Slumdog" இரகுமானை அடுத்த தளத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது.

"நான் வெளிநாட்டில் விடுமுறைக்குச் சென்றிருந்தபோது இந்தப்படத்தில் பணிபுரிய வாய்ப்பு வந்தது. முழுவதுமாக தீர்மானிப்பதற்கு முன்னரே இந்தப் படத்தில் பணிபுரிய ஆரம்பித்துவிட்டேன். ஆனால் படத்தின் ஸ்கிரிப்ட் எனக்குள் இருந்த இசையை வெளிக் கொணர்ந்துவிட்டது" என்று இரகுமான் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

Youtubeல் பார்த்த வீடியோவில், விருதை கையில் வாங்கியவுடன் கூச்சத்துடன் "Unbelievable" என்று (30 வினாடி உரையை) ஆரம்பித்தார். பிறகு எதிர்பார்த்தது போலவே "Thanks to Alimighty God" என்று நன்றியுரையை துவக்கினார். தொடர்ந்து "Thanks to Billion people from India" என்று முடித்தார்.

அவர் அடிக்கடி சொல்வது போல "எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே"


இன்றைய தலைமுறைக்கு தனது இசையால் உலகம் அளந்த இரகுமான் ஒரு வழிகாட்டி. அதனால் எதிர்காலத்தில் இந்திய இசை இன்னும் பலமாக சர்வதேச அளவில் ஒலிக்கும்.
  
இன்று (14.01.09) என்டிடிவியில் ஒளிபரப்பான அவருடைய பேட்டியிலிருந்து சில துளிகள்
"ஸ்பீல்பெர்க் உட்பட நான் யாரையெல்லாம் பார்த்து வியந்து இரசித்தேனோ, அவர்களையெல்லாம் சந்தித்தேன். அவர்களின் கைதட்டலு்க்கிடையே விருது வாங்கினேன்.  இந்த விருது இந்திய இளைஞர்களை மேலும் ஊக்கப்படுத்தும். எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை தரும்."


"ஆஸ்கர் விருது பற்றி பெரிதாக எதிர்பார்க்கவில்லை. தற்சமயம் இந்த வெற்றியை சுவைத்துக் கொண்டிருக்கிறேன்."

"பணம் நம்மதியை தராது. பணத்தை வைத்துக்கொண்டு அமைதியை தொலைத்த சில மில்லியனர்களை பார்த்திருக்கிறேன். உலகின் எந்த மூலையில் வசித்தாலும் மக்கள் சந்தோஷமாக இருந்தால் அதுவே என் சந்தோஷம். "

விருது பற்றி சில குறிப்புகள் :
  • Golden Globe விருது என்பது ஆண்டுதோறும் HFPA என்ற அமைப்பினால் வழங்கப்படுகிறது. HFPA என்பது Hollywood Foreign Press Association என்பதின் சுருக்கம். 1944லிருந்து இந்த விருது வழங்கப்படுகிறது.
  • திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் சிறந்த வெளிநாட்டு (மற்றும் உள் நாட்டுத்) திறமையாளர்களை கண்டுபிடித்து ஊக்குவிப்பதற்க்காக இந்த விருது தோற்றுவிக்கப்பட்டது.
  • ஏ.ஆர்.ரஹ்மான் இந்த விருதை வென்ற முதல் இந்தியர்.
கொசுறு சந்தோஷம் : இரு வருடங்களுக்கு முன் (வரலாறு படம் ரிலீசுக்கு முன்னால்) நான் அவரை சந்தித்திருக்கிறேன். ஒரே ஒரு புராஜக்டில் அவருக்காக அவருடைய ஸ்டுடியோவில் ஒரு வீடியோ செய்திருக்கிறேன்.

Friday, January 9, 2009

சத்யம் என்கிற பொய் மெய்யானது எப்படி? ஒரு அலசல்

கோடிகளில் படிக்கும்போது தலை சுற்றுகிறது. இப்படி கூட நடக்க முடியமா என்று மனம் மலைக்கிறது. இது பொய்யா மெய்யா என்று குழப்பம் வருகிறது. அதனால் நமது சக பதிவர்களின் பதிவுகளின் 'அச்சச்சோக்கள்', தினமும் ஷேர் மார்க்கெட் பற்றி அலட்டும் நண்பர்களின் 'I know that'கள், பத்திரிகைகளின் 'கோடிகள் மாயம்' அலறல்கள், தொலைக் காட்சி செய்திகளில் பங்கேற்ற வல்லுனர்களின் 'It won't affect Indian Corporate Sector'கள் இவற்றைப் பார்த்து நான் புரிந்துகொண்டது என்னவென்றால் . . .

சத்யம் என்கிற பொய் மெய்யானது எப்படி?
நீங்கள் ஒரு கம்பெனி வைத்திருக்கிறீர்கள். வங்கியில் நயா பைசா இல்லை. ஆனால் ஒரு இலட்சம் இருப்பதாக கதை விடுகிறீர்கள். இன்னும் ஒரு இலட்சம் இருந்தால் பத்து இலட்சம் ஆக்கிவிடலாம் என்று மற்றவர்களை நம்ப வைக்கிறீர்கள். அவர்களும் ஒரு இலட்சம் தருகிறார்கள். உங்களைப் பொறுத்தவரையில் கம்பெனிக்கு முதல் ஒரு இலட்சம் வந்துவிட்டது. ஆனால் முதலீடு செய்த மற்றவர்களைப் பொறுத்தவரையில், ஏற்கனவே நீங்கள் (பொய்யாகச் சொன்ன) ஒரு இலட்சம், இவர்களுடைய ஒரு இலட்சம் இரண்டையும் சேர்த்து தற்போது கம்பெனியில் இரண்டு இலட்சம் உள்ளது.

ஆக கையிலிருக்கும் ஒரு இலட்சத்தை இரண்டு இலட்சமாக உலகத்துக்கு அறிவிக்கிறீர்கள். இதைப் பார்த்து மேலும் பலர் உங்கள் கம்பெனியில் முதலீடு செய்கிறார்கள். நீங்களும் வழக்கம் போல 5 இலட்சம் வந்தால் அதை 10 இலட்சம் என்றீர்கள். 20 இலட்சம் வந்தால் அதை 40 இலட்சம் என்றீர்கள். முதலீடு செய்தவர்கள் உங்களை சந்தேகப் படவில்லை. ஏனென்றால் நீங்கள் காண்பித்தது இலாபக் கணக்கு. உங்களை முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, ஷேர் மார்கெட்டும் நம்புகிறது. அரசாங்கமும் நம்புகிறது. வெளிநாட்டு நிறுவனங்களும் நம்புகின்றன. அல்லது அவர்களை நம்ப வைக்க நீங்கள் ஒரு 'இலாப நாடகம்' ஆடிக் கொண்டே இருக்கிறீர்கள்.

ஒரு கட்டத்தில் கம்பெனியின் வங்கியிருப்பு 5400 கோடி ரூபாயாகிறது. நீங்கள் 8000ம் கோடி ரூபாய் என்று அறிவித்தால் உங்கள் கம்பெனி என்ன ஆகும். இந்தியாவின் நான்காவது பெரிய ஐ.டி நிறுவனமாகும். சத்யம் நிறுவனம் அப்படித்தான் பொய்க் கணக்குகளால் விசுவரூபமெடுத்தது. இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி திறமையாக வழிநடத்தியவர் திருவாளர் ராமலிங்க ராஜீ. அவருடைய சரித்திரம் 'சத்யம் என்ற பெயரில் பொய்யை மெய்யாக்கிய சரித்திரம்'.

சத்யம் பொய்யென அம்பலமாது எப்படி?
Wine-Women-Wealth இந்த மூன்றும் அதிகமாகிவிட்டால் எப்பேர்பட்ட கொம்பனுக்கும் நிலை தடுமாறிவிடும். ராமலிங்க ராஜீ முதல் இரண்டு 'W'க்களில் எப்படி எனத் தெரியாது. ஆனால் மூன்றாவது 'W'வில் ஆள் படு வீக். குறிப்பாக நிலத்தை வளைத்துப்போட்டு மேல் விலைக்கு விற்பதில் பயங்கர கில்லாடி. இதெற்கென்றே ஒரு மெகா ரியல் எஸ்டேட் நிறுவனத்தை ஆரம்பித்தார். இன்றைக்கு ஆந்திராவிலுள்ள மிக முக்கியமான நிலங்களும், நில ஆவணங்கள் எல்லாம் இவருடைய குடும்பத்தாரின் பெயரில் உள்ளது. நிறுவனத்தின் பெயர் என்ன தெரியுமா? MAYTAS. SATYAM இந்த பெயரை அப்படியே ஒவ்வொரு எழுத்தாக பின்னோக்கி எழுதினால் அதுதான் MAYTAS. விதியின் விளையாட்டைப் பாருங்கள். தெரிந்தோ தெரியாமலோ சத்யம் ரிவர்ஸ் கியரில் பயணிக்க MAYTAS நிறுவனம்தான் காரணம்.

MAYTAS நிறுவனத்திற்கு பணம் எங்கிருந்து வந்தது?
திருவாளர் ராஜீ, நினைத்தபோதெல்லாம் தப்பான இலாப கணக்கு காட்டி பங்குச் சந்தையில் சத்யம் நிறுவனத்தின் விலை உயரும்படி பார்த்துக் கொண்டார். காரணம் SATYAM நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் ராஜீவிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் இருந்தன. அதனால் அவருக்கும், அவருடைய குடும்பத்துக்கும் கொள்ளை இலாபம். இலாபத்தை என்ன செய்வது? MAYTAS நிறுவனத்தில் முதலீடு செய்தார். MAYTAS நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக ஆந்திராவிலிருந்த நிலங்களை எல்லாம் வளைக்கத் தொடங்கியது.

SATYAM - MAYTAS பொய்யும் மெய்யும்
ஒரு புறம் பொய் பணத்தால் நிமிர்ந்து நிற்கும் SATYAM.
மறுபுறம் பொய்பணத்தால் சம்பாதித்த மெய் பணத்தால் நிமிர்ந்து நிற்கும் MAYTAS.
ராமலிங்க ராஜீ ஆந்திர மக்களின் கனவு நாயகாக உயர்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் வளையத்திற்குள் வந்தார். பொய் மூட்டையான சத்யம் நிறுவனத்தின் செல்வாக்கை வைத்து பில் கிளிண்டனை இந்தியாவிற்கு அழைத்து வந்தார். அப்போதைய லேப்டாப் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நெருங்கிய நண்பரானார். கேட்கவே ஆளில்லை. SATYAM செல்வாக்கை தந்தது. MAYTAS நிலங்களைக் குவித்தது.

ஆட்சி மாற்றம் - சத்யத்திற்கு வந்த சோதனை
ஆட்சி மாறியது. சந்திரபாபு நாயுடுவிற்குப் பதில் ராஜசேகர ரெட்டி வந்தார். இந்திய அரசியல் வழக்கப்படி, முந்தைய அரசின் செல்வாக்கான நபர்கள் எல்லாம் தற்போதைய அரசின் சந்தேக வலைக்குள் வந்தார். முதலில் சிக்கியவர் ராமலிங்க ராஜீ. ஆனால் நீண்ட காலம் அவரை ஒதுக்க முடியவில்லை. சத்யம் ஏற்படுத்திய ஒளிவட்டமும், MAYTAS நிறுவனத்தின் பண வட்டமும் தற்போதைய முதல்வரையும் மசிய வைத்தது. வலையை விரித்தவரே வலையில் வீழ்ந்தார். மீண்டும் அரசுக்கு நெருக்கமானார் ராஜீ.

நக்ஸலைட்டுகள் வழியாக முதல் புகைச்சல்
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய வளர்ச்சி பற்றிய சந்தேகங்கள் புகைய ஆரம்பித்தன. முதலில் பகிரங்கமாக எதிர்த்தவர்கள் ஆந்திர நக்ஸலைட்டுகள். பணத்தால் ஏழை நிலங்களை வளைக்கிறார் என்று போராடினார்கள். ஆனால் கொடி பிடித்தவர்கள் நக்ஸலைட்டுகள் என்பதால் மக்களின் கவனம் பெறவில்லை. பணக்கார மீடியாக்களும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டன.

மெட்ரோ ரயில் வடிவில் அடுத்த புகைச்சல்
அடுத்து வந்தது மெட்ரோ ரயில் புராஜக்ட். இந்த புராஜக்டுக்கு ஆலோசகராக திரு. Sridhar நியமிக்கப்பட்டார். Sridhar கடந்த ஆண்டின் 'மிகச் சிறந்த இந்தியராக' என்.டி.டிவியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மெட்ரோ ரயிலை தனி மனிதனாக போராடி டெல்லி மக்களுக்கு பெற்றுத் தந்த சாதனையாளர், நேர்மையாளர், அரசியல் மற்றும் பண சூழ்ச்சிகளுக்கு வளைந்து கொடுக்காதவர். ஆனால் அவரை வளைக்க நினைத்தார் ராஜீ. காரணம் மெட்ரோ ரயிலுக்கு தேவையான நிலங்களை வைத்திருந்தவர் ராஜீ, அதாவது அவருடைய நிறுவனமான MAYTAS. சாதா நிலங்களை விலை உயர்த்தி மெட்ரோ ரயில் திட்டத்திற்காக வாங்குமாறு திரு. Sridharஐ நிர்பந்தித்தார். அவர் இந்த ஊழலுக்கு உடன்பட மறுத்து கண்டனக்குரல் எழுப்பினார். எப்போதுமே நேர்மையின் குரல் அமுக்கப்படும். அதன்படியே ராஜீவைக் கண்டிக்க வேண்டிய அரசு திரு. Sridhar அவர்களை தேவையில்லை என திருப்பி அனுப்பியது. வழக்கம்போல பணக்கார மீடியாக்கள் இதையும் கண்டு கொள்ளவில்லை. எல்லாம் பணம் செய்யும் மாயம்.

கிளைமாக்ஸ்க்கு முந்தைய காட்சிகள் - உஷாரான ராஜீ
கொஞ்சம் கொஞ்சமாக புகைய ஆரம்பித்ததும் ராஜீ உஷாரானார். இங்கேதான் அவருடைய கிரிமினல் மூளை உச்சத்திற்கு வந்தது. அவருடைய முன்னேற்பாட்டின்படி மீண்டும் பொய்யான தகவல்களை வைத்து சத்யம் ஷேர் மார்கெட்டில் எகிறியது. அப்போது பெரும்பாலான ஷேர்களை வைத்திருந்த ராஜீவும், அவருடைய குடும்பத்தாரும், அவருடைய பணக்கார கிரிமினல் நண்பர்களும் தங்களுடைய ஷேர்களை விற்று பெரும் பணம் பார்த்தார்கள். அதாவது சத்யம் நிறுவனத்தின் மதிப்பு 8000ம் கோடி ரூபாயாக உயர்த்திக் காட்டப்பட்டபோது, சத்யம் நிறுவனத்தில் அவருக்கிருந்த பங்குகள் வெறும் 5% மட்டுமே. அதாவது இனிமேல் சத்யம் திவால் ஆனால் கூட ராஜீவிற்கும் அவருடைய குடும்பத்திற்கும் நயா பைசா கூட கையை விட்டுப் போகாது. நம்மைப் போன்ற அப்பாவிகளுக்குத்தான் பட்டை நாமம்.

ரியல் எஸ்டேட் வீழ்ச்சி - பொய்யின் முதல் வீழ்ச்சி
அமெரிக்க பொருளாதாரம் சரிந்தவுடன், அமைஞ்ச கரையில் நிலங்களின் விலை குறைந்தது. ஆந்திராவில் குறையாமலிருக்குமா? அங்கேயும் மளமளவென விலை சரிய ஆரம்பித்தது. கிளைமாக்ஸில் வில்லன் எதிர்பாராமல் ஏமாறுவது போல, ராஜீ எதிர்பாராத இந்த சரிவு அவருடைய ரியல் எஸ்டேட் பொக்கிஷமான MAYTAS நிறுவனத்தை பாதித்தது. என்ன செய்வது என யோசித்தார். அவருடைய கிரிமினல் மூளை மீண்டும் அபாரமாக வேலை செய்தது.

ஒரே கல்லில் பல மாங்காய் - MAYTAS, SATYAM-மாக மாற முயற்சித்தபோது
ஒரு புறம் 5400 கோடி ரூபாய் மதிப்புள்ள சத்யம் 8000 கோடி ரூபாயாக பொய் விசுவரூபம்.
மறு புறம் 7000 கோடி ரூபாய் மதிப்புள்ள MAYTAS அதளபாதாளத்தில் விழப் போகும் அபாயம்.
சத்யத்தில் பணமில்லை, ஆனால் இருப்பதாக கணக்கு. MAYTASல் பணம் உண்டு, ஆனால் ரியல் எஸ்டேட் வீழ்ச்சியால் கரைந்து கொண்டிருக்கிறது. தடுப்பது எப்படி? அப்போது உதயமான ஐடியாதான் SATYAM நிறுவனத்தின் (இல்லாத) பணத்தால் MAYTASஐ வாங்குவது.

அப்படி வாங்கிவிட்டால் சத்யம் நிறுவனத்திலிருந்து 7000ம் கோடி ரூபாய் அவருடைய குடும்பத்தினருக்கு வந்துவிடும். அதெப்படி...சத்யத்தில் இருப்பதே 5400 கோடி ரூபாய்தானே? பிறகெப்படி ஏழாயிரம் கோடி கிடைக்கும்? மீதி 1600 கோடிக்கு எங்கே போவது? நாமாக இருந்தால் இப்படித்தான் கவலைப்படுவோம். ஆனால் ராமலிங்க ராஜீவிற்கு இது ஒரே கல்லில் பல மாங்காய்கள். அக்கவுண்ட்சில் ஒரே ஒரு வரி எழுதுவது மூலம் 7000ம் கோடி ரூபாய் SATYAM நிறுவனத்திலிருந்து அவருடைய மனைவிக்கும் மக்களுக்கும் வந்துவிடும். ஆக MAYTAS நிறுவனம் Safe. இது முதல் மாங்காய்.

உண்மையில் கைமாறியது வெறும்(?) 5400 கோடி ரூபாய்தான். மீதி 1600 கோடி ரூபாய் பற்றி ராஜீ வாய் திறக்கமாட்டார். ஏனென்றால் இப்படி கை மாறியதன் மூலம் சத்யம் நிறுவனத்தில் 7000 கோடி ரூபாய் இருந்ததாக கணக்கில் வந்துவிடும். அதாவது இத்தனை நாள் வெளியில் சொல்லாமல் காப்பாற்றி வந்த பொய் உண்மையாகிவிடும். இதனால் SATYAM நிறுவனம் Safe. இது இரண்டாவது மாங்காய்.

எந்த பிரச்சனை வந்தாலும் உலகப் பொருளாதார பிரச்சனையால் ரியல் எஸ்டேட் அவுட், ஐ.டியும் அவுட். அதனால் சத்யம் நிறுவனமும் அவுட் என்று ஒற்றை வரியில் சொல்லி எஸ்கேப் ஆகிவிடலாம் . இது மூன்றாவது மாங்காய்.

புகைச்சல் கொளுந்துவிட்டு எரிந்த கதை - உலக வங்கி தடை மற்றும் போர்டு மெம்பர்கள் ராஜினாமா
சுருட்டுவதையெல்லாம் சுருட்டிக்கொண்டு, பட்சி பறக்கப் பார்க்கிறது என்று சிலர் மோப்பம் பிடித்துவிட்டார்கள். சில போர்டு மெம்பர்களுக்கு இது துளியும் பிடிக்கவில்லை. விஷயம் போர்டுக்கு வெளியே கசிந்தது. ரியல் எஸ்டேட் பிசினஸ் சரிந்து கொண்டிருக்கும் வேளையில் எதற்காக MAYTASஐ வாங்கி நஷ்டப் படவேண்டும் என்று பங்குதாரர்கள் எதிர்ப்பை காட்டினார்கள். இது ராமலிங்க ராஜீவிற்கு வந்த முதல் தோல்வி.

இதே வேளையில் உலக வங்கி சுதாரித்துக் கொண்டது. இல்லாத இருப்பைக் காட்டி உலக வங்கியிடமிருந்து சத்யம் நிறுவனம் பல சலுகைகளை அனுபவித்து வந்திருப்பதாக குற்றம் சுமத்தி அடுத்த 8 வருடங்களுக்கு தடை விதித்தது.

கிளைமாக்ஸ் - பொய்யை மெய்யாக்க நினைத்தபோது . . .
உலக வங்கியே தடை விதித்த போதும் ராஜீ தளரவில்லை. நான் நேர்மையாளன், என்னை சந்தேகப் படாதீர்கள் என்று தைரிய முகம் காட்டினார். உலக வங்கியை எதிர்த்து நோட்டீஸ் விட்டார். ஆந்திர மாநில அரசு அவருக்கு ஆதரவளித்தது. எனவே மீண்டும் இரு கம்பெனிகளையும் எதிர்ப்புகளையம் மீறி இணைக்க முயற்சித்தார். ஆனால் விஷயம் திடீரென பெரிதாகி தெருக்கோடி வரைக்கும் வந்தவுடன், இணைப்பு இல்லை என்று பின்வாங்கினார். இந்த நெருக்கடியில் சத்யம் நிறுவனத்தின் கணக்குகள் அலசப்பட்டன. ஊதிப் பெருசாக்கப்பட்ட ஊழல் விசுவரூபமெடுத்து. 5400 கோடி ரூபாய் 8000 கோடி ரூபாயாக போலியாக உயர்த்திக் காட்டப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

சத்யம் நிறுவனத்தின் ஆபீஸ் பியூன் முதல் பிசினஸ் பார்ட்னர்கள் வரை திடீரென ஒன்று திரண்டு நெருக்கடி தர ஆரம்பித்ததும், "ஆமாம்.. நான் தவறு செய்துவிட்டேன்" என்று ராஜீ குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

சத்யம் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு என்ன? பூஜ்யம்.
5040 கோடி ரூபாயை 7000 கோடி ரூபாயாக உயர்த்திக் காட்டினேன் என்று சொல்லி குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டு அவர் தலை மறைவாகிவிட்டார்.
ஆனால் அவர் சொல்லாமல் விட்டது என்ன தெரியுமா? சத்யம் நிறுவனத்திற்கு இருக்கும் 1000 கோடி ரூபாய் கடன். பிரச்சனை முற்றியவுடன் 140 ரூபாய்க்க விற்ற சத்யம் நிறுவனப் பங்கு பல்டி அடித்து 30 ரூபாய்க்கு வந்து விட்டது.

அதாவது சுருக்கமாகச் சொன்னால் சத்யம் நிறுவனம் இன்று ஒரு பூஜ்யம்.

யார் குற்றவாளி?
முதல் குற்றவாளி திருவாளர் ராமலிங்க ராஜீ.
அடுத்தது அவருக்குத் (கணக்கை திரித்து எழுத) துணைபோன ஆடிட்டர் கும்பல்கள்.
தப்பு செய்ய தைரியம் கொடுத்து, துணைபோன அரசியல்வாதிகள், அரசுகள்
எந்தக் கேள்வியும் கேட்காத வங்கிகள்.

கடைசியாக . . .
நமது சமூகம்தான் . . . நாம்தான் . . . குற்றவாளி. '50 பைசா சில்லறை இல்ல, இறங்கும்போது வாங்கிக்கோ' என்று சொல்கிற கண்டக்டரை சட்டையைப்பிடித்து மிரட்டுகிறது சமூகம். அதே சமயம் மினிமம் பேலன்ஸ் இல்ல, அதனால 500 ரூபாய் பிடிச்சிட்டோம் என்று சொல்கிற வங்கிக்கு இதே சமூகம் சலாம் போடுகிறது. பணக்காரனும், அதிகாரத்தில் இருப்பவனும் செய்வதெல்லாம் சரி. ஒரு வேளை அது தவறென்றாலும் அதை தட்டிக்கேட்க பயம். இது தான் இன்றைய நிலை.

இது மாறினால் சத்யம் சத்யமாகவே இருக்கும். இல்லையென்றால் சத்யம் SATYAMஆகத்தான் வலம் வரும்.