Thursday, February 8, 2007

தாமிரபரணி - திரைவிமர்சனம


ஆக்சன் காரம் பூசிய பேமிலி ஐஸ்கிரீம்.
மனைவியை பிரிந்து வாழும் தூத்துக்குடி உப்பு வியாபாரி - பிரபு, அவருடைய தங்கை ரோகிணியின் மகன் - விஷால். தனது மாமா பிரபுவை தெய்வமாக நினைக்கிறார். பிரபுவிற்கு ஏதாவது என்றால் அரிவாளை தூக்கிக் கொண்டு கிளம்பிவிடுவார்.
ஒரு கட்டத்தில் பிரபு தனது மனைவியை பிரிந்ததற்க்கு காரணமே தான் எனத் தெரியும்போது அதிர்கிறார். அது வரையில் விளையாட்டுப் பிள்ளையாக திரியும் விஷால்(படத்தில் அவர் பெயர் கெட்டவன்), பொறுப்பான பையனாக மாறி தனது மாமா பிரபுவின் வாழ்க்கை சீராக போராடுகிறார். அப்போது அவரும் அவருடைய குடும்பமும் சந்திக்கும் பிரச்சனைகளும், போராட்டங்களும்தான் கதை.


விஷால் போன்ற வளர்ந்து வரும் கதாநாயகர்களுக்கு ஏற்ற கதை. கொஞ்சம் பெரிய நடிகரை போட்டிருந்தால் கூட தியேட்டர் காலியாகியிருக்கும். (உதாரணமாக விக்ரம் நடித்த மஜா, நல்ல படம் என்றாலும் இது போன்ற படம் விக்ரம் போன்ற பெரிய நடிகர்களுக்கு சறுக்கலைத் தரும்.) இயக்குனர் Hari கதாநாயகனாக விஷாலை தேர்வு செய்ததிலேயே பாதி ஜெயித்துவிட்டார்.

துணைக்கு பிரபு (பாந்தமான நடிப்பு, ரொம்ப நாளைக்கப்புறம் 'விக்' சரியாக செட் ஆகியிருக்கிறது) மற்றும் நதியா (நல்ல கதாபாத்திரம் - கோபக்கார இளம் அம்மாவாக கச்சிதமாக நடித்திருக்கிறார்). நாசர் வழக்கமான வில்லன்(பாவம் அவருடைய திறமைக்கு தீனி இல்லை)

நயனதாராவை ஞாபகப்படுத்தும் புதுமுக நாயகி. வேஸ்ட். விஷால் இதில் புதிதாக எதையும் செய்யவில்லை. இருந்தாலும் கதையோட்டம் காரணமாக அலுக்காமல் அவரை பார்க்க முடிகிறது.

அமரன் படத்தில் வரும் ஐசாலக்கடி மெட்டுதானுங்க பாடலையும், கற்பூர நாயகியே என்ற எல்.ஆர்.ஈஸ்வரியிலன் அம்மன் பாடலையும் யுவன் ஷங்கர் ராஜா ரீ மிக்ஸ் செய்திருக்கிறார். இப்படியே படத்துக்குப் படம் செய்தால் ரீ மிக்ஸ் ராஜா என்று பெயர் வாங்கிவிடுவார். புதுப்பேட்டை படத்திற்குப் பின் பெரிதாக எதிர்பார்த்தேன். ஆனால் யுவன் சரியான பழைய பேட்டையாகிக் கொண்டிருக்கிறார்.

இயக்குனர் Hari படத்துக்குப் படம் புதிய களம் தேர்ந்தெடுக்கிறார். இதில் தூத்துக்குடியின் உப்பளம். எமோஷன்களை கையாளும்போது சரேலென அடுத்தக் காட்சிகளுக்கு தாவிவிடுகிறார். ஆக்சன்களை கையாளும்போது பரபரவென நீட்டி முழக்குகிறார். படத்தில் அடிக்கடி அரிவாள் வருவதால், ஆக்ஷன் படமோ எனத் தோன்றுகிறது. ஆனால் பிண்ணனியில் உள்ள குடும்பக் கதைதான் படத்தை தாங்கிப் பிடிக்கிறது. இதை இயக்குனர் சரியாக பேலன்ஸ் செய்துள்ளார்.

கொஞ்சம் பாசம், கொஞ்சம் இரத்தம் இரண்டும் கலந்த குடும்பக் கலவை - தாமிரபரணி. எல்லோரும் பாருங்கள் என்று சிபாரிசு செய்ய மனமில்லை. போகாதீர்கள் என்று தடுக்கவும் மனமில்லை. அதுதான் தாமிரபரணி.

No comments: