Friday, September 12, 2008

டப்பிங் பொங்கல்

"பொங்கல் ஸ்பெஷல் என்ன படம் போடப்போறீங்க?"

கேட்டவர் மார்கெட்டிங் ஹெட்.  இவர் யாரு என்னைக் கேட்க என்று கருவியபடி பதில் சொல்லத் தயங்கியவர் சேனலின் புரொகிராமிங் ஹெட். அதை வேடிக்கை பார்த்தது நான்.  

மார்கெட்டிங் தலைக்கு தமிழ் தெரியாது. புரொகிராமிங் தலைக்கு தமிழைத்தவிர எதுவும் தெரியாது.  குத்து மதிப்பான ஆங்கிலத்தில் இருவரும் சூடாகிக் கொண்டிருந்தார்கள்.  

"சார், படத்துக்கு கேப்சுலிங் (இடையில் விளம்பரங்களை சொருகுவதை) ஸ்டார்ட் பண்ணிடவா?" என்றபடி எடிட்டிங் ஹெட் என்ட்ரி கொடுத்தார். 

"என்ன படம்னு சொல்லு மேன்", கொதித்தார் மார்க்கெட்டிங்.
"நீங்க அவரை கேட்கக்கூடாது", இடை மறித்தார் புரொகிராமிங்.
"நான் அப்புறமா வரட்டுமா சார்", ஜகா வாங்கினார் எடிட்டிங்.

"அப்புறமெல்லாம் கிடையாது. நாளன்னைக்கு டிரையலர் ஏர்ல வரணும்"
"அதை நாங்க பாத்துக்கறோம். நீங்க ஏன் தலையிடறீங்க?"
"சார் நான் அப்புறமா வரட்டுமா சார்"

"இரு மேன்.  என்ன படம்னு சொல்லிட்டுப் போ.  ஸ்பான்சரர் கேட்கறான்"
"என்னையா கேட்டான். உன்னைதான கேட்டான். நீயே பதில் சொல்லு போ"
"சார் நான் அப்புறமா . . ."

"நீங்க சொல்லகாட்டி பரவால்ல. நான் காலையில சஜஸ்ட் பண்ண படத்தையே போடுங்க"   
"மார்கெட்டிங் டிப்பார்மெண்ட்ல இருந்து என்கிட்ட யாரும் பேசல?"
"என்கிட்ட சொல்லிட்டாங்க சார்"

"கரெக்ட். காலையிலயே சொல்லியாச்சு. நீங்க அந்த போலீஸ் படத்தையே கேப்சுல் பண்ணுங்க"
"எந்தப் படம்?"
"அது தெலுங்கு டப்பிங் சார்"

"அதைப் பத்தி பரவால்ல. அது ஆக்சன் படம். ஸ்பான்சரர் கன்வின்ஸ் ஆகிடுவான்.
"யோவ் இது தமிழ்நாடு, பொங்கல் பண்டிகைக்கு எவனாவது டப்பிங் படம் போடுவானா?"
"சார் சீக்கிரமா ஒரு முடிவெடுங்க சார்."

"அதான் காலையிலேயே முடிவெடுத்தாச்சே. அந்த தெலுங்கு டப்பிங் படத்தையே போட்ரு"
"என்னை கேட்காம எப்படி முடிவெடுப்பீங்க?  திருவிளையாடல் - சிவாஜி படம். பொங்கலுக்கு கலக்கலா இருக்கும்."
"ஆமா சார்"

"என்ன மேன் ஆமா?. ஸ்பான்சரர் ஒரு ஹெல்த் டிரிங்க் இன்ட்ரடியுஸ் பண்றான். அதுக்கு ஆப்டா ஆக்சன் படத்தையே போட்ரு. திருவிளையாட்டு, சாமி படம், பொங்கல்னு சொல்லி என் ஸ்பான்சரரை காலி பண்ணிடாதீங்க.  5 இலட்ச ரூபாய். அவன்தான் நமக்கு சாப்பாடு போடறான். 
ஆங்.... ஞாபகம் வந்திடுச்சு. படம் பேரு. இது தான்டா போலீஸ்."
"யோவ் திருவிளையாடல் படத்துக்கு பதிலா இதுதாண்டா போலீசா?. அதுவும் பொங்கலுக்கு"

புரொகிராமிங் அதிர்ச்சியாகி நிற்க, மார்கெட்டிங் அட்டகாசமாக சிகரெட் பற்ற வைக்க, எடிட்டிங் தனது அறைக்கு நுழைந்துவி்ட்டார்.

"இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக, பொங்கலை முன்னி்ட்டு அதிரடி ஆக்சன் திரைப்படம், இதுதாண்டா போலீஸ்"

சானல்களை ஆட்டிப் படைக்கும் மார்கெட்டிங் 'திருவிளையாடல்' இது தான்.

No comments: