Monday, September 15, 2008

ஜெயம் கொண்டான் - திரை விமர்சனம் (நேற்றுதான் பார்த்தேன்)

ரீ மேக் இரண்டுவகை.
சொல்லிவிட்டு ரீ மேக் செய்வது, நம்மை அறியாமலேயே ரீ மேக் செய்வது.
அந்த வகையில் ஜெயம் கொண்டான் இரண்டாவது வகை. இயக்குனர் கண்ணனுக்கு இது முதல் படம். மணிரத்தினத்தின் சீடர். அதனால் அவர் தன்னை அறியாமலேயே அக்னி நட்சத்திரத்தை ரீ மேக் பண்ணியிருக்கிறார்.

ஆனால் ரீ மேக் என்று சொல்லி சாதாரணமாக புறம் தள்ள முடியாத ஸ்கிரீன் பிளே, பக்கா ஸ்கிரிப்ட்.  அப்பா இறந்தபின் வேலையை உதறிவிட்டு இலண்டனில் இருந்து இந்தியா திரும்புகிறார் மகன். வந்தவருக்கு தொடரந்து அதிர்ச்சிகள். முதல் அதிர்ச்சி, அப்பாவுக்கு இருக்கும் இரகசிய இரண்டாவது குடும்பம். இரண்டாவது அதிர்ச்சி, சொந்த வீட்டை  விற்று பிசினஸ் துவக்க  முடியாமல் முட்டுக்கட்டை போடும் (இரகசிய அம்மா வழி) தங்கச்சி.

சொத்துக்காக சண்டை போடும், அண்ணன் தங்கச்சி குடும்பக்  கதையில் அட்டகாசமாக கிரைம் மசாலா தடவியிருக்கிறார் இயக்குனர்.  இருவரும் போட்டி போட்டுக் கொண்டு வீட்டை விற்க முயலும்போது, இயல்பாக கிரிமினல் பார்டிகள் கதையில் வந்து இணைந்து கொள்கிறார்கள்.

படத்தில் உறவுகள் இருவருக்கும், அண்ணன் தங்கை எனத் தெரியாமலேயே முதல் சந்திப்பு நிகழ்கிறது. படத்தில் அப்பா என்பவரின் போட்டோ கூட காட்டப்படவில்லை. ஆனால் அதை இரசிகர்கள் உணர முடியாத அளவிற்கு வேகமாக கதை நகர்கிறது. காரணம் சுறுசுறுப்பான, சின்னச் சின்ன சுவாரசியங்கள் நிறைந்த சம்பவங்கள்.

படத்தில் முதல் பாதியில் மறைந்துவிட்டு, பிற்பாதியில் இணையும் விவேக்கைத் தவிர முக்கிய கதா பாத்திரங்கள் அனைவரும் ஏதோ ஒரு திருப்பத்திற்கு உதவுகிறார்கள். படத்தின் ஆரம்பம் மற்றும் இடையில் வரும் சின்னச் சின்ன ஷாட்டுகளை பிற்பாதியில் இணைக்கும்போது, இயக்குனர் லேசுப்பட்டவர் இல்லை என்பது புரிகிறது.  உதாரணமாக மதுரைக்கார தாதாவுக்கு வைப்பாட்டியாகும் பெண், ரெஜிஸ்டிரார் ஆபீசில் கார் கண்ணாடியை ஏற்றும் காட்சியும், அதைத் தொடர்ந்துவரும் சண்டைக்காட்சியில் கண்ணாடியை சுத்தி பதம் பார்ப்பதும்.  சுத்தி பதம்பார்ப்பது அந்தக் கண்ணாடியை அல்ல, அந்தப் பெண்ணை என்பது படம் பார்க்கும் அனைவருக்கும் வலியுடன் உரைக்கிறது. ஆக்ஸிடெண்டைக் காட்டாமலேயே அதை உணர வைத்துவிட்டார் இயக்குனர்.

படம் முழுக்க அடிக்கடி மழை வருவது மணிரத்னம் பிராண்ட், விட்டுக் கொடுக்காத பிடிவாதமான ஆனால் மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் கேரக்டர்களும் மணிரத்னம் ஸ்பெஷாலிட்டிதான்.  மெளனராகம் கார்த்திக், தளபதி அரவிந்த் சாமி மற்றும் குரு மாதவன்களின் இன்னொரு பதிப்பு தான் இந்தப் படத்தின் ஹீரோ வினய்.

சிட்டி வாசனை அடிக்கும் அரைகுறை வில்லேஜ் ஹீரோயின்கள் இந்தப் படத்திலும் உண்டு. ரோஜா மதுபாலா, பாம்பே மணிஷா கொய்ரலா மற்றும் குரு ஐஸ்வர்யாராய் போல இந்தப் படத்தில் பாவனா.

அதே போல கனமான ஆண்குரலுடைய பெண்கள், மணிரத்தினத்தின் படங்களில் தொடரந்து வருவார்கள். இந்தப் படத்திலும் 'பிளாட் ஆண்டி' 90 சதவிகதம் ஆண் குரலில்தான் பேசுகிறார். ஹீரோயின் பாவனாவும் கிட்டத்தட்ட ஆண்குரலில்தான் பேசுகிறார்.

அண்ணனுடன் மோதும் 'லேகா', படிச்ச தங்கச்சிக்கு ஏற்ற தோற்றம். சிம்பு ஏன் தனது படத்திலிருந்து கழற்றிவிட்டார் என்று என்னால் யூகிக்க முடிகிறது. லேகா இன்னும் பல படங்களில் தங்கச்சி அல்லது அக்காவாக வரலாம். அல்லது ஹீரோயின் கூட வரலாம். இந்தப்படத்தில் நல்ல பெர்மாமன்ஸ், ஆனாலும் கதாநாயகியாக பிரகாசிப்பது கடினம்.

விவேக் இல்லாத நேரங்களை, சந்தானம் நிரப்புகிறார். சந்தானத்திற்கு நம்பிக்கை கூடி தைரியம் ஜாஸ்தியாகிவிட்டது தெரிகிறது. சகட்டு மேனிக்கு கவுண்டமணி ஸ்டைலில் அனைவரையும் ஏசுகிறார், எட்டி உதைக்கிறார்.

நேற்று வந்த நடிகர்கள் எல்லாம் 'புரட்சி தளபதி' ,'இளைய தளபதி' என்று தங்களைத் தாங்களே ஒரு கட்டத்திற்குள் அடைத்துக் கொண்டுவிட்டார்கள்.  வினய் முயன்றால் அவர்களை சைலண்டாக முந்தலாம். அலுக்காத முகவெட்டும், மோல்டிங் ஆகக் கூடிய திறமையும் இருக்கிறது.

வித்யாசாகர் பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை இரண்டும் சுமார்தான்.

மணிரத்னம் அடுத்தடுத்த தளங்களுக்கு உலக அளவில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, அவருடைய சிஷ்யர்கள்தான் தமிழ்நாட்டில் அவருடைய இடத்தை நிரப்ப வேண்டும். அறிமுக இயக்குனர் கண்டிப்பாக சாதிப்பார்.

இந்தப் படத்தின் ஜெயம் கொண்டான், இயக்குனர்தான்.
Post a Comment