Thursday, October 9, 2008

வணக்கம் கேப்டன்!

எனக்கு கபில்தேவை மிகவும் பிடிக்கும். ஏனென்றால் எந்த புரொமோட்டரும் இல்லாமல், லாபி செய்ய ஆளில்லாமல் வெறும் திறமையால் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான தலைவனாக திகழ்ந்த ஒரே வீரன் கபில்தேவ்.

இந்திய கிராமத்து இளைஞனுக்கே உரிய 'வெள்ளேந்தியான போராடும் குணம்' கபில் தேவின் குணம். கபிலை பொறுத்தவரை, ஜெயிப்பதை விட தொடரந்து போராடுவதுதான் முக்கியம். 1983ல் புரொடன்ஷியல் கப்பில் ஜிம்பாப்வேவிற்கு எதிராக 175 ரன்கள் குவித்ததது கபிலின் அசாத்திய போராட்ட குணத்திற்கு கிடைத்த வெற்றி. பிறிதொரு சந்தர்ப்பத்தில் இங்கிலாந்திற்கு எதிராக 15 ரன்கள் எடுத்தால் ஃபாலோ ஆனை தவிர்க்கலாம் என்ற நிலை. கபில் அசரவில்லை. தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை விளாசித் தள்ளினார்.

அவருடைய ஐ.சி.எல், அவரைப் போன்ற முத்துக்களை கண்டெடுக்கும் முயற்சி. வாய்ப்பு கிடைக்காமல் முடங்கிக் கிடக்கும் எத்தனையோ இளைய கிரிக்கெட் திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே ஐசிஎல் உதயத்திற்கு காரணம் என்று கபில் பிரகடனம் செய்தார். சொன்னபடி செய்தார். லொட்டு லொட்டு என்று கிழட்டு நடை பயின்று கொண்டிருந்த கிரிக்கெட்டுக்கு 20-20 வடிவம் கொடுத்து புத்துயிர் பெறவைத்தார். சாதாரண கிளப் போட்டிகளிலும், லீக் போட்டிகளிலும் மின்னிக் கொண்டிருந்த இளம் நட்சத்திரங்களை, இன்டர்நேஷனல் நட்சத்திரங்களுடன் விளையாட விட்டு, மாற்று இந்திய அணியை உருவாக்கும் அளவிற்கு புதுத்திறமைகளை அடையாளம் காட்டினார்.

உலகமே அதிசயித்தது. ஆனால் இந்திய கிரிக்கெட்போர்டுக்கு மட்டும் வயிறெறிந்தது. கபிலை நிராகரித்தது மட்டுமல்லாமல், ஐசிஎல் போட்டி நடத்த முடியாதபடி, அனைத்து விளையாட்டு மைதானங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. கபில் அசரவில்லை. மேலும் வேகமெடுத்தார். சாதாரண கிளப் மைதானங்களில், சர்வதேச தரத்தில் போட்டிகளை நடத்தி வெற்றி கண்டார். ஐசிஎல்லின் வெற்றியைக் கண்டதும், பதிலுக்கு இந்திய கிரிக்கெட் போர்டு பணத்தை வாரியிறைத்து ஐபிஎல்லை ஆரம்பித்தது. கிரிக்கெட்டையும், சினிமாவையும் கலந்து கவர்ச்சிகரமான பிரமாண்ட வெற்றி பெற்றது ஐபிஎல்.

இனி ஐசிஎல் அவ்வளவுதான் என்றார்கள். கபில் என்பவன் ஒரு போராட்ட வீரன். அவ்வளவு எளிதில் தோற்கடிக்க முடியாது. இதோ ஐசிஎல்லின் சீஸன் 2 தொடங்கிவிட்டது. "ICL is better in cricket but IPL was better in marketing,"என்று கபில் ஓபன் ஸ்டேட்மெண்ட் விடுத்தார். ஐபிஎல்லின் வெற்றியை மறுக்கவில்லை. சுத்தமான வீரன் எப்போதும் எதிராளியை குறைத்து மதிப்பிட மாட்டான். அதே போல மேலும் சிறப்பான மார்கெட்டிங் உத்திகளுடன் ஐசிஎல் சீஸன் 2ஐ கபில் துவக்கிவிட்டார்.

கிரிக்கெட்டை பொறுத்தவரை, ஒரு பந்தில் 6 ரன்கள் தான் அதிக பட்ச ரன்கள். ஆனால் இனி 9 ரன்கள் அதாவது "Niners" ஆட்டத்தின் விறுவிறுப்பை மேலும் அதிகப் படுத்தும். அதே போல கால்பந்து விளையாட்டில் இருப்பது போல "sky camera"க்கள் மேலும் உற்சாகமான அனுபவத்தை தரும். ஐசிஎல் சீஸன் 2ல் இதுபோன்ற கிரிக்கெட் சுவாரசியங்களுக்கு பஞ்சம் இல்லை.

கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியங்கள் ஐசிஎல்லை ஆதரிப்பதைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்துள்ளன. ஐசிசி எனப்படும் உலக கிரிக்கெட் வாரியமும் தற்போது ஐசிஎல்லை செவி மடுக்க ஆரம்பித்துள்ளது.

சென்ற முறை விளையாட மைதானங்களே இல்லாமல் தடுமாறிய ஐசிஎல் இம்முறை 50 கோடி ரூபாய் செலவில் அகமதாபாத்தில் ஒர விளையாட்டு மைதானத்தையே வாங்கி, சர்வதேச தரத்திற்கு மாற்றி விளையாடத் தயாராகிவிட்டது.

1983 உலகக் கோப்பை வெற்றியின் மூலம், இந்திய கிரிக்கெட்டிற்கு பெரிய அண்ணன் இமேஜை பெற்றுத் தந்தார் கபில். தற்போது ஐசிஎல்லின் ஆக்கமும் வளர்ச்சியும் உலக கிரிக்கெட்டையே மாற்றி யோசிக்க வைத்துள்ளது.

கபில் தேவின் இறக்கமும் ஏற்றமும், ஆர்வமும் போராட்ட குணங்களும் முன்னேற விரும்பும் ஒவ்வொரு இந்திய இளைஞனுக்கும் பாடம்.

அதனால்தான் இந்திய இராணுவம் கபிலுக்கு கெளரவ லெப்டினன்ட் கர்னல் பட்டம் கொடுத்து கெளரவித்துள்ளது. அந்த பதக்கத்தை நெஞ்சில் ஏந்தும் போது கபிலின் முகத்தில் தெறித்த உணர்ச்சிகள் அனைத்து இந்திய இளைஞனுக்கும் நாட்டுக்காக போராடும் துணிவையும், ஆர்வத்தையும் தரும்.

சல்யூட் கேப்டன் கபில்தேவ்!
Post a Comment