Friday, December 5, 2008

கடுப்'பூ' அல்ல சலிப்'பூ' - விமர்சனம்

படத்தின் ஆரம்பக் காட்சிகளில் காலில் எடைக் கல் விழுந்தால் கூட சிரிப்புடன் ஏற்றுக்கொள்ளும் பெண், கடைசிக் காட்சியில் கதறி அழுகிறாள். ஏன்? இதுதான் படத்தின் ஒன் லைன்.

சிறுகதையை நெடுங்கதையாக்கும்போது மூலக்கதையை சிதைக்காத பல சம்பவங்கள் தேவைப்படும். அது திரைக்கதையாகும்போது சுவாரசியமான காட்சியமைப்புகள் தேவைப்படும். பூவில் சுவாரசியமான காட்சியமைப்புகள் உண்டு. ஆனால் தொடர்ச்சியான சம்பவங்கள் இல்லை. அதனால் ஒரு நல்ல ஒரு பக்கச் சிறுகதையை இரண்டு மணிநேரம் படித்த ஒரு சலிப்பு ஏற்படுகிறது.

90களில் தமிழ்சினிமாவின் நிரந்தர காலேஜ் ஸ்டூடண்ட் முரளி என்ன செய்தாரோ, அதை பூவின் நாயகி காயத்ரி செய்திருக்கிறார். தன்னுடைய முறை மாமனின் மேலிருக்கும் காதலைச் சொல்ல முடியாமல் படம் முழுவதும் தவிக்கிறார், தவிக்கிறார்... படம் முடிந்த பின்னும் தவித்துக்கொண்டே இருக்கிறார்.

ஒரு இளம் மனைவியின் மறக்க முடியாத (திருமணத்திற்கு முந்திய) காதலைச் சொல்ல தைரியம் வேண்டும். அந்த தைரியத்திற்காக இயக்குனருக்கு சபாஷ். ஆனால் அவர் சொன்னது காதலை அல்ல. காதலைச் சொல்ல முடியாத வெறும் தவிப்பு என்பதுதான் படத்தின் மைனஸ்.

நகரப் பிண்ணனியிலிருந்து விலகி (பருத்தி வீரன் கொடுத்த தைரியத்தில்) வித்தியாசம் காட்டுவதற்காக வேட்டுக் கம்பெனிகளையும், கள்ளிப் பூக்களையும் காட்டுகிறார்கள். ஆனாலும் 'அழகிகளும், ஆட்டோ கிராப் நாயகிகளும்' ஞாபத்திற்கு வந்து படத்தில் ஒன்ற விடாமல் கெடுக்கிறார்கள். என் கூட வந்த நண்பர் படத்தை மிகவும் இரசித்தார். நான் யூகிக்கின்ற முக்கிய காரணம் அவர் 'அழகி, ஆட்டோ கிராப்' போன்ற படங்களை பார்க்கவில்லை.

படத்தில் வரும் அத்தனை உப பாத்திரங்களும் புது முகங்கள். ஆனாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 'பேனாக்காரர்', 'அலோ டீ கடைக்காரர்', 'மாரியின் அண்ணன்', 'மாரியின் கணவன்', 'மாரியின் தோழி', 'சூப்பர்வைஸர்' என எல்லோருமே மனதில் நிற்கிறார்கள். (அகத்தியனின் கோகுலத்தில் சீதை படத்தைப் போல) எல்லோரும் நல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் . . .

சொந்தத்தில் கல்யாணம் செய்தால் பிறக்கும் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்கின்ற கிளைமாக்ஸ் வாதத்துடன் பூவின் முறைமாமன் காதல் நிறைவேறாமல் போகும்போது, அழகியலுடன் அறிவியல் மிக்ஸ் ஆகி சட்டென படத்தின் மேல் ஒரு கடுப்'பூ' வருகிறது.

"தேவதைகள் வானத்திலிருந்து குதித்து விடுவதில்லை. மாமனுக்கு மகளாக பிறக்கிறார்கள். தேவதைகளை கைப்பிடிக்கும் அதிர்ஷ்டம் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. மீதி பேர் 'பூ' படத்தின் நாயகன் தங்கராசுவை போல மனமறுந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விடுங்கள், நமக்கே நமக்கென ஒரு மாரியம்மாள் இனிமேல் புதியதாகவா பிறந்து வரவேண்டும்?" என்று லக்கிலுக் ஆன்லைனில் விமர்சனம் படித்தேன். தங்கராசுவின் பார்வையில் சினிமா நகர்ந்திருந்தால் ஒருவேளை நானும் லக்கிலுக் போல நெகிழ்ந்திருப்பேன். ஆனால் நாயகி மாரியின் நோக்கில் கதை நகரும்போது என்னால் பெரிதாக ஒன்ற முடியவில்லை.

"பூ படத்தில ஓர் இடத்தில் மாரி “ கல்யாணமாயிருச்சுன்னா எல்லாத்தையும் மற்ந்துரனுமா என்னா? “ என்று கேட்பது காதல் வயப்பட்டு கைகூடாமல் போன எல்லா காதலர்கள் மனதிலும் எழும்பும் கேள்விதான்.. . ஓரு பெண்ணின் பார்வையில் அவளின் காதலை சொல்லும் பூ படத்துக்கு பெரிய வசூல் இல்லை என்பது இந்த ஆண் ஆதிக்க சமுதாயத்தினால்தானோ.. என்று தோன்றுகிறது.." என்று கேபிள் சங்கர் விமர்சித்திருந்தார். அவர் சொல்வது போல எனக்கோ பார்வையாளர்களுக்கோ தோன்றவில்லை. அதைப் பொறுத்தவரையில் இயக்குனருக்கு வெற்றிதான். ஆனால் காதலுக்குத் தொடர்பில்லாத, சொந்தத்தில் கட்டக் கூடாது என்ற ஒரு கருத்து திணிக்கப்பட்டவுடன், அடச் சே இதுக்காகத்தானா இவ்வளவு நேரம் . . . என்று தோன்றுகிறது.

படத்தின் டைட்டில் 'பூ'. ஆனால் எந்த இடத்திலும் பூவைக் காட்டவில்லை. பூக்களுக்குப் பதிலாக ஒரு கள்ளிப்பூவைப் போல படம் முழுக்க நிறைகிறார் நாயகி காயத்ரி. அபார திறமை.

இசை சுமார். இசையமைப்பாளர் இது போன்ற படங்களுக்கு இசையமைக்க உட்காரும்போது, பிண்ணனி இசை ஆசான் இளையராஜாவின், படங்களை பார்த்துவிட்டு அமர்வது நல்லது.

எத்தனை நொட்டைகள் சொன்னாலும், இது இயக்குனர் சசியின் சீரியஸ் முயற்சி என்பதில் சந்தேகமில்லை. வாரணம் ஆயிரம் படத்தை பார்த்தபின்னும் கெளதமின் மேல் எனக்கு இதே எண்ணம்தான் தோன்றியது.

இரண்டுக்கும் ரிசல்ட் ஒன்றுதான். ஆழமில்லை!

1 comment:

மங்களூர் சிவா said...

படம் சுமார்தானா???
:((

இன்னும் பாக்கலை.