Friday, December 5, 2008

பணக்காரருக்கு கொடுத்தால் அது subsidy. ஏழைக்கு கொடுத்தால் அது இலவசம்

சென்ற மாதத்தில் ஒருநாள்! சென்னை புரசைவாக்கம்! வழக்கம் போல காருக்குள் அமர்ந்து கொண்டு நாங்கள் டிராபிக்கில் வியர்த்துக்கொண்டிருந்தோம். சைக்கிள்காரர்கள் திரும்பிப் பார்க்காமல் குறுக்கே பாய்ந்து லாரி மற்றும் மாநகரப் பேருந்துகளின் பிரேக்குகளுக்கு டெஸ்ட் வைத்துக் கொண்டிருந்தார்கள். மோட்டர் பைக்கர்கள் காதுக்கும், தோள் பட்டைக்கும் இடையில் மொபைல் போனை பதுக்கி, யாரிடமோ இன்னும் ஐந்து நிமிடங்களில் வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு சிவப்பு சிக்னல்களைத் தாண்டினார்கள். ஷேர் ஆட்டோவில், பிதுங்கி வழிந்த லேட் ஆபீசர்களுக்குப் பயந்து நாங்கள் பயணம் செய்த கார் இடது பக்கம் ஒதுங்க, எதிரில் மிரண்டு போன மாடு ஒன்று வலது பக்கம் சாலைக்குள் பாய்ந்து மொத்த டிராபிக்கையும் நிறுத்தியது.

பிரேக்கையும், ஹாரனையும் ஒரே அமுக்காக அமுக்கிய நண்பர், "சை! இப்பவே இப்படி இருக்கிறது. இன்னும் ஒரு லட்ச ரூபாய்க்கு கார் வந்திடுச்சின்னா அவ்வளவுதான்" என்றார்.
"ஏன்?", இது நான்.
"ஏன்னா? இப்பவே பாருங்க ரோடுல இடமில்ல. டாடா நேனோ காரை கொண்டு வந்துட்டான்னா, அவனவன் ஒரு லோனை போட்டிருவானுங்க. எல்லாம் ஆளுக்கொரு காரை வச்சுக்கிட்டு தெருவை அடைச்சுக்குவானுங்க"
"அதுதான் நிறைய பிரிட்ஜ், சப்-வேல்லாம் கட்டுறாங்களே?"
"எத்தனை கட்டுனாலும், ஒரு லட்ச ரூபா கார் வந்தா நாஸ்திதான். அதனால் ரோடு ஃபிரியா இருக்கணும்னா, இந்த ஒரு லட்ச ரூபா கார் வரக் கூடாது. இவனுங்க கார் வாங்க கூடாது"
"நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?"
"என்னது?"
"ஒரு லட்ச ரூபா கார் வரட்டும்"
"ம்.."
"அவனுங்க பஸ்ல, பைக்ல போறத நிறுத்திட்டு கார் வாங்கட்டும்"
"ம்.."
"இதே தெருவுல கன்னா பின்னான்னு என்ஜாய் பண்ணி ஓட்டட்டும். "
"ரோட்டுல இடமிருக்காது அண்ணே!"
"அதுக்குதான் நான் இப்ப ஐடியா சொல்றேன் தம்பி! நாமளும், அவனுங்களும் ஆளுக்கொரு கார்ல போனாதான இடமிருக்காது. இனிமே அவனுங்க மட்டும் கார் ஓட்டட்டும். நாம கார்ல போறத விட்டுட்டு பஸ்லயும், பைக்லயும் போகலாம். ஓகேவா?"

என் நண்பர் பதில் சொல்லவில்லை. பதிலுக்குப் பதிலாக கோபமாக ஆக்ஸிலேட்டரை அழுத்தி சரக்கென வேகமெடுத்தார். இந்தியாவின் தற்போதைய ஸோ கால்டு பணக்காரர்கள் என் நண்பரின் ஜெராக்ஸ் காப்பிகள்தான். இந்தியாவின் சந்தோஷங்கள், வளர்ச்சிகள், செல்வாக்குகள் எல்லாம் தங்களுக்கு மட்டும்தான் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களை விட பண அந்தஸ்தில் கீழாக இருப்பவர்களுக்கு இவற்றில் எந்தப் பங்கும் இல்லை என்று கூசாமல் சொல்கிறார்கள்.

இவர்கள் அரசாங்கத்திடம் உதவி கேட்டால் அதற்குப் பெயர் 'Subsidy'. ஏழைகள் கேட்டால் 'இலவசம்' என்று ஒரு விளக்கம் வைத்திருக்கிறார்கள்.
இவர்கள் 'மும்பை தாஜ் ஹோட்டலில்' தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டால் மொத்த இந்தியாவையும் பொங்கியெழுந்து போராடச் சொல்கிறார்கள். மற்றவர்கள் 'சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனில்' பாதிக்கப்பட்டால் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றக் கூட மறக்கிறார்கள்.

எப்போதுமே தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் இந்த சிந்தனைதான் 'தீவிரவாதத்தின் முகம்'. இந்த தீவிரவாத முகங்கள் இந்தியா முழுவதும் நிறைய உள்ளன.

5 comments:

Anonymous said...

நிதரசனமான உண்மை. தாங்கள் மட்டுமே நன்றாக வாழத் தகுதி உள்ளவர்கள் என்ற கோணல் புத்தி உள்ள மனிதர்கள்.

ஆட்காட்டி said...

வருத்தப் பட வைக்கப் போகும் யதார்த்தம்.

Anonymous said...

Well Said!

youtubeuser said...

Good one boss

மங்களூர் சிவா said...

/
இவர்கள் 'மும்பை தாஜ் ஹோட்டலில்' தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டால் மொத்த இந்தியாவையும் பொங்கியெழுந்து போராடச் சொல்கிறார்கள். மற்றவர்கள் 'சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனில்' பாதிக்கப்பட்டால் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றக் கூட மறக்கிறார்கள்.
/

உண்மை மிக வருத்தமான விசயம் :(((((((((((