Friday, January 23, 2009

80 வருட காத்திருப்பு - ஆஸ்கர் பற்றி ஏ.ஆர்.இரகுமான்

ஆலால கண்டா ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க!
எனை ஆடாம ஆட்டி வைத்தாய் வணக்கமுங்க!

பல பாடல்கள் செவிகளில் மட்டுமே ஒலிக்கும். வெகு சில பாடல்கள் மட்டுமே உணர்வுகளில் கலக்கும். சங்கமம் திரைப்படத்தில் வரும் இந்தப் பாடல் அரிதான உணர்வுகளின் சங்கமம். இந்தப் பாடல் ஒரு மகன் தனது தந்தைக்கு செலுத்துகிற இசைக் காணிக்கையாகவே எனக்குத் தோன்றும். அதற்குப் பொருத்தமாக தகப்பன் ஸ்தானத்தில் எம்.எஸ்.வியின் மந்திரக் குரலும், மகன் ஸ்தானத்தில் ஏ.ஆர்.இரகுமானின் உணர்வுகளை உலுக்கும் இசையும் ஆழ்மன அதிர்வுகளை மீட்டும்.

“We have been waiting for this for nearly 80 years, haven’t we? I am so elated” 
ஸ்லம் டாக் மில்லியனர்' திரைப்படத்திற்க்காக இரண்டு பிரிவுகளில் மூன்று பரிந்துரைகளைப் பெற்றவுடன், இந்து நாளிதழுக்காக அளித்த பேட்டியில், ஏ.ஆர்.இரகுமான் கூறிய வார்த்தைகள் இவை. 80 வருட காத்திருப்பு என்று அவர் கூறிய வார்த்தைகளை அவருடைய இசை முன்னோர்களுக்கு அவர் செய்திருக்கும் மரியாதை என்று நான் நினைக்கிறேன்.

ஜி.இராமநாதன், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா என்ற தமிழ் இசைக் குடும்பத்தில் ஏ.ஆர்.இரகுமான் முன்னவர்களின் மகனைப் போன்றவர். இன்றைக்கு இந்த 'இளைய மகன்' ஆஸ்கர் விருதுகளின் வாசலில் நிற்கிறார். தந்தையின் ஸ்தானத்தில் இருக்கும் எம்.எஸ்.வி, இளையராஜா போன்றவர்களும் ஞானத்தில் குறைந்தவர்கள் அல்ல.

ஆனால் ஒரு குடும்பத்தில் மகன் தலையெடுத்து தனது தந்தையின் பெருமையை உலகுக்குச் சொல்வது போல, ஏ.ஆர்.இரகுமானின் வெற்றி எம்.எஸ்.வி, இளையராஜா போன்றோரின் ஸ்வரக் கலவைகளையும் நாளைய உலகம் நினைவில் வைக்க உதவும்.

நீ உண்டு உண்டு என்ற போதும்
இல்லை இல்லை என்ற போதும்
சபை ஆடிய பாதமைய்யா
நிற்காது ஒரு போதும்.

80 வருடங்களாக இந்தியாவின் தென் மூலையிலிருக்கும் ஒரு மாநிலத்தின் சாதாரண இசையாக உணரப்பட்ட ஸ்வரங்கள் இன்று உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

மேல்தட்டு சாஸ்திரிய இலக்கணங்களில் கட்டுப்பட்டிருந்த இசையை மெல்லிசையாக்கி நாட்டுப் புறங்களிலும்  உலவ விட்டவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.

அந்த நாட்டுப் புறத்திலிருந்து புறப்பட்டு சிம்பொனி இசையின் உன்னதங்களை எளிய அன்னக்கிளியின் ராகங்களோடு உலவ விட்டார் இசை ஞாநி இளையராஜா.

டிஜிட்டல் யுகம் பிறந்த போது ராக், ஜாஸ், ரெகேக்களுடன் சூஃபி இசையும், ஹிந்துஸ்தானியின் ஸ்வரங்களும், கர்நாடக இசையும் கலந்து சிலிக்கன் சில்லுகளில் கடல் தாண்டினார் இரகுமான்.

இல்லை..இல்லை என்று ஒதுக்கிய இசைகளை
எம்.எஸ்.வி, இளையராஜாவைத் தாண்டிய மூன்றாவது தலைமுறை இரகுமான் உண்டு .. உண்டு...என்று உலகை ஒப்புக் கொள்ள வைத்திருக்கிறார்.


இன்று ஆஸ்கர் விருதுகளின் செவிகளைத் தொட்டிருக்கிற ஏ.ஆர்.இரகுமானின் இசை மேற்கத்திய இசை அல்ல. தமிழகத்திலிருந்து புறப்பட்டுள்ள இந்திய இசை.

At last western world accepted Indian Music
கோல்டன் குளோப் விருது பெற்றவுடன் ஏ.ஆர்.இரகுமான் சொன்ன வார்த்தைகள் இவை.

என் காலுக்கு சலங்கையிட்ட
உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா
உன் கட்டளைகள் உள்ள வரைக்கும்.


இனி ஏ.ஆர்.இரகுமானைத் தொடர்ந்து உலகம் முழுக்க இந்திய இசை ஒலிக்கும்.

வணக்கம் வணக்கமுங்கோ!
ஐயா எம்.எஸ்வி!! ஐயா இளையராஜா!!
உங்களுக்கு சகோதரன் ஏ.ஆர்.இரகுமான் சார்பில் வணக்கம் வணக்கமுங்கோ!!
வணக்கமுங்கோ... வணக்கமுங்கோ!

ஜெய் ஹோ!

13 comments:

Jeevan said...

உங்கள் எழுத்து இனிமை செல்வா.

ஆனால் ஒன்று
ரகுமானின் பாடல்களுக்கு விருது கிடைக்கப்பெறவில்லை.
திரைப்படத்துக்கான பின்னணி இசைக்கே விருது வழங்கப்பட்டிருக்கிறது.

நாம் பெரும்பாலும் பாடல்கள் குறித்தே சிந்திக்கிறோம்.
உலக திரைப்பட விழாக்களில் திரைப்படத்தின் ரீரெக்காடிங் எனும் பின்னணி இசைக்கே விருது வழங்கப்படுகிறது.

இசைக்கான விருது தனியே உண்டு.
மியுஸிக் அவார்ட் எனும் பெயரில்.

ஒரு சிறு திருத்தம்.

நம்மவர் ஒருவருக்கு விருது கிடைத்தது நமக்கே கிடைத்தது மாதிரி மகிழ்ச்சி..

www.ajeevan.ch

ISR Selvakumar said...

நன்றி அஜீவன்,
இந்தியாவைப் பொருத்தவரை இசை என்றால் அது 'பாடல்கள்'தான்.

பிண்ணனி இசை பற்றிய விழிப்புணர்வு இசைஞானியின் வருகைக்குப் பின் அதிகமாக உணரப்பட்டுள்ளது.

//ஆனால் ஒன்று
ரகுமானின் பாடல்களுக்கு விருது கிடைக்கப்பெறவில்லை.//
நீங்கள் குறிப்பிட்ட இந்த விஷயம் சரிதானா என்பதை மீண்டும் உறுதிப் படுத்திக்கொள்ளவும். ஏனென்றால் கோல்டன் குளோப் விருது அவருடைய 'ஜெய் ஹோ' என்ற பாடலுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்கருக்கும் 'ஜெய் ஹோ' பாடலுடன் சேர்த்து 'ஓ சாயா' என்கிற பாடலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எது எப்படியிருந்தாலும் இரகுமானின் இந்த ஆஸ்கர் நுழைவு நம் அனைவருக்கும் பெருமைதான்.

RAMASUBRAMANIA SHARMA said...

Excellent Article...A.R.REHMAN...ONE OF THE GREATEST MUSIC DIRECTOR OF INDIAN CINEMA...NOW ALSO FOR WORLD CINEMA...HE HAS ALREADY PROVED HIS TALENTS THRU MANY SUPER HIT SONGS..."VANDE MATHARAM"...ONE OF THE GREATEST SONG OF INDIAN FREEDOM STRUGGLE...HAS BECOME POPULAR IN NOOK AND CORNER..THRU A.R.REHMAN's MUCIC(I AM NOT EXAGGERATING...ITS BEEN TOLD BY SEVERAL LEGENDS)...."ACADEMY AWARDS"....A.R.R.REHMAN ALREADY REACHED MORE THAN THAT STAGE...LIKE ALL THE GREAT PEOPLES, HE IS VERY HUMBLE...

RAMASUBRAMANIA SHARMA said...

Y.P.

MUTHU said...

“We have been waiting for this for nearly 80 years, haven’t we? I am so elated”

இந்த பெருந்தன்மை தான் அவரை இவ்வளவு உயரம் அழைத்து வந்துள்ளது

Jeevan said...

// கோல்டன் குளோப் விருது அவருடைய 'ஜெய் ஹோ' என்ற பாடலுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது.//

ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட பிரிவுகள் விவரம்:

பெஸ்ட் ஒரிஜனல் ஸ்கோர் - ஏ.ஆர்.ரஹ்மான்
சிறந்த ஒரிஜினல் பாடல் 'ஜெய் ஹோ..' - ஏ.ஆர்.ரஹ்மான்
சிறந்த ஒரிஜினல் பாடல் 'ஓ சாயா…' - ஏ.ஆர்.ரஹ்மான்
சிறந்த படம் - ஏ காலண்டர் பிலிம்ஸ் புரடக்ஷன், கிறிஸ்டியன் கோல்சன்
சிறந்த ஒளிப்பதிவு - ஆன்டனி டோட்மென்டில்
சிறந்த அடாப்டட் திரைக்கதை - சைமன் பியூஃபோய்
சிறந்த எடிட்டிங் - கிறிஸ் டிக்கென்ஸ்
சிறந்த திரைப்பட எடிட்டிங் - கிறிஸ் டிக்கென்ஸ்
சவுண்ட் எடிட்டிங் - டாம் சேயர்ஸ்
சிறந்த இயக்குனர் - டானி பாய்ல்

நீங்கள் சொல்வது சரி செல்வா.

சாதாரணமாக இங்கு பின்னணி இசைக்கே விருது கொடுப்பதுண்டு.

இளையராஜா அவர்கள் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ நல்ல இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள்.

ஆனாலும் என் மனதை பின்னணி இசையால் கவர்ந்தவர் இளசுதான்.

இருந்தாலும் நம்மில் ஒருவருக்கு விருது கிடைக்கும் போது அது நமக்கு கிடைத்தது போன்ற நெகிழ்வை தருகிறது.ரகுமான மேலத்தேசத்தோடு ஒத்துப் போகிறார். அது அவருக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

வலைப்பூக்களில் உங்கள் எழுத்து என்னை கவர்ந்ததாக சொல்வதிலும் மகிழ்ச்சி.

தொடர்ந்து பயணியுங்கள்.

அஜீவன்
www.ajeevan.com

Anonymous said...

ஏ.ஆர் ரகுமானின் இசையை விட உங்கள் எழுத்து சுகமான சங்கீதம்

butterfly Surya said...

ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதால் ஏ.ஆர்.ரஹ்மானை கொண்டாடும் அதேவேளையில், அதே படத்துக்காக சவுண்ட் மிக்ஸிங் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட மற்றொரு இந்தியரான ரெசுல் பூகுட்டியை கொண்டாட வேண்டியது கட்டாயமே!


ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ரிச்சர்ட் பிரைகேவுடன் இணைந்து சிறந்த சவுண்ட் மிக்ஸிங்கிற்கான ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார், பூகுட்டி!


அண்மைக்காலமாகவே உலக அளவிலான சினிமாவில் குறிப்பிடத்தக்க சவுண்ட் மிக்ஸிங் கலைஞர்களுள் ஒருவராக போற்றப்பட்டு வருகிறார், இவர்!


கஜினி, பிளாக், சாவரியா, காந்தி மை ஃபாதர் உள்ளிட்ட பல படைப்புகளுக்கு சவுண்ட் டிசைனிங் கலையில் மகத்தான பங்களிப்பை அளித்தவர்.

கேரளாவைச் சேர்ந்த 36 வயது ரெசுல், புனே திரைப்பட கல்லூரியில் பயின்றவர். கடந்த 12 ஆண்டுகளாக சினிமாவில் இயங்கி வருபவர்.

தன்னை வெளியுலகிற்கு வெகுவாக வெளிப்படுத்திக் கொள்வதை தவிர்க்கும் ரெசுல் பேட்டி ஒன்றில் இப்படிச் சொல்கிறார்...


"மெயின்ஸ்ட்ரீம் சினிமாவில் நான் இயங்கி வந்தாலும், மற்றொரு பிரிவாக கருதப்படும் தீவிரப் படைப்புகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறேன். என்னுடைய நண்பர்களில் பலரும் கூட மிகச் சிறந்த கதைகளுடன் என்னை அணுகிறார்கள். ஆனால், அத்தகைய அற்புத கதைகளை படமாக்க அவர்களிடம் பணம் இல்லை. என்னால் இயன்றவரை அவர்களைப் போன்றவர்களை அடையாளம் அவர்களுடனும் பணிபுரிந்து வருகிறேன்."


இத்தகைய உன்னத கலைஞராக விளங்கும் ரெசூலையும், ரஹ்மானுடன் கொண்டாடுவோம்!

ISR Selvakumar said...

வண்ணத்துப்பூச்சியாரே,
உங்கள் பெயரைப் போலவே ரெசூல் பூக்குட்டியின் பெயரும்.

நீங்கள் குறிப்பிட்டது போல பூக்குட்டியாரும் கவனிக்கப் படவேண்டிவயர்தான்.

அவரைப் பற்றிய முதல் தகவலை உங்களிடமிருந்து பெற்றுள்ளேன்.

மேலும் பல தகவல்கள் கிடைத்தவுடன் அவரைப் பற்றியும் எழுதலாமென்றிருக்கிறேன்.

ISR Selvakumar said...

அஜீவன்,
ஆஸ்கர் விருது பட்டியலை வழங்கியதற்கு நன்றி.

ISR Selvakumar said...

இஸ்மாயில் மற்றும் அஜீவன் அவர்களுக்கு,
எனது எழுத்து தங்களைக் கவர்ந்திருப்பதில் மகிழ்ச்சி.

அது சிறப்பாக இருக்கிறதென்று நீங்கள் கருதினால்,
எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே..

ISR Selvakumar said...

முத்து,

நான் ஏ.ஆர்.இரகுமானுடன் அவருடைய ஸ்டுடியோவில் (வீடியோ புராஜக்டுக்காக)இரு வாரங்கள் பணி புரிய நேர்ந்தது. அவருடன் பேசியது சில மணித் துளிகள்தான்.

ஆனால் அந்த சில மணித் துளிகள் போதும் அவருடைய குணங்களை கணிக்க.

நீங்கள் கூறியது போல அடக்கமும், எளிமையும் இசையைப்போலவே ஏ.ஆர்.இரகுமானுக்கு இயல்பாக உள்ளது.

புருனோ Bruno said...

//ரகுமானின் பாடல்களுக்கு விருது கிடைக்கப்பெறவில்லை.//

???