Tuesday, January 20, 2009

பாரக் ஹீசைன் ஒபாமா - தடுமாறுவாரா? தடம் மாற்றுவாரா?

உலகமே ஒருவரை உற்று நோக்கினால் என்னவாகும்?
இன்று அமெரிக்க அதிபராக பதவி ஏற்றிருக்கும் ஒபாமாவைக் கேளுங்கள், பதில் சொல்லுவார்.

1861ல் ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிள் சாட்சியாக, அமெரிக்காவின் 44வது அதிபராக பதவிப் பிரமாணம் எடுக்கும்போது, பாரக் ஹீசைன் ஒபாமா, ஒரு கணம் தடுமாறித்தான் போனார்.

கிட்டத்தட்ட பத்து  இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் முன்னிலையில், வாஷிங்டன் சதுக்கத்திற்கு எதிரிலிருந்து காப்பிடல் மாலில் சில மணி நேரங்களுக்கு முன்னால் ஒபாமா அமெரிக்க அதிபராக பதவி ஏற்றார், அல்லது சுமையை ஏற்றார்.

"இன்றைக்கு நம் முன்னால் இருக்கின்ற சவால்கள் அத்தனையும் நிஜம்" , தனது ஏற்புரையில் ஒபாமா அழுத்திச் சொன்னது இதைத்தான். போர், வேலையின்மை, நிதி பற்றாக்குறை போன்ற காரணங்களால் தடுமாறிக் கொண்டிருக்கும் அமெரிக்காவை ஒபாமா எப்படி காப்பாற்றுவார் என்று உலகமே ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் போல பார்த்துக்கொண்டிருக்கிறது.

"நம்மை அச்சுறுத்தும் சவால்கள் பல. அவைகளை ஒரு குறுகிய காலத்தில் வெல்லுவது கடினம். ஆனால், இது அமெரிக்கா. சவால்கள் தோற்கடிக்கப்படும்", என்று எச்சரிக்கையும், நம்பிக்கையும் கலந்து ஏற்புரையாற்றினார் ஒபாமா.


ஆனால் "சவால்களை குறுகிய காலத்தில் பிரச்சனைகளை சமாளிக்க முடியாது என்று கவலைப்பட ஆரம்பித்திருக்கும் ஒபாமா, பதவி ஏற்கும் போதே சில நிமிடங்களை இழந்துவிட்டார்"

ஒரு ஆப்பிரிக்க தந்தைக்கும், வெள்ளைக்கார அம்மாவுக்கும் பிறந்த 47வயது ஒபாமா, அவருடைய மனைவி லிங்கனின் பைபிளை ஏந்தியிருக்க,பதவி ஏற்கும்போது குறிப்பிட்ட நேரம் கடந்து சில நிமிடங்கள் தாமதமாகியிருந்தது.

வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம், வழக்கத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு, வழக்கத்தை மீறி ஒரு கருப்பின மனிதன் அமெரிக்க ஜனாதிபதி என பல வழக்க மீறல்களுடன் உலகத்தின் ராஜாவாகியிருக்கிறார் ஒபாமா.  வழக்கமாக எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளின் உரைகளிலும் உற்சாகம் கொப்பளிக்கும். ஆனால் ஒபாமாவின் உரையில் அது மிஸ்ஸிங்.

"But he downplayed deliberately"
"NO..he is already tensed"
என்று மீடியாக்கள் வழக்கம் போல வார்த்தைகளை அவரவர் பார்வையில் கூறு போட ஆரம்பித்துவிட்டன.


"அரசு மயமாக்கல், கல்வி, மாற்று எரிசக்தி, நவீன ஆனால் மலிவான தொழில் நுட்பம், இவைகளை முன்னிலை படுத்தி வேலை வாய்ப்பை பெருக்குவதுதான் உடனடி இலக்கு". அதற்காக கடுமையான ஆனால் துரிதமான “bold and swift” நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

மக்களிடம் ஓட்டு கேட்டு சென்ற போதும் கொஞ்சம் கடுமையாகத்தான் பேசினார். "அரசாங்கமே அனைத்தையும் செய்யாது. ஆனால் நிச்சயமாக அதற்கு ஒரு தனி மனிதனை விட சக்தி அதிகம். அரசாங்கத்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியும், சுத்தமான உணவும் குடிநீரும்,  மருத்துவ வசதிகளும், பாதுகாப்பான விரைவான சாலையும் வழங்க முடியும். அதை எனது தலைமையில் அமையும் அரசு செய்யும் என்றார்."

கிட்டத்தட்ட அதன் தொடர்ச்சியாக "இன்று முதல் எழுந்து நில்லுங்கள், பிரச்சனைகளை தூசு தட்டி கவனம் கொள்ளுங்கள், அமெரிக்காவை மீண்டும் உருவாக்குவோம். begin again the work of remaking America" என்று முழங்கினார்.

காலை 5 மணி முதலே ஒபாமாவுக்காக காத்திருந்த ஆப்பிரிக்க அமெரிக்க கூட்டம் ஆர்ப்பரித்தது. அவர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் உரையாற்றியபோதிருந்த அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு பதவி ஏற்பு விழாவில் நிச்சயம் இல்லை. ஆனாலும் உறைய வைக்கும் குளிரிலும், குளிரிலும் வெப்பத்தைக் கக்கிய அடர்த்தியான போக்குவரத்து நெரிசலிலும் மக்கள் கூட்டம் 'ஒபாமா...ஒபாமா' என்று கோஷமிட்டபடி காத்திருந்தது ஒரு வரலாற்றுப் பதிவுதான்.  குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மிக நம்பிக்கையுடன், இவன் நம்ப ஆளு என்கிற தோழமையுடன் வந்திருந்தார்கள். கூட்டத்தின் பெரும் பகுதி அவர்கள்தான்.

முன்னாள் குத்துச்சண்டை வீரர் நோய்வாய் பட்டிருந்த நிலையிலும் குளிரை பொருட்படுத்தாமல் ஒபாமா பதவி ஏற்பு விழாவிற்கு வந்திருந்தார். போட்டோவில் அவரை அடையாளம் தெரிகிறதா பாருங்கள்.


வெளியே சிரித்தாலும், உள்ளுக்குள் ஒபாமாவின் வெற்றியை கேலி செய்து கொண்டும், சீக்கிரமே தோற்று வீழ்ந்துவிடுவார் என்று எதிர்கட்சிகளும், (2002ல் ஒபாமாவை கட்சி மாநாட்டு பந்தலுக்குள் விடாத)உள்கட்சி நிற வெறியர்களும் காத்திருக்கிறார்கள்.

அவர்களையும் தனது பேச்சில் இடித்துரைக்க மறக்கவில்லை ஒபாமா. 'எங்களை இழிவு படுத்துபவர்கள், தங்களது கால்களுக்கு கீழே நிற்க வழியில்லாமல் பூமியை நழுவ விட்டுக்கொண்டிருக்கிறார்கள்", என்றார்.

"இந்த அரசு பெரியதா சிறியதா என்பது முக்கியமல்ல. இந்த அரசு செயல் படுமா? இதுதான் இன்று உள்ள மிக முக்கியமான கேள்வி. இந்த அரசு நல்ல சம்பளத்துடன் வேலை தந்து குடும்பங்களை வாழ வைக்குமா? வயதான காலத்தில் நல்ல ஓய்வூதியம் தருமா?" இந்த கேள்விகளுக்கு விடைதருவதுதான் நமது செயல் திட்டம் என்றார்.


ஒபாமாவின் பதவி ஏற்பு விழாவிற்கு வந்த மக்கள் கூட்டம் ஒரு கின்னஸ் சாதனையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சாலைகளும், சுரங்கப்பாதைகளும் நிரம்பி வழிந்தன. எங்கும் கார்களும், மனிதத்தலைகளும் குளிருக்கு அஞ்சாமல் பெருகிக் கொண்டே இருந்தன. பலர் கார்களை பல கிலோ மீட்டர்களுக்கு முன்பே நிறுத்திவிட்டு நடந்தே வந்தார்கள். காலை 5.30 மணியிலிருந்து 8 மணிக்குள்ளாக இரண்டரை மணி நேரத்திற்குள் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பேர் சில சுரங்கப் பாதையை பயன்படுத்தினார்களாம். காலை பத்து மணி அளவில் ஒரு சிறிய விபத்து பல மைல்களுக்கு போக்கு வரத்தை நிறுத்தியதாம்.

விழாவில் பிரார்த்தனை நேரத்தின் போது பிஷப் T.D. Jakes, ஒரு பைபிள் வாசகத்தை வாசித்தார்.  “In time of crisis, good men must stand up”; “You cannot change what you will not confront,” and “You cannot enjoy the light without enduring the heat.” பிரச்சனைகள் தலை தூக்கும்போது நல்லவர்கள் துணிந்து நிற்க வேண்டும்.நேருக்கு நேர் சந்திக்காமல் நாம் எதையும் மாற்ற முடியாது. வெப்பத்தை சகித்துக் கொள்ளாமல் வெளிச்சம் பெற முடியாது"

ஒபாமா "Change" என்கிற மந்திர வார்த்தையைச் சொல்லி ஆட்சியை பிடித்திருக்கிறார். பதவிப் பிரமாணத்தின் போது ஏற்பட்ட சிறு தடுமாற்றம் தொடருமா? தடுமாற்றம் மடியுமா?

உலகம் காத்திருக்கிறது.

6 comments:

பிரேம்குமார் அசோகன் said...

நான் தான் முதல் கமெண்ட் கொடுக்கிறேன் (என்ன ஒரு அல்ப சந்தோஷம்)

பிரேம்குமார் அசோகன் said...

சுமையை ஏற்றிருக்கிறார் என்பதே நிதர்சனம்..அமெரிக்காதான் உலகின் தாதா என்ற நிலைப்பாடு தகர்தெறியப்பட்ட சூழலில், ஒபாமாவை உலகின் ராஜா எனக் கூறுவது சரியா சார்...?
நிகழ்வை ரசனையுடன் எடுத்துரைக்கும் பதிவு இது!!

பாலா said...

parkkalaam

Pallava Naadan said...

Wait and see whether OBAMA has mouth only to give speech.... or ...?

ARV Loshan said...

நல்ல பதிவு.. அருமையான எழுத்து நடை.. நேரடி வர்ணனை போலவும் இருந்தது. ஆனால் உங்கள் பார்வையும் புரிந்தது..
இதே நிகழ்வு பற்றிய என் பதிவையும் பாருங்கள்..

http://loshan-loshan.blogspot.com/2009/01/blog-post_21.html

anuncia said...

good one.we will definitely see what obamma will do