Saturday, October 17, 2009

திரு.சிவகுமார் அவர்களிடம் நான் சொல்ல மறந்தது என்ன?


”அறுபது வயசுக்கு மேல ஆச்சு. எத்தனையோ படம் நடிச்சிருக்கார். ஆனா இத்தனை வருஷத்துல இப்பதான் முதன் முதலா ஒரு நல்ல படத்துக்கு டிக்கெட் குடுத்திருக்கார்.”

ஒரு பிரபல நடிகரை இப்படி கலாட்டா செய்தது என் சித்தப்பா சோலை.  அதை ஜாலியாக எடுத்துக் கொண்டு இரசித்து சிரித்த அந்த நடிகர், அவருடைய நண்பர், ஓவியர், கம்ப ராமாயணப் பேச்சாளர் திரு. சிவகுமார்.

பெரிய மனிதர்களை நெருக்கத்தில் பார்க்கும்போது, அவர்களிடம் சொல்ல நினைக்கும் பல விஷயங்கள் மறந்துபோகும். இன்றைக்கு என் சித்தப்பாவுடன், திரு.சிவகுமார் அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்தபோது ஒரு விஷயத்தை அவரிடம் மறக்காமல் சொல்ல நினைத்து, கடைசியில் மறந்து போனேன். அது . . .?

”டேய் சிவகுமார் போன் பண்ணினாரு. சத்தியம் தியேட்டர்ல ஆதவன் படத்துக்கு ரெண்டு டிக்கட் இருக்காம். நாலு மணிக்கு கிளம்பி வா. அவரை பார்த்து ரெண்டு வார்த்தை பேசிட்டு, படம் பார்த்துட்டு வந்துடலாம்”, என்று செல்போனில் என் சித்தப்பா சொன்னார்.

”ஓ.கே. சித்தப்பா”, என்று சொன்ன அடுத்த ஒரு மணி நேரத்தில் நாங்கள் திரு.சிவகுமார் வீட்டில் ஆஜர்.

”வந்துட்டியா . . . வாடா. . . வாடா. . .”, என்று சித்தப்பாவை அழைத்தவர், ”இது யாரு? ஐ.எஸ்.ஆர் பையனா? வாப்பா. . . நல்லா இருக்கியா?” என்று என்னையும் நலம் விசாரித்தார்.

எனது சித்தப்பா சோலை, நடிகர் சிவகுமாரின் நெருங்கிய நண்பர். அவரது நெருக்கத்தின் காரணமாகவே, எனது தந்தையின் மறைவுக்குப் பின்னும் எங்கள் வீட்டில் நடந்த அனைத்து குடும்ப விழாக்களுக்கும் திரு.சிவகுமார் அவர்கள் வருகை தந்தார். எனது தங்கை திருமணத்தின் போது அவர் பரிசளித்த, அவரே வரைந்த காந்தி பென்சில் டிராயிங், 15 வருடங்களுக்குப் பின்னும் எங்கள் வீட்டு சுவற்றை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது.


”டேய். இன்னைக்கு ஹிண்டு பேப்பர் படிக்க சொன்னேனே, படிச்சியாடா?, இது திரு.சிவகுமார்.
”இல்லையே. நான் போய் வாங்கறதுக்குள்ள எல்லா பேப்பரும் வித்துடுச்சு”, இது என் சித்தப்பா சோலை.
”பாத்தீங்களா? எப்படி இருக்கான்? எடைக்கு எடை போடறதுக்கு கூட சில பேர் பேப்பர் வாங்கறதில்ல. இன்னைக்கு ஹிண்டு பேப்பர்ல என்னை பத்தி வந்திருக்கு. சேலம் சோனா காலேஜ்ல நான் பேசினதபத்தி சினிமா பிளஸ் பகுதியில போட்டிருக்கான். படிடான்னா . . . படிக்காம வந்துட்டு என்னையே கிண்டல் பண்றான். ஆமா நீங்க படிச்சீங்களா?”, அவர் பேசுவதைக் கேட்டு தலையாட்டிக் கொண்டிருந்த நண்பரும் இல்லையென்றார்.
”க்கும் . . . எல்லாம் ஒரே ரகம்”

தலைவர்கள், சமூக அந்தஸ்தில் பெரியவர்களாக இருப்பவர்கள் போன்றோர் தனது நண்பர்களுடன் ”வாடா...போடா” என்று மனது விட்டு ஜாலியாக பேசும், எந்த பாசாங்கும் இல்லாத, இறுக்கமற்ற நிமிடங்களை நான் எப்போதுமே சுவாரசியமாக படிப்பேன். இன்று திரு.சிவகுமாரும், எனது சித்தப்பாவும் ஒருவரை ஒருவர் கலாட்டா செய்து பேசிக் கொண்டிருந்தபோது நான் என்னை மறந்தேன்.

ஆதவன் படத்தின் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு எழுந்தோம். 
”போய் பார்த்து என்ஜாய் பண்ணுங்க. நானே இன்னும் படம் பார்க்கல. நாளைக்குதான் வீட்டோட போகப்போறேன்”
”ஓ...நீங்க நடிக்கலன்னவுடனே வீட்டோட போய் பார்க்கற தைரியம் வந்திடுச்சா”
”டேய் . . . போடா . . .போடா. . .தம்பி நீ நாளைக்கு மறக்காம விஜய் டிவியில நான் பேசுறதை பாரு”.

”சரி சார்” என்று எழுந்தேன். எழும்போது எதையோ மறக்கிறேன் என்று தெரிந்தது.

நாங்கள் விடை பெற்று வெளியே வந்தோம். தற்செயலாக டிக்கட்டை திருப்பி பார்த்தேன். டிக்கெட்டின் பின்னால் சோலை என்று எழுதியிருந்தது.
”பார்த்தியாடா . . . எவ்வளவு ஆர்கனைஸ்டா இருக்காரு. இத்தனை பிசிக்கு நடுவுலயும், சும்மா ரெண்டு டிக்கட்டை தூக்கி குடுக்காம பேரை எழுதி வச்சு, கரெக்டா குடுக்கறாரு” என்று வியந்தார் என் சித்தப்பா.

அடுத்த வினாடி திரு. சிவகுமார் அவர்களிடம் நான் எதை சொல்ல மறந்தேன் என்பது ஞாபகம் வந்தது. அது . . . தீபாவளி வாழ்த்து! அதனால் என்ன . . . இந்த பதிவின் வழியாக அவருக்கு வாழ்த்து சொல்லிவிடுகின்றேன்.

தீபாவளி வாழ்த்துக்கள்!!!
Post a Comment