Wednesday, October 14, 2009

அன்பே சிவம் வாழ்வே தவம் : கமல் - ரஜினி என்கின்ற இரு மேதைகள்!



”சார் நான் போகணும்?”

அவர்(AVAR) திரைப்படத்திற்கான ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்காக ஒத்திகையுடன் கூடிய தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மிக மும்முரமாக விதம் விதமாக நடித்து அசத்திக் கொண்டிருந்த அந்த இளம் நடிகர், திடீரென ஸ்விட்ச் போட்டது போல நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

”சார் நான் போகணும்?”

”ஏன்?” என் குரலில் நான் வெளிக்காட்டாத ஒரு கோபம் இருந்தது.

”விஜய் டிவியில கமல் புரோகிராம் பார்க்கணும்.”

சட்டென என்னுடைய கோபமும் ஆர்வமாக மாறிவிட்டது.

"OK. Pack Up!"

எவ்வளவு மும்முரமான வேலையாக இருந்தாலும் பாதியில் முடித்துக் கொள்ள தூண்டும் அளவிற்கு விஜய் டிவி இரண்டு நாட்களாக எனது கவனத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டது. காரணம் கமல் என்கிற மகா கலைஞனுக்கு நடந்த பாராட்டு விழா நிகழ்ச்சி. நிகழ்ச்சி முழுவதும் கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்த கமலும், அருகில் அமர்ந்திருந்த ரஜனியும் ஒட்டு மொத்த தமிழகத்தையும் கட்டிப் போட்டுவிட்டார்கள் என்பதில் துளியும் ஐயமில்லை.

ஏற்கனவே ரஜினியும், கமலும் என்ன பேசினார்கள் என்பதை நான் பல வலைப்பதிவுகளில் படித்து நெகிழ்ந்து போயிருந்தேன் என்றாலும், இந்த நிகழ்ச்சிக்காக காத்திருந்தேன். குறிப்பாக ஆனந்த விகடனில் வந்திருந்த கட்டுரை படிக்கும்போதே கண்களை பணிக்கச் செய்தது. எத்தனை முறை அந்த கட்டுரையை வாசித்தேன் என்று எனக்கே தெரியவில்லை.

இரண்டு நாட்களாக இடையில் வந்த விளம்பர இம்சைகளை பொறுத்துக் கொண்டு, ரிமோட்டை கையிலெடுக்காமல் நிகழ்ச்சியை தொடரந்து இரசித்தேன். கிட்டத்தட்ட நானும் அந்த ஸ்டேடியத்தில் ஒருவனாக அமர்ந்திருப்பது போல உணர்ந்தேன்.

உன்னைப் போல் ஒருவன் படம் வெளியானதிலிருந்தே கமலின் ஆக்கிரமிப்பு எனக்குள் பெருகிக் கொண்டே இருக்கின்றது. காரணம் திரைப்படத்திற்கு வெளியே அதற்கான புரோமஷன் நிகழ்ச்சிகளில் கமலின் ஆத்மார்த்தமான பங்களிப்பு. கலைஞர் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் சேரன், லிங்குசாமி, மிஷ்கின், அமீர் ஆகியோருடனம் கமல் உரையாடியபோது மாணவர்களுடன் ஒரு பேராசிரியர் உரையாடியதைப் போலத்தான் இருந்தது. நானும் என் வீட்டிலேயே ஒரு கடைசி பெஞ்ச் மாணவனாக அமர்ந்து கமல் கூறிய கருத்துக்களை குறிப்பெடுத்துக் கொண்டேன்.


விஜய் டிவியில் இரசிகர்களுடன் உரையாடினார். கமலைக் கண்டதும் மாணவி ஒருத்தி கண்கலங்கி பரவசமடைய, கமலும் குரல் கம்ம விழியோரம் ஒரு துளி கண்ணீர் சிந்தினார். அந்த வினாடியிலிருந்து ஏனோ தெரியவில்லை, கமல் என்கிற மேதை எனக்குள் விஸ்வரூபம் எடுத்து உயர்ந்து கொண்டே இருக்கின்றார். அதைத் தொடர்ந்து கமலின் பல படங்களை நான் தொடர்ந்து பார்த்து பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டே இருக்கின்றேன். இந்த ஞாயிற்றுக் கிழமை குருதிப்புனல் பார்த்தேன்.

இரண்டு நாட்களாக ஒளிபரப்பாகிய இந்த பிரமாண்டமான பாராட்டு விழா, ஒரு தனி மனிதனை திகட்டத் திகட்ட பாராட்டுவதற்க்காக நடந்த நிகழ்ச்சிதான். வெவ்வேறு மனிதர்களிடமிருந்து வெவ்வேறு விதமாக வெளிப்பட்ட ஒரு தனி மனித பாராட்டுதான். கமல் கூட தனது ஏற்புரையில் அதை குறிப்பிட்டார்.

ஆனால் கமல் என்கிற மேதை ஒரு தனி மனிதனல்ல. 50 ஆண்டு கால சினிமா அனுபவம். பல வேதனைகளையும், சாதனைகளையும் ஒரு சேர தாங்கி நிற்கின்ற மகானுபவம். கடந்ததை மறந்து எப்போதும் அடுத்ததை நோக்கிய மாபெரும் தேடல். உழைப்பு! உழைப்பு! உழைப்பு!

அதனால்தான் தென்னிந்தியத் திரை உலகின் அத்தனை ஜாம்பவான்களும் திரண்டு வந்திருந்தார்கள். அவர்கள் முகம் நிறைய சந்தோஷமும் நிறைவும் இருந்தது. அவர்களுடைய உணர்வுகள் என்னையும் தொற்றிக் கொண்ட பின் என்னை நானே புதிதாக உணர்கின்றேன்.

கமல்-ரஜினி போன்ற அடக்கமும், தன்னம்பிக்கையும், துடிப்பும், சாதனையும் நிரம்பிய இரு மாபெரும் கலைஞர்கள் உள்ள தமிழ் சினிமாவில் நானும் நுழையப்போகிறேன் என்பதை நினைக்கும்போது எனக்கே பரவசமாகத்தான் இருக்கின்றது. இவர்களைப் போல மேதைகளை பார்த்துவிட்டு உள்ளே நுழையும்போது கர்வம் தொலைந்து, பணிவு பெருகி மிகச் சிறியவனாக உணர்கின்றேன். நான் கடக்க வேண்டிய தொலைவுகளை எந்த பயமும் இன்றி நம்பிக்கையுடன் அணுகும் மனநிலைக்கு வந்துவிட்டேன். செய்யும் தொழிலே தெய்வம், செய்வன திருந்தச் செய், கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்ற எண்ணங்கள் மேலோங்க இன்னமும் தன்னம்பிக்கை கூடி துடிப்பாக உணர்கின்றேன்.

”ஷோ எப்படி இருந்தது?”, நான் இரவு மணி 12ஐ நெருங்குகையில் மாலையில் ஒத்திகை பார்த்த நடிகரை செல்போனில் அழைத்தேன்.

”என்னை அறியாமல் கண் கலங்கிட்டேன் சார் . . . கமல் - ரஜினி மாதிரி ஜாம்பவான்கள் இருக்கறி ஃபீல்டுல நானும் ஒரு நடிகனா நுழையப்போறேன்னு நினைச்சா பயமும், பெருமையும் கலந்து வருது சார்”

அதற்கப்புறம் அவர் சொன்னது எதுவும் எனது நினைவில் இல்லை. கிட்டத்தட்ட அவருடைய மன நிலைதான் எனது நிலையும்.

விரைவில் நான் இயக்கும் ”அவர்” திரைப்படம் உங்கள் பார்வைக்கு வெளிவரும். ஒரு ஏகலைவனாக இருந்து கமல்-ரஜினி போன்ற துரோணாச்சார்யார்களிடம் நான் பெற்ற பாடம் ”அவர்” திரைப்படத்தை வெற்றிப்படமாக அமைத்துத் தரும் என்று நம்புகிறேன்.

மிகச் சிறந்த நண்பர்களாக, நடிகர்களாக, மனிதர்களாக மிகப்பெரிய ஆளுமையைக் கொண்டிருக்கும் ரஜினிக்கும் கமலுக்கும் எனது மானசீக வணக்கங்களும், நன்றியும்!

அன்பே சிவம்! வாழ்வே தவம்!

14 comments:

APSARAVANAN said...

நல்ல பதிவு. தங்களது "இவர்" படம் வெற்றியடைய வாழ்த்துகள். இந்த படத்தை பற்றிய மற்ற விஷயங்களை எங்கே தெரிந்து கொள்வது..? தயவு செய்து அந்த தகவலை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சின்னக்குட்டி said...

வணக்கம் செல்வக்குமார் ..நீங்கள் நடிகர் ஐ.எஸ்,ஆர் அவர்களின் மகனா..மிக்க மகிழ்ச்சி..நீங்கள் டைரக்ட் செய்து வெளிவர இருக்கும் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

கீழே உள்ளவை உங்கள் தந்தை ஐ.எஸ்.ஆர் பற்றிய ஒரு குறிப்பு ...பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் அவர்கள் ஒரு கட்டுரையில் கூறியது

பரீட்சார்த்த முயற்சிகளில் பத்மஸ்ரீ ஜெமினிகனே~;, நடிகை ஸ்ரீவித்யா, ஐ.எஸ்.ஆர். போன்ற தென்னிந்தியக் கலைஞர்களும் நமது இலங்கைக் கலைஞர்களும் ஒருவரையொருவர் சந்திக்காமலேயே தனித்தனியாகவே ஒலிப்பதிவு செய்து பின் தொகுத்துத் தயாரித்த அனிச்சமலர்கள் (எம்.அ~;ரப்கான் எழுதியது).

ரயில் பயணத்தில் நடைபெறும் சம்பவங்களை மையமாக கொண்ட நாடகத்துக்காக, ரயிலிலேயே ஒரு நீண்ட பயணம்செய்து பின்னணி ஒலிக்கோர்வையை தத்ரூபமாக வைத்துத் தயாரித்த சக்கரங்கள்
.

ISR Selvakumar said...

வருகைக்கு நன்றி திரு. சரவணன் அவர்களே.
அவர் திரைப்படத்திற்கான இணையதளம் தயாராகிக் கொண்டிருக்கின்றது. விரைவில் அது பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்கின்றேன்.

ISR Selvakumar said...

சின்னக்குட்டிக்கு மாபெரும் வணக்கங்கள். எனது தந்தை ஐ.எஸ்.ஆர் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு எங்கள் குடும்பத்தாரின் சார்பாக மிக மிக நன்றி! எனது தந்தையார் இறந்து 15 வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்னமும் பலரின் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பது சினிமா தந்த வரம்.

குறிப்பாக அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீது, பல வருடங்களுக்கு முன்பு எனது தந்தையைப் பற்றிய நினைவலைகளை சன் டிவி வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டதாக ஒரு நண்பர் மூலம் அறிந்தேன். காலம் மறந்து போன எத்தனையோ கலைஞர்களை தனது அறிவிப்பின் மூலமாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் அப்துல் ஹமீது அவர்களுக்கும் இந்தப் பதிவின் மூலம் எனது வணக்கத்தையும், நன்றியையையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முரளிகண்ணன் said...

தங்கள் அவர் படத்திற்க்கு வாழ்த்துக்கள்.

ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கேன்

வடுவூர் குமார் said...

இரண்டு நாட்களும் அந்த நிகழ்ச்சிக்காவே காத்திருந்து பார்த்தேன்.முதல் நாள் ராதிகா அசத்தினால் மறு நாள் விவேக் தூக்கி சாப்பிட்டுவிட்டார்.எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டது ரஜினிகாந்த்தின் பேச்சு தான்.முழுநாள் நிகழ்ச்சியில் யாரும் உணர்ச்சிவசப்படாது வித்தியாசமாக இருந்தது.

ISR Selvakumar said...

முரளிகண்ணன்,
முதல் பட இயக்குனராக நானும் ”அவர்” முழு உருவம் பெறும் நாளை எதிர்நோக்கி ஆவலாக இருக்கின்றேன்.

ISR Selvakumar said...

வடுவூர் குமார்,
நேர்த்தியாக நிகழ்ச்சியை நடத்திய விஜய் டிவியை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

இனி இப்படி ஒரு நிகழ்ச்சியை விஜய் டிவியே நடத்த முடியுமா என்றால் சந்தேகம்தான்.

Suresh said...

அவர் படத்திற்க்கு வாழ்த்துக்கள் :-)

ISR Selvakumar said...

வாழ்த்துகளுக்கு நன்றி சுரேஷ்!

பிரேம்குமார் அசோகன் said...

மனதில் பதிந்தவர்கள் கமல், ரஜினி மட்டுமல்ல... அரங்கமும், மிகப் பிரம்மாண்டமான ஒளித் திரைகளும் தான்!
சர்ச்சைகளின் கையில் சிக்கி சுழன்று கொண்டிருக்கும் பிரபுதேவா கூட நிகழ்ச்சியின் ஹை-லைட் தான். வார்த்தைகள் கிடைக்காமல் வெள்ளந்தியாய் பேசி, ஒத்திகை இல்லாமல் நடனமாடி அசத்தினார்!

அருமையான பதிவுக்கு நன்றி சார்!

'அவர்' திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள்,நடிகர்களைப் பற்றி தனியாக பதிவிடலாமே...

ISR Selvakumar said...

என்ன பிரேம்,
கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டு அசத்தறீங்க!

நீங்கள் சொன்னது போல ”அவர்” படம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் பதிவு எழுதும் எண்ணம் இருக்கின்றது.

அதற்க்கான ஆயத்த வேலைகள் துவங்கிவிட்டன.

பிரேம்குமார் அசோகன் said...

//என்ன பிரேம்,
கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டு அசத்தறீங்க!//
எல்லாம் உங்க கடைக் கண்(ணாடி) பார்வையில் படுவதற்காகத்தான் சார்!!

ம் என்று ஒரு வார்த்தை சொல்லுங்க சார்... கட்டபொம்மன் வசனத்தையோ, அல்லது சுள்ளான் கத்தலையோ மனப்பாடம் செய்து கொண்டு ஆல்பத்துடன் ஆஜராகி விடுகிறேன்!

ISR Selvakumar said...

பிரேம்,
இந்த வாரத்தில் ஒரு நாள் டெஸ்ட் ஷீட் செய்து பார்ப்போமா?