Monday, October 5, 2009

வானவில் உலகில் “லலிதம் சுதர்ஸனம்”

நான் தற்போது ”அவர்” திரைப்படத்தை இயக்குகிறேன் என்பது ஒரு ரிப்பீட் செய்தியாகிவிட்டது. ஆனாலும் வேறு வழியில்லை. ”அவர்” திரைப்படம் வெள்ளித் திரையில் ஒளிரும் வரை நான் அடிக்கடி அவரைப் பற்றி பேசிக் கொண்டுதான் இருப்பேன். ஏனென்றால் தற்போது என்னை முழுவதும் ஆக்கிரமித்திருப்பவர் அவர் தான்.

படத்திற்கான ஸ்கிரிப்ட் தான் முதல் படி. வசனம் உட்பட ஸ்கிரிப்ட்டை எழுதிவிட்டுதான் மற்ற எதுவும் என்பதில் உறுதியாக இருந்தேன். திருப்தி வரும் வரையில் ஸ்கிரிப்டை செதுக்கிக் கொண்டே இருந்தேன். எழுதும்போதே எங்கெங்கே எதுபோன்ற இசை தேவை என்பதையும் குறித்துக் கொண்டே வந்தேன். அதனால் ஸ்கிரிப்ட்டை முடித்த கையோடு பாடல் மற்றும் பிண்ணனி இசை கோர்ப்பு பற்றிய விவாதத்தில் இறங்கிவிட்டேன்.

படத்தில் ”வானவில் உலகம்” என்ற பாடல் வருகின்றது. முழுக்க மேற்கத்திய பாணியில் அமைந்த ஒரு மெலடி. அந்த மெலடிக்கு இடையே ஒரு Divine Feel தேவைப்பட்டது. தெய்வீக உணர்வு தேவை என்றவுடன் அதற்கான வார்த்தைகளை சில நாட்கள் தேடினேன். கடைசியாக ரெய்கி மாஸ்டர் திரு.பாலகுமார் அவர்களை நாடினேன். அவர் ”லலிதம் ... சுதர்ஸனம்” என்ற இரு அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடிய வார்த்தைகளை கொடுத்தார். சுதர்ஸனம் என்றால் பேரொளி. அது ஆண் சக்தி. லலிதம் என்றால் பெண் சக்தி. இரு சக்திகளும் இணையும்போது, அதனால் ஏற்படக்கூடிய தெய்வீக அதிர்வுகள் பூரணமாக இருக்கும் என்று விளக்கத்தையும் திரு.பாலகுமார் அவர்கள் சொன்னார்.

அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன், அளப்பறிய ஆற்றல் பொருந்திய ஒன்றை நாம் கையாளப் போகிறோம். அதை கவனமாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் எழுந்தது. இந்த வார்த்தைகளையும், அதற்கான அர்த்தங்களையும் கூறியவுடன், எனது நண்பரும் இசையமைப்பாளருமாகிய விவேக் நாராயண் மௌனமாகிவிட்டார். பிறகு முதலில் டியுனை ஓ.கே. பண்ணு. பிறகு லலிதம் சுதர்ஸனத்திற்கென தனியாக ஸ்பெஷலாக சிந்திக்கலாம் என்றார். நானும் அவர் சொன்ன படியே ஒரு மெட்டை தேர்ந்தெடுத்து ஓ.கே செய்தேன்.

இன்னைக்கு நைட் feed பண்ணிடறேன். நாளைக்கு காலையில பாட்டு ரெடியா இருக்கும் என்றார். சரி என்று சொல்லிவிட்டு நான் வீட்டுக்கு வந்த ஒரு மணி நேரத்தில் அவர் பின்னாடியே வந்துவிட்டார்.
என்ன?
பாட்டு ரெடி!
”வானவில் உலகம்” பாட்டு நான் ஓ.கே செய்த மெட்டில் இல்லை. ஆனால் என்ன ஆச்சரியம்? இன்னும் அருமையான ஒரு டியுனில் இருந்தது. அதை விட ஆச்சரியம். அசத்தலான வெஸ்டர்ன் பாணி இசைக்கு இடையில் இழைந்த சாமவேத மெட்டு. வெஸ்டர்ன் இசையுடன் சாமவேதமா? எப்படி? ஏன்? என்று தோன்றுகிறதா?

இசையின் ஆரம்பமே சாமவேதம் தான். அதனால்தான் ஆற்றல் பொருந்திய ”லலிதம் . . . சுதர்ஸனம்” என்ற வார்த்தைகளை சாமவேத மெட்டில் பொருத்தினேன் என்றார் விவேக் நாராயண். இது பற்றிய விளக்கங்களை அவரே பிளாக் ஒன்றில் எழுதியுள்ளார்.

முதல் முறை கேட்டபோது, ”லலிதம் . . . சுதர்ஸனம்” என்ற வார்த்தைகள் ஏற்படுத்திய தெய்வீக அதிர்வுகளை வார்த்தைகளால் வருணிக்க முடியாது.

”அவர்” பாடல்கள் விரைவில் வெளியாகும். அப்போது நீங்களும் அந்த இனிய அதிர்வை உணர்வீர்கள் என்பது என் நம்பிக்கை.

3 comments:

மங்களூர் சிவா said...

படம் வெற்றிபெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

பாடலை கேட்க ஆவலாக உள்ளோம்.

ISR Selvakumar said...

நன்றி சிவா,
தங்களைப் போலவே நானும் ”அவர்” குழுவினருடன் பாடல் வெளியீட்டு விழாவிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

Cliffnabird said...

I was already in alacrity, this post kindles it more now! Please get us the good news soon!!