காலையில் The Hindu இணையதளத்தில் இந்த செய்தியை பார்த்தேன். அப்புறம் நக்கீரனில் பார்த்தேன். பின்னர் சன் செய்திகளில் பார்த்தேன். சந்தோஷமாக இருந்தது. நான் அறிந்தவரை இந்தச் செய்தியின் சாராம்சம் இதுதான்.
முகாம்களில் இருந்து திருப்பி அனுப்பபட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 இலங்கை ரூபாயும், ரூ. 20,000க்கான வங்கி வைப்பு நிதியும் வழங்கப்பட்டது. அது தவிர, 6 மாதத்திற்கான ரேஷன் பொருட்களும், அவசர தேவைக்கான துணிகளும் வழங்கப்பட்டன. வவுனியா, மன்னார், முல்லைத் தீவு, கிளிநொச்சி போன்ற இடங்களுக்கு மக்கள் திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர்.
இதற்க்கான விழாவில் பேசிய மஹிந்த ராஜபக்ஷே, தமிழக முதல்வருக்கும், பாரதப் பிரதமருக்கும் நன்றி தெரிவித்தாராம்.
ஆனால் இந்த செய்தி குறித்த சந்தோஷமோ பரபரப்போ பகிர்தலோ, தமிழ் பதிவர்களிடையே துளி கூட இல்லை. டிவிட்டரில் கூட இந்தச் செய்தி தமிழர்களிடையே உலவவில்லை. ஆதவன் ரிலீசுக்கு மாய்ந்து மாய்ந்து பதிவு எழுதியவர்களும், டிவிட்டரில் கமெண்ட் அடித்தவர்களும், கிட்டத்தட்ட 40 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் இருந்து விடுதலை ஆகிறார்கள் என்பதை ஏனோ கண்டு கொள்ளவில்லை!!! Facebookல் மட்டும், இந்தச் செய்தியைப் பற்றி சந்தேகம் தெரிவித்து ஒரு பதிவை பார்த்தேன். மற்றபடி பதிவர் உலகில் இந்தச் செய்தி எந்தச் சலனமும் இல்லாமல் கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ளது.
கொஞ்சமாவது சந்தோஷம் தரக்கூடிய இந்தச் செய்தி குறித்து ஏன் மௌனமாக இருக்கிறோம் என்று தமிழ் பதிவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
5 comments:
பத்து பேர் அழுகையில் சிறையில் இருக்கும் போது ஒருவர் மட்டும் சுதந்திரம் என்ற பெயரில் வருவது ஆறுதல் தரக்கூடியதெ தவிர கொண்டாடக் கூடியது அல்ல .
எப்போதுமே வலிகளை நினைத்து புலம்புவதை விட கொஞ்சம் ஆறுதலான விஷயங்களை பகிர்வது, நல்ல தீர்வை நோக்கி வலிமையுடன் நகர்த்தும்.
இந்தத் திடீர் விடுதலைக்கு என்ன உள் காரணம் இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. சற்று ஆறுதலான விடயம் தான்.
வீடு திரும்பினார்களா.. உங்களை நினைத்தால் சன் செய்திகளை நினைத்தால் நக்கீரனை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.
வவுனியா முகாம்களில் வெள்ளம் ஏற்படகூடிய அபாயம் இருப்பதனால் அங்கிருந்து மக்களை வெளியேற்றி கிளிநொச்சியில் (பூநகரி) ஒரு பாடசாலை மன்னாரில் ஒரு பாடசாலை.. ஒட்டுசுட்டானில் ஒரு பாடசாலை என கட்டடத்தொகுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
முன்னரைபோலவே அங்கிருந்து அவர்கள் வெளியேற முடியாது. தவிர ஊர்களில் அவர்களுக்கு வீடுகள் இல்லை. கடைகள் இல்லை பள்ளிக்கூடங்கள் இல்லை.
ராணுவ முகாம்களும் அவசரஅவசரமாக கட்டப்படுகிற புத்தர் கோவில்களும்தான் உள்ளன.
உண்மை தெரிந்தவர்கள் சும்மா போகிறார்கள். நீங்கள் வாகாக ஏமாறுகிறீர்கள்
அனானி நண்பருக்கு,
இந்த “விடுவிப்பின்“ பிண்ணனி என்னவாக இருக்கும் என்று டிவிட்டரில் ஒரு நண்பர் என்னைக் கேட்டார். எனக்குத் தெரியவில்லை.
நீங்கள் சொல்வது உண்மையா என்றும் எனக்குத் தெரியவில்லை.
ஆனாலும் உங்கள் கருத்து நிச்சயம் கவனிக்கத் தகுந்ததே.
Post a Comment