Tuesday, March 2, 2010

இந்தியர்கள் சகிப்பின் உச்சம். மற்றவர்கள் சகிப்பின் எ - - - -

அசிரத்தையாக துபாய் மியுசியம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, நண்பர் மீனாட்சி சுந்தரம் கோவிலுக்கு போய்விட்டு வரலாம் என்றார். துபாயின் அவசர வாழ்க்கையிலும் தினம் தியானம் பண்ணி கடவுளை வழிபட்டு பிறகு காரில் ஏறிப் பறப்பவர் அவர். அதனால் அவர் அழைத்ததும் வருகிறேன் என்றேன். எனக்கு கோவில் பிரசாதங்களின் மேல் அலாதி பிரியம்.

நம்ம ஊர் மினி ஹால் திருமண மண்டபங்களின் வாசலைப் போல, விசாலமும் இல்லாமல் குறுகலாகவும் இல்லாமல் ஒரு இடம். இங்குதான் கோவில் நுழைவாயில். ஷீவைக் கழற்றி இலவச ஸ்டாண்டில் வைத்துவிட்டு, காமிராவை ஆயத்தப் படுத்தினேன். நண்பர் தயவுசெய்து கிளிக் செய்யாதீர்கள், வந்திருப்பவர்கள் அசௌகரியப்படுவார்கள் என்றார். நான் பதில் பேசவில்லை. காமிராவை ஜீன்ஸ் பாண்டுக்குள் சிரமப்பட்டு நுழைத்தேன்.


பெருமாள் பூகடை என்ற தமிழ் போர்டு மட்டும் ஞாபகம் இருக்கிறது. மற்றபடி அந்த குறுகலான நுழைவாயிலின் இருபுறமும் வடஇந்தியர்களின் வழக்கப்படி மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மாலைகளை விற்ற பெட்டிக் கடைகளே நினைவில் நிற்கின்றன. கிட்டத்தட்ட சென்னை ரங்கநாதன் தெருவை நேர்வகிடாக கால்வாசி வெட்டி வைத்ததுபோல குறுகல். ஆனால் எந்தக் கடையிலும் காதைக் கிழிக்கும் சாமி குத்துப்பாட்டுகள் இல்லை.


இரும்பு படிக்கட்டுகளால் ஆன படியேறி மாடிக்கு மேலே சென்றால் கோவில் இருக்கிறது. அதை கோவில் என்று நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். ஒரு மார்வாடி வீட்டு வரவேற்பறை போல உள்ளது. திருநீர் இல்லை, குங்குமம் இல்லை. தீபங்கள் இல்லை, பத்திகள் இல்லை. வேத கோஷங்கள் இல்லை, கோவில் மணி இல்லை. தேங்காயும் உடைக்கப்படுவதில்லை. தேங்காய் லிங்கத்தின்(லிங்கம்தானே?) அருகில் காண்பிக்கப்பட்டு பெரிய கருமை நிற பிளாஸ்டிக் கோணியில் திணிக்கப்படுகிறது. ஆனால் அங்கேதான் இந்து மத பக்தர்கள் கூடுகிறார்கள்.

பூசாரி மற்றும் பக்தர்கள் உட்பட அனைவருமே மௌன விரதம் இருப்பவர்கள் போல மனதுக்குள் முனகிக்கொண்டே பிரார்த்தனை செய்தார்கள். நான் அங்கிருந்த சாமிப்பட கண்ணாடிகளில் என் முகம் பார்த்துவிட்டு, தரையில் சாஷ்டாங்க நமஸ்காரத்தில் இருந்தவர்களை இடறாமல் பிரசாதம் எங்கே என்று தேடினேன். நாமே அங்கிருந்த பேப்பர் தட்டுகளை எடுத்துக் கொண்டு வரிசையில் நிற்க வேண்டும் என்பதை உணர்ந்தபோது நண்பரும் நமஸ்காரத்தை முடித்துவிட்டு வந்துவிட்டார். பிரசாதத்துடன் படி இறங்கினோம். கோவில் எப்படி இருக்கிறது? என்றார். பிரசாதம் சுமார் என்றேன்.


புன்னகைத்துக் கொண்டே வாங்க அங்க போலாம் என்றார். அவர் கை காண்பித்த இடம் கிருஷ்ணன் கோவிலாம். அங்கேயும் பளபள மொசைக் தரையில் சைலண்ட் பக்தர்கள் மற்றும் பூசாரிகள். நிஜமாவே இன்னமும் கூட்டம் சேராத ஒரு கல்யாண வீடு போலவே இருந்தது. கிருஷ்ணர் எங்கே இருக்கிறார் என்று தேடியபோது, பக்கத்து காம்பவுண்டில் இருந்த மசூதியில் இருந்து இறை அழைப்பு ஒலித்தது. அதன் பிண்ணனியில் இந்து பக்தர்கள் கை கூப்புவது எனக்கு வித்தியாசமாக இருந்தது. மசூதியின் இறை வணக்கம் முடிந்தபின், பூசாரி ஏதோ ஒரு ஆம்ப்ளிபயரை முடுக்கினார். சன்னமாக ஏதோ பஜன் கேட்டது.


வெளியில் வந்து ஷீவை மாட்டும்போது சீக்கிரம் வாங்க நேரமாகிவிட்டது என்று யாரோ அழைக்க கடைசி நேர பக்தர்கள் அவசரமாக உள்ளே ஓடினார்கள். நண்பர் கடைசியாக ஒரு முறை கோவிலை திரும்பி பார்த்துவிட்டு, ராசியான கோவில், வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்றார்.


நம்ம ஊர் தைப் பூசம் போல வேல் வேல் வெற்றி வேல் என்றும், ஐயப்ப பக்தர்கள் போல சாமியேய் சரணம் ஐயப்பா என்றும், திருப்பதி மலையை நிறைக்கும் கோவிந்தா கோவிந்தா என்றும் இங்கே தினமும் இந்த அரபு மண்ணில் குரல் கொடுக்க அனுமதி வேண்டும் என்று வேண்டிக்கொண்டால் இந்த சாமிகளால் அருள் பாலிக்க முடியுமா?


அந்த சாமிகளால் நிச்சயமாக முடியாது. ஆனால் அந்த அரபு மண்ணின் கட்டுப்பாடுகளை ஏற்று தனது ஆகம விதிகளை குறுக்கிக் கொண்ட கோவில்களைப் போல, அரபு மண்ணின் விதிகளை ஏற்று தனது ஆன்மீக அடையாளங்களை சுருக்கிக் கொண்ட பக்தர்களின் சகிப்புத் தன்மையை நான் பாராட்டுகிறேன்.


பின் குறிப்பு

கத்தார் நாட்டு்க்கு குடியுரிமை வாங்கிச் சென்றுள்ள  ஓவியர் திரு. எம்.எஃப் உசேன் அவர்களுக்கு சில விஷயங்கள்.


மத அடையாளங்களை கடைபிடிக்கின்ற விஷயத்தில், துபாயுடன் ஒப்பிடும்போது கத்தார் மிகவும் கெடுபிடியான நாடு.

துபாயில் வசிக்கின்ற இந்தியர்கள், தான் வாழும் மண்ணுக்கேற்ப தனது அடையாளங்களை மறைத்துக் கொண்டும் அந்த வேதனைகளை சகித்துக் கொண்டும் எப்படி வாழ்கிறார்கள் என்பதை ஒரு முறை அவர்களை நேரில் சந்தித்து கற்றுக் கொள்ளுங்கள்.


கத்தாருக்கு குடியுரிமை பெற்ற சூட்டோடு, அந்த மண்ணின் இயல்புகளை, புனிதங்களை கலை என்ற பெயரில் மறுக்கவோ, நிர்வாணப்படுத்தவோ முயற்சிக்காதீர்கள்.

உங்களுடைய எல்லா முயற்சிகளுக்கும் இந்தியாவில் மட்டுமே இடமுண்டு. எனவே உங்கள் தூரிகை அத்து மீற நினைக்கும்போதெல்லாம் இந்தியா வாருங்கள். இந்தியர்கள் சகிப்பின் உச்சம். மற்றவர்கள் சகிப்பின் எ . . .
Post a Comment