Saturday, November 26, 2011

சிறு தயாரிப்பாளர்களுக்கு இனி சினிமாவில் இடமில்லை?

திரு. செந்தமிழன் இயக்கத்தில் பாலை என்கிற திரைப்படம் பற்றி கேள்விப்பட்டீர்களா? 

நான் டிரையலர் பார்த்தேன். நிச்சயம் ஈர்க்கிறது. இன்று புதிய தலைமுறை சானலில் படம் பற்றிய சிறு நிகழ்ச்சியை பார்த்தேன். படம் சிறப்பாக இருப்பதாக, பார்த்தவர்களும், திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூறினார்கள். ஆனால் படத்தை பெரும்பாலானவர்கள் பார்க்க முடியாத சூழல். 


காரணம் . . . பாலை இயக்குனர் திரு. செந்தமிழன் எழுதியுள்ள நீண்ட உருக்கமான கடிதத்தில் இருந்து சில வரிகளை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். 

‘முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம். ‘பாலை’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன்.‘பாலை’ படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது. ‘பாலை’ குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே. ‘பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாது… இப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்.‘

அவருடைய கடிதம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது.

'தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை.

இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் சரி பாதியை மிகச் சில படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.

ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அவ்வரங்குகளில் வேறு படங்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன'


ஏன் இப்படி? சினிமா வெளியீடு ஒரு மிக முக்கியமான மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அனைத்து தியேட்டர்களையும் ஆக்கிரமிக்கும் Umbrella release பாணி, இந்திய சினிமா வியாபாரத்திலும் நுழைந்து விட்டது. ஆனால் இந்த வியாபார முறையினால், எல்லா சிறு தயாரிப்பாளர்களின் படங்களும் இப்படித்தான் சிக்கித் திணறுகின்றன.

வால்மார்ட் வந்தால் எப்படி சிறு வணிகர்கள் காணாமல் போவார்களோ, அது போல இந்த புதிய வியாபாரச் சூழலால் சிறு தயாரிப்பாளர்களும் காணாமல் போகத்தான் வேண்டுமா? இந்த சூழலை சிறு தயாரிப்பாளர்கள் எப்படி சமாளித்து எதிர்கொள்வது?

சினிமா வியாபார நுணுக்கம் அறிந்தவர்கள் கூறலாம்.

3 comments:

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நல்ல திரைப்படங்களின் வழக்கமான சாபக் கேடு இது. எதை மீறி வந்து விட்டால் வெற்றி தான். தளர்ந்து விடாதீர்கள் செந்தமிழன்

ISR Selvakumar said...

வணக்கம் ரூஃபினா,
உங்கள் கருத்து எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

HOTLINKSIN.com said...

தியேட்டர்களை சிலர் ஆக்கிரமித்திருப்பதென்னவோ உண்மைதான். ஆனால், இன்று என்னதான் லோ பட்ஜெட் படமாக இருந்தாலும் அந்த படத்திற்கு கூட பெரிய அளவுக்கு மார்க்கெட்டிங் செய்ய வேண்டியுள்ளது. படம் பற்றிய ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கினால் தியேட்டர்காரர்களே படத் தயாரிப்பாளரையோ விநியோகஸ்தரையோ தொடர்பு கொண்டு அந்த படத்தை தங்களுக்கு கொடுங்கள் என்று சொல்வார்கள். ஆனால், போதிய விளம்பரம் செய்யாததால் லோபட்ஜெட் படங்களுக்கு வருகிற ரசிகர்கள் மிக மிக குறைவு. 50-100 பேரை வெச்சிக்கிட்டு எந்த தியேட்டர்காரன்தான் படம் ஓட்ட விரும்புவான். எனவே, எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் விளம்பர மார்க்கெட்டிங்களில் கவனம் செலுத்த வேண்டும்.