Wednesday, March 14, 2012

காயம் நல்லது - சேரனும் தமிழ் சினிமா ஜாம்பவான்களும்!

சினிமாவையும் சினிமாவில் இருப்பவர்கள் வாழ்வையும் மக்களுக்கு அறிமுகப் படுத்துவதை விடுத்து... மக்களையும் மக்களின் வாழ்வையும் சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவோம்.

சங்ககிரி ராஜ்குமார் தனது வலைப்பதிவில் இப்படித்தான் அறிமுகம் தந்திருக்கிறார். யார் இந்த சங்ககிரி ராஜ்குமார்? இந்தக் கேள்வி சினிமா ஆர்வலர்கள் மத்தியில் உரக்க எழுந்திருக்கிறது. காரணம் இயக்குனர் சேரன்.

திரு.சேரன் சமீபகாலமாக பத்திரிகைகளில் அதிகம் குறிப்பிடப்படுகிறார். காரணம் அவரது சினிமாக்கள் அல்ல, அவர் நேசிக்கும் சினிமாக்கள்!

எனது நண்பர் ஷண்முகராஜ், திரு.சேரனிடம் சினிமா பயின்றவர். ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். எல்லா முதல் பட இயக்குனர்களுக்கும் உள்ள பிரச்சனை. படம் நன்றாக இருக்கிறது. ஆனால் இரசிகர்களிடம் சென்றடைவதில் சிக்கல். சேரன் தாமாகவே முன்வந்து படத்தைப் பார்த்து, பாராட்டி பத்திரிகைகளில் அது பற்றிய செய்திகள் வரவழைத்தார். விளைவு திரு.மைக்கேல் ராயப்பன் படத்தை வாங்கியிருக்கிறார். தற்போது சன்பிக்சர்ஸ் தொலைக்காட்சி உரிமையை வாங்கியிருக்கிறது. படம் நிச்சயம் திரைக்கு வரும். அதற்கு காரணம் மாணவனின் மேல் அக்கறை கொண்ட குரு சேரன்.

அதே போல நடிகர் திலகத்தின் டிஜிட்டல் கர்ணன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகும் கர்ணன் வெளியீட்டு விழாவில் அவர் பேசிய உணர்வுபூர்வமான யுடியூபில் செம ஹிட். சிவாஜியின் மாஸ்டர் பீஸ் கர்ணன். அதனை நோக்கி, இன்றைய தலைமுறையினர் சிலபேரையாவது தனது பேச்சால் கவர்ந்து இழுத்திருக்கிறார். வரும் வாரத்தில் கர்ணன் டிஜிட்டல் திரையில் கர்ஜிக்கப்போகிறான். நிச்சயம் ஒரு ஓபனிங் இருக்கும். நான் குடும்பத்துடன் செல்லப் போகிறேன். அதற்கு முக்கியக் காரணம் சிவாஜி மட்டுமல்ல, சிவாஜி வெறி பிடித்த இரசிகன் சேரன்.

தற்போது காயம் என்ற திரைப்படத்தை தானே வெளியிடுகிறார். காயம், சென்ற வருடம் வெங்காயம் என்ற பெயரில் வெளியான படம். வழக்கமாக கொஞ்சம் சுமாராக இருந்தால் கூட குதறி எடுத்துவிடும் ஆன் லைன் விமர்சகர்கள் கூட, நன்றாக இருக்கிறது என்று பாராட்டிய படம். ஆனால் விளம்பர வெளிச்சம் இல்லாமல் வெளியானதால், படம் நன்றாக இருந்தும் இரசிகர்களைச் சென்றடையவில்லை.

தற்போது காயம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள படம்தான், வெங்காயம். அந்தப் படத்தின் இயக்குனர்தான் சங்ககிரி ராஜ்குமார். அவரை நான் கேபிள் சங்கர் எழுதிய ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் சந்தித்தேன். இயக்குனர் மீரா கதிரவனும், அவரும் சிறப்பு விருந்தினர்கள்.

‘நான் இந்தப் புத்தகத்தை இன்னும் வாசிக்கவில்லை. எனவே எனக்கு புத்தகம் பற்றிய கருத்து இல்லை. ஆனால் புத்தகம் வெற்றியடைய வாழ்த்துகள்‘ என்று சுருக்கமாகப் பேசி, ஒரு நேர்மையான மனிதனாக இன்னமும் என் மனதிற்குள்ளேயே இருக்கிறார்.

உண்மையும் நேர்மையும் எப்போதும் நிராகரிக்கப்படுவதில்லை. இனி அவ்வளவுதான் என்று சினிமா உலகம் மறந்திருந்த அவருடைய வெங்காயம், இன்று மீண்டும் தமிழ் சினிமா இரசிகர்களின் பார்வைக்கு வந்திருக்கிறது.

இன்று ஃபேஸ்புக்கில் படத்தின் புதிய டிரையலரைப் பார்த்தேன். இன்றைய தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி இயக்குனர்களும், மிகப்பெரிய ஜாம்பவான்களும், சங்ககிரி ராஜ்குமார் என்ற எளிய மனிதனின் சினிமாவைப் பற்றி புகழ்ந்து பேசுவதைக் கேட்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. காலம் மறந்து போகவிருந்த ஒரு நல்ல திரைப்படம் மீண்டும் உயிர்பெற்று, இன்று புகழ் வெளிச்சத்தில் இருக்கக் காரணம், ஒரு நல்ல மனிதன் சேரன்.

காயம் நல்லது! அது தந்த நிராகரிப்பு வலிதான் இன்று இத்தனை ஆதரவை பெற்றுத் தந்திருக்கிறது.

முதல் படம் தயாரிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் படப்பிடிப்பு சாதனங்களை வாடகைக்கு விட வேண்டும் என்று இயக்குனர் ஜனநாதன் கூறியிருந்ததாக, ஒரு பத்திரிக்கை குறிப்பை வாசித்தேன். டிஜிட்டல் யுகத்தில் சினிமா புதிய அவதாரம் எடுத்தாலும், அது சேரன், ஜனநாதன் போன்ற அக்கறை உள்ளவர்களால்தான் தாக்குப்பிடிக்கிறது.

நற் குணங்கள் உடையோர் நல்ல படைப்புகளையே தருவார்கள். அவர்களையும், அவர்களது படைப்புகளையும் ஆதரிப்போம்!


Post a Comment